என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு கமலாலய குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழாவாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    தினமும் 3 முறை குளத்தை தெப்பம் வலம் வருவது வழக்கம். ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரமாகும். இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த தெப்பத்தின் நீளம், அகலம் முறையே 50 அடியும், உயரம் சுமார் 40 அடியும் உடையதாகும். 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி அதன் மீது தெப்பம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 500 பேர் ஏறி வரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தெப்பத்தினை சுற்றி வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

    தெப்ப திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா, தக்கார் ராணி, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    சேலம் மாநகரில் உள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோவில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில்.

    இத்திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோயிலாகும். இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும்.

    குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாய் அழகிரிநாதரை வழிபடும் பக்தகோடிகளின் நம்பிக்கை.

    திருப்பதி நேற்று 74,389 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,007 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
    கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இலவச தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    வெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருப்பதி நேற்று 74,389 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,007 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    இலவச தரிசனத்திற்கு சுமார் 8 மணிநேரம் ஆகிறது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
    பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை திருக்கொடி பவனியுடன் தொடங்கியது. தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடியேற்றமும், பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை ஜோசப்குழந்தை, வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    சாமிதோப்பு அன்புவனத்தில் உள்ள அன்பு பதியில் ஒவ்வொரு வருடமும் வைகாசி முதல் ஆவணி மாதம் வரை 110 நாட்கள் தொடர்ந்து தவவேள்வி நடைபெறுவது வழக்கம்.
    சாமிதோப்பு அன்புவனத்தில் உள்ள அன்பு பதியில் ஒவ்வொரு வருடமும் வைகாசி முதல் ஆவணி மாதம் வரை 110 நாட்கள் தொடர்ந்து தவவேள்வி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட தவம் வேள்வி கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடைபெற்றது.

    பின்னர் தவ வேள்வியினை அன்புவன நிறுவனத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேராசிரியர் தர்மரஜினி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மும்பை நகர் அய்யா வைகுண்டர் ஐவர் குழு தலைவர் அய்யாவு முன்னிலை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் ஆண்ட்ரூ மைக்கேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் மகாராஜன், செல்லையா பணிவிடை யாளர் வென்னிமல் உட்பட அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தவ வேள்வியில் அய்யா வைகுண்டர் வகுத்துத் தந்த மூன்று நீதங்களும் தழைத்து, முப்பத்திரண்டு அறமும் வளர்வதற்கு, அய்யாவழி முறைப்படி 9-ம் ஆண்டிற்கான தவவேள்வி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த தவவேள்வியில் மனிதநேயம், உலக சமாதானம், சீரான வாழ்வு, கல்வி, தொழில், வணிகம், வேளாண்மை, வளர்ச்சி, அரசியல், ஆன்மீகம் மற்றும் சமூகம் காக்கவும் ஒவ்வொரு நாளும் அந்தந்த துறை சார்பில் அதனுடைய அதிகாரிகள் தலைமையில் தவம் வேள்வி நடைபெறுகிறது.

    தமிழக, கேரள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். கல்வி வளர்ச்சி வேண்டுதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா  போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் 23 நாட்கள் ஓதுவர். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார்.

    10-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும்.  ஜூன் 11-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

    சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந்தேதி அதி காலை தர்காவிற்கு சந்தனக்கூளடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஜூன் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
    திருச்சியை அடுத்த புங்கனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அழகுநாச்சி அம்மன் வாடிவாசல் கருப்பு கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி திருவிழா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது கொரோனா முற்றிலும் குறைந்துள்ளதால் திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று இரவு தொடங்கியது.

    விழாவையொட்டி, வருகிற 23-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மன் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும் மற்றும் குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந்தேதி (புதன்கிழமை) மாலை எல்லை சட்டி உடைத்தல் என்னும் வார் சோறு விடுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு பொதுமக்கள் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை அழகுநாச்சி அம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவில் வரை பக்தர்கள் கோடு போடுதல் என்னும் நிகழ்ச்சியும், அன்று மதியம் தலை குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அன்று மாலை மின் அலங்காரத்துடன் பூந்தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும், அன்று இரவு பொதுமக்கள் சார்பாக கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று அன்று மாலை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று இரவு புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் சார்பாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்  பட்டயதார் நந்தகுமார், வேலாயுதம், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.
    சென்னை :

    இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முதல்அமைச்சர் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சபாநாயகர் (நடராஜர்) கோவிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.

    கொரோனா காரணமாக கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், இப்போது கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துகளை அரசு பரிசீலனை செய்து, கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன் கோவில்
    காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.
    சிவாலயங்கள் பலவற்றுக்கும் இல்லாத ஒரு விசேஷம் சிதம்பரத்துக்கு உண்டு. மூலவரும் உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு எங்கும் காணாத அதிசயம். அதைப்போல் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.

    காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’  காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.

     தலவரலாறு:

    ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால்,  'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில்  கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.

    அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை,  தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.

    ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.

    சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

    சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

    சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.

    இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
    திருச்செந்தூர் என்றாலே, அங்கு கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் நினைவுதான் வரும். அந்த அளவிற்கு பிரசித்திப் பெற்ற திருக்கோவில், திருச்செந்தூர். இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகவும் திகழ்கிறது. முருகப்பெருமானின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. ஆம்.. அவர் சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, ஆட்கொண்ட இடமாக திருச்செந்தூர் திருத்தலம் உள்ளது.

    கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்தக் கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் மறைந்து விட்டன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஆறு நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. அசுர படைகள் வீழ்ந்த பின்னர் சூரபத்மன் மாமரமாக உருமாறினான். முருகப்பெருமான் தனது வேலினால் மா மரத்தை இரண்டாகப் பிளந்தார். மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன், சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றில் ‘கந்தபுஷ்கரணி’ என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும். இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உப்பு தன்மையே இல்லாத நன்னீராக இருக்கிறது. கந்தக் கடவுளின் அருளால் அமைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள்.
    வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வைகா சித்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதையடுத்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கருட வாகன சேவை கடந்த 15ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை (வியாழக் கிழமை) நடைபெற உள்ளது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார்.

    காந்திசாலை, காமராஜர் சாலை மற்றும் நான்குராஜ வீதிகள் வழியாக தேர் செல்கிறது. அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஜனைகோஷ்டியினர் தேரின் பின்புறம் பஜனை பாடல்களை பாடியடி செல்வார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...பல்வேறு தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...
    சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
    1. இறைவன் வீற்றிருக்கும் கருவறை (மூலஸ்தானம்)

    2. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம் (அர்த்த மண்டபம்)

    3. பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம் (மகா மண்டபம்)

    4. சண்டிகேஸ்வரர் சன்னிதி

    5. அம்பாள் மூலஸ்தானம்

    6. கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் (நிருத்த மண்டபம்)

    7. பள்ளியறை

    8. நடராஜர் சன்னிதி

    9. கொடிமரம் இருக்கும் இடம் (துவஸதம்ப மண்டபம்)

    10. இறைவனுக்கான நைவேத்தியம் தயாரிக்கும் இடம் (மடப்பள்ளி)

    11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

    12.பசு பராமரிக்கும் இடம் (கோசாலை)

    13. அம்பாள் சன்னிதி

    14. சந்தான குரவர் சன்னிதி

    15. விழாக்கால சப்பரம் வைக்கும் இடம் (வாகன சாலை)

    16. விநாயகர் சன்னிதி

    17. முருகன் சன்னிதி

    18. வசந்த மண்டபம்

    19. பைரவர் சன்னிதி

    20. சூரியன் சன்னிதி

    21. சந்திரன் சன்னிதி

    22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்

    23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக் குளம்

    24. நைவேத்தியத்திற்காக நீர் எடுக்கும் இடம்

    (மடப்பள்ளிக் கிணறு)

    25. தட்சிணாமூர்த்தி சன்னிதி

    இவைத் தவிர பெரிய ஆலயங்களில், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாக சாலை, ஆகம நூலகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.
    ×