என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
    200 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை புனிதவெள்ளி என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். புனித வெள்ளியன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன 7 வாசகங்கள் குறித்து பிரசங்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.

    ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?

    உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.

    அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.

    போதகர் எஸ்.விஜயகுமார்

    பரிபூரண ஜீவன் ஏ.ஜி.சர்ச், பல்லடம்.

    கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், உச்சிகால அபிஷேகம், யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏனினும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி தங்க சப்பரத்தில் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார்.

    2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    கந்த சஷ்டி விதம் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விரத முறைகளும், அதற்கான பலன்களும் இங்கே தரப்பட்டுள்ளது.
    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான்.

    கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

    கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

    காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பதுநன்மை தரும். அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    ‘கந்த சஷ்டி கவசம்’ என்பது நம்மை தீமைகளில் இருந்து, துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவதாகும். நாம் முருகப்பெருமானின் திருவடியை பற்றிக் கொண்டால், இல்லத்தில் கடன், வியாதி, எதிரிகள் பயம் விலகும்.
    காப்பு

    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை.

    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.

    நூல்

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட

    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக

    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக

    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக

    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென

    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து

    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று

    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க

    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க

    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க

    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க

    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்

    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

    வாய்விட் டலறி மதிகெட் டோட
    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய

    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்

    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்

    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே

    பரிபுர பவனே பவமொளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே

    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே

    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக

    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக

    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்

    வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை

    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்ரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!

    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    (கந்த சஷ்டி கவசம் நிறைவுற்றது)
    கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யுங்கள்.
    முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்வார்கள்.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி திருநாள், 9.11.2021 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அன்றுதான் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

    கந்தசஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, தூய ஆடை அணிந்து கந்த கவசம் படித்து, கந்தனை வழிபடுங்கள். சூரபதுமனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

    ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால், பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம், பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

    கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யுங்கள். அன்றைய தினம் இனிப்பு பொருளை மட்டும் சிறிதளவு உட்கொண்டு, அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானையோ, அல்லது அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ சென்று வழிபட்டு வரலாம். அப்படி செல்ல முடியாதவர்கள், வீட்டின் பூஜை அறையில் வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடுங்கள். கந்தசஷ்டி திருநாளில் விரதமிருப்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டுப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும். செல்வ வளம் பெருக இந்த வழிபாடு கைகொடுக்கிறது.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

    தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை உண்டாக்கும் பண்டிகை என்றால் அது மிகையாகாது. தீபாவளி பண்டிகை கொண்டாடுவது பற்றி பல்வேறு கதைகள் புராணங்களிலும், நடைமுறையிலும் உள்ளன.
    இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரமாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும் பல வரலாற்று கதைகள் இருப்பதுபோலவே தீபாவளிக்கும் பல வரலாற்றுக் கதைகள் உள்ளன...தீபாவளியை தீப ஒளி என்றும் அழைக்கிறார்கள். தீமைகள் அகன்று நன்மை பிறக்கும் நாள் என்பது அதன் பொருள்.

    தீப ஒளித் திருநாளான தீபாவளித் திருநாள் இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, வங்கதேசம், என்று பல நாடுகளிலும் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகையானது வடநாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப் படுகின்றது. தீபாவளியின் முதல் நாள் தண்டேராஸ்,இரண்டாவது நாள் நரக சதுர்த்தசி, மூன்றாவது நாள் லட்சுமி பூஜை, நான்காவது நாள் கோவர்த்தன பூஜை, ஐந்தாவது நாள் பாய்தூஜ் என ஐந்து நாட்களும் மிகவும் விமரிசையாக வட இந்தியர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப் படுகின்றது.

    ராமர் தனது மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் ராவணனைக் கொன்ற பிறகு அயோத்தி திரும்பிய நன்னாளே தீபாவளித் திருநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்பதற்காக வீதிகளிலும் வீடுகளிலும் களிமண் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்தனர். ராவணன் என்னும் அரக்கனைக் கொன்று வெற்றியுடன் நாடு திரும்பியதன் நினைவாக அன்று முதல் தீபாவளி மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

    *பூமித்தாய் பூதேவி மற்றும் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹா ஆகியோரின் மகனாகிய நரகாசுரன் அனைத்திலும் சக்தி வாய்ந்தவனாகவும் நீண்ட ஆயுள் பெற்றவனாகவும் இருக்க வேண்டி தந்தையிடம் வரம் பெற்றார். அந்த வரத்தின் அதிகாரத்தால் வானத்தையும் பூமியையும் வென்று தேவர்கள் மற்றும் மக்களை அதிக கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்.எனவே தேவர்கள் அனைவரும் விஷ்ணுவை அணுகி நரகாசுரன் அகங்காரத்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.விஷ்ணு ,கிருஷ்ணஅவதாரமெடுத்து நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் மரணத்திற்கு முன் கிருஷ்ணரிடம் தனது மரணத்தை பூமியில் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றார்.கிருஷ்ணரும் அந்த வரத்தை அருளியதன் காரணமாக நரகாசுரன் இறந்த தினமே தீபாவளித் திருநாளாக கொண்டாடப் படுகின்றது.

    * சமண நூல்களின் படி, தர்மத்தை போதிக்கும் ஆசிரியரான இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் பகவான் மகாவீரர் தீபாவளி நாளில் மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

    * ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் இருபத்தியோர் நாள் கேதார கௌரி விரதம் முடிந்தது இந்த தினத்தில்தான் என்று கூறப்படுகிறது. விரதம்முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவம் எடுத்தார். இறைவன் ஜோதி வடிவாக நம்முள் இருப்பதை வழிபடுவதற்கான சிறப்பு நாள் தீபாவளி ஆகும்.மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

    * தீர்க்கதமஸ் என்ற முனிவர் தனது மனைவி, மக்களுடன் காட்டில் வசித்து வந்தார்.இருட்டினால் மட்டுமல்ல,துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள் மற்றும் அரக்கர்களால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அப்பொழுது அங்கு வந்த முனிவர் சனாதனரிடம் தீர்க்கதமஸ் மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைய வழி ஏதும் இல்லையா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர் தீர்த்தமாடி,புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பம் ஆகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். மேலும், புனிதமான எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். சரஸ்வதி வாசம் செய் கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமாதேவியும், மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும்,புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். ஆகவே, புனிதமான இந்நன்னாளில் எண்ணை ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி இறைவனை வழிபடுவது நன்மை பயக்கும் என்று கூறினார். அவ்வாறே தீர்க்கதமஸ் முனிவரும் விரதமிருந்து கொண்டாடப்பட்ட தீப ஒளித் திருநாள் தீபாவளி என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

    * விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமிக்கு பூஜை செய்து தீபங்களை ஏற்றி வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    * பொற்கோவில் கட்டுமான பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

    * தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூட கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

    * முகலாய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரிப்பதாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

    * தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில், ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள., மூலிகைகள், யானைத் தந்தங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றது. அந்த வர்த்தக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம் பெயர்ந்த நாட்டில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஆகவே பல நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் படுகின்றது.

    * ஒடிசாவில் தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி என்று கொண்டாடு கிறார்கள்.

    * பீகாரில் தீபாவளி அன்று வீட்டுக்கு வீடு துடைப்பத்தை தீவைத்துக் கொளுத்தி வீசி எறிகிறார்கள். இப்படி செய்தால் மூதேவி ஓடிவிடும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் நிலவுகின்றது.

    * குஜராத் மக்கள் தீபாவளியன்று புது கணக்கு வழக்குகளை தொடங்குகிறார்கள்.

    * நேபாளத்திலும் தீபாவளிப் பண்டிகையானது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

    * ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    * அமெரிக்கா, ஹாலந்து, நியூசிலாந்து, கனடா, மொரிஷியஸ், ஜப்பான், இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு சிங்கப்பூரில் தேசிய விடுமுறையானது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகின்றது.
    ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
    தீபாவளி பண்டிகையையொட்டி கங்கா ஸ்நானம், லட்சுமி குபேர பூஜை செய்வது தொடர்பாக ஜோதிடர் ஆனந்தி கூறியதாவது:-

    இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதற்கு பல புராண சம்பவங்களும் வரலாற்று கதைகளும் இருக்கிறது.

    ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மனதில் இருக்கும் கெட்ட எண்ண கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட இருளை நீக்க தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்ரீ பிலவ வருடம் ஐப்பசி மாதம் 18-ம் நாள் (4.11.2021) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை 3 மணி - முதல் 6 மணிக்குள் வீட்டில் சுடு தண்ணீரில் கங்காதேவியை நினைத்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பின்னர் வீட்டில் செய்த இனிப்பு உணவுகளை மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவிற்கு வெற்றிலை பாக்கு பழத்துடன் படைக்க வேண்டும். வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவது சிறப்பு. புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி பூஜையில் வைக்க வேண்டும்.

    பூஜை முடித்து புத்தாடை அணிய வேண்டும். அதன் பிறகு வீட்டுப் பெரியோர்களின் காலில் விழுந்து நல்லாசி பெற்ற பிறகு இஷ்ட குலதெய்வத்தை வணங்க வேண்டும். கேதார கவுரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்யவும் உகந்த நாளாகும்.

    கேதார கவுரி விரதம் கடை பிடிக்கும் வழக்கம் எல்லா குடும்பத்திற்கும் கிடையாது. பழக்கம் இல்லாதவர்கள் பார்வதி- பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள், விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

    பார்வதி பரமேஸ்வர வழிபாடு பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 21 சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற சிவபார்வதி அருளால் விரைவில் திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.

    பொதுவாக கிழமை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த இந்த தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிக மிக சிறப்பானதாகும்.

    வாழ்வாதாரம் பெருக லட்சுமி குபேரருக்கு பச்சை குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட சுப மங்களம் உண்டாகும். லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5.30 - மணி முதல் 8 மணிவரை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    -ஜோதிடர் ஆனந்தி

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-
    பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.
    தீபாவளி பண்டிகை அன்று தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்ன என்பதையும், தீபாவளியன்று 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
    இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை, ஐப்பசி மாதம் 18-ந் தேதி (4.11.2021) வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம், அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை அல்லது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரத்தில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் வண்ண ஆடைகளில் மஞ்சள் தடவி, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து ஆசி பெற்று கொள்ள வேண்டும். பின்னர் அணிந்து இல்லத்துப் பூஜை அறையில் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள். வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொண்டால் இனிய வாழ்க்கை அமையும்.

    தீபாவளியன்று அணிய வேண்டிய ஆடையின் நிறம்

    மேஷம் - சிவப்பு
    ரிஷபம் - சந்தன நிறம்
    மிதுனம் - பச்சை
    கடகம் - பொன்னிற மஞ்சள்
    சிம்மம் - பிரவுன்
    கன்னி - கரும்பச்சை
    துலாம் - ஆனந்தா நீலம்
    விருச்சிகம் - இளஞ்சிவப்பு
    தனுசு - வெளிர்மஞ்சள்
    மகரம் - கருநீலம்
    கும்பம் - வைலட்
    மீனம் - ஆரஞ்சு

    சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கந்த சஷ்டி விழா எளிய முறையில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆனால் இந்த ஆண்டும் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமியை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி பல்வேறு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழா நடைபெறும் 6 நாட்களும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 6-வது நாளான நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த ஆண்டு கந்த சஷ்டி நிறைவு நாளான வருகிற 10-ந் தேதி இரவு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அன்று காலை 10 மணி அளவில் சென்னிமலை ைகலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்கள் காப்புகளை கழற்றி தங்களுடைய விரதத்தை முடித்துக்கொள்வார்கள். சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
    திருப்பதியில் உள்ள கோதண்டராம சாமி கோவில் மற்றும் கோவிந்தராஜ சாமி கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
    திருப்பதியில் உள்ள கோதண்டராம சாமி கோவில் மற்றும் கோவிந்தராஜ சாமி கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவில் வளாகம், சுவர், கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் கொண்டு சுத்திகரித்து, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், கிச்சிலிக் கட்டா போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர்கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    கோதண்டராம சாமி கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தராஜ சாமி கோவிலில் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்னம் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு துணை நிர்வாக அதிகாரி பார்வதி, ராஜேந்திரா, உதவி நிர்வாக அதிகாரி ரவிக்குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தீபாவளி அன்று மகாலட்சுமி பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம்  நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    ×