என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்
    ஆன்மிகத்தில் ‘பணிவு’க்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிவு வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்து விடுகிறது. பணிவு இல்லாவிட்டால், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, அதிகாரி - பணியாளர் உறவு என அனைத்தும் சிதறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் உருவாகும். எனவே எங்கும், எவ்விடத்திலும், எப்போதும் பணிவோடு இருங்கள்.

    ‘சைவ சமயம்’ என்பதற்கு ‘தாழ்வு என்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்தல்’ என்று சைவ சமயத்தினர் இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள். தாழ்வு, அடக்கம், பணிவு போன்றவை, சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று அந்த சமயம் வலியுறுத்துகிறது. பணிவு என்ற ஒன்று அமையும்போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெறுவதாகவும் அந்த சமயம் சுட்டிக்காட்டுகிறது. “புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு” என்பது கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான உபதேசமாகும்.

    விவேகானந்தரின் குருவாக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பணிவு குறித்து இவ்வாறு சொல்கிறார். “மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்” என்கிறார்.

    நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தால், அதுவாகவே தலையை சாய்க்கும். அதுபோல் வாழ்க்கையில் உயர உயர மனிதர்களிடமும் பணிவு வளர வேண்டும். வாழ்க்கையில் உயர்வுபெற விரும்புபவன், பணிவுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அவல நிலையை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    கயிலாயம் சிவபெருமானின் இருப்பிடம். பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், ரிஷிகள் அனைவரும் இங்கு வந்துதான் ஈசனை வழிபடுவார்கள். அவர்கள் அப்படி ஈசனை வழிபடும்போது, சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு, ‘நம்மைதான் அனைவரும் வழிபடுகிறார்கள்’ என்று நினைத்து அகந்தை கொண்டதாம்.

    ஒருநாள் மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனின் மீது ஏறி, சிவபெருமானை தரிசிக்க வந்திருந்தார். கருடனைப் பார்த்த பாம்பு, “என்ன கருடா.. சவுக்கியமாக இருக்கிறாயா?” என்று அகந்தையோடு கேட்டது.

    கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் தற்போது பாம்பு இருக்கும் இடம், சிவபெருமானின் கழுத்து ஆயிற்றே. கருடனால் என்ன செய்ய முடியும்.. கருடன் அமைதியாக பதில் கூறியது, “அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால், எல்லோரும் சவுக்கியம்தான்.”

    பாம்பின் அகந்தையை சிவபெருமான் அறிந்தார். இறைவன் இருக்கும் இடத்தில் அகந்தைக்கு இடம் கிடையாது. அப்படியிருக்க அகந்தை கொண்ட பாம்பு மட்டும் இறைவனுடன் இருக்க முடியுமா என்ன?

    சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் இருந்த பாம்பை எடுத்து, வேகமாக சுழற்றி தொலைவில் வீசி எறிந்தார். விழுந்த வேகத்தில் அதன் உடலில் பெருத்த காயங்கள் உண்டானது. அதன் தலை ஆயிரம் சுக்கலாக நொறுங்கியது. ஆனாலும் இதுவரை ஈசனின் கழுத்தில் இருந்த காரணத்தால் அது இறக்கவில்லை. துன்பத்தில் உழன்று கொண்டிருந்தது.

    ‘நான் என்ன தவறு செய்தேன்’ என்று நினைக்கும்போதுதான், பாம்புக்கு தான் கொண்ட அகந்தை நினைவுக்கு வந்தது. அதனால் மிகவும் வருந்தியது.

    ஒருநாள் அந்த வழியாக வந்த நாரத முனிவர், அந்தப் பாம்பை கவனித்து விட்டார். “என்னாயிற்று உனக்கு.. சிவனின் கழுத்தில் இருக்க வேண்டிய நீ.. எதற்காக இப்படி காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாய்? உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.

    பாம்பு தனக்கு ஏற்பட்ட கதியை, நாரதரிடம் கூறி வருந்தியது. “எனது பிழையை நான் உணர்ந்துவிட்டேன். இழந்த சிறப்பை நான் மீண்டும் பெற்று, சிவபெருமானை அடைய தாங்கள்தான் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும்” என்று நாதரரைப் பணிந்து பிரார்த்தித்தது.

    தன்னை சரணடைந்த பாம்பின் மீது, நாரதருக்கு இரக்கம் உண்டானது. அவர் “நான் உனக்கு விநாயகர் மந்திரம் உபதேசிக்கிறேன். அதைச் சிரத்தையுடன் சொல்லிக்கொண்டே இரு. விநாயகரின் திருவருளால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    நாரதர் உபதேசித்த விநாயகர் மந்திரத்தை, அந்த பாம்பு சிரத்தையுடன் சொல்லி வந்தது. அந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்து போன விநாயகர் அங்கு தோன்றினார். விநாயகரிடம் தன்னுடைய நிலையை எடுத்துரைத்த பாம்பு, மீண்டும் தான் சிவபெருமானை அடைய அருளும்படி கேட்டுக்கொண்டது.

    அதற்கு விநாயகர், “எனது அருளால் உனக்கு பழைய உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மீண்டும் சிவபெருமானின் கழுத்தில் நீ ஆபரணமாக இருக்கும் உயர்ந்த நிலையை அடை வாய். ஆயிரம் சுக்கல்களாக சிதறிய உன் தலை, ஆயிரம் தலைகளாக மாறி, விஷ்ணுவின் பாம்பணையாக இருக்கும் பாக்கியமும் உனக்கு கிடைக்கும். அதோடு எனது இடுப்பிலும் நாகாபரணமாக இருக்கும் பேறும் உனக்கு அருளினோம்” என்று கூறி மறைந்தார்.

    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அந்த பாம்பு போன்றே, அவல நிலையை சந்திக்க நேரிடும். பதவியில் இருக்கும் ஒருவர் நேர்மையுடன் நடந்தால், அந்த நேர்மையே அவரைக் காக்கும். பதவியும், பணமும் வரும் போது அதோடு அகந்தையும் வந்துவிடுகிறது. அந்த அகந்தை உங்களை தொடராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அழிவே மிஞ்சும்.
    சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவனின் குமாரனான முருகப்பெருமானை சஷ்டி திதியில் வணங்கினால், மக்கள் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    மந்திரத்தில் உயர்ந்தது காயத்ரி. நதிகளில் புனிதமானது கங்கை. பசுக்களில் சிறந்தது காமதேனு. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம்.

    முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கிருத்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவை. இவற்றில் கந்தசஷ்டி விரதம் குழந்தை பாக்கியத்தை அளிக்கக் கூடியது.

    ‘சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் கரு வளரும்’.

    இது மருவி ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்றாகி விட்டது.

    ‘சஷ்டி திதி’ என்பது அமாவாசையில் இருந்து ஆறாம் நாள் வருவதாகும்.

    ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளதால், சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவனின் குமாரனான முருகப்பெருமானை சஷ்டி திதியில் வணங்கினால், மக்கள் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    முருகன் கையில் உள்ள வேல், ஞான சக்தியினை குறிக்கிறது. அனைத்து துன்பங்களும் ஞானத்தினால் விலகும்.

    சூரபத்மன், சிவனை நோக்கி தவம் இருந்து சிவபெருமானால் கூட தனக்கு இறப்பு நேரக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். பின்னர் அவன் தேவர்களையும், மற்றவர்களையும் கடுமையாக துன்புறுத்தினான்.

    இதுகுறித்து திருமால், பிரம்மா, இந்திரன் உள்ளிட்டோர் சிவனிடம் முறையிட்டனர். எனது சக்தியால் பிறக்கும் மகன் சூரனை அடக்குவான் என்று சிவபெருமான் கூறினார்.

    பின்னர் சிவபெருமான் தவநிலையில் யோகத்தில் ஆழ்ந்தார். இந்தநிலையில் அவருக்கு இல்லற உணர்வை ஏற்படுத்திட தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினார்கள். மன்மதனும் யோக நிலையில் இருக்கும் சிவன் மீது மலர் கணைகளை எய்தான். தவ நிலை கலைந்து சிவன் கோபம் கொண்டு, தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பிறகு அவனது மனைவி ரதியின் வேண்டுகோளை ஏற்று, மன்மதனுக்கு பிறர் கண்களுக்கு புலப்படாத உயிர்நிலையை வழங்கினார்.

    தேவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். ஆறு பொறிகளையும் வாயு, அக்னி இருவரும் கங்கையில் கொண்டு போய் சேர்த்தனர். கங்கையோ, அந்த தீப்பொறிகளை கடைசியாக சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விட்டாள். அங்கிருந்த ஆறு தாமரை களில் சென்று தஞ்சம் அடைந்த தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக உருமாறி தவழ்ந்தன.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் உலக மக்கள் உயர்வுக்காக இவ்வாறு திருஅவதாரம் செய்தார்.

    ‘‘அருவமும், உருவுமாகி அநாதியாய்
    பலவாயொன்றாய்ப்
    பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாக
    கருணை கூர் முகங்களாறும்
    கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
    ஒரு திருமுருகன் வந்தாங்
    குதித்தனன் உலகமுய்ய’’

    இவ்வாறு முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது.

    சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் இருந்த குழந்தைகளையும், ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். குழந்தைகளை பார்க்க வந்த பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர எடுத்து அணைத்துக் கொண்டார். அக்குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆறுமுகங்கள் 12 கரங்கள் கொண்ட ஒரே குழந்தையானது. அந்தக்குழந்தைக்கு ‘கந்தன்’ என பெயரிட்டார்.

    முருகன் உமாதேவியாரிடம் வேல் பெற்று, சூரனுடன் போருக்கு தயாரானார். முன்னதாக சூரபத்மனிடம், வீரபாகு தேவரை தூதாக அனுப்பினார். சூரபத்மன் அந்த சுமுக பேச்சுவார்த்தைக்கு இணங்காததால் போர் முண்டது. ஆறு நாட்கள் போர் நடைபெற்றது. போரில் சிங்கமுகன், தாரகாசுரன், பானுகோபன் ஆகியோர் இறந்தனர். இதனால் வெகுண்டெழுந்த சூரபத்மன் மாயைகளைக் காட்டி முருகனுடன் போரிட்டான்.

    கடைசியாக கடலில் மாமர வடிவில் நின்றான். முருகன் அன்னை பராசக்தி வழங்கிய வேலை தியானித்து செலுத்திட, மாமரம் இரு கூறுகளாகின. அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் ஆனது. முருகன் மயிலை வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் ஏற்றுக் கொண்டார்.

    விரதம் இருப்பது எப்படி?

    கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் பிரதமைக்கு முதல்நாள், ஒரு நேரம் மட்டும் சைவ உணவு உட்கொள்ள வேண்டும். பின் விரத நாளான பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து, முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு காப்பு அணிந்து விரதம் இருக்கத் தொடங்க வேண்டும். தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். முடிந்தவரை கோவிலிலேயே தங்கி இருந்து இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

    விரத நாட்களில் சிறிது தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது சிறந்தது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வழிபாடுகளை முடித்து, இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பால், பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். ஆறாம் நாளன்று உபவாசம் இருக்கலாம். உடல் நலமின்றி இருப்பவர்கள் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட சர்க்கரை சாதத்தினை சாப்பிடலாம்.

    பகலில் உறங்குவது கூடாது. சஷ்டியன்று இரவிலும் விழித்திருக்க வேண்டும். ஆறு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். முருக பக்தர்களுடன் உரையாடுவது, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. கந்தனுடைய வரலாற்றை கேட்க வேண்டும்.

    மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடி முருகனை வழிபட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, பின் தானும் உண்டு விரதத்தினை சிறப்புடன் முடிக்க வேண்டும்.

    மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் வெந்து சாம்பலாகும். அனைத்து நலன்களும் கிடைக்கப்பெறுவர். கந்த சஷ்டி கவசத்தினை படித்து மனப்பாடம் செய்தால் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற நபர்களால் செய்யப்பட்ட தீய செய்வினைகளில் இருந்து காப்பாற்றப்படுவோம். நாம் செய்த நல்வினைகளிலும் இருந்து விடுபட்டு உய்யலாம்.

    கந்தசஷ்டி தத்துவம்

    பகைவனை வெல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி, ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. இந்த விரதத்தை மேற்கொண்டால் ஞானம் பெறலாம். யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுகனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது.

    உண்ணாநோன்பு இருப்பதால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும். இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்தசஷ்டி ஆகும்.
    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது.

    கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு எனும் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.

    இங்கு முருகப்பெருமான் தெய்வானையோடு திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் பிரசித்தி பெற்றது.

    இந்த விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி 7 நாட்களும் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா தீபாவளி தினமான நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கும் சண்முக சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு கந்தசஷ்டி விழாவுக்கான காப்பு கட்டினர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை யிலும், மாலையிலும் சண்முகருக்கு சண்முக அர்ச்சனை நடைபெறும்.

    மேலும் உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் தெய்வானை தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவினை முன்னிட்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டிக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8-ந் தேதி மாலை வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி சூரசம்ஹாரம் விழாவும், நிறைவு நாளான 10-ந் தேதி பாவாடை தரிசனம் நடைபெறும்.
    தீபாவளியை முன்னிட்டு மலை மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் பலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரா மலையில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு நேற்றுமுதல் மலைமாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நல்லெண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் மலை மாதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடந்தது.

    நேற்று அதிகாலை வெல்லத்தால் சாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மலை மாதேஸ்வரர் பக்தர்களுக்கு சாந்த சொரூபமாக காட்சி அளித்தார்.

    தீபாவளியை முன்னிட்டு கோவில் கோபுரம், வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலைமாதேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இந்த பரிகாரம் செய்வதால் தோஷம் நீங்கி செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது.

    சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது. அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.

    இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும். இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும்.

    தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படி செய்தால் தோஷம் நீங்கி செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.
    இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த விழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனை குறைந்து வருவதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றிலிருந்து மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட திருநாள் விழா நடந்தது. அன்று மாலை சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் களப அபிஷேகம் கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன. அன்று இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    இதற்கிடையே கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் சபரிமலைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதுபோல சபரி மலையிலும் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. மண்டல பூஜை தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் சபரிமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பத்தனம்திட்டா, கொல்லம் ,எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சாலைகளில் மேற்கொள்ளவேண்டிய சீரமைப்பு பணிகள், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை வருகிற 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
    திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று பொருள். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பதாகும்.
    1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப, அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

    நற்பலன் தரும் திதிகள்:

    ஞாயிறு-அஷ்டமி,
    திங்கள்-நவமி,
    செவ்வாய்-சஷ்டி,
    புதன்-திரிதியை;
    வியாழன்-ஏகாதசி,
    வெள்ளி-திரயோதசி,
    சனி-சதுர்த்தசி திதி.

    இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதில் வெற்றியே கிட்டும்.

    சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:

    ஞாயிறு-சதுர்த்தசி,
    திங்கள்-சஷ்டி,
    செவ்வாய்-சப்தமி,
    புதன்-துவிதியை,
    வியாழன்-அஷ்டமி,
    வெள்ளி-நவமி,
    சனி-சப்தமி.

    மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
    சிக்கமகளூருவில் உள்ள தேவிரம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    சிக்கமகளூரு-தரிகெரே சாலை மல்லனேஹள்ளி கிராமம் பிண்டுகா பகுதியில் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தேவிரம்மன் கோவிலில் 5 நாட்கள் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. சந்திரதிரிகோண மலையில் சுமார் 2,000 அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலுக்கு தீபம் ஏற்றும் முறையில் திருவிழா தொடங்கப்பட்டது.

    அதன்படி நேற்றுமுன்தினம் இரவு முதல் மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மன் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து சென்று வரிசையில் நின்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். மேலும் சி.டி.ரவி எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா உள்ளிட்டோர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். அப்போது சி.டி.ரவி எம்.எல்.ஏ.தெரிவித்ததாவது:-

    நான் கடந்த 35 ஆண்டுகளாக தேவிரம்மனை தரிசித்து வருகிறேன். இந்த சுற்றுவட்டார மக்கள் நன்றாக இருக்க அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுமக்கள் அதிகமாக வரவில்லை. அடுத்த ஆண்டு அனைவரும் வந்து தரிசனம் செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவிரம்மன் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிக்கமகளூருவிலிருந்து மல்லேனஹள்ளி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் இன்று நடக்கும் திருவிழாவில் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் பம்பை முழங்க தானாக கர்ப்பக்கிரக கதவு திறக்கும் அதிசய நிகழ்ச்சி நடக்க உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தீமிதி திருவிழாவும், சனிக்கிழமை பல்லக்கு உற்சவம் மற்றும் ஊர்வலம் நடக்க உள்ளது. கொரோனா காரணமாக வெளியூரை சேர்ந்தவர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
    குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.

    எல்லோராவில் ஒரே இடத்தில் 34 குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 1 முதல் 12 வரை பவுத்த கோவில்கள், 13 முதல் 29 வரை இந்து கோவில்கள், மீதமுள்ள ஐந்தும் சமணத்திற்கு உரியவை.

    இதில் 16-ம் எண் கொண்ட குடைவரைக் கோவிலாக அமைந்ததுதான், கயிலாசநாதர் திருக்கோவில்.

    இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.

    சிவபெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படும் கயிலாய மலையைப் போன்ற அமைப்பில், இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமான் பார்வதி மற்றும் நந்தி, பூதகணங்களோடு கயிலையில் வீற்றிருந்தபோது, ராவணன் அந்த மலையை பெயர்த்தெடுக்க முயன்ற புராணக்கதை ஒன்று உண்டு. அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

    கருவறையில் கயிலாசநாதர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

    நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்ற அமைப்பில் உள்ளஆலயத்தின் அடிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள், ஆலயத்தையே தாங்குவது போல் காட்சி தருகின்றன.

    காண்பவர்களைக் கவரும் வகையிலான இந்த சிற்பக்கலைக்கூடம், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் இருக்கிறது. அவுரங்கபாத் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம்.

    * இது ஒற்றைக்கல் ஆலயமாகும். மலையைக் குடைந்து, தேவையற்ற கற்களை நீக்கி மட்டுமே உருவாக்கப்பட்டது. மொத்த ஆலயமும் 85 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருக்கிறது.

    * 148 அடி நீளம், 62 அடி அகலம், 100 அடி உயரம் கொண்ட பிரம்மிப்பூட்டும் இந்தக் கோவில், மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது.

    * கோவில் முழு வடிவம் பெறுவதற்காக வெட்டி நீக்கப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் 4 லட்சம் டன் எடை இருக்கும் என்கிறார்கள்.

    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 9-ந்தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.
    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் 7-வது படைவீடு என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்ரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

    இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. இதையடுத்து 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு உச்சி கால பூஜை, 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்து உள்ள மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங் களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொள்கின்றனர். மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

    மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடக்கிறது. 9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.

    மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை திருக்கோவில் உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×