என் மலர்tooltip icon

    தரவரிசை

    வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - அனு இம்மானுவேல் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' படத்தின் விமர்சனம். #EnPeyarSuryaEnVeeduIndia
    பிரபல மனோநல மருத்துவர் அர்ஜுன். அவரது மகன் அல்லு அர்ஜுன் சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். மிகவும் கோபக்காரனான அல்லு அர்ஜுன் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை கடுமையாக அடித்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறார். இதனை அர்ஜுன் கண்டிப்பதால், அப்பா தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் அல்லு அர்ஜுன். 

    பின்னர் டெல்லிக்கு சென்று ராவ் ரமேஷ் வளர்ப்பில் வளர்ந்து இராணுவத்திலும் சேர்கிறார். இராணுவத்தில் சேர்ந்த பின்னரும் நிறைய முறை சஸ்பெண்ட் ஆகும் அல்லு அர்ஜுன், ஒரு பிரச்சனையின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கும் தவறை தட்டிக் கேட்க போலீசாரை அடித்து மீண்டும் பிரச்சனையில் சிக்குகிறார். அவரை இராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்ய முடிவு செய்கின்றனர். 



    அவருக்கு கடைசி வாய்ப்பாக பிரபல மனோநல மருத்துவரான அர்ஜுனிடம் நலமுடன் இருப்பதாக ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொல்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது மகனை பார்க்கும் அர்ஜுன், அல்லு அர்ஜுனுக்கு ஒரு தேர்வு வைக்கிறார். 21 நாட்கள் எந்த பிரச்சனையிலும் சிக்காமல், அடிதடிக்கு செல்லாமல் அமைதியாக, பொறுமையாக இருந்தால் அவருக்கு மனோநல சான்றிதழ் தருவதாக கூறுகிறார். 

    இப்படி இருக்க அவரை சுற்றி பல பிரச்சனைகள் நடக்கிறது. அந்த ஊரில் பிரபல தாதாவான சரத்குமார் மற்றும் அவரது மகன் செய்யும் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்கிறார். இந்நிலையில், ராணுவ அதிகாரி ஒருவரை அல்லு அர்ஜுனின் கண் முன்னாலேயே சரத்குமாரின் மகன் கொன்றுவிடுகிறார். இவை அனைத்தையும் பார்த்துக் அல்லு அர்ஜுன் பொறுமையுடன் இருக்கிறார். இதற்கிடையே அல்லு அர்ஜுன் - அனு இம்மானுவேல் காதல் காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்கிறது.  



    கடைசி நாளில் அல்லு அர்ஜுன் தான் போலியாக மாறிவிட்டதாக நினைத்து வருத்தப்படுகிறார். ஒரு ராணுவ அதிகாரி தன் முன்னால் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு பொம்மையாக இருக்கும் நான் நானில்லை. தனது குணம் மாறிவிட்டது, நான் சரியான ஃபிட்டாக இல்லை என்று நிகைத்து வருத்தப்படுகிறார்.

    கடைசியில் அல்லு அர்ஜுன் என்ன முடிவு செய்தார்? அல்லு அர்ஜுனுக்கு மனநல சான்றிதழை அர்ஜுன் வழங்கினாரா? அவர் மீண்டும் இராணுவத்தில் சேர்ந்தாரா? அவரது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ஒரு ராணுவ வீரராக, கோபக்காரனாக, தவறை தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் சிறப்பாக நடித்திருக்கிறார். நாட்டுப்பற்று, எல்லையில் நின்று போராட வேண்டும் என்று உணர்வுடன் வரும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனு இம்மானுவேல் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். 



    அர்ஜுன் அமைதியானவராக, வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனது மகனுடன் மோதும் காட்சிகளில் அவருக்கு தீனி போடும் நடிப்பு கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். அசைக்க முடியாத வில்லன் கதாபாத்திரத்தில், கம்பீரமான தோற்றத்தில் வரும் சரத்குமார் மிரட்டுகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது மகனாக வரும் தாகூர் அனூப் சிங்கும் கட்டுக்கோப்பான உடலுடன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    மற்றபடி நதியா, போமான் இரானி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    தேசத்தை பாதுகாக்க எல்லைக்கு செல்லும் இராணுவ வீரர்கள், அவர்களது தேசப்பற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் வம்சி. நாட்டை பாதுகாக்க குடும்பத்தை விட்டு வீரர்கள் எல்லைக்கு செல்கின்றனர். ஆனால் இங்கே இருக்கும் உள்ளூர் தாதாக்கள், இங்குள்ள இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி அவர்களை தீயவழிக்கு அனுப்புகின்றனர். கடைசியில் அவர்கள் எங்களுக்கு எதிராக தீவிரவாதிகளாக வந்து நிற்கிறார்கள். தீவிரவாதிகள் இங்கு தான் உருவாகுகிறார்கள். நாடு முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார். நாம் எப்படி இருந்தாலும், யாருக்காகவும், எதற்காகவும் நமது குணத்தை மட்டும் மாற்றக் கூடாது என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார். 

    விஷால் தத்லானியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சேகர் ராவ்ஜியானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' விறுவிறுப்பு. 

    #EnPeyarSuryaEnVeeduIndia #AlluArjun #AnuEmmanuel

    முரளி பாரதி இயக்கத்தில் அகில், அனு கிருஷ்ணா, சிங்கம் புலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அலைபேசி’ படத்தின் விமர்சனம். #Alaipesi #AlaipesiReview
    சென்னையில் கட்டுமான பொறியாளராக இருக்கும் நாயகன் அகில், தாய், தந்தை இல்லாமல் மாமா சிங்கம் புலியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி அனு கிருஷ்ணா, இன்சுரன்ஸ் பாலிசி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். 

    தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் அகிலுக்கு, இன்சுரன்ஸ் பாலிசி போட சொல்லி நாயகி அனு கிருஷ்ணா போன் செய்கிறார். வேலை பளு காரணமாக அனு கிருஷ்ணாவை திட்டி விடுகிறார் அகில். பின்னர் மனசு கேட்காமல் அதே நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், அனு போனை எடுக்கவில்லை.

    மறுநாள் அகிலுக்கு போன் செய்து பேசுகிறார் அனு கிருஷ்ணா. கோபத்தில் திட்டிவிட்டதாகவும் எனக்கு ஏற்கனவே 2 இன்சுரன்ஸ் இருப்பதாகவும் கூறுகிறார் அகில். பின்னர் தன்னுடைய நண்பருக்கு அனு கிருஷ்ணாவை வைத்து இன்சுரன்ஸ் பாலிசி போடுகிறார். 

    தன்னுடைய வேலை கைவிட்டு போகும் நிலையில், அனு கிருஷ்ணாவிற்கு இன்சுரன்ஸ் பாலிசி கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒரு சில காரணங்களால், இவர்களின் சந்திப்பு நடக்காமல் போகிறது. பின்னர், மீண்டும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சனையில் அகில் சிக்க, போலீஸ் அவரை கைது செய்து விடுகிறார்கள்.

    இந்த சமயத்தில் அனுகிருஷ்ணாவிற்கு மாமா மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அனுகிருஷ்ணாவிடம், அகிலை நம்பினால் பலன் இல்லை என்று தோழிகள் கூறுகிறார்கள். இதனால், மாமா மகனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.

    ஜெயில் இருந்து வரும் வீட்டிற்கு செல்லும் அகிலுக்கு அனுகிருஷ்ணாவின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. வருத்தத்தில் இருக்கும் அகிலிடம், அந்த பெண் உனக்காக பிறந்தவள். உண்மையான காதல் தோற்காது என்று சிங்கம்புலி கூற, அனுகிருஷ்ணாவை தேடி பயணிக்கிறார்.

    இறுதியில் அனுகிருஷ்ணாவை அகில் கரம் பிடித்தாரா? திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் அகில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலுக்காக ஏங்குவது, அனுகிருஷ்ணாவை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் போதும், பிரச்சனையில் சிக்கும் போதும் நடிப்பில் முதிர்ச்சி. நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாமா மகனா, காதலன் அகிலா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் அனுகிருஷ்ணா. படம் முழுக்க அகிலுடன் பயணித்திருக்கிறார் சிங்கம் புலி. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

    போன் மூலமாக வரும் காதலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் முரளி பாரதி. ஏற்கனவே இதுபோல் கதையம்சம் கொண்ட படம் வந்திருப்பதால், படத்தை கூடுதலாக ரசிக்க முடியவில்லை. ஆனால், திரைக்கதையில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். போன் மூலமாகவே காதலித்து இருவரும் நேரில் சந்திக்காமலே திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார். பழைய கதை என்றாலும் ஒரு சில காட்சிகளில் புதுமை சேர்த்திருக்கிறார்.

    செல்வதாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘அலைபேசி’ பழையது. 
    சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - வைபவி சாண்டில்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKuththu #GauthamKarthik
    பிளேபாயாக ஊர் சுற்றி வரும் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதற்காக பெண்ணையும் தேடி வருகின்றனர். அவருக்கு பார்க்கும் பெண்களில் பாதி பேர் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக இருப்பதால், அந்த பெண்கள் கவுதமை திருமணம் செய்துகொள்ள மறுக்கின்றனர். 

    இந்நிலையில், நாயகி வைபவி சாண்டில்யாவையும் பெண் பார்க்க செல்கின்றனர். வைபவியின் தந்தை மாப்பிள்ளை தேர்வில் விசித்திரமாக செயல்படுகிறார். ஒரு பெண்ணை முழு திருப்திப்படுத்தும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அதற்காக மாப்பிள்ளைக்கு சில தேர்வுகளை வைக்கிறார். பின்னர் நாயகனையும், நாயகியையும் பேசி பழகி, அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். 



    வைபவியை பார்த்தவுடன் கவுதமுக்கு பிடித்துப் போக, இருவரும் ஒரு வாரம் தாய்லாந்துக்கு செல்ல முடிவு செல்கின்றனர். தாய்லாந்து செல்லும் கவுதம் கார்த்திக் தனது நண்பனான சாராவையும் உடன் அழைத்துப் போக முடிவு செய்கிறார். மதுபானக்கடை வைத்திருக்கும் சாராவுக்கு அவரது கடையில் சரக்கு வாங்க வந்த யாஷிகா ஆனந்த் மீது காதல். யாஷிகா ஆனந்த், கவுதம் கார்த்திக்கின் முன்னாள் காதலி. எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பதால் கவுதம் கார்த்திக் அவளை விட்டுப் பிரிகிறார். 

    ஆனால் யாஷிகா கவுதமை அடைய நினைக்கிறாள். இப்படி இருக்க கவுதம் கார்த்திக் - வைபவியுடன், சாராவும், யாஷிகாவும் தாய்லாந்துக்கு செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். கவுதம் கார்த்திக்கும், சாராவும் ஒரு அறையிலும், வைபவியும், யாஷிகாவும் மற்றொரு அறையிலும் தங்குகின்றனர். 



    இந்த நிலையில், தங்களது ஜோடியுடன் இருக்க ஆசைப்பட்டு வீட்டில் பேய் இருப்பதாக கவுதம் கார்த்திக்கும், சாராவும் பொய் சொல்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது. ஆனால் கவுதம் கார்த்திக் பொய் சொல்லி தன்னுடன் தங்குவதாக நினைத்து வைபவி கோபப்படுகிறாள். இந்நிலையில் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்குமே அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து வைபவியும், யாஷிகாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர். 

    ஆனால் கவுதம் மற்றும் சாராவில் அங்கிருந்து போக முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாதவாறு அந்த பேய் அவர்களை தடுக்கிறது. இந்நிலையில், அந்த பேய் தான், இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறந்துவிட்டதாகக் கூறி தன்னை திருப்திபடுத்த நல்ல ஆண்மகனை தேடிக் கொண்டிருந்ததாக கூறுகிறது. மேலும் இருவரில் ஒருவர் தன்னுடன் உடலுறவுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் கூறுகிறது. 

    கடைசியில் கவுதம், சாரா இருவரும் அந்த பேயிடம் இருந்து தப்பித்தார்களா? அல்லது அந்த பேயை அவர்கள் திருப்தி படுத்தினார்களா? அல்லது பேய் அவர்களில் யாரையாவது கொன்றதா? கவுதம் கார்த்திக் நாயகியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    பிளேபாயாக வரும் கவுதம் கார்த்திக் பிளேபாயாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும். அவர் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்தது போன்று தெரிகிறது. குறிப்பாக பேய் வீட்டில் கவுதமும், சாராவும் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. வைபவி சாண்டில்யா அழகான சிரிப்புடன் அவரது கதாபாத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் கிளாமரில் தூக்கலாகவே வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். சாரா இரட்டை அர்த்த வசனங்களால் சிரிப்பு மூட்டுகிறார். 

    ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா என மற்ற துணை கதாபாத்திரங்களும் ஸ்கோர் செய்துள்ளனர். 

    ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து, இந்த படத்தில் முழு இரட்டை அர்த்த வசனங்களுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார். பேய் கதையிலேயே வித்தியாசமான முறையை முயற்சி செய்திருக்கிறார். வயாகரா மாத்திரை சாப்பிட்டுவிட்டு திண்டாடுவது, உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கும் பேய் என படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் தான். 18 வயதிற்குட்டோர் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்கு ஏற்ப வசனங்களும், கவர்ச்சியும் தூக்கலாகவே இருக்கிறது. 

    பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். பல்லுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு குத்து' சொர்க்கம் காணலாம்.

    #IruttuAraiyilMurattuKuththu #GauthamKarthik
    பாலையா டி.ராஜசேகர் இயக்கத்தில் சச்சின் மணி - நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காத்திருப்போர் பட்டியல்' படத்தின் விமர்சனம்.
    பாண்டிச்சேரியில் நண்பருடன் தங்கியிருக்கும் நாயகன் சச்சின் மணி, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இந்த நிலையில் நாயகனுக்கு போன் செய்யும் நந்திதா, அவரது கம்பெனியில் முதலீடு செய்தால் நிறைய இலாபம் கிடைக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நந்திதாவிடம் பேசும் சச்சின் பொழுதுபோக்கிற்காகவே பேசுவதாக கூறுகிறார்.

    இதனால் கடுப்பாகும் நந்திதா, சச்சினை பழிவாங்க முடிவு செய்து, சச்சின் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் சச்சின் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக செல்கிறாள். இந்நிலையில், நந்திதாவை சந்திக்கும் சச்சினுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலையும் நந்திதாவிடம் கூறுகிறார். 



    முதலில் சச்சினின் காதலை பொருட்படுத்தாத நந்திதா, சச்சினின் தொடர் தொல்லையால் காதல் வயப்படுகிறார். நந்திதாவிடம் தான் பெரிய வேலையில் இருப்பதாகவும், நிறைய சம்பளம் வாங்குவதாகவும் சச்சின் பொய் கூறுகிறார். ஒரு கட்டத்தில் சச்சின் சொன்னது பொய் என நந்திதாவுக்கு தெரியவருகிறது. 

    இதையடுத்து தனது காதலுக்காக வேலை தேடும் சச்சின், நந்திதாவின் தந்தை சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் கம்பெனிக்கு செல்கிறார். அவருக்கு வேலை தர முடியாது என்று சித்ரா லட்சமணன் கூற, சம்பளம் இல்லாமல் தான் வேலைக்கு வருவதாகவும், தன்னை வேலைக்கு எடுத்தால் அவருக்கு தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறுகிறார். 

    கடைசியில் தனது பெண்ணை திருமணம் செய்ய தன்னிடமே வேலை வாங்கிய சச்சினை நிராகரிக்கும் சித்ரா லட்சுமணன், நந்திதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்கிறார். அந்த திருமணத்தை நிறுத்த சச்சின் செல்லும்போது, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான அருள்தாசிடம் சிக்கிக் கொள்கிறார். 



    கடைசியில், அருள்தாசிடம் இருந்து சச்சின் தப்பித்தாரா? நந்திதாவின் திருமணத்தை நிறுத்தினாரா? நந்திதாவை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நாயகன் சச்சின் மணி தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்பது தெரியாதது போல அவரது நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா இந்த படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அழகான புன்சிரிப்புடன் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார். 

    அருள்தாஸ், மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், அப்புக்குட்டி, செண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் என அனைவருமே காமெடிக்கு பெரும்பங்கு வகித்துள்ளனர். அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளனர். 



    வழக்கமான காதல் கதையை, வித்தியாசமான கோணத்தில் ரசிக்கும்படியான காமெடியுடன் இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர். திரைக்கதையை காதல் மட்டுமின்றி, எதார்த்தமான காமெடியுடன் உருவாக்கியிருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ரசிக்கும்படியாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். 

    சீன் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எம்.சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `காத்திருப்போர் பட்டியல்' பொழுதுபோக்கு. 

    ராஜசேகர் இயக்கத்தில் பள்ளிப் பருவக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் `பாடம்' படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரி நாகேந்திரன் தன்னால் ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற ஏக்கத்தில், தனது மகனை ஆங்கிலம் பேச வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அப்பாவைப் போலவே மகன் ஜீவாவுக்கும் ஆங்கிலம் என்றாலே ஆகாது. தமிழ் தெரியாத உயர் அதிகாரியிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த நாகேந்திரன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். 

    சென்னை செல்லும் உற்சாகத்தில் இருக்கும் ஜீவாவை சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விடுகிறார் நாகேந்திரன். கிராமத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்த ஜீவா, சிபிஎஸ்இ பள்ளியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலம் படிக்க திண்டாடுகிறான். இதையடுத்து அந்த பள்ளியில் இருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஜீவா.



    ஜீவாவின் முயற்சிகள் அனைத்தும், அவனுக்கு எதிராக திரும்பியும், ஒரு கட்டத்தில் அந்த பள்ளியில் இருந்து வெளியேறியும் விடுகிறார். இதையடுத்து மீண்டும் அவரை அதே பள்ளியிலேயே சேர்த்து விட நாகேந்திரன் முயற்சி செய்ய, மாநில அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் ஜீவாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என்று பள்ளி நிர்வாகம் கூறிவிடுகிறது.

    ஆங்கிலம் என்றாலே அலறும் ஜீவா கடைசியில் அந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா? தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நாகேந்திரன் ஆங்கிலம் தெரியாமல் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு தான் ஆங்கிலம் வரவில்லை, தனது மகனாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஏங்குவது ஏற்கும்படியாக இருக்கிறது. ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஜீவாவின் வசனங்கள், பேச்சு ஒரு சில இடங்களில் ரசிக்கும்படியாக இருக்கிறது. 



    ஜாங்கிரி மதுமிதாவை அடை தேனடை, ஒத்த ரோசா உள்ளிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு, அம்மாவாக காட்டியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கும் அது அவ்வளவாக பொருந்தவில்லை. யாஷிகா ஆனந்த் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறார். இவர் தான் வில்லனா என்று யோசிக்கும் அளவுக்கு ஆசிரியர் விஜித்தையே வில்லனாக காட்டியிருப்பது செட்டாகவில்லையோ என்று யோசிக்கும்படியாக இருக்கிறது. 

    குழந்தைகளை வைத்து வித்தியாசமாக படம் எடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ராஜசேகர், அதனை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும். அனைவரும் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையுடன் படத்தை உருவாக்கியிருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்கிலத்துக்கு எதிரான கதைக்களத்தில் ஆரம்பித்து ஆங்கிலம் தான் என்று கதையை முடிப்பது வித்தியாசமாக இருக்கிறது. 

    கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஒரளவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எஸ்.எஸ்.மனோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `பாடம்' பார்க்க முடியவில்லை. 
    எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பக்கா' படத்தின் விமர்சனம்.
    தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர் சதீஷும் டோனியின் அதி தீவிர ரசிகர்கள். அதேபோல் நாயகி நிக்கி கல்ராணி தீவிர ரஜினி ரசிகை. ஒரே ஊரில் இருக்கும் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது. விக்ரம் அடிக்கடி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறார். அவருக்கு போட்டியாக நிக்கி கல்ராணி கபடி போட்டியை நடத்துகிறார். 

    யார் வைக்கும் போட்டிக்கு கூட்டம் அலை மோதுகிறது என்று இருவரும் மோதி வருகின்றனர். இந்நிலையில், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் பிந்துமாதவியை விக்ரம் பிரபு காப்பாற்றுகிறார். 



    விக்ரம் பிரபுவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிந்து மாதவி தான் விக்ரம் பிரபுவை தான் தேடி வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் விக்ரம் பிரபுவிடம் கேட்கிறாள். இதைகேட்டு அதிர்ச்சியடையும் விக்ரம் பிரபு இதற்கு முன்பு பிந்துவை பார்த்ததேயில்லை என்று கூற பிந்து மாதவி அதிர்ச்சியடைகிறாள். 

    இதையடுத்து அவளது காதல் குறித்து விக்ரம் பிரபு கேட்க, தான் பெரிய வீட்டு பெண் என்றும், தனது ஊர்த் திருவிழாவில் விக்ரம் பிரபுவும், சூரியும் பொம்மை கடை போட்டதாகவும், அப்போது விக்ரம் பிரபு மீது தனக்கு காதல் வந்ததாகவும், அவர் தனது காதலை ஏற்கவில்லை என்றும் கூறுகிறாள். இந்நிலையில், அவரை பார்க்க இரவில் அவரது இடத்திற்கு சென்ற போது ஊரில் உள்ளவர்கள் தன்னை பார்த்து தனது வீட்டில் சொல்லிக் கொடுத்தனர். 

    தனது வீட்டில் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் விக்ரம் பிரபுவை தேடி ஊர் ஊராக திருவிழா நடக்கும் ஊர்களுக்கு போவதாகவும் கூறுகிறாள்.  



    அவள் சொன்ன கதையை கேட்ட விக்ரம் பிரபு அவளை, அவளது காதலருடன் சேர்த்து வைப்பதாக கூறுகிறார். அதேநேரத்தில் தானும் நிக்கி கல்ராணியை காதலிப்பதாக கூறுகிறார். 

    கடைசியில், பிந்து மாதவி தனது காதலர் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்தாரா? எலியும், பூனையுமாக இருந்த விக்ரம் பிரபுவும், நிக்கி கல்ராணியும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    விக்ரம் பிரபு முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். டோனி ரசிகராகவும், பொம்மை விற்பவராகவும் அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார். நிக்கி கல்ராணி ரஜினி ரசிகையாக கலக்கியிருக்கிறார். பிந்து மாதவி குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். சூரி, சதீஷ் காமெடியில் ஓரளவுக்கு கைகொடுக்கின்றனர். ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கம் புலி, ரவி மரியா என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். 



    படத்தின் திரைக்கதையில் இசைக்கு கூட இடமில்லாமல் வசனமாக பேசி பேசியே போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா. படத்தின் கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், திரைக்கதையின் போக்கு போரடிக்க வைக்கிறது. காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. படத்திற்காக மெனக்கிட்டிருக்கலாம். 

    சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு வலுசேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். எஸ்.சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. காட்சி விருந்து என்று சொல்லலாம். 

    மொத்தத்தில் `பக்கா' பக்காவாக இல்லை. 
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி - நாக சவுரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தியா' படத்தின் விமர்சனம். #Diya #SaiPallavi #NagaShourya
    இளம் வயதிலேயே நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சவுரியாவும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதல் அடுத்த கட்டத்திற்கு செல்ல சாய் பல்லவி கற்பமாகிறார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, சாய் பல்லவியின் படிப்பை காரணம்காட்டி கருகலைப்பு செய்கின்றனர். பின்னர் சாய் பல்லவியின் படிப்பு முடியும் வரை இருவரும் சந்திக்க முடியாதபடி கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். 

    கருக்கலைப்பு, காதல் பிரிவு என வருத்தத்தில் இருக்கும் சாய் பல்லவி, தற்போது தனது குழந்தை உயிரோடு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் எண்ண ஆரம்பிக்கிறார். படிப்பு முடிந்து நாக சவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். தனியாக ஒரு வீட்டில் குடியேறும் இவர்களுடன், ஒரு குழந்தையும் பயணிக்கிறது. ஆனால் அந்த குழந்தை யார் கண்ணிற்கும் தெரிவதில்லை.



    இந்த நிலையில், சாய் பல்லவியின் அம்மா ரேகா, மாமா ஜெயக்குமார் மற்றும் நாக சவுரியாவின் அப்பா நிழல்கள் ரவி கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். அதேபோல் டாக்டர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். 

    இப்படி இருக்க அடுத்தது நாக சவுரியா கொல்லப்படுவாரோ என்று பயப்படும் சாய் பல்லவி அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். 

    கடைசியில் அவர்கள் கொல்லப்பட்டது எப்படி? நாக சவுரியாவை சாய் பல்லவி காப்பாற்றினாரா? அந்த குழந்தை யார்? அந்த குழந்தைக்கும் சாய் பல்லவிக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமிழில் தனது முதல் படத்திலேயே வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. குழந்தைக்கு அம்மா, குடும்பப் பெண், காதல் என பல்வேறு காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக அம்மாவாக அவரது கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. நாக சவுரியாவின் நடிப்பு வித்தியாசமாக ரசிக்கும்படி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    குழந்தையாக நடித்திருக்கும் பேபி வெரோனிகா அரோரா ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழந்தைத் தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.ஜே.பாலஜி போலீஸ் அதிகாரியாக வந்து செல்கிறார். ரேகா, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், சந்தான பாரதி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை பூர்த்தி செய்திருக்கின்றனர்.  



    கருக்கலைப்பு செய்வது என்பது குற்றம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சிலர் சட்டங்களை மீறி கருக்கலைப்பு செய்வதும் உண்டு. அது ஒருவிதத்தில் சரி என்றாலும், அதனால் ஒரு உயிர் போவது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. கலைக்கப்படும் கருவானது பழிவாங்கினால் என்னவாகும் என்பதை உணர்த்தும் விதமாக விழிப்புணர்பு படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய். திரைக்கதையில் த்ரில்லரை முயற்சி செய்து பேய் படத்தில் இருப்பது போன்று விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். 

    சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `தியா' பேயில்லை.

    #Diya #SaiPallavi #NagaShourya

    அந்தோணி ரசோ, ஜோ ரசோ இயக்கத்தில் 22 சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லன் என பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் விமர்சனம். #AvengersInfinityWar
    ஸ்பேஸ், மைண்ட், ரியாலிட்டி, பவர், டைம் மற்றும் சோல் உள்ளிட்ட உள்ளிட்ட 6 அதியசயக் கற்களும் உலகத்தில் 6 வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

    2 கற்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது என்ற நியதிப்படி இவை பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 கற்களையும் தன்வசப்படுத்தி உலகத்தையே ஆட்டிப் படைத்து, அழிக்க நினைக்கிறார் தனோஸ். அந்த கற்களை தனோஸ் அடையமுடியாதபடி தடுக்க, சூப்பர் ஹீரோக்களுக்கும், தனோசுக்கும் இடையே சண்டை முற்றுகிறது. 



    சாதாரணமாகவே தனோஸின் தாண்டவத்தை சூப்பர் ஹீரோக்கள் தாங்க முடியாத நிலையில், அந்த கற்களை அடைந்தால் விபரீதமாகும் என்பதால் தனோஸ் அந்த கற்களை அடைய முடியாதபடி பல தடைகளை கொண்டுவருகின்றனர். இதில் சூப்பர் ஹீரோக்களின் தடைகளை தவிடுபொடியாக்கி தனோஸ் 4 கற்களை அடைந்து விடுகிறார். கடைசியாக விஷனிடம் இருக்கும் மைண்ட் ஸ்டோன் மற்றும் எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கும் சோல் ஸ்டோனையும் அடைய நினைக்கிறார். 

    இந்தநிலையில், மைண்ட் ஸ்டோனை வைத்திருக்கும் விஷனை, பிளாக் பாந்தரின் வக்கான்டாவுக்கு அழைத்து சென்று அந்த அதிசயக் கல், தனோசுக்கு கிடைக்க முடியாதபடி அழிக்க சூப்பர் ஹீரோக்கள் முடிவு செய்கின்றனர். 



    கடைசியில், விஷனிடம் இருக்கும் கல்லை சூப்பர் ஹீரோக்கள் அழித்தார்களா? அந்த கல்லை தனோஸ் கைப்பற்றினாரா? சோல் ஸ்டோன் இருக்கும் இடத்தை தனோஸ் கைப்பற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இதுவரை வெளியான படங்களில் ஒரு சூப்பர் ஹீரோ, ஒரு வில்லன் அல்லது நான்கைந்து சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லன் இருக்கும் படங்களை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந் படத்தில் மொத்தமாக 22 சூப்பர் ஹீரோக்களுக்கும், ஒரே ஒரு வில்லனுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள், போராட்டங்கள், உயிரிழப்பு என ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

    அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒரே கதையில் கொண்டு வந்து அவர்களது கதாபாத்திரத்தை ஏற்ற, இறக்கமில்லாமல் இயக்கியிருக்கிறார்கள் அந்தோணி ரசோ மற்றும் ஜோ ரசோ. ஸ்டான்லி மற்றும் ஜேக் கிர்பியின் `தி அவெஞ்சர்ஸ்' காமிக்ஸை மையப்படுத்தி, கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் ஸ்டீபன் மிக்பீலி விறுவிறுப்பான திரைக்கதைகைக்கு வகை செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. 



    அலன் சில்வஸ்ட்ரியின் பின்னணி இசையில் அரங்கமே அதிர்ந்தது. டிரெண்ட் ஒப்பலோச்சின் ஒளிப்பதிவில் காட்சிகள் அதிரடியாக, பிரம்மாண்டமாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' பிரம்மாண்டம் முடியவில்லை. #AvengersInfinityWar #AvengersInfinity 

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா - ரம்யா நம்பீசன் - இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெர்குரி' படத்தின் விமர்சனம். #Mercury #Prabhudeva
    மெர்குரி (பாதரசம்) கழிவினால் பாதிக்கப்பட்ட இந்துஜா, சனத் ரெட்டி, அனிஷ் பத்மநாபன், தீபக் பரமேஷ், சஷாங்க் உள்ளிட்ட 5 பேருக்கும் காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. இவர்கள் 5 பேரும் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு கொண்டாட்டத்திற்காக வருகின்றனர். இதில் சனத், இந்துஜாவை காதலித்து வருகிறார். ஆனால் தனது காதலை நாயகியிடம் கூறவில்லை.

    இந்நிலையில், இந்துஜாவிடம் தனது காதலை சொல்ல எண்ணி, சனத் அவளை காரில் வெளியில் கூட்டிச் செல்கிறார். அப்போது அவர்களது நண்பர்களும் உடன் செல்கின்றனர். இருப்பினும் ஒரு தனிமையான இடத்தில் வைத்து சனத் தனது காதலை சொல்ல, இந்துஜாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார். 



    இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பும் வேளையில், அவர்களது காரில் ஏதோ மாட்டிக் கொண்டிருப்பது போல அவர்களுக்கு தோன்ற, காரை நிறுத்தி பார்க்கும் போது, பிரபுதேவா உடம்பில் ஒரு சங்கிலி கட்டப்பட்டு, அதன் மறுமுனை காரில் மாட்டி, அவர் இழுத்து வரப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. அவரது உடலில் உயிர் இல்லாததால், அதிர்ச்சியடையும் நண்பர்கள், பிரச்சனையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரது உடலை எடுத்துச் செல்கின்றனர். 

    பின்னர் அங்குள்ள மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் பிரபுதேவாவின் உடலை போட்டுவிட்டு திரும்புகிறார்கள். இந்நிலையில், அவர்களில் ஒருவரது ஐபாட் அந்த தொழிற்சாலையில் சிக்கிக் கொள்ள, அதை எடுக்க மீண்டும் அந்த தொழிற்சாலைக்கு போகும் போது, பிரபுதேவா உயிரோடு நிற்கிறார். அவரை பார்த்து நண்பர்கள் அனைவரும் மிரண்டு போகிறார்கள். பிரபுதேவா அவர்களை கொல்ல முயற்சி செய்கிறார்.



    கடைசியில் கண் தெரியாத பிரபுதேவா அவர்களை கொன்றாரா? வாய் பேசமுடியாத, காது கேட்காத நண்பர்கள் 5 பேரும் பிரபுதேவாவிடம் இருந்து தப்பித்தார்களா? பிரபுதேவா எப்படி உயிரிழந்தார்? எப்படி உயிரோடு வந்தார்? அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கண்ணால் பார்க்க முடியாது என்றாலும், ஓசையினாலேயே அதிர வைத்திருக்கிறார் பிரபுதேவா. கண் தெரியவில்லை என்றாலும், அவர் பார்க்கும் அந்த பார்வை, செவியால் உணர்ந்து பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரம்யா நம்பீசன் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. 

    அதேபோல் நாயகி இந்துஜா, காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது செய்கையும், வாய் பேச முடியவில்லை என்றாலும், தான் சொல்ல நினைப்பதை செய்கையால் சொல்லி புரிய வைப்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் சனத், அனிஷ், தீபக், சஷாங்க் உள்ளிட்ட அனைவருமே அவர்களது கதபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    காது கேட்காத, வாய் பேச முடியாத 5 பேருக்கும், கண் தெரியாத ஒருவருக்கும் இடையே நடக்கும் மௌனப் போராட்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மௌனமாக துவங்கும் 5 பேரின் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் திசைமாறி, திகில் திருப்பங்களுடன் வந்து கடைசியில் மௌனத்தில் முடிவு என்ன, என்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். மௌனமே வலிமையான அலறல் என்பதை கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியில் நிரூபித்திருக்கிறார். 

    மெர்குரி தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இதேபோல் மற்ற தொழிற்சாலைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை கருத்துடன் சொல்லியிருக்கிறார். கார்ப்பரேட் நிறுவங்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜூக்கு வாழ்த்துக்கள்.

    படத்தில் முக்கிய நாயகனாகவே வலம் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இசையாலேயே பேசியிருக்கிறார். திகிலூட்டியிருக்கிறார். பரபரக்க வைத்திருக்கிறார். 

    திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மலைப்பகுதி, பனி அடந்த இடம், தொழிற்சாலை என பல இடங்களில் பல பரிணாமங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். 

    மொத்தத்தில் `மெர்குரி' திகில் போராட்டம். #Mercury #MercuryReview #Prabhudeva
    சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜெயந்த் இயக்கத்தில் அப்பு கிருஷ்ணா, வி.எஸ்.ராகவன், நிழல்கள் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `முந்தல்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் அப்பு கிருஷ்ணா அவரது தாத்தா வி.எஸ்.ராகவனுடன் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார். தற்காப்பு கலைகள் பலவற்றை கற்றுவைத்துள்ள அப்பு கிருஷ்ணா அங்குள்ள சிலருக்கு அந்த கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார். சித்த மருத்துவரான வி.எஸ்.ராகவன் ஓலைச்சுவடியில் எழுதியிருக்கும் முறையை வைத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். அப்பு கிருஷ்ணா, ஆழ்கடலுக்கு சென்று மருந்து கண்டுபிடிக்க தேவையானவற்றை கொண்டு வருகிறார். 

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு புற்றுநோய்க்கான மருந்தை வி.எஸ்.ராகவன் கண்டுபிடிக்கிறார். பின்னர் அந்த மருந்தை புற்றுநோய் பாதிப்புள்ள ஒருவரிடம் சோதனை செய்ய, அதில் வெற்றியும் காண்கிறார். இந்த தகவல் உள்ளூர் மருத்துவர் ஒருவர் மூலம் சென்னையில் இருக்கும் விஞ்ஞானி நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது. 



    இதையடுத்து ராமேஸ்வரம் வரும் நிழல்கள் ரவி, அந்த மருந்து கண்டுபிடிக்கும் முறையை தன்னிடம் கொடுக்கும்படியும், அதை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார். அப்படி கொடுக்கும் பட்சத்தில் ஏழை எளிய மக்களுக்கு அந்த மருந்து கிடைக்காமல் போய்விடும் என்பதால் நிழல்கள் ரவியிடம் அந்த மருந்தை தர மறுக்கிறார் வி.எஸ்.ராகவன். 

    இதையடுத்து நிழல்கள் ரவி தூண்டுதலின் பேரில், உள்ளூர் ரவுடியான மொட்டை ராஜேந்திரன் அந்த ஓலைச்சுவடியை எடுக்க வருகிறார். இந்நிலையில், அப்பு கிருஷ்ணா தற்காப்பு கலையில் சிறந்தவர் என்பது தெரிந்து பின்வாங்குகிறார். புற்றுநோய் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார். 

    கடைசியில், அந்த மருந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவசமாக கிடைத்ததா? நிழல்கள் ரவி அதனை திட்டம்போட்டு அடைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 



    தற்காப்பு கலையில் கலக்கும் அப்பு கிருஷ்ணா நடிப்பில் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் சுமார் தான். ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகி முக்‌ஷா சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். வி.எஸ்.ராகவன், நிழல்கள் ரவி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றர். மொட்டை ராஜேந்திரன் ஒருசிலகாட்சிகளில் வந்து செல்கிறார். 

    புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டதாகவும், அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்தை தேடி நாயகன் செல்வது போலவும், அதே மருந்துக்காக பலரும் பயணிக்கும்படியாக கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜெயந்த். படத்தின் கதை ஏற்கும்படியாக இருந்தாலும் நாயகன் மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நீளம் அதிகமாக இருப்பது ரசிகர்களை கடுப்படைய வைக்கிறது. 

    கே.ஜெய்கிருஷ் இசையில் பாடல்கள், பின்னணி இசை சுமார் ரகம் தான். ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `முந்தல்' நீட்சி. 
    டுவெயின் ஜான்சன் நடிப்பில், ப்ராட் பெய்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ராம்பேஜ்’ படத்தின் விமர்சனம்.
    விலங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் நிபுரணராக வேலை பார்த்து வருகிறார் டுவெயின் ஜான்சன். இவர் விலங்குகள் மீது அதிக அக்கறையுடன் இருந்து வருகிறார். குறிப்பாக ஜார்ஜ் எனும் மனிதக் குரங்கு இவருக்கு ரொம்பவே செல்லம். 

    ஒருநாள் விண்வெளியில் இருந்து ஒரு சிறு இயந்திரம் மூன்று இடங்களில் விழுகிறது. ஒன்று அடந்த காட்டு பகுதியிலும், இரண்டாவது கடலுக்குள்ளும், மற்றொன்று டுவெயின் ஜான்சன் இருக்கும் விலங்குகள் சரணாலத்தில் விழுகிறது.

    அந்த இயந்திரத்தில் இருந்து வெளிவரும் விஷ வாயுவால், ஜார்ஜின் செயல்பாடுகளில் வித்தியாசம் ஏற்படுகிறது. விஷ வாயுவின் வீரியத்தில் ஜார்ஜுக்கு வலிமையும் சக்தியும் கிடைக்கிறது. மேலும் அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. 

    இந்த இயந்திரத்தை தேடி ஒரு கும்பல் காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த இயந்திரத்தால் பாதிக்கப்பட்ட ஓநாய் அந்த கும்பலை அடித்து நொறுக்குகிறது. அதுபோல் நீருக்குள் விழுந்த இயந்திரத்தால் முதலை பாதிக்கப்படுகிறது.



    இந்நிலையில், ஒரு கும்பல் கதிர்வீச்சு ஒன்றை ஏற்படுத்தி, மூன்று விலங்குகளையும் உக்கிரமடையச் செய்கிறது. வெவ்வேறு இடத்தில் இருந்து கதிர்வீச்சை நோக்கிப் பயணிக்கும் மூன்று விலங்குகளும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டு அந்த ஊரையே அழிக்கிறது.

    இதையறிந்த டுவெயின் ஜான்சன், தன்னுடைய செல்ல குரங்கு ஜார்ஜ் ஏற்பட்ட நிலையை அறிந்து வருந்துகிறார். ஜார்ஜை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார். 

    இறுதியில் அந்தக் கதிர்வீச்சை ஏற்படுத்தியது யார்? விண்வெளியில் வெளியான விஷ வாயுவுக்குக் காரணம் என்ன? விஷ வாயு தாக்கிய ஜார்ஜை டுவெயின் ஜான்சன் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    டுவெயின் ஜான்சன், எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும், விலங்குகள் எவ்வளவு அடித்தாலும் ஆர்ம்ஸை முறுக்கிக்கொண்டு, சண்டையிடுகிறார். கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.



    குரங்கு, ஓநாய், முதலை போன்ற விலங்குகள் ராட்ஸச வடிவில் படம் முழுக்க வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. டுவெயின் ஜான்சன் குரங்குடன் செய்யும் லூட்டிகள் படத்தை ஜாலியாக எடுத்து செல்கிறது. டெக்னிக்கல் விஷயங்களில் ஒட்டுமொத்த குழுவும் தங்களுடைய சிறப்பை கொடுத்திருக்கிறது. 

    கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ராட் பெய்டன்.

    மொத்தத்தில் ‘ராம்பேஜ்’ விருந்து.
    சூறாவளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பாலிவுட் படமான ‘தி ஹரிகேன் ஹீஸ்ட்’ படத்தின் விமர்சனம்.
    சில வருடங்களுக்கு முன்பு ஹரிகேன் ஆண்ட்ரூ என்ற சூறாவளி அல்பமாவில் உள்ள கல்போர்ட் எனும் ஊரை அழித்திருக்கிறது. அந்தச் சூறாவளியில் டோபி கெபெல் - ரையன் வான்டென் சகோதரர்கள், தங்களது அப்பாவை சிறுவயதில் இழந்துவிடுகிறார்கள். அதன்பின் சில வருடங்கள் பின், டோபி கெபெல் வானியல் ஆராய்ச்சியாளராகவும், ரையன் கடல் துறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். 

    அதேஊரில் அமெரிக்காவை எதிர்த்து, அங்கிருக்கும் பணங்களை திருட ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது. அந்த பணங்களை பாதுகாவலராக மேகி கிரேஸ் வேலை பார்க்கிறார். மறுபக்கம் சூறாவளி வரும்போது அதை பயன்படுத்தி ஒட்டுமொத்த தொகையையும் சூறையாட அந்த கும்பல் திட்டம் போட்டு வருகிறார்கள். 

    இந்நிலையில், மழையின் காரணமாக மின்சார வசதி செயலிழக்கிறது. உள்ளே பல பாதுகாப்புக் கருவிகளுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். திடீரென ஒருநாள் அங்கிருக்கும் ஜெனரேட்டரிலும் பிரச்னை ஏற்பட, சரிசெய்ய ரையன் உதவியை நாடிச் செல்கிறார், மேகி கிரேஸ். 

    இதைப் பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல், பணத்தை கொள்ளையடிக்க செல்கிறார்கள். அங்கிருக்கும் பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகாளாக சிறை பிடிக்கிறது. அங்கு திரும்பி வரும் மேகி கிரேஸ் மீதும், ரையன் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. 



    இதில் மேகி கிரேசை தப்பிக்கச் செய்கிறார் ரையன். பல நவீன பாதுகாப்புகளைக் கொண்ட பணப் பெட்டகத்தைத் திறக்க மேகி கிரேசால் மட்டும்தான் முடியும் என்பதால், கொள்ளைக்காரர்கள் அவரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து அந்த பணப் பெட்டகத்தைக் காப்பாற்றும் மிஷினில் இறங்குகிறார், மேகி கிரேஸ். நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட டோபியும் தன் சகோதரரைக் காப்பாற்ற மேகி கிரேசோடு இணைகிறார். 

    இறுதியில் டோபியும், மேகி கிரேசும் கொள்ளையர்களிடம் ரையனை காப்பாற்றினார்களா? பணத்தை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் புயலுக்குள் பயணிப்பதால் அதற்குள் நாமும் சிக்கியதுபோல ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரள வைத்திருக்கிறது. படம் ஆரம்பமும், இறுதியும் விறுவிறுப்பின் உச்சத்தில் நம்மை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். 

    மொத்தத்தில் ‘தி ஹரிகேன் ஹீஸ்ட்’ ரசிக்கும் சூறாவளி.
    ×