என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது.
    பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.

    கோவில் வரலாறு :

    ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.

    குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.

    முருகன் சிலையின் சிறப்பு :

    இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது.

    தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

    போகர் சந்நிதி :

    மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது.

    பூஜைகள் :

    முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.

    தங்கரதம் :

    ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.

    தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.

    விழாக்கள் :

    பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

    காவடி மற்றும் நடைப்பயணம் :

    பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

    வின்ச் சேவை :

    1966 ஆண்டு தேவஸ்தானம் 22 டன் எடை இழுக்கும் திறன் கொண்ட வின்ச் சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 36 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும். இது 290 மீட்டர் (960 அடி) நீள ரயில் பாதையில் இழுக்கப்படுகிறது. மலையின் உயரம் 136 மீட்டர் (450 அடி) ஆகும். பிரயாண நேரும் 480 விநாடிகள் ஆகும்.

    தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும்.

    ரோப் கார் :

    தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15 ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு :

    இணை ஆணையர்
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம்
    அடிவாரம், பழனி - 624 601.

    தொலைபேசி:   +91-4545-241417 / 242236

    திருவிசநல்லூர் பிரித்தியங்கராதேவி கோவிலில் ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் பிரித்திங்கராதேவி கோவில் உள்ளது. இங்கு 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகா மங்கள பிரித்தியங்கராதேவி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் அமாவாசை நாட்களில் நிகும்பலா மகா யாகம் நடைபெறுவது வழக்கம். பிரித்தியங்கராதேவிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் சாகம்பரி அலங்காரம் நடைபெறும்.

    அதன்படி ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கும்போது அவை சம தோஷமுள்ள ஜாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டையும் இணைக்கலாம்.
    செவ்வாய் தோஷத்திலும் சில அளவீடுகள் உள்ளன. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் செவ்வாய் இருப்பது முழு தோஷமாகும். இரண்டாம் வீட்டில் இருப்பது அதற்கடுத்த கடுமையான அமைப்பாகவும், பனிரெண்டாமிடம் அடுத்தும் இறுதியாக நான்காமிடம் குறைவான தோஷம் உள்ளதாகவும் கணக்கிடப்படுகின்றன.

    இந்நிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கும்போது அவை சம தோஷமுள்ள ஜாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டையும் இணைக்கலாம்.

    அடுத்து ஒருவரின் லக்னத்திற்கு ஏழு, எட்டில் உள்ள செவ்வாயை அடுத்தவரின் ராசிக்கு ஏழு, எட்டில் இருக்கும் செவ்வாயுடன் இணைத்துப் பொருத்தலாம். இதுவும் சம தோஷமாகக் கருதப்பட்டு இருவரும் நல்வாழ்க்கை வாழ துணை புரியும்.

    அதேபோல ஒருவரின் ஜாதகத்தில் இரண்டிலுள்ள செவ்வாயை ஏழு, எட்டில் உள்ள மற்றவரின் ஜாதகத்துடன் பொருத்துவது சில நிலைகளில் சரிதான் என்றாலும் நான்கு, பனிரெண்டாமிடங்களில் செவ்வாய் இருக்கும் குறைந்த அளவு தோஷமுள்ள ஜாதகத்தை கடுமையான ஏழு, எட்டாமிட செவ்வாயுடன் இணைப்பது தவறு.

    இன்னும் ஒரு நுணுக்கமாக ஒருவருக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் அடுத்தவருக்கு இரண்டாமிடத்தில் சனி என்பது மிக நல்ல பொருத்தம்தான். இருவருக்குமே குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் பாபக் கிரகம் இருப்பதால் சம தோஷமாகி கெடுதல் வர வாய்ப்பில்லை. ஆனால் இருவரில் ஒருவருக்கு ஒரு கிரகம் சுபத்துவம் அடைந்திருந்தால் பொருத்தக் கூடாது. கிரக பாப, சுபவலுக்கள் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

    இந்த விதி ஏழு, எட்டாமிடங்களுக்கும் சரி வரும். ஒருவருக்கு ஏழில் சனி இன்னொருவருக்கு ஏழில் செவ்வாய் என்பது தீமை தராத பொருத்தமே. அதுபோலவே ஒருவரின் எட்டில் செவ்வாய் இன்னொருவருக்கு எட்டிலோ இரண்டிலோ சனி என்பதும் இணைக்க வேண்டிய ஜாதகம்தான்.

    மொத்தத்தில் செவ்வாய் தோஷத்தை கணக்கிடும்போது சனியும் அந்த ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டீர்களானால் குழப்பம் எதுவுமில்லாமல் பொருத்தம் பார்க்கவோ, பலன் சொல்லவோ துல்லியமாகக் கை கொடுக்கும்.
    நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.
    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அந்தவகையில் செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் மனிதனுக்கு ருனம் மற்றும் ரணத்தை நீக்கக்கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மற்றும் பித்ரு தோஷமும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி, திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து, பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் பட்டினி அகலும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட்டால் ஈசனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
    சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக நாளை ஒருநாள் மட்டுமே கோவில் சபரிமலை நடை திறந்திருக்கும். இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    கொரோனா கட்டுப்பாடுகளின் படி தற்போது வரை நடைமுறையில் உள்ள 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், அவை இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை ஒருநாள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும்.

    இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனம் செய்ய 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, விரதம் இருந்து சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது.
    தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, விரதம் இருந்து சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய விரத பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    மகாலட்சுமி பூஜை

    திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.

    குபேர பூஜை

    செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது. எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.

    கேதார கவுரி விரதம்

    சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். சிவ- பார்வதி படத்திற்கு பதிலாக, அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.

    சத்யபாமா பூஜை

    நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினம் தீபாவளி. நரகாசுரனின் தாய் பூமாதேவியாவார். நரகாசுரனுக்கு அவனது தாயால்தான் மரணம் என்பது வரமாக அளிக்கப்பட்டிருந்தது. எனவே பூமாதேவியின் அம்சமாக கிருஷ்ண அவதாரத்தின் போது தோன்றியவர், சத்யபாமா. அவர்தான் கிருஷ்ணருடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி அன்று, சத்யபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும்.

    முன்னோர் வழிபாடு

    துலா மாதமாக சொல்லப்படும் ஐப்பசி மாத அமாவாசை தினம், முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்தில் முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.

    குலதெய்வ பூஜை

    நாம் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும், அவை எதுவும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. குலதெய்வத்தை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும். ஒருவரின் குடும்பம் சீராகவும், நல்ல முறையிலும், சச்சரவுகள் இன்றியும் நடைபெற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அவசியமானது. எனவே எந்த பண்டிகையாக இருந்தாலும், வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, முதலில் அவரை வணங்கி விட்டு, பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம் பெருந்தன்மை.

    பெருந்தன்மை என்றால் என்ன?

    நமது உள்ளங்களிலும், எண்ணங்களிலும் மற்றவர்கள் குறித்து நல்உணர்வுடனும், நல்ல மனநிலையிலும் இருக்கும் தன்மையே பெருந்தன்மை.

    யாரைப் பற்றியும் உள்ளத்தாலும், எண்ணத்தாலும் தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவதே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

    பெருந்தன்மையாளர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறரும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

    பெருந்தன்மையை அனைத்து வடிவங்களிலும் காணமுடியும். அதை கொடுக்கல் வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கேட்பதில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கொடுப்பதில் வெளிப்படுத்தலாம். வழக்காடுவதில் வெளிப்படுத்தலாம். பிறரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம்.

    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

    “ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம் ‘நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்’ என்று கூறினார். இதனால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “பெருந்தன்மையுடன் நடந்த இந்த மனிதரைப் பார்த்து இறைவன் ‘பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். எனவே, என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்’ என வானவர்களிடம் கூறினான் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    பெருந்தன்மையாக நடந்து கொள்வது இறைவனையே கவர்ந்துவிட்டது. இதற்கு பிரதிபலனாக இறைவன் அவரின் பாவங்களை தள்ளுபடி செய்து, அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்துள்ளான். அந்த மனிதர் உலகில் செய்த ஒரே காரியம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது மட்டுமே. பெருந்தன்மையாக நடப்பதற்கு இறைவனிடம் உயர்ந்த பதவியும், சிறந்த விருதும் கிடைத்துவிடுகிறது.

    இறைவனே பெருந்தன்மை மிக்கவன்தானே!

    “(அவனே) சிம்மாசனத்திற்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்”. (திருக்குர்ஆன் 85:15)

    பெருந்தன்மை என்பது இறைவனின் ஓர் அருட்குணம். அந்த குணத்தை வெளிப் படுத்துவோருக்கு இறைவன் தனிமரியாதையை வழங்கி, மற்றவர்களின் முன்னிலையில் கவுரவிக்கின்றான்.

    இத்தகைய தன்மையை நபி (ஸல்) அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்தார்கள்.

    “ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவர் நபிகளாரிடம் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘அவரை தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி, அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ‘அவருக்குத் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயது உடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது’ என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்லமுறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதைப் போன்று நாமும் நடந்து, இறைவனின் உயர்பதவியை அடைவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

    இதையும் படிக்கலாம்...சமூக பொறுப்புணர்வு அவசியம்...
    திருச்செந்தூர் கோவிலில் 6, 7-ம் திருநாட்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 2-வது ஆண்டாகவும் பக்தர்களின்றி எளிமையாக நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    7-ம் திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம்.
    இன்று உலகமே பெருந்தொற்றுக்கு உள்ளாகி தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக தொழில்துறையின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கங்கள் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்து, தொழில்நிறுவனங்களின் கதவுகள் மெல்ல திறக்கப்பட்டு வருகிறது. அரசும் இவர்களுக்கு அனைத்து வகையிலும் கை கொடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருந்தாலும், தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடி கொண்டிருக்கின்றனர். கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது கொரோனாவுக்கு பின்னர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த தொழிலும் லாபம் காண்பது அரிதாகி போனது. எந்த தொழில் செய்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான் உள்ளது.

    அன்றாட கூலிக்கே திண்டாட்டம் என்ற புலம்பல் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. எப்போதும் மனிதன் தனக்கான பிரச்சினை எழும் போது தான் இறைவனின் திசை, அவனது கண்களுக்கு புலப்படும்.

    சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய பரிகாரம் இது. ஒரு நம்பிக்கை மற்றும் முயற்சியின் கீழ் இதை செய்து பயன்பெற முயற்சிக்கலாம்.

    விளக்கேற்றி வழிபாடு

    தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி வந்தால் தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

    விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலட்சுமி தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள்பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும் என்று வேண்டி தீபத்தை வணங்கி தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

    ‘ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ’ இம்மந்திரம் கடை மற்றும் வியாபார தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே இதையும் ஒரு முயற்சியாக மேற்கொண்டு தொழிலில் வெற்றிபெறலாம்.
    மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில் மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் மாதம் 2-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    2-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * பிரதோஷம்
    * சித்தயோகம்
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி

    3-ம் தேதி புதன் கிழமை :
     
    * மாத சிவராத்திரி
    * நரக சதுர்த்தி ஸ்நானம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி
     
    4-ம் தேதி வியாழக்கிழமை :

    * சர்வ அமாவாசை
    * தீபாவளி பண்டிகை
    * கந்த சஷ்டி ஆரம்பம்
    * சிக்கல் ஸ்ரீசிங்கராவேலவர் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்- ரேவதி

    5-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சித்தயோகம்
    * கோவர்த்தன விரதம்
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - அசுபதி

    6-ம் தேதி சனிக்கிழமை :

    * கரிநாள்
    * சந்திர தரிசனம் நன்று
    * குமாரவயலூர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - பரணி

    7-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * அமிர்தயோகம்
    * திரிலோசண ஜீரக கௌரி விரதம்
    * சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபால் திருக்கோலமாய் காட்சி
    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    8-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * சதுர்த்தி விரதம்
    * தூர்வா கணபதி விரதம்
    * வெள்ளி மயில் வாகன பவனி
    * சந்திராஷ்டமம் -  கார்த்திகை, ரோகிணி

    ×