search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    பெரும் பேற்றை தரும் பெருந்தன்மை

    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம் பெருந்தன்மை.

    பெருந்தன்மை என்றால் என்ன?

    நமது உள்ளங்களிலும், எண்ணங்களிலும் மற்றவர்கள் குறித்து நல்உணர்வுடனும், நல்ல மனநிலையிலும் இருக்கும் தன்மையே பெருந்தன்மை.

    யாரைப் பற்றியும் உள்ளத்தாலும், எண்ணத்தாலும் தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவதே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

    பெருந்தன்மையாளர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறரும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

    பெருந்தன்மையை அனைத்து வடிவங்களிலும் காணமுடியும். அதை கொடுக்கல் வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கேட்பதில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கொடுப்பதில் வெளிப்படுத்தலாம். வழக்காடுவதில் வெளிப்படுத்தலாம். பிறரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம்.

    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

    “ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம் ‘நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்’ என்று கூறினார். இதனால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “பெருந்தன்மையுடன் நடந்த இந்த மனிதரைப் பார்த்து இறைவன் ‘பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். எனவே, என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்’ என வானவர்களிடம் கூறினான் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    பெருந்தன்மையாக நடந்து கொள்வது இறைவனையே கவர்ந்துவிட்டது. இதற்கு பிரதிபலனாக இறைவன் அவரின் பாவங்களை தள்ளுபடி செய்து, அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்துள்ளான். அந்த மனிதர் உலகில் செய்த ஒரே காரியம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது மட்டுமே. பெருந்தன்மையாக நடப்பதற்கு இறைவனிடம் உயர்ந்த பதவியும், சிறந்த விருதும் கிடைத்துவிடுகிறது.

    இறைவனே பெருந்தன்மை மிக்கவன்தானே!

    “(அவனே) சிம்மாசனத்திற்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்”. (திருக்குர்ஆன் 85:15)

    பெருந்தன்மை என்பது இறைவனின் ஓர் அருட்குணம். அந்த குணத்தை வெளிப் படுத்துவோருக்கு இறைவன் தனிமரியாதையை வழங்கி, மற்றவர்களின் முன்னிலையில் கவுரவிக்கின்றான்.

    இத்தகைய தன்மையை நபி (ஸல்) அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்தார்கள்.

    “ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவர் நபிகளாரிடம் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘அவரை தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி, அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ‘அவருக்குத் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயது உடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது’ என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்லமுறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதைப் போன்று நாமும் நடந்து, இறைவனின் உயர்பதவியை அடைவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

    இதையும் படிக்கலாம்...சமூக பொறுப்புணர்வு அவசியம்...
    Next Story
    ×