search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு உற்சவர் முருகன் தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர்.
    X
    கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு உற்சவர் முருகன் தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

    கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு எனும் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.

    இங்கு முருகப்பெருமான் தெய்வானையோடு திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் பிரசித்தி பெற்றது.

    இந்த விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி 7 நாட்களும் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா தீபாவளி தினமான நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கும் சண்முக சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு கந்தசஷ்டி விழாவுக்கான காப்பு கட்டினர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை யிலும், மாலையிலும் சண்முகருக்கு சண்முக அர்ச்சனை நடைபெறும்.

    மேலும் உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் தெய்வானை தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவினை முன்னிட்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டிக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8-ந் தேதி மாலை வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி சூரசம்ஹாரம் விழாவும், நிறைவு நாளான 10-ந் தேதி பாவாடை தரிசனம் நடைபெறும்.
    Next Story
    ×