என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு தை அமாவாசை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடைபெற்றது.

    தை அமாவாசையைெயாட்டி 2-வது நாளாக அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அவர்கள் கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர். அதன்பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு புனித காணிக்கை மாதா தேர் பவனி நடைபெறும்.
    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முதல் நாளில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. விழாவில் காணிக்கை மாத ஆலய முன்னாள் பங்குத்தந்தை டயனிசியஸ் கொடியேற்றி வைத்தார். கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் வின்சென்ட எட்வின் மறையுறையாற்றினார்.

    விழாவில் நேற்று முன்தினம் காலையில் திருமுழுக்கு திருப்பலி நடைபெற்றது. குளச்சல் வட்டார முதல்வர் அருட்பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் தலைைம தாங்கினார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன் மறையுறையாற்றினார்.

    தொடர்ந்து மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலி நடைபெற்றது. அருட்பணி ஜாண்சன் தலைமை தாங்கினார். குளச்சல் மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் ஆன்றனி ரொசாரியோ மறையுறையாற்றினார்.

    விழாவில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். மறைமாவட்ட நிதி நிர்வாகி அருட்பணியாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 6 மணிக்கு புனித காணிக்கை மாதா தேர் பவனி நடைபெறும். இரவு 8 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுறையாற்றுகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சியில் முன்னாள் பங்குத்தந்தை செல்வராஜ் தலைமை தாங்குகிறார். சைமன்காலனி பங்குத்தந்தை கோல்ரிட்ஜ்ஜிங் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    6 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருவிழா முதல் திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து நடைபெறும் ஆடம்பர திருவிழா திருப்பலியில் அருணாச்சலப்பிரதேசம் மியாவோ ஆயர் டென்னிஸ் பனிப்பிச்சை தலைமை தாங்குகிறார். கோட்டார் பேராலய அதிபர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுறையாற்றுகிறார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது. அன்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் வாகனச் சேவை நடக்காது, என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா வருகிற 8-ந்தேதி நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. முதல் வாகனச் சேவையாக காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் ேசவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும். தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனச் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடக்கிறது.

    ரத சப்தமி விழாவையொட்டி அன்று கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேற்கண்ட 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அனைத்து வாகனச் சேவைகளும் கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலுக்கு வெளியே நான்கு மாடவீதிகளில் உலா வராது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. கோவிலில் வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அனைத்து வாகனச் சேவைகளும் நடக்கிறது.

    அதன்படி 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை, காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹம்ச வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை குதிரை வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கருட வாகனச்சேவை, காலை 10 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை.

    மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் சக்கர ஸ்நானம், மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை சந்திரபிரபை வாகனச் சேவை, இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை யானை வாகனச் சேவை நடக்கிறது.

    ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது.

    ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.

    மன்மதன் வழிபட்ட தலம் :

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

    காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

    கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன.

    இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

    அஷ்டபைரவர்கள் :

    காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.

    பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

    திருவிழாக்கள் :

    ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

    ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    ஸ்ரீகாளஹஸ்தி உற்சவ மூர்த்திகளான ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வருக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகளான ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை கோவில் அருகில் உள்ள பரத்வாஜ் தீர்த்தத்திற்கு மேள தாளங்கள், மங்கல வாத்தியங்களுடன் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டனர். அங்கு சிவன் கோவில் அபிஷேக குருக்களால் மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்தனர்.

    தை அமாவாசை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி மற்றும் அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்களும் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் மீது பாசுரங்களை பாடி தீபாராதனை காட்டும் நிகழ்ச்சியே கருடசேவை உற்சவம் ஆகும்.
    திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியை சுற்றி ஒரே தொகுப்பாக 11 பெருமாள் கோவில்கள் உள்ளன. நாங்கூர் மணி மாடகோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்களும் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் மீது பாசுரங்களை பாடி தீபாராதனை காட்டும் நிகழ்ச்சியே கருடசேவை உற்சவம் ஆகும்.

    அதன்படி கருடசேவை உற்சவம் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) திருமங்கை ஆழ்வார், திருநகரி கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் மங்கைமடம், காவளம்பாடி, திருமணிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள பெருமாள்களுக்கு கருட சேவை உற்சவத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு மாலை செம்பதனிருப்பு கிராமத்தில் உள்ள மணிகர்ணிகை ஆற்றில் இறங்கி மஞ்சள் குளி மண்டபத்திற்கு வந்தது.

    அங்கு திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நேற்று மாலை நாங்கூர் கிராமத்தை நோக்கி பக்தர்கள் புடைசூழ திருமங்கையாழ்வார் புறப்பட்டு சென்றார். கருடசேவை உற்சவ நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம முக்கியஸ்தர்கள் ராஜதுரை, அன்பு, கோவில் ஆய்வர் மதியழகன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி வலம்வருதல் நடக்கிறது.
    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான தெப்ப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரை 10 நாட்களில் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10.15 மணிஅளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதனையடுத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகாதீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதைதொடர்ந்து கொடிகம்பத்திற்கு புனித நீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து 10.45 மணிஅளவில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. மேலும் தர்ப்பைப்புல், மா இலை, பட்டு வஸ்திரங்கள் கொண்டு கொடிகம்பம் அலங்கரிக்கப்பட்டது.

    இதனையடுத்து கொடிகம்ப உயரத்திற்கு பூமாலைகள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி வலம்வருதல் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தைகார்த்திகை தினமாகும். கொரோனா காரணமாக நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தெப்ப முட்டு தள்ளுதல், தேரோட்டம், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை மற்றும் இரவில் மின்னொளியில் சாமி எழுந்தருளக்கூடிய தெப்பத்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    எந்த ஒரை காலத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று சுபமாக நிறைவேறும் என்றும்,எந்த ஒரை காலத்தில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது என்றும் அறிந்து கொள்ளலாம்.
    எந்த ஓரை காலத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று சுபமாக நிறைவேறும் என்றும்,எந்த ஓரை காலத்தில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது என்றும் அறிந்து கொள்ளலாம்.


     நிழல் கிரகங்களான ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரம் தனது ஆதிக்கத் வெளிப்படுத்துகின்றன. எந்த நேரத்தில் எந்த கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறதோ அதுவே அந்த கிரகத்துக்கான ஓரை காலம் என்று அழைக்கப்படுகிறது.

    ஓரை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் உச்சம் தொடலாம் என்பது சித்தர்களின் வாக்கு. சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 ஓரைகளும் சுப ஓரைகளாக போற்றப்படுகின்றன. இந்த ஓரை காலத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று சுபமாக நிறைவேறும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை அசுப ஓரைகளாகும். இந்த ஓரை காலத்தில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.

    சந்திர ஓரை

    மனம் தொடர்பான கிரகம் சந்திரம். ஏதாவது ஒரு காரணத்திற்காக உறவினர்களையோ, நட்புகளையோ சந்திர ஓரையில் சென்று சந்தித்தால் வெற்றி கிட்டும்,. மனதில் மகிழ்ச்சி மலரும்.

    புதன் ஓரை

    எழுத்து, ஆவணம், ஒப்பந்தம் தகவல் தொடர்பு தொடர்பான கிரகம் புதன். எனவே இந்த புதன் ஓரை நேரத்தில் பொருளாதார விருத்திக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, புதிய பத்திரங்கள் முடிப்பது, வீடு, நிலம், மனை போன்றவை தொடர்பான முடிவு மேற்கொள்வது வெற்றி தரும்.

    குரு ஓரை

    குரு என்பவர் வழிகாட்டுபவர். இந்த குரு ஓரையின் போது எந்த ஒரு புதிய செயல்களிலும் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். பயணம் மேற்கொள்வதற்கு உகந்த காலம். தொழில், வேலை, வியாபாரம் போன்றவை தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கும் இது தகுந்த நேரம்.

    சுக்கிர ஓரை

    சுகமான வாழ்வை கொடுப்பவர் சுக்கிரன். இந்த சுக்கிர ஓரையில் சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டால் மனமகிழ்ச்சி பன்மடங்கு பெருகும். மேன்மையான உறவுகள் அமையும் காலம் சுக்கிர ஓரை காலமாகும்.

    சூரியன் ஓரை

    சூரிய ஓரை காலம் என்பது சுகமான நேரம் அல்ல. இந்த நேரத்தில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

    சனி ஓரை

    சனி ஓரை அசுப நேரமாகும். நற்காரியங்களை இந்த ஓரை நேரத்தில் செய்வதை தவிர்க்கவும்.

    செவ்வாய் ஓரை

    செவ்வாய் ஓரை என்பது அசுப ஓரையாகும். இந்த ஓரை நேரத்தில் எந்த ஒரு புதிய செயலையும் செய்ய வேண்டாம்.
    திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கிவைத்தார்.

    திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கின்றது. 13-ம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பெருவிழா கூட்டு திருப்பலியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார்.

    தொடர்ந்து சப்பர பவனி நடக்கிறது. கொடியேற்ற விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணிபவர் சிங், ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தை அமாவாசையானது நேற்று பகல் 12 மணி வரையிலும் இருந்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    தை அமாவாசை, ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதுபோல் இந்த ஆண்டின் தை அமாவாசையான நேற்று முன்தினம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் புனித நீராடி விட்டு ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இந்த நிலையில் தை அமாவாசையானது நேற்று பகல் 12 மணி வரையிலும் இருந்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததுடன், இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பண பூஜை செய்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடிவிட்டு சாமி மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்பட்டு வந்ததால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாகவே ராமேசுவரம் கோவில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மேலும் பக்தர்களை நம்பி வாழும் ஓட்டல் மற்றும் சிறு கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.
    அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

    அன்னையின் மூல மந்திரமான

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கந்யா ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

    கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.
    ×