என் மலர்tooltip icon

    தரவரிசை

    டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி ஆகியோர் நடிப்பில், விஜய லட்சுமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தின் விமர்சனம். #AbiyumAnuvum
    நாயகன் டோவினோ தாமஸ் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நாயகி பியா ஊட்டியில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் செயல்களை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்.

    பேஸ்புக்கில் பியாவின் புகைப்படங்களை பார்க்கும் டோவினோ தாமஸ், அவருடன் நட்பாக பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இருவரும் பேஸ்புக் மூலமாக காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள்.

    திருமணத்திற்குப் பிறகு பியா கர்ப்பமாகிறார். இவரை பார்த்துக் கொள்வதற்காக டோவினோ தாமஸின் பெற்றோர் ஒரு ஆளை அனுப்புகிறார்கள். அதே சமயம் பியாவின் தாயும் சென்னைக்கு வருகிறார்கள். இவரை பார்த்தவுடன் டோவினோ தாமஸின் வீட்டின் ஆள் அதிர்ச்சியாகிறார்.



    உடனே டோவினோ தாமஸின் பெற்றோருக்கு போன் செய்து, பியா மற்றும் அவரது தாய், யார் என்று விவரிக்கிறார். இதைக் கேட்ட டோவினோ தாமஸின் குடும்பமும் அதிர்ச்சியாகிறது. உடனே டோவினோ தாமஸின் அம்மா போன் செய்து, அவரிடம் இந்த கல்யாணம் செல்லாது. பியாவை விவாகரத்து செய் என்றும், வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடு என்றும் கூறுகிறார்.

    என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் டோவினோ தாமஸ், பியாவை விட்டு பிரிந்தாரா? உண்மையில் பியா யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் அபி கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸும், அனு கதாபாத்திரத்தில் பியாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான காதல் காட்சியில் ரசிக்க வைக்கிறது. ரொமன்ஸ், சென்டிமென்ட், என திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரபு, சுஹாசினி, ரோகினி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள். 



    புதுமையான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய லட்சுமி. ஆனால், திரைக்கதை மெதுவாக செல்வதால் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. படம் பார்க்கும் போது, ஆவணப்படம் போல் தோன்றுகிறது.

    தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அகிலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘அபியும் அனுவும்’ ஓரளவிற்கு ரசிக்கலாம்.
    ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா நடிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ‘செம’ படத்தின் விமர்சனம். #Sema #SemaReview
    திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் விற்று வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் இரவில் குடுகுடுப்புக்காரன் ஜி.வி.பிரகாஷின் வீட்டை பார்த்து, கெட்ட காலம் வரபோகுது என்று சொல்ல, உடனே ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார், ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்க்கிறார்.

    அதில் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லை என்றால் 6 வருடம் கழித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதனால், அவசரமாக ஜி.வி.பிரகாஷுக்கு பெண் தேடுகிறார்கள். ஆனால், எந்த பெண்ணும் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.



    உள்ளூரில் தான் பெண் கிடைக்க மாட்டுது என்று முடிவு செய்து வெளியூரில் மன்சூர் அலிகான், கோவை சரளாவின் பெண்ணான நாயகி அர்த்தனாவை பெண் பார்க்க செல்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போக, திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

    இந்நிலையில், அர்த்தனாவை அதே ஊரில் வசிக்கும் எம்.எல்.ஏ.வின் மகன் ஒருதலையாக காதலித்து வருகிறார். அர்த்தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து, மன்சூர் அலிகானிடம் நீங்கள் வைத்திருக்கும் கடனை அடைத்து உங்களை பணக்காரனாக்குகிறேன் என்று கூறி, அவர் மனதை மாற்றுகிறார்.

    இதனால், ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனாவின் திருமணத்தை நிறுத்தி விடுகிறார் மன்சூர் அலிகான். திருமணம் நின்றதை நினைத்து ஜி.வி.பிரகாஷின் அம்மா, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், கோபமடையும் ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகானிடம் உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார்.

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சவாலை வென்றாரா? மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முதன் முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். துறுதுறுவென நடித்து மனதில் நிற்கிறார். பெண் கிடைக்காமல் ஏங்குவது, அழகான பெண் கிடைத்தவுடன் கெத்தாக சுற்றுவதும், பெண் கிடைக்காது என்றதும் கோபத்துடன் சவால் விடுபவராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் படம் முழுக்க வலம் வருகிறார் யோகிபாபு. இவருடைய காமெடி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சுஜாதா சிவகுமார், மன்சூர் அலிகான், கோவை சரளா ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 



    வித்தியாசமான கதையை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். முதல் பாதி வழக்கமான திரைக்கதை என்றாலும், பிற்பாதியில் எதிர்பார்க்காத திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் காமெடி. அதுபோல், பாண்டிராஜ்ஜின் வசனமும் கைக்கொடுத்திருக்கிறது.

    ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘சண்டாளி...’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘செம’ செமதான்.
    காளி ரங்கசாமி இயக்கத்தில் மாஸ்டர் தினேஷ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு குப்பைக் கதை' படத்தின் விமர்சனம். #OruKuppaiKathai #Dinesh #ManishaYadav
    தான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    அதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் தினேஷ், சென்னையில் குப்பம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருடன் குப்பை அள்ளும் தொழிலாளியாக யோகி பாபு வருகிறார். தினேஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது அம்மா பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதுவும் அமையவில்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி பண்பானவனாக, நேர்மையானவனாக இருக்கும் அவருக்கு, செய்யும் தொழிலால் பெண் கொடுக்க மறுக்கின்றனர். 

    இந்த நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் மனிஷா யாதவ்வை பெண் பார்க்க செல்கின்றனர். மனிஷா வீட்டில் மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிவதாக பொய் சொல்லச் சொல்கின்றனர். ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம் தான் குப்பை அள்ளும் தொழிலாளி என்கிற உண்மையை தினேஷ் சொல்கிறார். ஜார்ஜக்கு அவரது நேர்மை பிடித்துப்போக தனது பெண்ணை அவருக்கே கொடுக்க சம்மதிக்கிறார். 



    மேலும் மனிஷாவிடம், தினேஷன் தொழில் குறித்து சொல்ல வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொள்கிறார். இதையடுத்து மாஸ்டர் தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. மனிஷா கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்பது தெரிந்து விடுகிறது. இதையடுத்து தினேஷை வெறுக்க ஆரம்பிக்கும் மனிஷா, குழந்தை பெற்றுக் கொள்ள பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தன்னால் மீண்டும் அந்த குப்பத்திற்கு வர முடியாது என்று மனிஷா கூறிவிடுகிறாள். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிறுப்புக்கு குடிபெயர்கின்றனர். 

    அங்கு அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மனிஷா அவருடன் ஓடிவிடுகிறார். இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் தினேஷ், மனிஷா அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, தனது குழந்தையை மட்டும் தன்னிடம் அழைத்த வர முடிவு செய்து மனிஷாவை தேடிச் செல்கிறார். 



    கடைசியில், தினேஷ் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தாரா? தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார்? அங்கு கொலை செய்யப்பட்டது யார்? மனிஷா என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படத்திலேயே முன்னணி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார் மாஸ்டர் தினேஷ். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார். மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 

    யோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர்.  



    குப்பை அள்ளுவதை விரும்பி செய்யும் ஒருவருக்கு, அந்த தொழிலால் ஏற்படும் அவமானங்கள், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையும் எதார்த்தமாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி. 

    படத்தில் கதாபாத்திரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும், மனதால் அந்த கதாபாத்திரங்கள் உயர்ந்த காட்டியிருக்கிறார். நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தில் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பிளவு, அதனால் இருவரது வாழ்க்கையும் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது  என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய இளைஞர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்றால், இளம் பெண்களும் பொழுதுபோக்குக்கு ஆசைப்பட்டு விபரீதத்தை பொறுட்படுத்தாமல் வீணாவது என பலவற்றை அலசியிருக்கிறார். 



    குப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு குப்பைக் கதை படம் மூலம் ஒரு நல்ல கதை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பிடிப்பார். 

    ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை அலட்டல் இல்லாமல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஒரு குப்பைக் கதை' தூய்மையானது. #OruKuppaiKathai #MasterDinesh #ManishaYadav

    டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் ரயான் ரெணால்ட்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டெட்பூல் 2' படத்தின் விமர்சனம். #Deadpool2Review #RyanReynolds
    டெட்பூல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகத்தில், ரயான் ரெணால்ட்ஸின் சூப்பர் பவரே அவரது ஆசையை நிறைவேற விடாமல் செய்கிறது. 

    ரயான் ரெணால்ட்ஸ் அவரது காதலியை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், எதிரிகளால் ரயானின் காதலி இறந்துவிடுகிறாள். காதலியை பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கும் ரயான், தனக்கு சாவே கிடையாது என்பதை மறந்து தற்கொலைக்கு முயற்சிக்க, அவரால் சாக முடியவில்லை. இவ்வாறு அவரது சூப்பர் பவரே அவருக்கு எதிராக வருகிறது.



    இந்த நிலையில், ரயானின் கனவில் வரும் அவரது காதலி, ராயன் ஏதாவது நல்லது செய்தால் தான் தன்னுடன் வந்து சேர முடியும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். இதையடுத்து ஏதாவது நல்ல வேலையை செய்துவிட்டு தனது காதலியுடன் இணைய ஆசைப்படும் ரயான், வேண்டா வெறுப்புடன் எக்ஸ்-மேன் குழுவுடன் இணைகிறார். 

    அவரது முதல் மிஷனில் சிறுவனான ஜுலியன் டென்னிசன் தன்னிடம் உள்ள சூப்பர் பவரை பயன்படுத்தி அங்கிருக்கும் ஒரு இடத்தை அழிக்க முயற்சி செய்கிறான். இந்த நிலையில், அங்கு வரும் ரயான் அந்த சிறுவனைக் காப்பாற்றி, அவனை கொடுமைப்படுத்தியவரை கொன்றுவிடுகிறார். 

    இந்த நிலையில், அங்கு வரும் போலீசார் அவர்களை கைது செய்கின்றனர். ரயானின் சூப்பர் பவர் வேலை செய்யமுடியாதபடி அவரது கழுத்தில் ஒரு சங்கிலியையும் இணைத்துவிடுகின்றனர். இந்த நிலையில், அங்கிருந்து தப்பிக்க ராயன் திட்டமிட, முன்னதாக அவர்கள் சண்டையிட்ட இடத்தை ஜுலியன் டென்னிசன் அழிக்க நினைக்கிறார். 



    இந்த நிலையில், எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள், ஜுலியன் டென்னிசனை கொல்ல முயற்சிக்கிறான். 

    கடைசியில், ரயான் தனது காதலியுடன் இணைந்தாரா? ஜுலியன் டென்னிசன் அந்த இடத்தை அழித்தாரா? எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள், ஜுலியன் டென்னிசனை ஏன் கொல்ல முயற்சிக்கிறான்? எதிர்காலத்தில் இருந்து கேபிள் எப்படி நிகழ்காலத்திற்கு வந்தான்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ரயான் ரெணால்ட்ஸ், ஜோஷ் ப்ரோலின், மொரீனா பக்கரீன், ஜுலியன் டென்னிசன், சிசி பீட்ஸ், டிஜே மில்லர், பிரியானா ஹில்டுபிராண்ட், ஜாக் கெசி என அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    ஆக்‌ஷன், காமெடி என காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார் டேவிட் லெய்ட்ச். டைலர் பேட்ஸின் பின்னணி இசை வலு சேர்த்திருக்கிறது. ஜோனாதன் சேலாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக தமிழ் டப்பிங் ரசிக்கும்படியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலை கிண்டல் செய்யும்படியாக தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருப்பது சிரிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `டெட்பூல் 2' அதிரடி. #Deadpool2Review #RyanReynolds

    ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர் - தாருஷி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செயல்' படத்தின் விமர்சனம். #SeyalReview #RajanTejaswar
    அப்பாவை இழந்த நாயகன் ராஜன் தேஜஸ்வர், அம்மா ரேணுகா சவுகானுடன் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்திய விண்வெளி மையமான நாசாவில் வேலைபார்க்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறார் நாயகன் ராஜன். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ராஜனின் அம்மா, கட்டணம் செலுத்தவில்லை என்று பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்காக போராடுகிறார். 

    பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த நிலையில் பள்ளிப் படிப்பை முடிக்கும் ராஜன், தனது அம்மாவை சிறையில் இருந்து ஜாமீனில் எடுப்பதற்காக படித்துக் கொண்டே வேலைக்கும் செல்கிறார். மேலும் தனது கனவை நோக்கி ஓட முடியாமல், இன்ஜினியரிங் படித்துவிட்டு கேரளாவில் கார் கம்பெனி ஒன்றிலும் வேலைக்கு சேர்கிறார். 



    இதற்கிடையே சென்னையில், ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரது பகுதியில் பிரபல ரவுடியை ராஜன் அடித்து துவம்சம் செய்கிறார். அந்த சண்டைக்கு பிறகு அவந்த ரவுடியின் மவுசு குறைகிறது. அந்த பகுதியில் இருக்கும் அனைவரும் அந்த ரவுடியை மதிக்கவில்லை, மேலும் கிண்டலும் செய்கின்றனர். இதையடுத்து தன்னை அடித்த ராஜனை, அதே மார்க்கெட்டில் வைத்து திருப்பி அடிக்க வேண்டும் என்று அந்த ரவுடி முடிவு செய்கிறார்.

    இந்த நிலையில், அந்த ரவுடியின் மனைவியும் அவரை விட்டு பிரிகிறார். கேரளா சென்ற நாயகனை சென்னைக்கு கூட்டிவர முன்னாள் ரவுடிகளான ஆடுகளம் ராமதாஸ் கேரளா செல்கிறார். கேரளாவில் தனது பள்ளித்தோழியான நாயகி தாருஷியிடம் தனது காதலியை சொல்ல முயற்சி செய்கிறார். ராஜனின் காதலுக்கு ராமதாசும் உதவுகிறார். 



    இதற்கிடையே தான் அடித்துவிட்டு வந்த ரவுடியின் மகனின் படிப்பு செலவையும் ராஜனே ஏற்றுக்கொள்கிறார். அவனது கனவையும் நிறைவேற்றி வைப்பதாக உறுதி கூறுகிறார். 

    கடைசியில் ராஜனை அந்த ரவுடி திருப்பி அடித்தாரா? அந்த ரவுடியின் மகனை படிக்க வைத்து, அவனது கனவை நாயகன் நிறைவேற்றி வைத்தாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படம் என்றாலும் காதல், ஆக்‌ஷன், பாசம் என நாயகன் ராஜன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் தாருஷி வரும் காட்சிகளும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ராஜனின் அம்மாவாக ரேணுகா சவுகான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயபாலன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராமதாஸ் காமெடியில் கலக்கியிருக்கிறார். 



    தனது கனவை நிறைவேற்ற முடியாத நாயகன், வேறொரு மாணவனின் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதும், தன்னை அடித்துவிட்டு வெளியூருக்கு செல்லும் நாயகனை பழிவாங்க நினைக்கும் நாயகன் என வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் காமெடி, ஆக்‌ஷன் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் ரவி அப்புலு. கொடூரமான வில்லனை அடித்து டம்மி பீசாக்குவது, மீண்டும் அவன் தனது கெத்துக்கு வர போராடுவது போன்ற காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். 

    சித்தார்த்த விபினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. வி.எளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `செயல்' சிறப்பு. #Seyal #SeyalReview #RajanTejaswar #Tharushi

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காளி' படத்தின் விமர்சனம். #Kaali #KaaliReview #VijayAntony
    அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது. 

    மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார். 



    ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார். 

    இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். 



    இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. 

    கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி - அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர். 

    ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா. 



    4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.

    பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `காளி' ஏமாற்றம். #Kaali #KaaliReview #VijayAntony

    இலங்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ‘18.05.2009’ படத்தின் விமர்சனம்.
    இலங்கையில் ஒரு தம்பதினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம் போராட்டம் குறித்து பேசுகிறார்கள்.

    அப்போது, தன்யாவின் தங்கை இயக்கத்தில் சேர ஆசைப்படுகிறாள். இயக்கத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். அதன்படி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் இயக்கத்தில் சேருகிறார். அப்போது தன்யாவும் இயக்கத்தில் சேருகிறார்.

    இயக்கத்தில் நிறைய செயல்களில் தன்யா ஈடுபடுவதாலும் துறுதுறுவென இருப்பதாலும், அவரை செய்தி வாசிப்பாளராக நியமிக்கிறார்கள். இவர்களின் இயக்கத்தை சேர்ந்தவரை தன்யா காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த சமயத்தில் இலங்கை ராணுவம் அங்கிருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. 

    இதனால், தன்யாவின் வாழ்க்கை சூழல் மாறுகிறது. இதன் பின் இவரின் வாழ்க்கை எப்படி மாறியது. என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.



    நாயகியாக நடித்திருக்கும் தன்யாவை சுற்றியே இப்படம் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரின் ரசிக்க வைக்கிறது. 

    இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை மிகவும் தைரியமாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேசன். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் படத்தை எப்படி கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள். 



    இசைஞானி இளையராஜா இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். பார்த்திபன், சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் திரை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘18.05.2009’ உண்மைச் சம்பவம்.
    சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் விமர்சனம். #BhaskarOruRascal #ArvindSwami
    வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார். 

    இந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர். 



    தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான். 

    இந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர். 

    மெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.



    அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.

    அமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. 

    நாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    அப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul

    எம்.ஜி.ரெட்டி இயக்கத்தில் மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 6 முதல் 6 படத்தின் விமர்சனம்.
    குழந்தைகளைக் கடத்தி பல்வேறு தொழிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறார் போலீஸ் அதிகாரி மஞ்சுநாத். இந்த விஷயம் மேலதிகாரிகளுக்கு தெரிந்து அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு திரும்புகிறார் மஞ்சுநாத்.

    தன் மேல் ஏற்பட்டுள்ள கலங்கத்தை போக்க, ஒரு குழந்தை கடத்தல் நாடகத்தை நடத்தி, அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி, தனக்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை மாற்ற முயற்சிக்கிறார். இந்த நாடகத்திற்காக 4 திருடர்களை தேடி கண்டுபிடித்து ஏற்பாடு செய்கிறார்.

    ஆனால், அந்த திருடர்களோ அவருக்கு எதிராகத் திரும்புகின்றனர். இதனால் கோபமடையும் மஞ்சுநாத், அவர்களை அழிக்க நினைக்கிறார். இறுதியில் அந்த 4 திருடர்களை பிடித்தாரா? தன் மேல் உள்ள கலங்கத்தை போக்கினாரா? என்பதே மீதிக்கதை.

    போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சுநாத் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. திரைக்கதை, காட்சி அமைப்பு என்பது போன்ற அடிப்படை விஷயத்தில் கூட புரிதலும், அனுபவமும் இல்லாமல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    குழந்தை கடத்தலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஜி.ரெட்டி. கதாபாத்திரங்கள் தேர்வு, திரைக்கதை உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை ஆகிய வற்றில் தொழில்நுட்பத்தரம் குறைந்தே காணப்படுகிறது.

    மொத்தத்தில் ‘6 முதல் 6’ சுவாரஸ்யம் இல்லை.
    மு.முாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் விமர்சனம். #IravukkuAayiramKangal #Arulnidhi
    இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். 

    அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். 

    பின்னர் நடந்தது பற்றி அருள்நிதி யோசிக்க, பிளாஸ்பேக் செல்கிறது. கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் வேலை பார்க்கும்  மஹிமாவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் இரவில் மஹமாவை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடமிருந்து மஹிமாவை, அஜ்மல் காப்பாற்றி அனுப்புகிறார்.



    பின்னர் மீண்டும் அஜ்மலை சந்திக்கும் மஹிமா, தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூற, அஜ்மல் அவளை அடைய நினைத்து, தவறாக பேசுகிறார். இதையடுத்து அஜ்மலை அடித்து விட்டு மஹிமா அங்கிருந்து சென்றுவிடுகிறாள். தொடர்ந்து அஜ்மல், மஹிமாவை தொந்தரவு செய்ய, அதனை தனது காதலரான அருள்நிதியிடம் மஹிமா கூறுகிறாள். அப்போது, கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் சாயா சிங்கை அருள்நிதி காப்பாற்றுகிறார். 

    சாயா சிங், அஜ்மல் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் கூற, அஜ்மலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் அருள்நிதி. இதையடுத்து அஜ்மல் வீட்டிற்கு செல்லும் அருள்நிதி, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். பின்னர் போலீஸ் தன்னை கைது செய்ததும், தான் தப்பித்ததும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. 



    கடைசியில் சுஜா வருணியை கொலையை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீசிடம் இருந்த தப்பித்த அருள்நிதி கொலையாளியை கண்டுபிடித்தாரா? கொலைக்கு நடுவே சந்தேகப்படும் அந்த ஆயிரம் கண்கள் தான் படத்தின் மீதிக்கதை. 

    மஹமா நம்பியாருடன் காதல் காட்சிகளில் அருள்நிதி எதார்த்தமாக, அழகாக நடித்திருக்கிறார். அதேநேரத்தில் தனது காதலிக்கான பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, பரபரப்பான சூழலில் கோபம் கலந்த தேடலிலுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மஹமா நம்பியார் திரையில் அழகு தேவதையாக வந்து கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    அஜ்மல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    இரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு சாதாரண மனிதன் ஒருவன் சிக்குகிறான். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர, அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அதேநேரத்தில் அதில் பல முடிச்சுகள் இருக்க, அதனை அவன் எப்படி எதிர் கொண்டான். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவனை கண்டுபிடித்தானா என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்தின் கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் தொடர்ந்து பல டுவிஸ்டுகள் வருவது ரசிகர்களுக்கு குழப்புத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. 

    சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் இரவை வெளிச்சம்போட்டு காட்டுப்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' கவனம் தேவை. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். 

    இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.



    இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.

    அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். 

    அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். 



    பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.

    இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.



    நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

    வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது. 

    கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் விமர்சனம். #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் நடிகையர் திலகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தைரியத்துடனும், துடிப்புடனும் வாழ்கிறார். தன்னால் சாதிக்க முடியாது என்று சொல்பவர்களிடம் சாதித்து காட்டுகிறார்.

    ஜெமினி கணேசன் எடுத்த புகைப்படம் ஒன்று நாளிதழில் வர, அதன் மூலம் சாவித்திரிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி முன்னேறினார்? அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார்கள்.

    இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.



    தந்தையில்லாத சுட்டிப்பெண்ணாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப்போட்டு, பின்னர் பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த சாவித்திரியை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திக் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு ஒரு மணிமகுடம். கீர்த்தியுடன் போட்டி போட்டு நடித்துள்ள துல்கர் சல்மான்,  ஜெமினி கணேசனாகவே மாறியிருக்கிறார்.

    சமந்தா, விஜயதேவரகொண்டா, நாகசைதன்யா, மோகன் பாபு என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 1940 முதல் 1980 வரையில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்தந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டி செல்கின்றது டேனியின் கேமராவும் ஷிவம் மற்றும் அவினாஷின் கலை இயக்கமும். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் மிக்கி மேயரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.



    எல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் திறமையான இயக்கத்தாலும் நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர் நாக் அஷ்வின். மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகின்றன.



    சமந்தா, விஜய தேவரகொண்டா தேடல் மூலம் நமக்கு சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்குவது சிறப்பு. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் காதல் காட்சிகளையும் இணைத்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.

    மொத்தத்தில் ‘நடிகையர் திலகம்’ சிறந்த பொக்கிஷம்.
    ×