search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை

    இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார்.
    இலவசங்களை எதிலும் எப்போதும் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்க கூடாது. ஒரு முறை ஒரு இசைக்கலைஞர் வெகு விமரிசையாக வயலின் இசைத்து கொண்டிருந்தார். அந்த இசையை ரசித்த இன்னொருவர் அந்த கலைஞருக்கு ரூ.ஆயிரம் அன்பளிப்பாக வழங்கினார். கலைஞர் அதை பெற மறுத்தார். “எனக்கு ஏன் உங்கள் அன்பளிப்பு? என் இசை உங்களை மகிழ்வித்தது என்றால் எனக்கும் மகிழ்ச்சியே.

    அதற்கு ஏன் அன்பளிப்பு வழங்குகிறீர்கள்? இந்த பணிக்கு எனக்கு ஊதியம் கிடைக்கிறது. அதுபோதும் எனக்கு. உங்களுக்கு நன்றி” என்று இலவசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த கலைஞரைப் பற்றிய பார்வை அருகில் இருந்த பலரின் எண்ணங்களில் ஓங்கி உயர்ந்து நின்றது. ஏன் இலவசங்களை பெற வேண்டும்? இலவசங்களை பெறும்போது நாம் ஒரு வகையில் நம் உரிமைகளை அடகு வைத்துவிடுகிறோம்.

    ஆதாம், ஏவாளை, பரம தந்தை நினைத்திருந்தால் இலவசமாக எக்காலமும் சிங்கார வனத்தில் வாழ வைத்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் பாவம் செய்தபோது தண்டனை வழங்கினார். வாழ்வை மீண்டும் பெற, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டார். உழைத்து உண்பது பாவமா? இல்லையே! உழைக்காமல் உண்பது தான் பாவம்.

    இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார். தன் ரத்தத்தை சிந்தினார். சிலுவையில் மரித்து உயிர் நீத்தார்.
    இயேசு
    வின் சிலுவை சாவுதான் மீட்பின் விலையாக அமைந்தது. நாமும் மீட்பை இலவசமாக பெறக்கூடாது.

    அதனால் தான் ஆண்டவர் இயேசு சொன்னார், “என்னை பின்பற்ற விரும்புபவர், தன்னலம் துறந்து, தன் சிலுவையை சுமந்து வர வேண்டும் (மத் 16:26)” என்று. நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது? முள் இல்லாத ரோஜா மலர் இல்லை. இரவு இல்லாத பகல் இல்லை. பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை.

    - குழந்தை, காணியிருப்பு.

    Next Story
    ×