என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    15-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சித்தயோகம்
    * நடராஜர் அபிஷேகம்
    * கள்ளழகர் கஜேந்தர மோட்சம்
    * நத்தம் மாரியம்மன் பற்குடம்
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

    16-ம் தேதி புதன் கிழமை :
     
    * பௌர்ணமி
    * திருமோகூர் காளமேக பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி சம்ஹார லீலை
    * காரமடை ஸ்ரீஅரங்கநாதர் பவனி
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தெப்பம்
    * சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
     
    17-ம் தேதி வியாழக்கிழமை :

    * சித்த யோகம்
    * மாசிமகம்
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் தெப்போற்சவம்
    * காரமடை அரங்கநாதர் ரதோற்சவம்
    * ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்

    18-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * நத்தம் ஸ்ரீமாரியம்மன் சந்தனகுட காட்சி
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு
    * மதுரை கூடலழகர் உற்சவ சாந்தி
    * சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

    19-ம் தேதி சனிக்கிழமை :

    * அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்போற்சவம்
    * சிருங்கேரி சாரதாம்பாள் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

    20-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சங்கடஹர சதுர்த்தி
    * சுபமுகூர்த்தநாள்
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

    21-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * ராமேஸ்வரம் ராமநாதர் உற்சவாரம்பம்
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
    மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வருகிற 17-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
    கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கொண்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாசி மக விழா கடந்த 8-ந்தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வருகிற 17-ந்தேதி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி மகாமக குளக்கரையில் சாமிகளை கொண்டுவந்து நிறுத்துவதற்கு வசதியாக அந்தந்த கோவில்கள் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் தீர்த்தவாரி மண்டபம் பகுதியில் உள்ள படிக்கட்டுகள் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
    செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது.
    நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது. வீட்டில் இந்த விரதமிருக்கலாம் என்றாலும் வீட்டை விட செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.

    செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, நீராடி விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன் பிறகு சூரியனைப் பார்த்து ஓம் சிவசூரியாய நம என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து ஓம் வைத்தியலிங்கார்ப்பணம் என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து, உபசரித்தல் நல்லது.

    அமுது படைத்து தாம்பூலம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாதத்தை அரை வயிறு மட்டும் உண்டு. அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்துப்படுத்துறங்க வேண்டும்.
    இதுவே செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறையாகும். நவக்கிரகங்கள் எனும் ஓன்பது கோள்களில் ஒன்று அங்காரகன் எனும் செவ்வாய் கிரகம்.

    அரத்தன், அழல், அழலோன், அறிவன், ஆரல், உதிரன், குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன், மங்களன், வக்கிரன், எனப் பற்பல பெயர்கள் செவ்வாய்க்கு உண்டு. இந்த செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் முருகனுக்கும் மட்டுமல்ல, செவ்வாய்க்கும் பூமிக்கும் கூட தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும், பூமிக்கும் முருகனுக்கும், செவ்வாய்க்கும் முருகனுக்கும் தொடர்புள்ளதால்தான் பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகனை வழிபடுகிறோம். இந்த காரணத்தால்தான் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும், விரதமிருக்கவும் ஏற்றதொரு புனித நாளாக இருக்கிறது.

    ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவே தனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

    இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
    மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள டி.புதுப்பட்டி சக்திபுரத்தில் உள்ள ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்திபீடத்தில் மகா சண்டி ஹோமம் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டி சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்திபீடம் உள்ளது. இங்கு நாளை, நாளை மறுநாள் (15, 16-ந்தேதிகளில்) ஆகிய 2 நாட்கள் மகா சண்டி ஹோமம் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆசார்ய வரணம், வாஸ்து சாந்தி, யாகசாலை புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடக்கின்றன.

    காலை 10.15 மணியளவில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்று மாலை 5 மணி அளவில் அனுக்ஞை, பிரதான சங்கல்பம், வேதிகார்ச்சனை, பிரதான பூஜை செய்யப்படுகிறது. மாலை 6 மணி அளவில் சண்டி பாராயணமும், இரவு 8 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.

    மறுநாள் (புதன்கிழமை) காலை 5.30 மணி அளவில் அனுக்ஞை, கோ பூஜை, யாக சங்கல்பம் ஆகியவையும், காலை 7 மணி அளவில் சண்டி யாகம், அத்யாய ஆகுதிகள், காலை 9 மணி அளவில் சண்டி யாக பலி, காலை 10.30 மணி அளவில் திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் அன்று காலை 11 மணி அளவில் அபிஷேகமும், 11.30 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து மாசிமக பெருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பஞ்ச மூர்த்தி கள் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் 6-ம் திருவிழாவான விருத்தகிரீஸ்வரர் இந்த கோவிலில் திருப்பணி மேற்கொண்ட விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள, விபசித்து முனிவர் தனி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது பஞ்ச மூர்த்தி களுக்கும், விபசித்து முனிவருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் நேர் எதிரே மண்டபத்தில் அமர்ந்திருந்த விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தனர். அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் விபசித்து முனிவருக்கு காட்சி கொடுத்து, கோவிலை வலம் வந்து, கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். பின்னர் விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி நான்கு கோட்டை வீதியில் வீதிஉலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் நாளை மறுநாள்(புதன்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 17-ந்தேதி மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும், 18-ந்தேதி தெப்ப உற்சவம், 19-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், மார்ச்-1 ந் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் அனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை மேலவாசலில் உள்ள தெப்பகுளத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-ம் திருநாளான நேற்று பந்தக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பந்த காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம் உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    சிவபெருமானை வழிபடும் அடியவர்கள் உச்சரிக்கும் முக்கியமான, வார்த்தையில் ஒன்று ‘திருச்சிற்றம்பலம்.’ மாணிக்கவாசகர் அருளிய நூல் ‘திருவாசகம்.’ இதனை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே எழுதியதாகவும், அந்த பாடலின் முடிவில், ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்று கையெழுத்திட்டதாகவும் வரலாறு சொல்கிறது. இதனால் `திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்த சிறப்புமிக்க வார்த்தையின் பெயரில் ஒரு திருத்தலமே அமைந்திருப்பது மேலும் சிறப்பானது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் கொடிமரம் கிடையாது. ஆலயத்திற்கு வெளியே நந்தியம்பெருமானும், அவருக்கு எதிரில் வடக்கு பக்கமாக இரட்டைப் பிள்ளையார் சன்னிதியும் காணப்படுகின்றன. மூலவர் புராதனவனேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் மகா கணபதி காட்சி தருகிறார். இவர் தனது தும்பிக்கை முகத்தை, வடக்குபுறமாக திரும்பிய நிலையில் இருக்கிறார்.

    இது தவிர மகாலட்சுமி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், சண்டிகேஸ்வரர், லிக்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, பைரவர், சூரிய- சந்திரர், நவக்கோள்களுடன் கூடிய சிவலிங்கங்கள் என்று வித்தியாசமான திருமேனிகள் பல உள்ளன. ஆலயத்தில் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
    எமதர்மன் சன்னிதி

    இந்த ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணமாகச் சென்றால், எமதர்மன் கோவில் இருக்கிறது. இங்கு எருமை வாகனத்தில் அமர்ந்து வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இவரது கையில் கதாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால் எம பயம் நீங்கி, பலம் சேரும். மன வியாதி, உடல்பிணி, தீராத பகை, சோம்பல், போட்டி- பொறாமை போன்றவை நீங்கும்.
    16-ந்தேதி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க, இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    தற்போது 16-ந்தேதி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் காம்ப்ளக்ஸ், கோவிந்தாஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்..
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயார் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயார் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    மாசிமகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடப்பதையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடலோர பகுதியில் பொதுமக்கள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்யப் படுகிறது. தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், ராமகிரு‌‌ஷ்ணா நகர் ஹயக்ரீவர், காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோல் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கங்க வராக நதீஸ்வரர், காசிவிசுவநாதர் கோவில், காலாப்பட்டு, பாகூர் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    மாசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. மாசி மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாசி 2 (14.2.2022) திங்கள் திரயோதசி புனர்பூசம் அமிர்த காலை 6-7.30

    மாசி 8 (20.2.2022) ஞாயிறு சதுர்த்தி ஹஸ்தம் அமிர்த காலை 11-12

    மாசி 9 ( 21.2.2022) திங்கள் பஞ்சமி சித்திரை சித்த காலை 6-7.30

    மாசி 20 (4.3.2022) வெள்ளி துதியை உத்திரட்டாதி சித்த காலை 6.30-7.30

    மாசி 22 (6.3.2022) ஞாயிறு சதுர்த்தி அசுவினி சித்த காலை 7.30-9

    மாசி 29 (13.3.2022) ஞாயிறு ஏகாதசி புனர்பூசம் சித்த காலை11-12

    மாசி 30 ( 14.3.2022) திங்கள் ஏகாதசி பூசம் சித்த காலை 6-7.30
    மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையொட்டி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. மேலும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில் நேற்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் மற்றும் நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    ×