என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வஹ்னி வாஸினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
    அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி என்று பெயர். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். `வஹ்னி’ என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். இந்த அம்மனை வழிபட்டால் நோய் தீரும், தேக பலத்தோடு, உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை ஏகாதசி.

    மந்திரம்:

    ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
    ஸித்திப்ரதாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், திரயோதசி திதி என்பது பிரதோஷ தினமாக, பிரதோஷ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்று சொல்லப்படுகிற சோமவாரத்தில் வருகிற பிரதோஷம், சுபிட்சத்தையும் முக்தியையும் கொடுக்கும். பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவ பூஜை செய்தும் சிவனாரை தரிசித்தும் வேண்டிக்கொண்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.

    பிரதோஷத்தின் போது செய்யப்படுகிற தரிசனம், புத்தியைத் தெளிவாக்கும். ஞானத்தைக் கொடுக்கும். இன்று பிரதோஷம். சோமவார பிரதோஷம். மாலையில் சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். சிந்தையில் தெளிவையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தந்தருளும்.

    கூடுதலாக... மாசி மாத பிரதோஷம் விசேஷம். மாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். அற்புதமான இந்த மாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷத்தில் விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்வோம்.

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று நடைபெறும் மயான பூஜை மற்றும் 17-ந்தேதி நடக்கும் குண்டம் திருவிழாவில் கலந்துகொள்ள வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசையையொட்டி கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தா பனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை நடைபெறுகிறது.

    16-ந்தேதி மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கிடையே மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று நடைபெறும் மயான பூஜை மற்றும் 17-ந்தேதி நடக்கும் குண்டம் திருவிழாவில் கலந்துகொள்ள வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் வருவதை தடுக்க ஜமீன் ஊத்துக்குளி, ரெட்டியாரூர், மீனாட்சிபுரம், செமனாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போலீசார் வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப திருவிழாவும் ஒன்றாகும். நாளை கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது இன்று தொடங்குகிறது. 15-ந்தேதி ( நாளை) மாலை 4.30 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கஜேந்திர மோட்சம் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி சுவாமி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

    மேலும் அன்று மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் போய் சேரும். அங்கு பகல் 11.15 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும். அப்போது சுற்று வட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதைதொடர்ந்து அன்று மாலையில் சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேரும். இந்த வருடம் தெப்பம் தண்ணீர் நிரம்பி உள்ளதால் சுவாமி வலம் வரும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து எதிர்பார்த்துள்ளனர். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
    காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 4-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருட்தந்தை தாமஸ் தலைமையில் ஏராளமான அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.

    அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பரபவனி நடைபெற்றது. நேற்று காலை காளை யார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு செந்தில்குமார் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தை ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.

    ஆயர் நசரேன் சூசை பேசும் போது, ‘காமராஜர்நகர் மக்களுக்காக, 13 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத இந்த இறை பணியை, தனது சொந்த செலவில் செபஸ்தியார் ஆலயத்தைகட்டி கொடுத்த கலப்பை மக்கள் இயக்க தலைவரும், இயக்குனருமான பி.டி.செல்வகுமாருக்கு பங்கு மக்கள் சார்பில்பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

    அதைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமாருக்கு நினைவு பரிசு மற்றும் நற்சான்றிதழை ஆயர் நசரேன் சூசை வழங்கி, கவுரவித்தார்.

    அதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.

    விழாவில் ஊர் முன்னாள் தலைவர் ஜான்சன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மயிலாடி தொழில் வர்த்தகர் நல சங்க தலைவர் சுதாகர், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், அழகப்பபுரம் பங்கு பேரவை துணை தலைவர் விக்டர் நவாஸ், ஸ்பெல்மன், கிங்ஸ்டன், வேதமணி, மூர்த்தி, தங்கம் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்கென்னடி, ஊர்தலைவர் முத்துகணேசன், செயலாளர் சகாயஅஜிஸ், பொருளாளர் சகாய சுபின்சன் மற்றும் நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நடந்து வருகிறது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், உருகு சட்டசேவையும் நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு, அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.40 மணிக்கு சுவாமி அம்பாள்களுடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 3.55 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சுவாமி பின்புறம் சிவஅம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார்.

    7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 11.30 வரை உள்ளது. பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வரவேண்டாம்.

    பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    சென்னை திருவொற்றியூரில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், சர்ப்பம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி விமானம், யானை மற்றும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர்-மனோன்மணி தாயார் ஆகியோருக்கு அபிஷேகம். அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதையடுத்து 16 கால் மண்டபம் முன்பு இருந்து கைலாய வாத்தியங்கள் மற்றும் சங்க நாதம் முழங்க, சிவனடியார்கள் நடனமாட 41 அடி உயர தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலர் சந்திரமோகன், இணை கமிஷனர் தனபால், உதவி கமிஷனர் சித்ராதேவி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ. சங்கர், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள், “தியாகேசா, ஒற்றீசா” என்று பக்தி கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரை வரவேற்கும் விதமாக சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க ஒய்யாரமாக நடனமாடி வந்தனர். அத்துடன் சிறுவர், சிறுமிகள் தேர் முன்பு கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனர்.

    தேர் சன்னதி தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் சன்னதி தெருவில் உள்ள தேர்நிலையில் வந்து நிலை நிறுத்தப்பட்டது.

    விழாவில் வருகிற 15-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், 17-ந் தேதி இரவில் தியாகராஜ சாமி பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
    வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
    பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். அது தரக்கூடிய மூன்றுவிதமான பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருளாக அமைகின்றன.

    எனவே வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.

    பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
    சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    14-ந் தேதி பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாத பவுர்ணமிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவிலுக்கு வர அனுமதியில்லை.

    அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக தீர்த்தவாரி உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கூறி இருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்கும் தலசயன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் பவுர்ணமியையொட்டி புஷ்கரணி தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் மற்றும் தலசயன பெருமாள், வராக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து கடற்கரையில் எழுந்தருளதல், கடலில் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

    தற்போது தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் மற்றும் தீர்த்தவாரி உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    ×