என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். கவுதமருக்கு அனைத்து பணிவிடைகளையும் இவ்விருவருமே செய்து வந்தனர். ஒருநாள் ஆசிரமத்தில் கௌதமர் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்நேரம் பூஜைக்கு இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி இறந்து மிதந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரையும் பல்லிகளாக போகக் கடவீர்களாக என சபித்தார்.

    தவறை உணர்ந்து விட்டோம் சுவாமி. எங்களை மன்னித்து அருள வேண்டும் சுவாமி, நாங்கள் சாப விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு கவுதமர், நீங்கள் இருவரும் சத்திய விரத க்ஷேத்திரமான காஞ்சிக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளை வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம். அதோடு உங்களுக்கு மோட்சமும் கிட்டும் என்று கூறினார்.

    இதையடுத்து ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரும் காஞ்சிபுரம் வந்து வரதராஜப் பெருமாளை வழிபட்டனர். அவர்களின் பக்தியை மெச்சிய வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார். மேலும், இருவரின் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்கு பின்புறம் இருக்கட்டும்.

    என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்றும் அருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுக்கு தங்க முலாமும், மற்றொன்றுக்கு வெள்ளி முலாமும் பூசப்பட் டுள்ளது.  பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.

    ஒரு முறை காஞ்சி மகாப் பெரியவர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு விஜயம் செய்தார். பெருமாளை தரிசித்து விட்டு திரும்புகையில் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் வைத்து அவரது உச்சந்தலை மேல் பல்லி விழுந்தது. பின்னால் வந்த அவரது சீடர் ஒருவர் அதைத் தட்டிவிட்டார். உடனே உடன் வந்த ஊர் பிரமுகர்கள் சுவாமி. உச்சந்தலையில் பல்லி விழுந்தால் மரணம் என்று பல்லி சாஸ்திரம் கூறுகிறதே, இதற்கு பரிகாரம் ஏதும் செய்யக்கூடாதா என்று கேட்டதற்கு. இது சத்திய விரத க்ஷேத்திரம் (காஞ்சிபுரம்). இந்த மண்ணில் பல்லி தோஷம் என்பதே கிடையாது என்று அருளியது குறிப்பிடத்தக்கது.
    ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது.

    மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 12ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    தொடர்ந்து பட்டணப் பிரவேச விழாவை யொட்டி முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.

    சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வருகிற 22ந் தேதி புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.
    ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
    குடும்பம் என்பது நிம்மதி, சந்தோசம் நிறைந்ததாகவும் தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்க வேண்டும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கே குடும்பத்தை கோவிலாக்கும். இதில் குற்றம் ஏற்படும் போது குடும்பத்தில் கலகலப்பு குறைந்து  சலசலப்பு மிகுதியாகும். நல்ல விவாதத்தில் நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிர்ச்சினைகளால் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன் சண்டை அழுகை, கத்துதல்,  வீட்டைவிட்டு வெளியேறுதல்.. போன்று மோசமான சூழலை உருவாக்கும்.

    கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம் , தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங்களில்  ஒற்றுமை குறைவு மிகுதியாகவே இருக்கிறது.

     இன்றைய கால கட்டத்தில் பொருளாதார தேவை  காரணமாக கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்து பேச நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டது. அத்துடன் பணத் தேவைக்காக கணவன் ஒரிடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் குழந்தைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் பந்தம், பாசம், விட்டுக் கொடுத்தல், அன்பாக பழகுதல் போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.

     ஜோதிட ரீதியாக 6, 8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புத்தி காலங்களில்தான் உறவுகளுடன் பகை வளர்கிறது. எது எப்படி இருந்தாலும் குடும்ப உறவுகள் எதிரியாகாமல் (6ம் பாவகம்) வம்பு வழக்கு இல்லாமல் (8ம் பாவகம்)  பிரியாமல் (12ம் பாவகம்) வாழ்வது மிகப் பெரிய கொடுப்பினை.

    ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு , தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் இடத்திற்கும், 2ம் அதிபதிக்கும்  மறைவு ஸ்தான அதிபதிகளான 6,8,12ம் அதிபதிகளின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எத்தகைய சுப பலன்களையும் அனுபவிக்க முடிவதில்லை. 2ம் இடத்திற்கு சனி, ராகு/கேது சூரியன், செவ்வாய் மற்றும் வக்ர நீச, அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் உறவுகளால் மனக் கசப்பான சம்பவம் மிகுதியாக இருக்கும்.

    2ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் அசுப கிரகங்களின் தசை காலங்களில் பணம், பொருள் விரயம், அவமானம், மன வேதனை, உறவுகளுடன் வாக்கால் பிரச்சினை ஏற்படும். இதன் உச்சகட்டமாக குடும்பத்தை விட்டு பிரிய நேருகிறது.

    பரிகாரம்

    ஜனன கால ஜாதகத்தில் 2-ம் இடத்தில் வக்ரம், அஸ்தமனம் மற்றும் நீச, அசுப கிரகங்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள்  குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும். எறும்பு புற்றுக்கு நாட்டு சர்க்கரை கலந்த நொய் அரிசி போட குடும்பம் கோவிலாகும்.

    தினமும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு எந்த உறவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை  21 முறைச் சொல்லவும்.  அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

    விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பணம், வெள்ளி, தங்கம், நெல், தானிய வகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    தென்திருப்பதி, திருமாலிருஞ்சோலை என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் புனித தலமானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் பணம், வெள்ளி, தங்கம், நெல், தானிய வகைகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கடந்த ஆண்டு விளைந்த நெல், தானிய வகைகளை அலங்காநல்லூரை அடுத்த கோட்டை மேடு விவசாயிகள், கள்ளழகர் பெருமாளுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர். இதுதவிர வருகிற ஜூன் மாதம் முல்லை பெரியாறு-வைகை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினமும் பாசன விவசாயி விதைப்பு என்று சொல்லக் கூடிய நெல்லைகொண்டு வந்து காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    பக்தர்கள் செலுத்தும் நெல் காணிக்கைகளை சரியாக தானிய கிடங்கில் சேர்க்கப்படுகிறதா என்று தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
    பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோவிலை மீண்டும் தோண்டி சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பரமக்குடி அருகே உள்ளது மேலப்பார்த்திபனூர் கிராமம். இங்கு கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு கல்லை தட்டினால் ஒவ்வொரு ஓசையை எழுப்பும். நாட்கள் ஆகஆக இந்த கோவில் மண்ணுக்குள் புதையுண்டு விட்டது. தற்போது மேல் கூரை பகுதி மட்டும் தரை மட்டத்தில் உள்ளது. அந்த கோவிலை மீண்டும் தோண்டி சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அதன் படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அந்த கோவிலை புனரமைக்க ் மாநில திருப்பணி ஆலோசனைக் குழு உத்தரவின்பேரில் கோவிலை சுற்றி தோண்டும் பணி நேற்று தொடங்கியது. எந்திரம் மூலம் சுமார் 8 அடி வரை கோவிலை சுற்றி தோண்டப்பட்டது.

    அப்போது மண்ணுக்குள் புதையுண்ட பகுதிகள் முழுவதும் வெளியே தெரிந்தது. ஏராளமான கற்கள் ஆங்காங்கே உடைந்து மண்ணுக்குள் புதைந்து இருந்ததை எந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர். மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரமுடைய அய்யனாரும், கோவில் வெளி பிரகாரத்தில் நந்தி சிலையும் உள்பிரகாரத்தில் விநாயகர், வராகி அம்மன் சிலைகளும் உள்ளன.

    இந்த கோவில் தோண்டி எடுக்கப்பட்டதும் தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை கோவில் தக்கார் முருகானந்தம் பார்வையிட்டார். இதுகுறித்து கோவில் பூசாரி மனோகரன் கூறுகையில், கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகவும் சக்தி வாய்ந்த கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நிறைய இருந்தன. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் நிறைய நிலங்கள் போய் விட்டது. தற்போது 1.6 ஏக்கர் மட்டும் கோவில் இடமாக உள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.
    யோகா னந்த கரீம் ஜகத்ஸுககரீம்
    யோகீந்த்ர சித்தாலயாம்
    ஏகாமீச ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
    ஏகாந்த ஸஞ்சாரிணீம்
    வாகீசாம், விதி, விஷ்ணு, சம்பு, வரதாம்
    விச்வேச்வரீம் வைணிகீம்
    வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
    வாஞ்சானுகூலாம் சிவாம்

    பொருள் : தியான யோகத்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவள், உலகிற்குச் சுகத்தை அளிப்பவள், யோகிகளின் மனதைக் கோவிலாகக் கொண்டவள், அத்விதீயாக இருப்பவள், பரமசிவனுக்குச் சுகத்தை அளிப்பவள், பிரளய காலத்தில் தனித்து நிற்பவள், வாக்கிற்கு ஈஸ்வரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு வரங்களை அளிப்பவள், உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.
    தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், காமாட்சி அம்மனுக்கு மேள தாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களுடைய தோள்களில் காமாட்சியம்மனை சுமந்து குளக்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்தில் கைத்தட்டி வணங்கி ஆரவாரம் செய்தனர்.

    அதன் பின்னர் தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பனையூர் கிராம உடையார் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு சென்னை கானாவா? கிராமிய தெம்மாங்கா? என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வு செய்தனர். இதை பற்றி அவர்கள் கூறியதாவது :- இந்த கல் மூன்று அடி உயரமும் 1¼ அடி அகலமும் உள்ளது.

    அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று 4 வரி மட்டும் எழுதப்பட்டு உள்ளது. நான்கு புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது. தற்போது வேலூர் என அழைக்கப்படும் இந்த ஊர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது. மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சைவம், வைணவம் இடையே இருந்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக, ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா சித்திரை திருவிழா.

    இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வில் சைவ, வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி, இத்திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும் விதமாக ஆணையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார்.

    இவ்வாறு நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்பிக்கும் வகையில் இந்த வேலூர் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி.

    அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

    அந்த நேரம் கஞ்சி கலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள்.வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இரு கரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கவுளை கண் மூடி கை தொழும் நேரம், கஞ்சி கலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள்.

    கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா. என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்று சுற்றினார். வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன். என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும். பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

    அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதே மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தகறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன்.

    அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல என்றாள். மனைவியின் சொல்லைக்கேட்ட குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

    வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது.

    வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மர நிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

    உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கை கூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தப்பட்டது.

    அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

    இப்போதும் அப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கும்போது முதல் உழவு செய்யும் முன் பணிகள் சிறப்புற அமைய வேண்டும் என்று அழகுநாச்சியம்மனை வேண்டி பூஜை செய்த பின்னரே உழவு பணியை தொடங்குகின்றனர்.

    அழகுநாச்சியம்மன் கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது.
    வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, அளவற்ற சுகம், மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!
    பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
    ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்

    அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

    ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
    ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்

    அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

    நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
    ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்

    ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

    ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
    நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்

    உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.

    நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
    சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்

    பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

    பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
    குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்

    சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.

    மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
    பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்

    மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)

    சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
    விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்

    நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

    ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
    வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்
    ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்

    வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!
    இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
    சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும் கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

    அந்த வகையில் தேய்பிறை சதுர்த்தியான இன்று விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால்  கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.  நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து விரதம் இருந்து விநாயகரை மனதில் நினைத்து துதிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் நிவேதனம் செய்த உணவை உண்ணலாம்...

    இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், குழந்தை பாக்கியம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்பது நம்பிக்கை.
    வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவில் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் நீலம் மற்றும் ரோஜா நிற பட்டு உடுத்தி தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி அளித்தார்.

    பின்னர் சுவாமி, 73 அடி உயரமுள்ள 7 நிலை கொண்ட பிரமாண்ட தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் குலுங்கியது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதானமும், நீர்மோரும் வழங்கப்பட்டது.

    தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மூங்கில் மண்டபம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது.

    தேரோட்ட விழாவில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்யபிரியா, எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், வாலாஜாபாத் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் முத்தியால் பேட்டையிலும், உத்திரமேரூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் ஓரிக்கை பகுதியிலும், சென்னை, வேலூர் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஒலிமுகமது பேட்டையிலும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சீபுரம் நகருக்கு வந்தனர்.

    தேர் சென்ற வீதிகள் முழுவதும் பாதுகாப்பு முன்ஏற்பாடாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×