என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஏ.கே.சஜன் இயக்கத்தில் மம்முட்டி - நயன்தாரா நடிப்பில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் `வாசுகி' படத்தின் விமர்சனம்.
    தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்து வரும் மம்முட்டி, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான நயன்தாரா, அனைத்து விஷயங்களிலும் பயப்படுகிறார். அந்த பயத்தால் பலரிடம் கோபப்பட்டு திட்டி விடும் சுபாவம் கொண்டவர். 

    இந்நிலையில், ஒருநாள் துணி காயப்போட மாடிக்கு செல்லும் நயன்தாராவை, அதே குடியிறுப்பில் தங்கி இருக்கும் இளைஞர்கள் இருவர் மற்றும் இஸ்திரி வேலை செய்யும் செண்ராயன் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.



    தனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் முன்பு போல மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கிறாள். இந்த விஷயத்தில் இருந்து மீள முடியாமல், தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து, மீண்டும் கதகளி நடனத்தில் முழு ஈடுபடுடன் இருக்க முயல்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் நயன்தாராவின் கதகளி நடனம் அந்த ஊரில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பிடித்துப் போக, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்கிறார். 

    இதையடுத்து தனக்கு இழைத்த கொடுமையை அந்த போலீஸிடம் கூறும் நயன்தாரா, அவர்களை பழிவாங்க தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பின்னர் மூன்று பேரையும் திட்டம் போட்டு வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார். 



    இந்த கொலைகளை செய்ய பின்னணியில் இருந்து நயன்தாராவுக்கு ஒருவர் உதவி வருகிறார். அவர் யார்? அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மம்முட்டி ஒரு கணவனாக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி சிறப்பாக நடத்திருக்கிறார். இயல்பான, கலகலப்பான நடிப்பால் வந்து கவர்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, மனைவியாக, அனைத்திற்கும் பயப்பட்டு, கோபப்படும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. படம் முழுக்க பயத்துடனேயே வலம் வரும் நயன்தாராவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. 



    குடும்ப பெண்கள், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.கே.சஜன். படத்தின் திரைக்கதையும், அதை கையாண்ட விதமும் சிறப்பு. அதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். 

    ரோபி வர்கீஸ் ராஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `வாசுகி' தைரியமானவள்.

    ஸ்டீவன் எஸ்.டிநைட் இயக்கத்தில் ஜான் போயகா - ஜிங் டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பசிபிக் ரிம் அப்ரைசிங்' படத்தின் விமர்சனம்.
    பசிபிக் ரிம் முதல் பாகத்தில் மனிதர்களின் உலகத்திற்குள் நுழையும் ஏலியன்களுக்கும், மக்களுக்கும் இடையே சண்டை நடக்கும். இந்த பாகத்தில் ஏலியன்கள் வரும் ரிம்மை மூடுவதற்காக மனிதர்கள் போராடுகிறார்கள். 

    அதற்காக ரோபோட்களை உருவாக்கி அதன்மூலமே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதில் நாயகன் ஜான் போயகா ரேபோட் பாகங்களை திருடி தனியாக ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ஜானை போலவே கேலி ஸ்பேனியும் ரோபோ பாகங்களை திருடி செல்கிறார். 

    கேலி ஸ்பேனியை பின்தொடர்ந்து சென்று பார்க்கும் போது, அவளும் ரகசியமாக ரேபோக்களை உருவாக்கி வருகிறாள் என்பது ஜான் போயகாவுக்கு தெரிகிறது. இந்நிலையில் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்ள அவர்கள் மற்றவர்களுக்கு ரோபோக்களை இயக்கும் பைலட்டுகளாக நியமிக்கப்படுகின்றனர். 



    ஜானுடன் மற்றொரு நாயகனான ஸ்காட் ஈஸ்ட்டும் ரேபோ பைலட்டாக வருகிறார். இவ்வாறாக ரோபோக்களை இருவர் அதனுள் சென்று இயக்க வேண்டும். இந்த முறைக்கு மாற்றாக டிரான்ஸ் மூலம் ரோபோக்களை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் முடியும் நிலையில், திடீரென வரும் ரோபோ ஒன்று ரின்கோ குகுச்சியை கொன்று விடுகிறது. 

    ரோபோ ஏன் மனிதரை கொள்கிறது என்பது குறித்து விசாரிக்கும் போது, அதில் ஏலியனின் மூளை செயல்படுவது தெரியவருகிறது. கடைசியில் அந்த ரோபோவில் ஏலியனின் மூளை எப்படி வந்தது? அதனை இயக்குவது யார்? ஏலியன்கள், மனிதர்கள் உலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஜான் போயகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், ஜிங் டியன், கேலி ஸ்பேனி, ரின்கோ குகுச்சி, பர்ன் கோமேன், அட்ரியா அர்ஜோனா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். 



    ஸ்டீவன் எஸ்.டிநைட்டின் இயக்கத்தில் படம் சிறப்பான ஆக்‌ஷன் படமாக கண்ணுக்கு விருந்தளிக்கிறது. முதல் பாகத்தை போலவே படத்தின் கதை இருந்தாலும், காட்சிகளில் சில மாற்றங்கள் இருப்பது ரசிக்க வைக்கிறது. திரைக்கதை நீட்சி, ஆங்காங்கு தொய்வு என ஒருமுறை பார்க்கும்படியாக இருக்கிறது. 

    டேன் மிண்டல் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. லார்ன் பால்ஃப் பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் `பசிபிக் ரிம் அப்ரைசிங்' அடிதடி கலாட்டா. 
    சதீஷ், சுனு லட்சுமி, நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘தாராவி’ படத்தின் விமர்சனம்...
    நாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்கள்.

    ஒரு நாள் இவர்கள் பேசுவதை பார்க்கும் சுனு லட்சுமியின் அண்ணன், சதீஷை தன் வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். இந்நிலையில், மும்பையில் சுனு லட்சுமியை காதலிப்பதாக பின்னாடியே சுற்றி வரும் பாலா, சுனுவும், சதீஷும் காதலிப்பதை அண்ணனிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.

    இதனால், சுனு லட்சுமி, சதீஷ் காதலை பிரிக்க நினைக்கிறார் சுனு லட்சுமியின் அண்ணன். ஆனால், சுனு லட்சுமி அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து சதீஷிடம் தஞ்சமடைகிறார். 

    இதே சமயம், மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக சரக்கு லாரிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. இந்த டீமின் விசாரணையில் சிக்குகிறார் சுனு லட்சுமியின் அண்ணன். 

    இறுதியில் சதீஷும், சுனு லட்சுமியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுனு லட்சுமியின் அண்ணன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், பாலா கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் இவர்களிடம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. 'அறம்' படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்தவர். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    `வசந்த காலப் பறவை',` சூரியன்', `ஐ லவ் இந்தியா', `இந்து', `திருமூர்த்தி', `கல்லூரி வாசல்' போன்ற படங்களை இயக்கிய பவித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனரா என்று ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்தி இருக்கிறார். மிகவும் பழைய கதை, திரைக்கதையில் தெளிவு இல்லை. 

    பவித்ரனின் மகன் அபே பவித்ரன் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாலக்குடியில் ஒலிக்கும் பாடல் ஓகேதான். ஆனால் நடனம்..? பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. மணி கண்டனின் ஒளிப்பதிவில் மும்பையை அழகாகக் காட்டுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மும்பையின் மிகப் பெரிய திருவிழாவான விநாயகர் ஊர்வலத் திருவிழாவிலும் ஒரு காட்சியை திணித்து படமாக்கியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘தாராவி’ ரொம்ப பழைய இடம்.
    எலி ரோத் இயக்கத்தில் புரூஸ் வில்லிஸ் - எலிசபெத் ஷீ நடிப்பில் வெளியாகி இருக்கும் `டெத் விஷ்' படத்தின் விமர்சனம்.
    கடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார். 

    மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது. இதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ்.



    ஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா? கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    புரூஸ் வில்லிஸ், எலிசபெத் ஷீ, கேமிலா மோரோன் என மூவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் புரூஸ் வில்லிஸின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், போதும் என்று சொல்லும்படியாகவே இருக்கிறது. வின்சென்ட் டி ஆனோப்ரியோ, ஆண்ட்ரியஸ் அபர்ஜிஸ், பியூ நாப், டீன் நாரீஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு துக்க சம்பவம், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குதல் என வழக்கமான பழிவாங்குதல் கதையை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எலி ரோத். குற்றவாளிகளை பழிவாங்க செல்லும் நாயகன் ஒரு கட்டத்திற்கு மேல் குற்றம் செய்யும் அனைவரையுமே கொல்லுவது, எல்லா பிரச்சனைக்கும் துப்பாக்கியை பயன்படுத்துவது என முகம் சுளிக்க வைக்கிறார். 

    லுத்விக் கோரன்சன் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ரோஜியன் ஸ்டோப்பர்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `டெத் விஷ்' பார்ப்பவர்களுக்கு தான். 

    எஸ்.கல்யாண் இயக்கத்தில் அவிஷேக் கார்த்திக் - தன்ஷிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காத்தாடி' படத்தின் விமர்சனம்.
    நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர். 

    பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார். அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது. 



    தன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள். கடைசியில் சாதன்யா யார்? சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா? தன்ஷிகா யார்? தன்ஷிகாவை ஏன் போலீஸ் துரத்தியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் அவிஷேக் கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். குறிப்பாக அவிஷேக்கும், டேனியலும் இணையும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. டேனியல் காமெடியில் நல்லவே ஸ்கோர் செய்திருக்கிறார். தன்ஷிகா அவரது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். போலீசாக வந்து மிரட்டும் காட்சியிலும், அவருக்கு நடக்கும் இன்னல்கள் அடங்கிய காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு. சம்பத் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் என அனைவருமே கதையின் போக்குக்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    திருட்டு தொழில் செய்து வரும் நாயகன், திடீரென பெரிய திருட்டு செய்து செட்டிலாக நினைத்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தில் கதாபாத்திரங்கள் அனைவரையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திருட்டு, காமெடி என கலகலப்பாக்க படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

    தீபன்.பி-யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.பவண் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `காத்தாடி' வேகம் குறைவு. 

    ஜூனியர் என்.டி.ஆர், ஹன்சிகா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘போக்கிரி பையன்’ படத்தின் விமர்சனம்.
    கள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள நோட்டு பிசினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், தான் உழைக்கும் பணத்தை அந்த இல்லத்திற்கே செலவு செய்து வருகிறார். ஒரு பிரச்சனையில் சிறப்பாக சண்டைப் போட்டதால், ஆஷிஷ் வித்யார்த்தி கூட்டத்தில் இணைகிறார். பல சிறப்பான விஷயங்கள் செய்வதால் ஆஷிஷிடம் நல்ல பெயரை பெற்று விடுகிறார்.

    இந்நிலையில், ஹாங்காங்கில் ஒரு வேலை வருகிறது. இதை முடிப்பதற்காக என்.டி.ஆர். செல்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பிரகாஷ் ராஜ் மனதில் இடம்பிடிக்கிறார்.

    பின்னர் சென்னை திரும்பும் என்.டி.ஆருக்கு, ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஆஷிஷ் வித்யார்த்திடம் பணம் கேட்கிறார் என்.டி.ஆர். ஆனால், அவரோ பணம் தர மறுத்து விடுகிறார். இதனால் கோபப்படும் என்.டி.ஆர்., துப்பாக்கி முனையில் ஆஷிஷ் வித்யார்த்திடம் இருக்கும் பணத்தை எடுத்து சென்று விடுகிறார்.



    அந்த சிறுவனின் சிகிச்சைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேங்கிடம் சேர்ந்து விடுகிறார். மேலும் பிரகாஷ் ராஜை கொல்ல போவதாக அவரிடம் சொல்லுகிறார். இதைக் கேட்ட பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் இருந்து சென்னை வருகிறார். 

    இறுதியில் என்.டி.ஆர். பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தெலுங்கில் ‘கன்த்திரி’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது டப்பிங் செய்யப்பட்டு ‘போக்கிரி பையன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆக்‌ஷன் கலந்து மாஸ் என்டர்டெயின்ட் படமாக உருவாகி இருக்கிறது. 2008ம் ஆண்டு வெளியான படம் என்பதால், அப்போது பார்த்திருந்தால் ரசிக்கும் படமாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பார்க்கும் போது, லாஜிக் இல்லாதது போல் தோன்றுகிறது.



    கதாநாயகனாக நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு வேலை அதிகமாக இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ். இவருக்கு உதவியாளராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார்.

    மணி ஷர்மா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். டப்பிங் படம் என்பதால் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘போக்கிரி பையன்’ பழைய பையன்.
    கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நாகர்ஜூனா - அனுஷ்கா - விமலா ராமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்' படத்தின் விமர்சனம்.
    சிறு வயதில் இருந்தே தீவிர பெருமாள் பக்தனாக வரும் நாகர்ஜூனா, ஒருமுறையாவது பெருமாளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெருமாளை பார்க்க வேண்டும் என்றால் கடும் தவம் செய்ய வேண்டும் என்று நாகர்ஜூனாவின் குருநாதர் கூறுவதை கேட்டு, தனிமையான இடம் ஒன்றில் தவம் புரிகிறார். தவத்தின் நடுவே அவருக்கு சில இடைஞ்சல்கள் வருகிறது. யாரோ ஒரு சிறுவன் தன்னை தொந்தரவு செய்வதை அறிந்து கண்விழித்து, அந்த சிறுவனை அனுப்பி விடுகிறார்.

    பின்னர் தனது குருநாதரிடம் சென்று தான் கடும் தவம் புரிந்தும் பெருமாள் என்னை பார்க்க வரவில்லையே என்று வருத்தத்துடன் கேட்கும் நாகர்ஜூனாவிடம், நடந்தது அனைத்தையும் கேட்கிறார் அவரது குருநாதர். தான் தவத்தையும், தனது தவத்தின் நடுவே சிறுவன் வந்ததையும் கூறுகிறார். இதைகேட்ட குருநாதர், அந்த சிறுவன் தான் பெருமாள் அவதாரத்தில் வந்ததாக கூற, பெருமாளை நான் விரட்டி விட்டேனே என்று வருத்தப்படும் நாகர்ஜூனாவுக்கு, பெருமாளை பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலும் கூடுகிறது. 



    பின்னர் நாகர்ஜூனாவுக்கும், அவரது உறவுக்கார பெண் விமலா ராமனுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நாகர்ஜூனா, திருப்பதி கோயிலுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருப்பதி கோவிலின் தர்மகத்தாவாக இருக்கும் ராவ் ரமேஷ், நிறைய குற்றங்கள் செய்து வருவதுடன் தன்னை திருப்பதி கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதால் கோபமடையும் நாகர்ஜுனா அந்நாட்டு மன்னன் சம்பத்திடம் இதுகுறித்து முறையிடுகிறார்.

    இதுகுறித்து விசாரிக்கும் சம்பத், ராவ் ரமேஷை அந்த பதவியில் இருந்து நீக்கி, திருப்பதி கோவிலின் தர்மகத்தாவாக நாகர்ஜூனா நியமிக்கப்படுகிறார். அதேநேரத்தில் திருப்பதி கோவிலுக்கு உட்பட்ட ஆசரமத்தில் தொண்டு செய்து வரும் அனுஷ்காவை கடத்திச் செல்கிறார் ஜெகபதி பாபு. 



    கடைசியில் நாகர்ஜுனா பெருமாளை சந்தித்தாரா? அனுஷ்கா என்ன ஆனார்? விமலா ராமன் திருமணம் நடந்ததா? திருப்பதி கோவில் என்ன நிலையை அடைந்தது? அதில் நாகர்ஜூனா எந்த இடம் பிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    தீவிரமான பெருமாள் பக்தனாகவே வாழ்ந்திருக்கிறார் நாகர்ஜூனா. அவரது ஒவ்வொரு செய்கையும், பேச்சும் தான் ஒரு கடவுளின் சீடன் என்பதை வெளிப்படுத்துமாறு இருக்கிறது. அனுஷ்கா வழக்கமான புன்னகையுடன் பெருமாளுக்கு தொண்டு செய்யும் சீடையாக சிறப்பாக நடித்திருக்கிறார். விமலா ராமன் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சம்பத், ராவ் ரமேஷ், பிரம்மானந்தம், ஆதித்யா மேனன், அஷ்மிதா உள்ளிட்ட மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    பெருமாள் பக்தன் மற்றும் திருப்பதி கோவிலை மையப்படுத்தியே கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கே.ராகவேந்திர ராவ். திருப்பதி கோவிலின் வரலாற்றை மையப்படுத்தியே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். 

    கீரவாணியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எஸ்.கோபால ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

    மொத்தத்தில் `பிரம்மாண்ட நாயகன்' பிரம்மாண்டம் தான்.  

    அசார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், யோகி பாபு ஆகியோர் நடிப்பில், விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் விமர்சனம்.
    இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார்.

    அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது.

    அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை கொல்ல வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நான் தரும் டாஸ்க்குகளை நீ செய்ய வேண்டும். அதை நீ செய்ய மறுத்தால் இறந்து விடுவாய் என்று கூறுகிறார்.

    எமதர்மன் கொடுத்த டாஸ்க்குகளை எல்லாம் அசார் செய்தாரா? உயிர் பிழைத்தாரா? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இன்ஜினியரிங் படித்திருக்கும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார் அசார். இங்கிலீஷையே தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளும் இவரின் நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. டாஸ்க் கட்டளைக்கு பயந்து இவர் பண்ணும் கலாட்டாக்களில் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி, ஐ.டி அழகியாக வந்து மனதில் நிற்கிறார். அசார் உடனே வரும் சிங்கப்பூர் தீபன், மற்றும் யோகி பாபு ஆகியோரின் காமெடி ஓரளவிற்கு உதவியிருக்கிறது.

    வித்தியாசமான கதையை உருவாக்கி அதை திறம்பட கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் பாதியில் மிகவும் பொறுமையை சோதித்துவிட்டார். இரண்டாம் பாதி இறுதியில் தான் படத்தை பார்க்கவே முடிகிறது. இதை தாண்டி டாஸ்க் காட்சிகள் தவிர படத்தில் எந்த ஒரு காட்சியும் பெரிதும் ஈர்க்கவில்லை.

    ரகுமானின் தங்கை ரெஹானே நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைக்க வந்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் டூயட் பாடல் கேட்கும் ரகம். வம்சி தரண் முகுந்தனின் ஒளிப்பதிவு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ வைக்காமலே இருக்கலாம்.
    பார்த்திபன், ஜெயப்பிரதா, அனு ஹாசன், நாசர், ரேவதி, ரேகா, ஆகியோர் நடிப்பில் எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேணி’ படத்தின் விமர்சனம். #Keni
    நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா. 

    இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார்.

    தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியில் இருக்கும் தண்ணீரை தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் இருப்பது ஜெயப்பிரதாவிற்கு தெரிகிறது. 



    ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறார் ஜெயப்பிரதா. இதற்கு பல தடைகள் வருகிறது. இதில் ஜெயப்பிரதா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஜெயப்பிரதா. இவருடைய அனுபவ நடிப்பால் படம் முழுவதையும் தாங்கி பிடித்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. இவர் கண்கலங்கும் போது, நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார்.

    பஞ்சாயத்து தலைவராக இடையிடையே வந்து நியாயம் பேசி, குறும்புத்தனமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். வக்கீலாக வரும் நாசர், கலேக்டர் ரேவதி, ஊர் மக்களில் ஒருவராக வரும் அனு ஹாசன், நீதிபதி ரேகா, ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி இருக்கிறார்கள். ஜெயப்பிரதாவுடன் படம் முழுவதும் பயணிக்கும் பார்வதி நம்பியாரின் நடிப்பு சிறப்பு. கணவனை பிரிந்து தவிப்பது, தன் மீது ஆசைப்படும் போலீசின் வலையில் இருந்து தப்பிப்பது என நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.



    டீக்கடையில் வெட்டியாக பேசும் சாம்ஸின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல் டீ மாஸ்டராக வரும் பிளாக் பாண்டியும் காமெடியில் துணை நின்றிருக்கிறார். 

    தமிழ்நாடு - கேரளா எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு படக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஞாபகம் வருகிறது.

    படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இப்படி மலையாளிகளால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழர்களுக்கான உரிமையைப் பேசுவது சிறப்பு. சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்.



    தாஸ் ராம் பாலாவின் வசனம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பல வசனங்கள் பட்டாசு போல் வெடித்திருக்கிறது. ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் நௌஷாத் ஷெரிப். பச்சைப் பசேலென இருக்கும் பூமியையும், வறண்டு வெடித்துக் கிடக்கிற பூமியையும் அழகாக நம் கண்முன் நிறுத்திருக்கிறார். 

    ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. அதிலும் ‘ஐய்யா சாமி...’ பாடல் தாளம் போட வைக்கிறது. ‘கலையும் மேகமே...’ பாடல் முணுமுணுக்கும் ரகம். சாம்.சி.எஸ் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். 

    மொத்தத்தில் ‘கேணி’ சமுக அக்கறையுள்ள படம்.
    கேபிள் சங்கர் - அஜயன் பாலா உள்ளிட்ட 6 பேர் இயக்கத்தில் அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகி இருக்கும் ‘6 அத்தியாயம்’ படத்தின் விமர்சனம்.
    படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு கதைகளை கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் அமானுஷ்யம் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    சூப்பர் ஹீரோ

    நாயகன் தமன் குமாருக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, உயிர் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் அது அவருக்கு முன்கூட்டியே தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஸ்டான்லியிடம் ஆலோசிக்க செல்கிறார். அப்போது அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணரும் மருத்துவர் என்ன செய்தார்? தமன் குமார் அப்படி நடக்க காரணம் என்ன? என்பதே முதல் அத்தியாயமாக காட்டப்பட்டுள்ளது. 



    இனி தொடரும் 

    பாப் சுரேஷின் வீட்டில் ஒரு குழந்தை பந்து விளையாடுகிறது. ஆனால் பாப் சுரேஷுக்கு அந்த குழந்தை இருப்பது தெரியவில்லை. மாறாக அந்த பந்து மட்டும் தெரிகிறது. இந்நிலையில், அங்கு வரும் பேபி சாதனா அந்த குழந்தையுடன் பேசுகிறாள். கடைசியில் பாப் சுரேஷின் கண்ணுக்கு ஏன் அந்த குழந்தை தெரியவில்லை? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அடுத்த அத்யாயத்தின் கதை. 



    மிசை 

    நாயகன் கிஷோர் அவரது நண்பர்கள் பிரசன்னா, கதிர், ராண்டில்யாவுடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில், கிஷோர், மதுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது காதலை மதுஸ்ரீயிடமும் சொல்கிறார். ஆனால் அவரது காதலை மதுஸ்ரீ ஏற்காததால் தவறான முடிவை எடுக்கிறார். இந்நிலையில், மதுஸ்ரீ, கிஷோரை காதலிப்பதாக வர பின்னர் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.



    அனாமிகா

    வாடகை கொடுக்க கஷ்டப்பட்டு குறைவான தொகை கொடுத்து ஒரு வீட்டில் தங்குகிறார் கேபிள் சங்கர். அவரது வீட்டிற்கு வருகிறார் நாயகன் குளிர் சஞ்ஜீவ். சஞ்சீவிடம் இந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் கேபிள் சங்கர் தனது அவசர வேளையாக வெளியூர் செல்ல முடிவு செய்0கிறார். முன்னதாக சஞ்சீவின் உதவிக்கு, அந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தாத்தா ஒருவரை அறிமுகம் செய்துவைக்கிறார். அந்த தாத்ததாவை பார்க்க சென்ற இடத்தில் நாயகி காயத்ரியை பார்க்கிறார் சஞ்சீவ். பார்த்தவுடன் காயத்ரியுடன் காதல் வயப்படுகிறார். மீண்டும் அவளை பார்க்க செல்லும் போது அவள் அங்கில்லை. மாறாக அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று அந்த தாத்தா கூறுகிறார். பின்னர் வீடு திரும்பும் சஞ்சீவ் தன்னைச் சுற்றி அமானுஷ்யங்கள் நடப்பதாக உணர்கிறார். ஒரு கட்டத்தில் காயத்ரி இரவு மெழுகுவர்த்தியுடன் அந்த வீட்டுக்கு வர மயக்கம் போட்டு விழுகிறார். கடைசியில் சஞ்சீவ் முழிக்கும் போது என்ன நடந்தது? காயத்ரி உயிருடன் தான் இருந்தாரா? அல்லது அங்கு ஏதேனும் அமானுஷ்யம் இருந்ததா? என்பதே மீதிக்கதை.



    சூப் பாய் சுப்பிரமணி

    நாயகன் சுப்பிரமணி தனது காதலியை வெளியே அழைத்துச் செல்கிறார். முடிவில் நாயகி சுப்பிரமணியை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து மற்றொரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் சுப்பிரமணி. அவளும் அவனை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். தனது காதலை ஏதோ ஒன்று பிரிப்பதாக கருதும் சுப்பிரமணி மந்திரவாதி ஒருவரை சந்திக்கிறார். சுப்பிரமணியின் கடந்தகால வாழ்க்கையை பார்க்கும் மந்திரவாதி அதற்கான காரணத்தை சொல்லி அவருக்கு ஒரு முடிவை சொல்கிறார். அது என்ன முடிவு? அதில் இருக்கும் ருசீகரமான கிளைமேக்ஸ் என்ன என்பதே மீதிக்கதை. 



    சித்திரம் கொல்லுதடி

    புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் வினோத் கிஷன் அந்த புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை அப்படியே வரைந்துவிடும் திறமையுடையவர். இதுவரை பார்க்காத முற்றிலும் புதிய முகத்தை வரைந்து கொடுக்கும்படி ஒரு விளம்பர நிறுவனம் ஒன்று அனரை அணுகுகிறது. அதற்காக சில புத்தகங்களை வாங்கி வருகிறார் வினோத். அப்போது தவறுதலாக கோகிலா என்ற புத்தகத்தின் ஒரு பாதி மட்டும் அவருக்கு கிடைக்கிறது. அந்த புத்தகத்தை படித்து அதில் வரும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை தனது கற்பனையில் வரைந்து விடுகிறார். ஆனால் அவளது கண்களை மட்டும் வரைய முடியவில்லை. இதையடுத்து அந்த புத்தகத்தை எழுதியவரை தேடிச் செல்கிறார். ஆனால் அந்த புத்தகத்தை எழுதியவர் இறந்துவிடுகிறார். கடைசியில் அந்த உருவத்தை வினோத் வரைந்து முடித்தாரா? அதன் பின்னணியில் என்ன அமானுஷ்யம் நடந்தது என்பதே மீதிக்கதை. 



    தனித்தனியாக குறிப்பிட்டு கூறாமல் 6 அத்தியாயங்களிலும் நடித்த தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா, கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா, விஷ்ணு, பிரான்சிஸ், சந்திரகாந்தா, சங்கீதா, ஈஸ்வரி, வினோத் கிஷன், அரவிந்த ராஜகோபால், சோமு சுந்தர், சாருலதா ரங்கராஜன் என அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்ததுடன் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருக்கின்றனர். 

    6 அத்தியாயங்களுக்காகவும் தனித்தியாக பணியாற்றிய கேபிள் சங்கர், சக்தி வி.தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ் இ.ஏ.வி., லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என அனைவரும் செய்த வேலைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர். சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில் திரைக்கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றாலும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். 



    ஒளிப்பதிவில் சி.ஜே.ராஜ்குமார் (2 அத்தியாயங்கள்), பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்) இவர்களின் பங்கு சிறப்பு. இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். பி.சி.சாம், தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார் என அனைவருமே பின்னணியில் கலக்கியிருக்கிறார்கள். 

    மொத்தத்தில் `6 அத்தியாயம்' அலட்டல் இல்லை.

    எஸ்.கே.மதி இயக்கத்தில் சதீஷ் - கிரிஷா க்ரூப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கூட்டாளி' படத்தின் விமர்சனம்.
    நாயகன் சதீஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் கார் கேரஜில் தங்கி வருகிறார். சேட்டிடம் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வரும் வேலையை பார்க்கும் சதீஷ்விற்கும், அவருடைய நண்பர்களுக்கும் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் அருள்தாஸ் பக்க பலமாக இருக்கிறார்.

    இப்படி கார்களை தூக்கி வரும் சதீஷ், அரசியல்வாதி ஒருவரின் காரையும் தூக்கி விடுகிறார். இதை அவமானமாக கருதும் அந்த அரசியல்வாதி, சதீஷ்வை கொலை செய்ய நினைக்கிறார்.

    இந்நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து கார் ஒன்றை எடுத்து வரும் சதீஷ், எதிர்பாராதவிதமாக நாயகி கிரிஷா க்ரூப் மீது மோதி விட்டு சென்று விடுகிறார். சென்னை வந்தும், நாயகி கிரிஷாவிற்கு என்ன ஆனது என்று நினைத்து வருந்துகிறார். இந்நிலையில், சென்னையில் கிரிஷா க்ரூப்வை சந்திக்கும் சதீஷ் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது மன்னிப்பை ஏற்க மறுக்கிறார் கிரிஷா.



    பின்னர், சதீஷ்வின் நல்ல குணங்களை அறிந்து, அவர் மீது காதல் வயப்படுகிறார். இவர்களது காதல் கிரிஷாவின் அப்பாவான போலீஸ் அதிகாரி கல்யாண் மாஸ்டருக்கு தெரிய வந்து, இந்த காதலை பிரிக்க நினைக்கிறார்.

    இறுதியில் சதீஷ், கிரிஷாவுடன் இணைந்தாரா? அரசியல்வாதி சதீஷ்வை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் ஆக்‌ஷன், காதல், காட்சிகளில் திறமையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காரை தூக்குவது என ஒரு சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி கிரிஷா க்ரூப், சதீஷ் மீது ஆசைப்படுவது, பிரச்சனையில் சிக்கும் போது, அவருக்காக ஏங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    சேட், அரசியல்வாதி, அருள்தாஸ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். 

    டியூ கட்டாத கார்களை தூக்குவது, அதன் மூலம் பிரச்சனை வருவது என கதை நகர்ந்தாலும், படத்தில் வித்தியாசமக பார்க்க முடியவில்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகள், யூகிக்கும் காட்சிகள் என அடுத்தடுத்து வந்து படத்திற்கு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

    பிரிட்டோ மைக்கேல் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சுரேஷ் நட்ராஜனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘கூட்டாளி' கூட்டம் குறைவு.  

    வி.கீரா இயக்கத்தில் விஷ்ணுபிரியன் - அஷ்வினி சந்திரசேகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்லின் படத்தின் விமர்சனம்.
    படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் நாயகன் விஷ்ணுபிரியன். அதேபோல் நாயகனாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் லொள்ளு சபா ஜீவா. விஷ்ணுபிரியன், ஜீவா, முருகதாஸ் என நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாக தங்கி வருகின்றனர். இந்நிலையில், அட்டகத்தி தினேஷை சந்தித்து, கதை சொல்கிறார் விஷ்ணுபிரியன். தினேஷுக்கும் விஷ்ணுபிரியனின் ஒரு வரிக்கதை பிடித்துப் போக, முழு கதையை தயார் செய்யும்படி அனுப்பி விடுகிறார். 

    இதையடுத்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்குகிறார் விஷ்ணுபிரியன். ஆனால் அவரால் கதையை தொடர்ந்து எழுத முடியவில்லை. ஜீவா, முருகதாஸ், ஆதவன் என நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி கும்மாளம் அடிப்பதால் கதையை உருவாக்க முடியாமல் தவிக்கிறார். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கிளப்ப, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் பேய் இருப்பதாக கூறுகிறார். 



    இதற்கு முன்பு இந்த வீட்டில் வசித்தவர்கள் இந்த வீட்டிலேயே தூக்கு  மாட்டி இறந்துவிட்டதாக அவர்கள் வீட்டிற்கு அருகில் தங்கியிருக்கும் பாட்டி ஒருவர் கூறியதாக கிளப்பி விடுகிறார். இந்த உண்மையை வெளியே சொன்னால் பாட்டியை அந்த பேய் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாக அந்த பாட்டி கூறியதாக விஷ்ணுபிரியன் கூறுகிறார். 

    இந்நிலையில், விஷ்ணுபிரியன் கூறும் கதை நிஜத்தில் நடக்க ஆரம்பிக்கிறது. அவர் கதை சொன்ன அடுத்த நாளே அந்த பாட்டியும் இறந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் தன்னையே பயமுறுத்துவதாக விஷ்ணுபிரியன் உணர்கிறார். 

    கடைசியில் அவர் கதையாக சொல்வது நிஜத்தில் நடப்பது எப்படி? அதன் பின்னணியில் என்ன நடந்தது? உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா? விஷ்ணுபிரியன் தனது ஆசைப்படி இயக்குநர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் விஷ்ணுபிரியன் கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கவர முயற்சித்திருக்கிறார். அஸ்வினி சந்திரசேகருக்கு காட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஜீவா, முருகதாஸ் அவ்வப்போது காமெடிகளில் சிரிக்க வைத்தாலும், காமெடி பெரிதாக எடுபடவில்லை. அட்டகத்தி தினேஷ் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். தங்கர்பச்சான், மனோபாலா, களஞ்சியம், தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. 

    இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நாயகன் கட்டிவிடும் புரளி, அவனுக்கே எதிராக கிளம்புவதையும், அதில் அவன் சிக்கிக் கொள்வதையும், அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் படமாக உருவாக்கியிருக்கிறார் வி.கீரா. முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி சற்றே விறுவிறுப்பாக செல்கிறது. அதேநேரத்தில் திடீர் திடீரென வரும் திரைக்கதை மாற்றங்கள், குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கின்றன. 

    கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு வலுசேர்த்திருக்கிறது. முத்துக்குமரன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `மெர்லின்' குழப்புகிறாள். 

    ×