என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்தாண்டு தீபாவளியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடப்படும்.

    இந்தாண்டு திருப்பதியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் கோவில் அருகே காட்சி அளிக்கின்றன.

    இதில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு பிரத்தியோக பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது.

    இதையடுத்து மாலை கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 32,365 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,681 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் 9-ந்தேதியும், திருக்கல்யாணம் நடைபெறும் 12-ந்தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 6-ம் திருநாளான 9-ந்தேதி மதியம் 12 மணிக்கு தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 10-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், 12-ந்தேதி இரவு 8 மணிக்கு கழுகாசலமூர்த்தி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். 14-ந்தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறும் 9-ந்தேதியும், திருக்கல்யாணம் நடைபெறும் 12-ந்தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
    சென்னையிலிருந்து 50 கி.மீ, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்.

    இத்திருத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முன் மூங்கில் காடாக இருந்த பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு தினந்தோறும் பால் சுரந்தது. இதை கண்ட இடையன் அங்குள்ள மன்னவனுக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த மன்னன் அங்கு செனறு புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு சதுர வடிவில் ஆவுடையார அமைத்து கோயில் எழுப்பினான்.

    மூங்கில் காடில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

    ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் வடமாநிலத்தில் இருந்து காஞ்சி நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கும் பொழுது திருப்பாச்சூர் அருகே வரும்போது மூங்கில் காட்டின் அருகே வரும்போது உஷ்ண நிலையை கண்டு ஏதோ தீப்பற்றி எரிவது போல் உணர்ந்தார். பின்பு தன் ஞானதிருஷ்டியால் மூங்கிலை வெட்டும்போது லிங்கத்தின் மேல் தழும்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாமி உஷ்ணமாக இருப்பதை ஞானத்தில் அறிந்தார்.

    பின்பு சுவாமியின் உஷ்ண நிலையை சாந்தம் அடைய கருவறை வெளியே அர்தம் மண்டபத்தில் சுவாமியின் வலது பக்கத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை ஸ்ரீசக்கரம், சிவபூஜை எந்திரமும் பிரதிஷ்டை செய்து சிவனை(பாசூர்) வழிபட்டார். அதன் பின்பு ஸ்வாமி உஷ்ண நிலையை குறைத்ததும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இத்திருத்தலத்தில் தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது மேலும் கிழக்கு நோக்கி இரட்டைகாளி, சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிரகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

    திருப்பாச்சூர் தலத்திலும் ஈசனுக்கு வலது புறம் அம்பிகையும் இந்த இரண்டு சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர் என ஒரே வரிசையில் அனைவரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்வாமி சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. இதனால் சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

    மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை மற்றும் வினை தீர்த்த ஈஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதில் 11 விநாயகர் சிலைகளில் ஒன்று மட்டும் வலம்புரி விநாயகர் மற்றும் கேது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு கேது தோஷம் நிவிர்த்தி பரிகாரம் செய்ய 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 கைப்பிடி அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    திருத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல்பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

    ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.

    ஸ்ரீ வீராகவப்பெருமாள் சூலை நோய் ஏற்பட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி வினை தீர்த்த ஈஸ்வரர் பூஜை விக்னங்கள் இன்றி நிறைவேற விநாயகப்பெருமானின் 11 சிலைகளை வீராகவப்பெருமாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இதில் திருப்பதி வெங்கடாஜலபதி தன் கல்யாணத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழிபாடு செய்த திருத்தலம்.

    இத்தலத்தில் தினமும் அம்பிகை ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் முதல் பூஜை அம்பிகைக்கு பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
    அம்பிகை, திருமால், சந்திரன், பரத்வாஜார், பிருகு மகரிஷி, சுகர், ரிஷ்ய சிருங்கர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 10 சித்தர்கள் பூஜை செய்த தலம்.

    இத்திருத்தலத்தில் கேது தோஷம் நிவர்த்தி அடையும் இங்கு வழிபடுவர்களுக்கு திருமண பாக்கியம், உத்தியோகம், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவில், சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி திருக்கல்யாண விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலையில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் தவக்கோலத்தில் இருந்த காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் இருவரும் கோவிலுக்கு வந்தனர்.

    நேற்று அதிகாலை கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    பின்னர் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க மாப்பிள்ளை திருக்கோலத்தில் சுவாமி நெல்லையப்பர், தங்கப்பல்லக்கில் சுவாமி சன்னதியில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நெல்லை கோவிந்தசுவாமி, நெல்லையப்பருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்த காந்திமதி அம்பாளுக்கும், சுவாமி நெல்லையப்பருக்கும் சிறப்பு பூஜைகளும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம், சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    இதேபோல் நெல்லையில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் ஜப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்தசஷ்டி திருவிழாநாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.35மணிக்கு சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெறுகிறது.

    தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 5-ந்தேதி முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    6-ம் நாள் திருவிழாவான 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம், இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    8-ம் நாள் திருவிழாவான 11-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு பட்டிணபிரவேசம் நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரு நாட்களும் காலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

    11-ம் நாள் திருவிழாவான 14-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

    12-ம் நாள் திருவிழாவான வருகிற 15-ந்தேதி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு மஞ்சள் நீராட்டும் வைபவம் தொடர்ந்து உற்சவம் நிறைவு பெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.

    1-ம் திருவிழா முதல் 5-ம் நாள் முடிய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் சரிதனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமும், 5 ஆயிரம் பேர் நேரில் வருபவர்களுக்கும் என காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். சிகர நிகழ்ச்சியான
    சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய இரண்டு நாள்கள் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், 2 பிரதோஷத்திற்கு தலா ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

    சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை, வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கண்ணீர் மல்க இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களது ஆத்மா சாந்தியடையவும் வேண்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.

    தொடர்நது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.

    அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை புனிதநீர் தெளித்து பிரார்த்தனை நடத்தினார். தொடாந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராயப்பன் கல்லறைதோட்டம் உள்பட நாகையை சுற்றியுள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள பாதிரியார்களின் கல்லறைக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் இறந்தவர்களின் கல்லறை தோட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்கள், குடும்பத்தினருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தின் மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராவது இறந்து போய் இருந்தால் அவர்களை நினைவுகூரும் வகையில், கல்லறை தோட்டங்களுக்கு சென்று அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அந்தவகையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து இறந்த தங்களுடைய மூதாதையர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, பிரார்த்தனை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருச்சபை பாதிரியார்கள், கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியை நடத்தினர்.
    சித்திரை ஆட்ட சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு 15 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை ஆட்ட சிறப்பு பூஜை இன்று (புதன்கிழமை) சபரிமலையில் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு தந்திரி பிரசாதம் வழங்கினார்.

    தொடர்ந்து இன்று சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. அதன்பின்னர் வழிபாடுகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு முன்பதிவு அடிப்படையில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால், பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் (72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டது) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும்.
    மகாலட்சுமி தாயார் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள் தீபாவளி. அதனால் தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை முக்கிய இடம் வகிக்கிறது, அன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்.

    தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசல் கதவுகளில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    பூஜையறையில் மாக்கோலமிட்டு ஒரு மனையில் மஞ்சள் அல்லது சிவப்புத்துணி போட்டு அதில் பிள்ளையார், மகாலட்சுமி படங்களை வைக்க வேண்டும். சிலை இருந்தால் சிலைகளை வைக்கலாம். பிள்ளையாரை மஞ்சளிலும் செய்து வைக்கலாம். இதில் குலதெய்வத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு படம் இருந்தால் அதை வைக்கலாம். இல்லை என்றால் ஒரு செம்பில் நீர் மலரிட்டு குலதெய்வமாக பாவித்து வைக்கலாம்.

    பிள்ளையார், மகாலட்சுமி, குலதெய்வம் மூவருக்கும் நல்ல மணமுள்ள மலர்களை சூட்ட வேண்டும். தாமரை மலர் கிடைத்தால் மகாலட்சுமிக்கு சூட்டுவது நல்லது. பிள்ளையாருக்கு மஞ்சள் துண்டு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழை உள்ளிட்ட பழங்கள் படைக்க வேண்டும்.

    நெய்வேத்தியமாக வடமாநிலங்களில் நெய்யினால் பூரி சுட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி கூட்டு செய்து படைப்பார்கள். நெய்க்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு உண்டு. நெய்யில் நிவேதனம் செய்தால் அணுகிரகம் விரைவில் கிடைக்கும்.

    பால் பாயாசம் சேமியா அல்லது அரிசி சேர்த்து செய்து வைக்கலாம். தமிழ்நாட்டில் அரிசி உணவுதான் பிரதானமாக இருப்பதால் அரிசி பாயாசமே செய்து கொள்ளலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல் அன்னம் செய்து படைக்கலாம். முக்கியமாக நெல் பொரி படைக்க வேண்டும். அதில் வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து 3 தினங்கள் எரியுமாறு பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு கும்ப கலசம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைக்கலாம்.

    பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். அது தெரியவில்லை என்றால் மிக எளிமையாக ஓம் ஸ்ரீம் நமக என்று சொல்லி வழிபடலாம்.

    வாய்ப்பு உள்ளவர்கள் 108 தாமரை மலர்களை போட்டு அர்ச்சனை செய்யலாம். இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். அல்லது 108 வெள்ளி காசுகளை வைத்து அர்ச்சனை செய்யலாம். 108 புது ரூபாய் தாள்களை கொண்டு அர்ச்சிக்கலாம். அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    மகாலட்சுமி தாயாருக்கு மணியடித்து ஆரத்தி காட்டும் போது ஒரு வெடியாவது வெடிக்க வேண்டும்.

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும். ஒரு சில நாணயம் நோட்டுகளை மணிபர்சிலும் வைக்கலாம்.

    அந்த பணத்தை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஏழ்மையில் இருந்தால் வசதி பெறுவதற்காக அவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் விருத்தி அடைவார்கள். அவர்கள் வசதி அடைய அடைய உங்கள் வாழ்க்கையிலும் செல்வம் செழிக்கும்.

    நிவேதனம் செய்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.

    பொதுவாக பூஜையில் வைத்த மலர் மாலை, கலசம் உள்ளிட்டவற்றை 3-வது நாள் எடுப்பது தான் நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது. இந்த முறை 3-வது நாளாக சனிக்கிழமை வருவதால் அன்று எடுக்கலாம்.

    கலசத்தில் நீர் வைத்திருப்பதால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அரிசி வைத்திருந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் திலகமிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முறை தீபாவளியன்று மகாலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6.10 மணி முதல் இரவு 8.10. மணி வரை. லட்சுமி வழிபாட்டுக்கு பிரதோஷ காலமே உகந்தது என்பதால் மாலை 5.30 மணியில் இருந்தும் இரவு 8.10 மணிக்குள் செய்யலாம்.

    பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டாவது பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடந்த கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்கள் அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.

    பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி பராசக்தி அம்மனிடம் வேல் பெற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பழனி கிரிவீதியில் நடைபெறும். மறுநாள் 10-ம் தேதியன்று மலைக்கோவிலில் முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    கந்த சஷ்டி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோவிலில் நிறைவுநாளன்று தங்கள் விரதத்தை முடித்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்வது வழக்கம் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கவுரி விரத பூஜை கோலாகலமாக நடப்பதும், அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவதும் வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் சார்பாக கேதார கவுரி விரத பூஜை நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    ×