என் மலர்tooltip icon

    தரவரிசை

    எம்.எஸ்.எஸ். இயக்கத்தில் ராஜ்கமல் - ஆண்ட்ரியானா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மேல்நாட்டு மருமகன்' படத்தின் விமர்சனம்.
    ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நாயகன் ராஜ்கமல். இவரது இந்த கனவைப் பற்றி தான் ஊரே பேசினாலும் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்காமல், உள்ளூர் கைஃட்டாக தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் நாயகி ஆண்ட்ரியானாவுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வாய்ப்பு ராஜ் கமலுக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் எப்படியாவது மேல்நாட்டு மருமகனாக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். 



    அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? ராஜ்கமலின் ஆசை நிறைவேறியதா? ஆண்ட்ரியானாவை கரம்பிடித்தாரா? மேல்நாட்டு மருமகனானாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

    ஒரு சுற்றுலா கைஃயிடாக ராஜ்கமல், கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வெளிநாட்டு பெண்ணாக வரும் ஆண்ட்ரியானாவுக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. லொள்ளு சபா மனோகர், முத்துகாளை உள்ளிட்ட மற்ற உதவி கதாபாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றனர். 



    வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழும் நாயகனின் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.எஸ். படத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று பார்த்தால் ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ அல்லது பொதுபோக்குக்கு உண்டான காட்சிகளை ஒரு சில இடங்களில் மட்டுமே வைத்துவிட்டு படத்தின் திரைக்கதையை இழு இழு என்று இழுத்திருக்கிறார். குறிப்பாக நாயகி ஆண்ட்ரியானாவை, இவர் தான் நாயகி என்று நம்ப வைக்க ரொம்பவே போராடியிருக்கிறார்கள். இருந்தும் அது எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே மாதிரி வந்து போஃர் அடிக்க வைக்கிறார். 

    வி.கிஷோர் குமார் இசையில் இசை சுமார் ரகம் தான். பாடல்களும் தேவையில்லாத இடத்தில் வந்து செல்கிறது. கே.கவுதம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறது. 

    மொத்தத்தில் `மேல்நாட்டு மருமகன்' கெத்தாக இல்லை.
    ராஜா ராமன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், ராதாரவி, யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீரா’ படத்தின் விமர்சனம். #Veera
    சுதந்திரம் பெறுவதற்கு முன்பு போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மன்றங்கள், அதன்பின் ரவுடிகளின் கோட்டைகளாக மாறி உள்ளது. இந்த மன்றத்தின் தலைவருக்காக பல போட்டிகளும், சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.

    இப்படி தன் ஏரியாவில் உள்ள மனமகிழ் மன்றத்தின் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கிருஷ்ணா. இவருடைய நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து அதற்கான திட்டங்களை வகுக்கிறார். ஏரியாவில் உள்ள மற்றொரு ரவுடியும், ஏற்கெனவே மனமகிழ் மன்றத்தின் தலைவருமான கண்ணா ரவி இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். 

    அதே ஏரியாவில் இருக்கும் தம்பி ராமையாவிடம் கிருஷ்ணாவும், கருணாவும் யோசனை கேட்கின்றனர். அவர்கள் இருவரையும் ஒரு காலகட்டத்தில் ஊரில் ரவுடிகளுக்கு திட்டங்களை வகுத்துக்கொடுப்பதில் கில்லாடியாக இருந்த முன்னாள் ரவுடியான ராதாரவியிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார் தம்பி ராமையா. 

    இருவரும் பயிற்சி பெற்று திரும்பியதும் ரவுடி கண்ணா ரவியை தீர்த்துக்கட்டிவிட்டு மன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர திட்டம் வகுக்கிறார்கள். இதற்காக யாராவது ஒருவரை போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி கொடுத்த ராதாரவியை கொல்ல நினைக்கிறார்கள்.



    ஆனால், அவர் கொலை செய்யும் முன்பே இறந்து விடுகிறார். இவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறிக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஜெயிலில் சில ரவுடிகளிடம் சிக்குகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? கிருஷ்ணா ஆசைப்பட்டதுபோல மன்றத் தலைவர் பொறுப்பு கிடைத்ததா? என்பது மீதிக்கதை.


    துறுதுறுவென திரியும் வடசென்னை இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கிருஷ்ணா. அவருக்கே உரிய பாணியில் வழக்கம்போல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்பு தெரிகிறது. நடனம், காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி.

    நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். தனக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்த அரங்கேற்றும் சின்னச் சின்ன அம்சங்கள் ரசிக்க வைக்கிறது. இவருடைய கதாபத்திரத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    அதுபோல், கருணாகரன், யோகி பாபு, சரண் தீப், ராதா ரவி, தம்பி ராமையா ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அனைவரும் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக பெரிய ரவுடியிடம் போனில் பேசும் காட்சியில் அசரவைக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.



    வடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியானாலும், இப்படத்தை காட்சி படுத்திய விதமும் திரைக்கதையிலும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜா ராமன். கிருஷ்ணாவும், கருணாவும் தொழில் கற்றுக்கொள்ளச் செல்லும் இடத்தில் இருந்து படம் சூடுபிடிக்கிறது. சில திருப்பங்களும், சில சுவாரசியமான கதாபாத்திர வார்ப்புகளும் இரண்டாம் பாதியின் ஒரு கட்டம் வரை படத்தை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். ரவுடிக்கு பின்னால் இன்னொரு ரவுடி, அரசியல் புள்ளிகள் உருவாவது, அவர்களை வீழ்த்த இன்னொரு கும்பல் உருவெடுப்பது என்று ரவுடி சாம்ராஜ்ஜியத்தை திரைக்கதையில் பின்னிய விதம் சிறப்பு. கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.

    லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குமரன் - விக்னேஷ் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘வீரா’ வீரமானவன்.
    முகம்மது ஐசாக் இயக்கத்தில் ஆரி - ஆஷ்னா சவேரி - அதுல்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் நாகேஷ் திரையரங்கம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார். 

    பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். 



    பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி பெண் கேட்க, சம்மதம் தெரிவிக்கும் ஆரி, அவரை குடும்பத்துடன் வந்து பெண் கேட்கும்படி அழைக்கிறார். 

    பின்னர் அதுல்யாவுக்கும், அவளது காதலருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார். 

    அதற்காக ஆரி மற்றும் காளி வெங்கட் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில் ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர். 



    இவ்வாறாக குழப்பங்களுக்கு இடையே கடைசியில் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்றாரா? அதுல்யா திருமணத்தை நடத்தினாரா? ஆஷ்னா சவேரியுடன் இணைந்தாரா? அந்த கனவில் நடந்தது சம்பவத்திற்கும், என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஆரி எந்தவித அலட்டலுமின்றி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குடும்பம், தொழில் என முதல் பாதியில் வீட்டு புரோக்கராகவும், அடுத்த பாதியில் நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார். ஆஷ்னா ஷவேரி கொடுத்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். அதுல்யா ரவி மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மாசூம் சங்கர் கவர்ச்சியுடன் வந்து கலகலப்பூட்டுகிறார். பேயாக வந்தும் அலட்டலின்றி தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    காளி வெங்கட் காமெடியில் முத்திரை பதிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். சித்ரா லட்சுமணன், மனோபாலா, அணில் முரளி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

    முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. அதேபோல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி வித்தியாசமான, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. 

    ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பயம் வரும் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இ.ஜே.நுசாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `நாகேஷ் திரையரங்கம்' திரையரங்கில் பார்க்கலாம். 

    ஆதர்ஷ், அனு கிருஷ்ணா நடிப்பில், கஸாலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘மனுசனா நீ’ படத்தின் விமர்சனம்... #ManusanaNee
    தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். இதை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலித்து வருகிறார்கள். ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார்.

    எப்படியாவது அந்த இடத்தை அடைவதற்கா பல சூழ்ச்சிகளை செய்கிறார் சுப்பு பஞ்சு. இதனால் கோபமடையும் ஆதர்ஷ், சுப்பு பஞ்சுவை தாக்க நினைக்கிறார். ஆனால், சுப்பு பஞ்சுவின் ஆட்களை ஆதர்ஷை அடித்து விடுகிறார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதர்ஷ்.



    அங்கு, தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆதர்ஷுக்கு மருத்துவமனையின் டீன் கஸாலி ஒரு மருந்து செலுத்தி அனுப்புகிறார். பின்னர், ஆதர்ஷ் திடீர் என்று சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவருடைய ஆட்களை அடித்து நொறுக்குகிறார். சில நாட்களில் அவரது முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது.

    இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என்று போலீஸ் கண்டுபிடிக்கிறது. இறுதியில் கஸாலி என்ன மருந்து ஆதர்ஷின் உடம்பினுள் செலுத்தினார்? எதற்காக செலுத்தினார்? இளைஞர்கள் காணாமல் போவதற்கு போலீஸ் கண்டுபிடித்தார்களா? ஆதர்ஷும் அனுகிருஷ்ணாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், கொடுத்த வேலையை சிறப்பாக முடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



    வித்தியாசமான கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஸாலி. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார். மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். அது ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம். அகரன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மனுசனா நீ’ ஒருமுறை பார்க்கலாம்.
    பாலா இயக்கத்தில் ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் குமார் - இவானா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நாச்சியார்' படத்தின் விமர்சனம்.
    காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, 18 வயதுக்குட்டபட்டவர் என்பதால் அவரை சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார். கற்பழிக்கப்பட்ட இவானாவை தனது கட்டுப்பாட்டில், தனது வீட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார். 

    பின்னர் ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் - இவானா காதலித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குழந்தை - ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ. ஒத்துப் போகாததையடுத்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்பாவி என்பது தெரியவருகிறது. 



    இதையடுத்து இவானாவை கற்பழித்த குற்றவாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் ஜோதிகா, அதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். இவானாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார். 

    கடைசியில் இதற்கு காரணமாக குற்றவாளியை ஜோதிகா கண்டுபிடித்தாரா? அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா? கடைசியில் ஜி.வி என்ன முடிவு எடுத்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. 



    ஜோதிகா இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக அவரது கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். இருப்பினும் கமர்ஷியலாக நடித்து வந்த ஜோதிகாவை போலீஸ் அதிகாரியாக, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாலாவால் மட்டும் தான் காட்ட முடியும். 

    ஜி.வி.பிரகாஷ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகுளித்தனத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடனான காதல் காட்சிகளில் இவானா ரசிக்க வைத்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், தமிழ் குமரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. 



    வழக்கமான பாலா படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. காதல், பாசம், கற்பழிப்பு என காட்சிகள் நகர்ந்தாலும், அதில் பாலாவின் வழக்கமான அழுகாச்சி உள்ளிட்ட அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இல்லாமல்  திரைக்கதை அமைத்திருக்கிறார்.

    பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். பாடலிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `நாச்சியார்' மிரட்டுகிறாள்.

    சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொல்லிவிடவா’ படத்தின் விமர்சனம். #Sollividava
    நாயகன் சந்தன் குமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ் மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு இருக்கிறார்.

    தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு சுஹாசினி பாதுகாவலராக இருந்து வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கார்கிலில் போர் நடக்கிறது. இந்த போரை நேரில் படம் பிடிப்பதற்காக அவர்கள் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும் ஐஸ்வர்யாவும் டெல்லி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள்.



    டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்த சதீஷ், பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகியோர் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். அதே சமயம், சந்தன் குமாரின் கேமராவும் உடைந்து விடுகிறது. இந்நிலையில், ஒரு கேமராவை வைத்து இருவரும் மாறி மாறி வேலை பார்க்கலாம் என்று சந்தன் குமாரும் ஐஸ்வர்யாவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள்.

    கார்கில் போரை படம் பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் மலர்கிறது. இறுதியில் கார்கில் போரை இருவரும் படம் பிடித்தார்களா? காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுஹாசினியின் மகனுடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக சந்தன் குமார் நடித்திருக்கிறார். புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த உடற்கட்டோடு நாயகனுக்கான அந்தஸ்தோடு இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முந்தைய படத்தை விட இப்போது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவருடைய நடனம் ரசிக்க வைக்கிறது.



    நாயகனின்  தந்தையாக வரும் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி, சுஹாசினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் அர்ஜுன். போர் நடக்கும் இடத்தில் காதல் மலர்வதை அழகாக சொல்லியிருக்கிறார் அர்ஜுன். தனக்கே உரிய தேசப்பற்றை இப்படத்திலும் காண்பித்திருப்பது சிறப்பு. படத்தின் நீளம் கதை ஓட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 



    ஜெஸ்சி கிப்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வேணுகோபாலின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சொல்லிவிடவா’ இன்னும் சொல்லியிருக்கலாம்.
    ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கலகலப்பு 2’ படத்தின் விமர்சனம். #Kalakalappu2
    சென்னையில் அரசியல்வாதி ஒருவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இவர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய லேப்டாப் வெளியே நின்று கொண்டிருக்கும் ஆடிட்டர் முனிஸ் காந்த்திடம் தூக்கி வீசப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு மதுசூதனனிடம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் முனிஸ்காந்த். மேலும், அந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு காசிக்கு சென்று விடுகிறார். இவரை பிடிப்பதற்காக போலீஸ் அதிகாரி ராதாரவி அங்கு செல்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் வறுமையில் வாடும் நாயகன் ஜெய், காசியில் தனக்கு ஒரு பூர்வீக சொத்து இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். காசியில் நாயகன் ஜீவா நடத்தி வரும் லாட்ஜில் தங்கி, தன்னுடைய பூர்வீக சொத்து எங்கு இருக்கிறது என்பதை தேடி வருகிறார்.

    இதற்காக அந்த ஊரின் தாசில்தாராக இருக்கும் நிக்கி கல்ராணி சந்திக்க செல்கிறார். அங்கு நிக்கியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். நிக்கியும் உங்கள் பூர்வீக சொத்தை விரைவில் கண்டு பிடித்து தருவதாக கூறுகிறார். கடைசியில் ஜீவா நடத்தி வரும் லாட்ஜ்தான் ஜெய்யின் பூர்வீக சொத்து என்று நிக்கிக்கு தெரிய வருகிறது.



    இதற்கு ஜீவா தன்னுடைய தங்கையின் திருமணம் நடைபெற இருப்பதால், ஜெய்யிடம் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். ஜீவாவின் தங்கையை சதீஷ் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. சதீஷினின் தங்கை கேத்ரீன் தெரசாவை ஜீவா காதலிக்கிறார். இந்நிலையில், சதீஷ் ஜீவாவின் தங்கையை திருமணம் செய்ய மறுக்கிறார். 

    இதற்கிடையில், ஜெய் மற்றும் ஜீவாவின் பணத்தை ஒரு மர்ம நபர் ஏமாற்றுகிறார். அந்த நபர் சிவா என்று இருவருக்கும் தெரிய வருகிறது.

    இறுதியில் ஜெய் தனது பூர்வீக் சொத்தை அடைந்தாரா? நிக்கியுடன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? ஜீவா தங்கையின் திருமணம் நடந்ததா? ஜீவா - கேத்ரின் ஒன்று சேர்ந்தார்களா? சிவாவிடம் ஏமாந்த பணத்தை திரும்ப பெற்றார்களா? அரசியல்வாதியின் சொத்துக்கள் அடங்கிய லேப்டாப் கிடைத்ததா? என்பதை கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.



    படத்தின் நாயகன்களான ஜெய் மற்றும் ஜீவா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பூர்வீக சொத்தை தேடுவது, நிக்கி கல்ராணியுடன் காதலிப்பது என தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார் ஜெய். அதுபோல், லாட்ஜை காப்பாற்ற நினைப்பது, தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது, கேத்ரினை காதலிப்பது என ஜீவா ரசிக்க வைத்திருக்கிறார். இடைவேளையில்தான் தலைகாட்டுகிறார் சிவா. அதன்பிறகு தனது டைமிங் காமெடிகளால் வழக்கம்போல் ஸ்கோர் செய்திருக்கிறார். 

    நாயகிகளாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா இருவரும் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

    சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்கள். ராதாரவி, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    சுந்தர்.சியின் கலகலப்பு முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் கலகலப்பு இரண்டாம் பாகத்தை உருவாக்கி ஹிட்டாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகம் இல்லை என்றாலும், அதன் தாக்கம் இரண்டாம் பாகம் இருக்கிறது. பெரிய நடிகர் பட்டாளத்தையும் இப்படத்தில் வைத்திருக்கிறார். 

    ஆனால், இவர்களை கையாண்ட விதத்திற்கு சுந்தர்.சியை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் அழகான கதாபாத்திரத்தை தேர்வு செய்து கொடுத்து அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் மெதுவாக தொடங்கினாலும், போக போக கலகலப்புக்கு எல்லை இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கலகலப்பு 2’ காமெடி கலாட்டா.
    ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் ராம் - மிஷ்கின் - பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சவரக்கத்தி' படத்தின் விமர்சனம்.
    பார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார். 

    அதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது. 



    இந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார். 

    ஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார். 



    ராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.

    இறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா? ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா? அந்த திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை. 

    ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.



    படத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.  

    சாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள். 



    படத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். 

    அரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `சவரக்கத்தி' கூர்மை.
    வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் ராஜ் சூர்யா - ராம் சரவணன் - ரமோனா ஸ்டெபானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `விசிறி' படத்தின் விமர்சனம்.
    தீவிரமான தல ரசிகர் ராம் சரவணா. அதேபோல் தளபதி ரசிகர் ராஜ் சூர்யா. இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள்.

    இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா.

    இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார் ராஜ் சூர்யா. இவரை நேரில் பார்க்கும் ராம் சரவணா அவரிடம் சண்டைபோடுகிறார். இருவரும் சண்டைப்போடும் காட்சி பேஸ்புக்கில் வெளியாகிறது. இதை கண்டு மிகவும் வருத்தமடைகிறார் ரெமோனா ஸ்டெபனி. மேலும் இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.



    இதையடுத்து ராஜ் சூர்யாவின் தங்கை தான் ரெமோனா என்பதும் ராம் சரவணாவுக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் எனக்கு தல தான் முக்கியம் என காதலை விட்டுக் கொடுக்கிறார் ராம் சரவணா. அதேநேரத்தில் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி ரெமோனாவும் ராம் சரவணாவை வெறுக்கிறாள்.

    கடைசியில் ராம் சரவணா - ரெமோனா ஒன்று சேர்ந்தார்களா? தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராம் சரவணா - ராஜ் சூர்யா இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ராம் சரவணா, ராஜ் சூர்யா என இருவரும் தல - தளபதி ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சொல்லப்போனால் தல, தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரெமோனா கலக்கியிருக்கிறார். நாயகர்களின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர். 



    விஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கத்துக்கு வாழ்த்துக்கள். ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ரசிகர்களுக்கான, இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார். 



    தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `விசிறி' ரசிகர்களின் கொண்டாட்டம்.
    ஒய்.சி.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி - சாம் ஜோன்ஸ் - அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஏமாலி' படத்தின் விமர்சனம்.
    பணக்கார வீட்டு பையனான நாயகன் சாம் ஜோன்சும், ஐ.டி.கம்பெனியில் வேலைபார்க்கும் நாயகி அதுல்யாவும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களது காதலில் திடீரென ஒரு சறுக்கல் வர இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். 

    காதலை பிரிந்ததையடுத்து சாம் அவரது நண்பர்களுக்கு விருந்து வைக்கிறார். அந்த பார்ட்டியில் சமுத்திரக்கனி, பால சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை சாம் அவரது சமூக பக்கத்தில் வெளியிடுகிறார். அதனை பார்த்து கடுப்பாகிறார் அதுல்யா. இதையடுத்து சில நாட்களில் அதுல்யாவுக்கு போன் செய்கிறார் சாம். ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. 



    மேலும் அவளது மொபைல் நம்பர் வெயிட்டிங்கிலேயே இருப்பதால் அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் சாம், அதுல்யாவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதனை சமுத்திரக்கனியிடமும் சொல்கிறார். முதலில் சாமை தன்வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி. அது முடியாத நிலையில், சாம் வழியிலேயே சென்று அவனது மனநிலையை மாற்ற முடிவு செய்கிறார். 

    போலீசில் சிக்காமல் எப்படி கொலை செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் திட்டம் போடுகின்றனர். அதற்காக கொலைக்கு பின்னர் போலீஸ் எப்படி எல்லாம் விசாரணை நடத்துவார்கள். அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்தும் போசிக்கின்றனர். 

    கடைசியில் சமுத்திரக்கனியுடன் சேர்ந்து சாம், அதுல்யாவை கொன்றாரா? அல்லது சமுத்திரக்கனி, சாமின் மனை மாற்றினாரா? சாம் - அதுல்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    சாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே நான்கு கதாபாத்திரங்களில் வந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதுல்யா கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். நாயகனுக்கு போட்டியாக, நாயகனைவிடவும் அதிகமாக புகைப்பிடித்து நடித்திருக்கிறார். 

    சமுத்திரக்கனி எப்போதும் போல அவரது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். ரோஷிணி, பால சரவணன், சிங்கம் புலி படத்தின் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    தற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்கை, காதல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் இயக்கியிருக்கும் வி.சி.துரைக்கு பாராட்டுக்கள். காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்பதை சொல்ல வந்திருக்கிறார். மாறி மாறி காட்சிகள் நகர்வது குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை உருவாக்கி இருந்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை அமையவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.  

    சாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை வலுசேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஏமாலி' ஏமாற்றம் இல்லை.  
    ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் விமர்சனம்.
    ஆந்திராவில் உள்ள மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. களவாடுவதையே தொழிலாக கொண்டுள்ள அந்த ஊர் மக்கள், அதிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒருவரை துன்புறுத்தி, கொடுமை செய்து களவு செய்யக்கூடாது என்பதில் அந்த ஊர் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் தமிழ்நாட்டுக்கு வந்து கொள்ளையடிக்கின்றனர். 

    இவ்வாறாக திருடி வரும்போது, ஒருநாள் நாயகி நிகாரிகாவின் போட்டோவை ஒருவீட்டில் பார்க்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து நிகாரிகாவை பற்றிய விவரங்களை சேகரிக்கிறார். அதில் நாயகி ஒரு கல்லூரியில் படித்து வருவது தெரிந்து அங்கு செல்கிறார். 



    இதற்கிடையே நிகாரிகாவுக்கும், அவள் படிக்கும் கல்லூரியில் சீனியராக வரும் கவுதம் கார்த்திக்குக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில், அங்கு வரும் விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்தி தன்னுடைய கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். தனது காதலியை மீட்கும் முயற்சியில் இறங்கும் கவுதம் கார்த்திக், டேனியலையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அந்த கிராமத்திற்கு செல்ல முயல்கிறார்.

    கடைசியில் கவுதம் கார்த்திக் நிகாரிகாவை மீட்டாரா? விஜய் சேதுபதி ஏன் நிகாரிகாவை கடத்தினார்? அவருக்கும், நிகாரிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    களவாணியாக விஜய் சேதுபதி விறைப்பாக நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், ராஜ் குமாருக்கு இடையேயான காமெடிக்கு நடுவே விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றமும், அவரது உடற்மொழியும் மிடுக்காக இருக்கிறது. வித்தயாசமான கெட்டப்களில் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் ஒரு கூலான மாணவனாக, வெகுளித்தனத்துடன் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் - டேனியல் இணையும் காட்சிகள் காமெடியின் உச்சகட்டம். 

    கொடுத்த கதாபாத்திரத்தை பிசிறின்றி பதிவு செய்திருக்கிறார் காயத்ரி. நிகாரிகா அழகு தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அவரது துணிச்சலும், பாவனைகளும் ரசிகர்கர்களுக்கு விருந்தாக அமைகிறது. ரமேஷ் திலக், ராஜ்குமார் இணைந்து செய்யும் காமெடியை ரசிக்கும்படியாக இருந்தாலும், மேலும் ரசிக்க வைத்திருக்கலாம். டேனியல் மனதில் நிற்கும்படியாக காமெடியில் கலக்குகிறார். 



    மலைக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டு களவு தொழில் செய்து வரும் நாயகன், நகரத்துக்கு வந்து இங்குள்ள நாயகியை கடத்திச் செல்லும்படியாக கதையை நகர்த்தினாலும், அதிலும் ஒரு பிளாஸ்பேக் வைத்து வழக்கமான ஒன்றாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார். படத்திற்கு முக்கிய பலமே காமெடி தான். அந்த காமெடிக்காக படக்குழு கடுமையாக உழைத்திருந்தாலும், காமெடியை மேலும் வலுப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி படம் மசாலா கலந்து காட்டப்பட்டுள்ளது சிறப்பு.



    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' எல்லா நாளும் நன்நாளே.

    விஜய் யேசுதாஸ், அம்ரிதா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் தனா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘படை வீரன்’ படத்தின் விமர்சனம். #PadaiVeeran #PadaiVeeranReview
    நாயகன் விஜய் யேசுதாஸ் ஊரில் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை ஏற்படுகிறது. இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். விஜய் யேசுதாஸ் தனது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். 

    இதற்கிடையே, போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸ் ஆனால் நல்ல மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு உள்ளிட்டவை இலவசமாக கிடைக்கும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

    இதற்காக தன் உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார் விஜய் யேசுதாஸ். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து தேர்வில் தேர்ச்சி பெற செய்து விடுகிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு போலீசாகி விடுகிறார்.



    ஆனால், ஊருக்கு திரும்பும் போது, அங்கு இரண்டு ஊர்களுக்கு நடுவே ஜாதி பிரச்சனை ஏற்பட்டு கலவரமாக மாறி இருக்கிறது. போலீசாக இருந்து இரண்டு ஊர் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறார் விஜய் யேசுதாஸ். இறுதியில் ஜாதி பிரச்சினை தீர்ந்ததா? விஜய் யேசுதாஸும் அம்ரிதாவும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் யேசுதாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து இளைஞனாக ஊர் சுற்றுவது, குடித்து விட்டு சேட்டை செய்வது என்று முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார் விஜய் யேசுதாஸ். நாயகி அம்ரிதா துணிச்சலான பெண்ணாக நடித்து மனதில் நிற்கிறார். காதல் காட்சியில் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். 

    எக்ஸ் மிலிட்ரி மேனாக வரும் பாரதிராஜா, தனக்கே உரிய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். செல்பி எடுக்கும் காட்சி, வசனம் பேசும் காட்சி ஆகியவை ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.



    இரண்டு ஊருக்குள் நடக்கும் ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தனா. இதுபோன்ற கதைகள் பல வெளியானாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதை வலுவில்லாமல் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படத்தை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதுபோல் பின்னணி இசையையும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘படை வீரன்’ வீரம் குறைவு.
    ×