search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
    X
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவில் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் நீலம் மற்றும் ரோஜா நிற பட்டு உடுத்தி தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி அளித்தார்.

    பின்னர் சுவாமி, 73 அடி உயரமுள்ள 7 நிலை கொண்ட பிரமாண்ட தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் குலுங்கியது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதானமும், நீர்மோரும் வழங்கப்பட்டது.

    தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மூங்கில் மண்டபம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது.

    தேரோட்ட விழாவில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்யபிரியா, எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், வாலாஜாபாத் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் முத்தியால் பேட்டையிலும், உத்திரமேரூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் ஓரிக்கை பகுதியிலும், சென்னை, வேலூர் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஒலிமுகமது பேட்டையிலும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சீபுரம் நகருக்கு வந்தனர்.

    தேர் சென்ற வீதிகள் முழுவதும் பாதுகாப்பு முன்ஏற்பாடாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×