என் மலர்tooltip icon

    தரவரிசை

    பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சமுத்திரக்கனி - சண்முகபாண்டியன் - மீனாக்‌ஷி நடிப்பில் வெளியாகி இருக்கும் மதுரவீரன் படத்தின் விமர்சனம். #MaduraVeeran #MaduraVeeranReview
    மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் உள்ள மக்களில் ஒரு வகையினர் அங்குள்ள கோவிலுக்குள் செல்லவும், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதபடி தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்றும் ஊர் மத்தியில் அறிவிக்கிறார். 

    அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சில குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தும் சமுத்திரக்கனியின் அறிவிப்பால் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி உயிரிழந்துவிடுகிறார். அதேநேரத்தில் அந்த ஊரின் முக்கிய நபரான வேல ராமமூர்த்தியின் தம்பியும், பக்கத்து ஊரில் இருக்கும் மைம் கோபியின் அண்ணனும் உயிரிழந்து விடுகின்றனர். 

    இதையடுத்து கணவனை இழந்து தவிக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். 



    அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன். 

    கடைசியில் சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    எந்தவித அலட்டலுமின்றி, ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மீனாக்‌ஷிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் தலைவராக சமுத்திரக்கனி கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தியே படம் நகர்ந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு எதற்காக தடை ஏற்பட்டது. அதன் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளின் எதிர்ப்பு குறைவு தான். நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் செய்யும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.ஜி.முத்தையா. எனினும் படத்தின் கதையில் பலம், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி,  படம் மெதுவாக நகர்கிறது. அதேபோல் மற்ற படங்களை போல இல்லாமல், இந்த படத்தில் நாயகன் ஒரு சாதாரண இளைஞனாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையை அடக்கும்படியான காட்சிகளை வைக்காமல் காட்டியிருப்பது பார்க்க புதுமையாக இருக்கிறது. 



    சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `மதுரவீரன்' வீரத்தை கூட்டியிருக்கலாம்.
    இரசு ஜெகநாதன் இயக்கத்தில் அஸ்வின் குமார் - ஸ்ரீபிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சரணாலயம்' படத்தின் விமர்சனம்.
    படம் தொடக்கத்தில் நாயகன் அஸ்வின் குமார் யாரோ ஒருவரை கொலை செய்கிறார். கொலை குறித்து சிங்கம் புலியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அஸ்வின் குமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சிங்கம் புலி கூறுகிறார். அப்போது, சிறுவயதிலேயே அஸ்வின் அவரது பெற்றோர்களை இழந்து தவித்ததாகவும், அவனை தனது கேபிள் டிவி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டதாகவும் கூறுகிறார். 

    வளர்ந்து பெரியவனாகும் அஸ்வின், அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபிரியங்காவை காதலிக்கிறார். அஸ்வினின் காதலுக்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஸ்ரீபிரியங்கா, ஒரு கட்டத்தில் அஸ்வினை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில், இவர்களது காதல் ஸ்ரீபிரிங்காவின் அப்பாவுக்கு தெரியவர, சாப்பாட்டில் விஷம் வைத்து அஸ்வினை கொலை செய்ய முயற்சி செய்கிறார். 



    உயிருக்கு போராடும் அஸ்வினை, மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றுகிறார் ஸ்ரீபிரியங்கா. பின்னர் சிங்கம் புலியின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளும் அஸ்வின் - ஸ்ரீபிரியங்கா, வேறு ஊரில் இருக்கும் சிங்கம் புலியின் உறவுக்காரர் உதவியுடன் வாழ்ந்து வருகின்றனர். 

    இவ்வாறாக இவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கையை தொடங்கும் நிலையில், அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நடக்கிறது. அதில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பித்தார்களா? சந்தோஷமாக வாழ்ந்தார்களா? அவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    அஸ்வின் குமார் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீபிரியங்கா ரசிகர்களை கவரும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி அவரது காமெடி கலந்த பாஷையில் மனதில் பதிகிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு உறுதுணையாக நடித்துள்ளனர். 

    வழக்கமான பழிவாங்கல் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இரசு ஜெகநாதன். படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது படத்திற்கு மைனஸ். இயக்கத்தில் மட்டும் இல்லாமல், இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். ஷபீர் அலி கான் ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராகவே இருக்கிறது. 

    மொத்தத்தில் `சரணாலயம்' ரசிக்க வைத்திருக்கலாம்.

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் - கயல் ஆனந்தி - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மன்னர் வகையறா' படத்தின் விமர்சனம்.
    ஊரில் முக்கிய தலைவரான பிரபுவின் மகன்கள் கார்த்திக், விமல். அதேபோல் பக்கத்து ஊரில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகன் வம்சி கிருஷ்ணா, இவரது தங்கைகள் சாந்தினி, கயல் ஆனந்தி. ஜெயப்பிரகாஷின் குடும்பத்திற்கும், அவரது மனைவி சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் குடும்பத்திற்கும் நீண்டநாள் பகை. 

    பகையை மறந்து இரு குடும்பத்தையும் இணைப்பதற்காக சாந்தினிக்கும், சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அதற்கான திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் என்பதை அறிந்த விமலின் அண்ணன் கார்த்திக் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இதையடுத்து சாந்தினியை கடத்தி தனது அண்ணனுடன் சேர்த்து வைக்கிறார் விமல். 



    அதேநேரத்தில் கயல் ஆனந்தியும், விமலும் ஒருவரை ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு பின்பு பிரபு குடும்பமும், ஜெயப்பிரகாஷ் குடும்பமும் ஒன்று சேர்கிறது. பின்னர் சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் மகனுக்கு கயல் ஆனந்தியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். தானே முன்நின்று திருமணத்தை நடத்திவைப்பதாக பிரபு வாக்கு கொடுக்கிறார். 

    திருமண வேலைகளும் விறுவிறுப்பாக நடக்க, செய்வதறியாது தவிக்கும் விமல், தனது காதலியுடன் இணைந்தாரா? கயல் ஆனந்தி அவளது மாமன் மகனை திருமணம் செய்தாரா? மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் தோன்றியிருக்கும் விமல் அவரது ஸ்டைலில் வந்து கலக்கியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். விமல் - கயல் ஆனந்தி வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கயல் ஆனந்தி இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியிருக்கிறார். முதல்முறையாக ஒரு கலகலப்பான, வாயாடி ஆனந்தியை பார்க்க முடிகிறது. ரசிக்க வைத்திருக்கிறார். 

    சாந்தினி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ரோபோ ஷங்கர் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ரேதிகா ஸ்ரீனிவாஸ் கதைக்கு ஒன்றி நடித்துள்ளனர். பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன் அனுபவ நடிப்பால் கவர்கின்றனர். ஒரு காட்சியில் வந்தாலும் யோகி பாபு கலகலப்பாக்கி விட்டு செல்கிறார். ஜூலி சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். 



    மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் அன்பு, பாசம், வீரம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் பூபதி பாண்டியன். சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி ஓரளவுக்கு காமெடியாக சென்றாலும், அடுத்த பாதியை முழுக்க முழுக்க செண்டிமென்ட்டாக காட்டியிருக்கிறார். 

    ஜேக்ஸ் பிஜோஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. சுராஜ் நல்லசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்து ரசிக்க வைக்கிறது. 

    மொத்தத்தில் `மன்னர் வகையறா' குடும்ப கொண்டாட்டம். 
    ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா - உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாகமதி' படத்தின் விமர்சனம்.
    மாநில அரசுக்கு சொந்தமான சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டுபிடிக்காவிட்டால் தான் பதவி விலகுவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம். இதையடுத்து இவரை, அரசியலை விட்டே ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார். 

    கரைபடியா கரத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருக்கும் ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர். 



    அனுஷ்கா, அவரது காதலரான உன்னி முகுந்தனை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி பங்களாவில் வைத்து விசாரிக்கின்றனர்.

    முதலில் யாரோ தன்னை பயமுறுத்துவது போன்று உணரும் அனுஷ்கா. ஒரு சில நாட்களில் தான் பாகமதி என்றும், பாகமதியின் உடைகளை எடுத்து போட்டுக் கொண்டும் அங்குள்ளவர்களை மிரட்டுகிறார். அவர்களை டார்ச்சர் செய்கிறார். 



    கடைசியில் அங்கு என்ன நடந்தது? பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையிலேயே அங்கு பாகமதி என்று அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா? உன்னி முகுந்தனை கொன்றது யார்? பாகமதி பங்களாவுக்குள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    தென்னிந்திய சினிமாவிலேயே அதிக வரலாற்று படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, பாகமதி படத்திலும் அவரது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பாகமதியாகவும் அவர் சரியாக பொருந்தியிருக்கிறார். உன்னி முகுந்தன் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஜெயராம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆஷா சரத், முரளி கிருஷ்ணா, தன்ராஜ் சுக்ராம், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய் கொடுத்த கதபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கின்றனர். 



    பாகமதி என்பது யார்? பாகமதி என்ற கதாபாத்திரத்தை வைத்து ஆக்‌ஷன், வரலாறு, திகில் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.அசோக். படத்தில் திகில் காட்சிகள் திருப்திபடுத்தும்படி இருக்கின்றன. எனினும் படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி ரசிகர்களுக்கு முழு விருந்தளிக்கும் விதமாக உருவாக்கியிருக்கலாம். 

    எஸ்.தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். ஆர்.மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அட்டகாசமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `பாகமதி' பார்க்கலாம்.
    பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - நமீதா பிரமோத் - பார்வதி நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நிமிர்' படத்தின் விமர்சனம்.
    தனது அப்பாவான மகேந்திரனின் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் போட்டோகிராபர் உதயநிதி. அவரது ஸ்டூடியோவுக்கு அடுத்ததாக போட்டோ லேமினேஷன் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரிடம் வேலைக்கு சேர்கிறார் கருணாகரன். உதயநிதியும், அவரது தோழியுமான பார்வதி நாயரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பார்வதி நாயர் உயர் படிப்புக்காக வெளியூருக்கு செல்கிறார்.

    ஒருநாள் எம்.எஸ்.பாஸ்கருக்கும், ஆட்டோ டிரைவரான செண்ட்ராயனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் செண்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கரை அடிக்கிறார். இதை பார்க்கும் கருணாகரன், செண்ட்ராயனுடன் சண்டைக்கு செல்கிறார். இவர்களது சண்டையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் உதயநிதி ஈடுபட, திடும் பிரவேசம் வரும் சமுத்திரக்கனி அவர்களை அடித்துவிடுகிறார். 



    பிரச்னையை தடுக்க சென்ற தன்னை அடித்த சமுத்திரக்கனியை, உதயநிதி அடிக்க செல்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் சமுத்திரக்கனியிடம் அடிவாங்குகிறார். பொதுஇடத்தில் அனைவரது முன்பும் அடிவாங்கி அவமானப்பட்டதால், சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும்வரை தான் செருப்பே அணிய மாட்டேன் என்றும் சபதம் செய்கிறார் உதயநிதி. பின்னர் சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து, சமுத்திரக்கனியை அடிக்க செல்கிறார். ஆனால் சமுத்திரக்கனி அவரது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்.

    இதற்கிடையே பார்வதி நாயருக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது. இதனால், மனம் உடைந்து போகிறார் உதயநிதி. இந்நிலையில், அவரது போட்டோ ஸ்டூடியோவுக்கு வருகிறார் நமீதா பிரமோத். பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் உதயநிதி, தனது அண்ணனை அடிக்க சபதம் செய்திருக்கிறார் என்பது நமீதா பிரமோத்துக்கு தெரிய வருகிறது. 



    இதையடுத்து அவரது சபதத்தை கைவிடும்படி நமீதா கேட்க, அவரது பேச்சை உதயநிதி கேட்டாரா? சமுத்திரக்கனியை அடித்து தனது சபதத்தை நிறைவேற்றினாரா? நமீதா பிரமோத்தை திருமணம் செய்தாரா? அவரது வாழ்க்கையில் நடந்த திருப்பம் என்ன? என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை. 

    உதயநிதி ஸ்டாலின் எந்த வித அலட்டலுமின்றி ஒரு சாதாரண இளைஞனாக வந்து செல்கிறார். அவரது மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். மனிதன் படத்திற்கு பிறகு நிமிர் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தரும். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    நமீதா பிரமோத் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மனதில் பதியும்படி வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பார்வதி நாயர் வழக்கம்போல் அவரது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். 
    சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் மகேந்திரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு வலுசேர்க்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக மகேந்திரனுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், அமைதியாக அவரது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். 

    எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாகரன் அவ்வப்போது காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்துகிறார். 



    மலையாளத்தில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை கொண்டுவந்து மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் பிரியதர்ஷன். அவரது இயக்கமும், அதற்கேற்ற திரைக்கதையும் யதார்த்தமாக வந்திருப்பது படத்திற்கு பலம். 

    அஜனீஷ் லோக்னாத் - தர்புகா சிவா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `நிமிர்' நிமிர்ந்தது.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே - ஷாகித் கபூர் - ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பத்மாவத்' படத்தின் விமர்சனம்.
    13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகள் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோனே). சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென் (ஷாஹித் கபூர்) இலங்கை வருகிறார்.

    அங்கு ஒரு காட்டில் மான் வேட்டையாடி கொண்டிருந்த பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு குறிதவறி, ரத்தன் சென் தோள்பட்டையை பதம் பார்க்கிறது. தனது தவறை உணர்ந்த இளவரசி பத்மாவதி ரத்தன் சென்னிடம் மன்னிப்பு கேட்பதுடன், ஒரு குகையில் வைத்து அவருக்கு சிகிச்சையும் அளித்து உதவி செய்கிறார்.



    சிகிச்சைக்காக அங்கு சிலநாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள ரத்தன் சென் - பத்மாவதி இடையே காதல் அரும்புகிறது. காதல் முற்றி திருமணத்தில் முடிகிறது. தனது நாடான சித்தூருக்கு பத்மாவதியை மனைவியாக்கி அழைத்து செல்கிறார்.

    சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்று அவர்மீது பாசமும். மரியாதையும் காட்டி வருகின்றனர்.

    இந்த சூழலில், அரண்மனையின் தலைமை ராஜகுருவுக்கு பத்மாவதியை ரத்தன் சென் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முதல் பார்வையிலேயே பத்மாவதியின் மீது ராஜகுருவுக்கு ஒருவித கவர்ச்சியும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகிறது. இதற்கிடையில், பத்மாவதியும் ரத்தன் சிங்கும் படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சியை ஒரு மர்ம உருவம் மறைந்திருந்து ரசிக்கிறது.



    மனைவியுடன் தனியாக இருப்பதை யாரோ கவனிப்பதாக உள்ளுணர்வு உணர்த்தவே தனது கைவாளை அந்த மர்ம நபரின்மீது ரத்தன் சிங் வீசுகிறார். அந்த கத்தி ஜன்னல் இடுக்குக்குள் பாய்ந்து ஒளிந்திருக்கும் மர்மநபரின் மார்பில் துளைக்கிறது. காயத்துடன் அவர் தப்பியோடிவிட அந்த இடத்தில் வந்த நறுமணத்தை வைத்து, தங்களை மறைந்திருந்து ரசித்த நபர் யார்? என்பதை பத்மாவதி யூகித்து விடுகிறார்.

    இதையடுத்து, ராஜகுருவை அழைத்து வருமாறு மன்னர் ரத்தன் சென் உத்தரவிடுகிறார். படுக்கையறையில் நடந்த விவகாரங்களை வைத்து ராஜகுரு மீது மன்னர் குற்றம்சாட்டுகிறார். இதை ராஜகுரு கடுமையாக மறுக்கிறார். வாக்குவாதத்தின் இடையே ராஜகுருவின் மேலங்கியை காவலர்கள் நீக்கும்போது மன்னரின் கத்தி பாய்ந்த காயத்தை வைத்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது.

    ராஜகுருவை சிறையில் அடைக்குமாறு மன்னர் உத்தரவிட, இடைமறித்த பத்மாவதி அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் ராஜகுருவை நாடு கடத்த வேண்டும் என மன்னரிடம் கூற, மன்னரும் அவ்வாறே கட்டளையிடுகிறார்.



    இப்படி நாடு கடத்தப்படும் ராஜகுரு, பெண் பித்தரான டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியை சந்திக்கிறார். தன்னிகரற்ற மாவீரரும் எப்படியாவது நினைத்ததை அடைந்தே தீர வேண்டும். அனைவரும் நமக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் என்ற வெறியும் கொண்ட அலாவுதீன் கில்ஜியிடம், சித்தூர் ராணி பத்மாவதியின் ஒப்பில்லாத அழகை புகழ்ந்து கூறி, பார்க்காமலேயே பத்மாவதி மீது காதல் வெறியையும் கடந்து காமவெறி ஏற்பட ராஜகுரு தூபம் போடுகிறார்.

    அலாவுதீன் கில்ஜியின் ஆசையை தூண்டி, சித்தூர் மீது அவரை படை எடுக்க வைத்து, அந்த ஆட்சியை அழித்துவிட வேண்டும் என துடிக்கும் ராஜகுரு அலாவுதீன் கில்ஜியுடன் கைகோர்த்து கொண்டு காய் நகர்த்துகிறார். 

    எப்படியாவது ஒருமுறை பத்மாவதியின் அழகை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற மோகத்தின் முதல்கட்டமாக, டெல்லியில் உள்ள தனது அரண்மனையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க குடும்பத்தாருடன் வருமாறு மன்னர் ரத்தன் செனுக்கு அலாவுதீன் ஓலை (கடிதம்) அனுப்புகிறார்.



    அந்த அழைப்பை ஏற்க ரத்தன் சென் மறுத்து விடுகிறார். இதனால், பத்மாவதியை பார்க்க நினைத்த தனது எண்ணம் நிறைவேறாத காரணத்தால் ஆத்திரம் அடையும் அலாவுதீன் கில்ஜி, ரத்தன் சென்னின் ஆட்சி நடைபெறும் சித்தூர் சமஸ்தானத்தின்மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார்.

    அலாவுதீன் கில்ஜியின் படைகள் டெல்லியில் இருந்து நகர்ந்து சித்தூர் நகரை முற்றுகையிடுகின்றன. இந்த படையை எதிர்கொண்டு ரத்தன் சிங் வெற்றி பெற்றாரா? அல்லது, அலாவுதீன் கில்ஜி தனது எண்ணப்படி பத்மாவதி அடைந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் பிற்பகுதி.

    கதையின் நாயகியான பத்மாவதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே ஒப்பற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு ராணிக்குண்டான அமைதி, புத்திக்கூர்மை, ஆர்வம், கோபப் பேச்சு என தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிக்க வைக்கிறார். ராணியாக அவர் பேசும் வசனங்களும், நடனமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மிகை நடிப்பில்லாமல் பத்மாவதி ராணியாகவே வாழ்ந்திருக்கிறார். ராஜபுத்திரனின் வாள் வீரத்திற்கு இணையாக ராஜபுத்ரியின் வீரம் அவளது காப்பில் உள்ளது என உணர்ச்சிப்பூர்வமாக பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 



    ராஜபுத்திரன் என்பவன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை தனது, நடை, உடை, பார்வை, பேச்சின் மூலம் நிலைத்து நிற்கச் செய்திருக்கிறார் ஷாகித் கபூர். தோற்றத்திலும், உடையிலும் ஒரு ராஜபுத்திர அரசனாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு முக்கிய காட்சியில் அலாவுதின் கில்ஜியிடம் பேசும் போது, ராஜபுத்திரனின் நேர்மையுடன் அவர் பேசும் வசனங்கள் பார்ப்போருக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறது. ராஜபுத்திரர்களுக்காக தன்னையே தியாகம் செய்யவும் தயங்காத காட்சிகளில் மனதில் நிற்கிறார். 

    தனது தோற்றத்தின் மூலமே அனைவரையும் மிரள வைக்கும் ரன்வீர் சிங், தனது நெகட்டிவ் நடிப்பால் அனைவரையும் தன்பக்கம் கவர்கிறார். அவர் பேசும் ஆக்ரோஷமான வசனங்கள் திரையரங்கையே அதிர வைக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவ்வுளவு ஸ்கோர் செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ஒரு மாவீரனாகவும், பத்மாவதியை அடைய நினைக்கும் தந்திரவாதியாகவும் வலம் வரும் ரன்வீர், அலாவுதீன் கில்ஜியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துப்படியாக நடித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. 



    ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் அதிதி ராவ் ஹிடாரி, பார்வையாலேயே தான் நினைப்பதை நடத்தக்கூடியவளாக, ரசிக்க வைத்திருக்கிறார். 

    கதைக்கே முக்கிய கருவாக இருந்து பிரச்னையை தூண்டி விடும் கதாபாத்திரத்தில் ராஜ குருவாக வரும் ஜிம் சர்ப் அவரது கதாபாத்திரத்தில் விஷமமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அனுபிரியா, மஞ்சித்சிங், ரஜாமுரத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதையுடன் ஒன்றி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

    சித்தூர் ராணியின் வாழ்க்கை வரலாற்றை பிரமாண்டமாக கொடுத்து இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. படத்திற்காக கடுமையாக உழைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். ராஜபுத்திர வம்சத்தினரையும், அவர்களது புகழையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். அலாவுதீன், சித்தூர் ராணி பற்றி நினைப்பதாக அமைக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்ததாகவும், அதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அவை நீக்கப்பட்ட பிறகும் கதை சிறிதும் பிசிறு இல்லாமல் பிரமாண்டமாக அமைந்துள்ளது சிறப்பு. படத்தில் வசனங்கள் வலு சேர்த்திருக்கின்றன. பாதிக்கு பின்னரும் கதையில் நிறைய திருப்பங்கள், கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார்.



    படத்தில் உடை வடிவமைப்பாளர்கள், கலை இயக்கம் என அனைத்து தரப்பினரும் படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. 

    சஞ்சித் பல்ஹரா, சஞ்சய் லீலா பன்சாலியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக பத்மாவதி தீம் பாடல் மனதில் பதியும்படியாக அமைந்திருக்கிறது. சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அந்த காலத்திற்கே போன ஒரு அனுபவம் கிடைக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் பிசிறில்லாமல் வந்திருப்பது சிறப்பு. 

    மொத்தத்தில் `பத்மாவத்' ஒப்பற்ற ராணி.
    கௌஷிக், மீனலோட்சனி, ஆகியோர் நடிப்பில் வீரன் செல்வராசு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வீரத்தேவன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் கௌஷிக் கிராமத்தில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் மாமாவுடன் ஜாலியாக ஊர் சிற்றி வருகிறார். அதே ஊரில் இருக்கும் நாயகி மீனலோட்சனியை 3 வருடமாக ஒருதலையாக காதலித்து வருகிறார் கௌஷிக். இவரின் காதலுக்கு மாமாவான வீரன் செல்வராசு உதவி செய்கிறார்.

    ஒருகட்டத்தில் கௌஷிக்கின் காதலை ஏற்றுக் கொண்ட மீனலோட்சனி, இருவரும் காதலித்து வருகிறார்கள். மீனலோட்சனிக்கு 5 அண்ணன்கள். இதில் பெரிய அண்ணன் மிகவும் தைரியசாலி, நியாயமானவன். நியாயத்திற்காக வெட்டு, குத்து என சண்டைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், மீனலோட்சனியை பெண் கேட்டு செல்கிறார். ஆனால், அவருடைய அண்ணன், பெண் தர மறுத்துவிடுகிறார். இதனால், கௌஷிக்கும், மீனலோட்சனியும் அண்ணனுக்கு தெரியாமல் மாமா மூலமாக திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் அண்ணன்களுக்கு தெரிந்து, கோபமடைந்து பின்னர் சமாதானமாகி விடுகிறார்கள்.



    கௌஷிக்கும், மீனலோட்சனியும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மாமாவான வீரன் செல்வராசு கௌஷிக்கை கொலை செய்து விடுகிறார்.

    இறுதியில் மாமா வீரன்செல்வராசு எதற்காக கௌஷிக்கை கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன? மீனலோட்சனி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கௌஷிக், துறுதுறுவென நடித்திருக்கிறார். பல காட்சிகள் இல்லை என்றாலும், காதல் காட்சிகள், நடன காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனலோட்சனியும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாமாவாக வரும் வீரன்செல்வராசு, மீனலோட்சனியின் அண்ணன்கள் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 



    ஒரு சமுகத்தை சார்ந்த படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வீரன் செல்வராசு. முதல் பாதி சோகமாக சென்றாலும், அதன்பின் சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார். திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டாலும் பெரியதாக தெரியவில்லை. கொலை செய்ததற்கு காரணம் சிறியதாக இருந்தாலும், சொன்ன விதத்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது.

    தர்மபிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. மகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வீரத்தேவன்’ வீரமானவன்.
    விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை எற்படுத்தி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் விமர்சனம். #Sketch #SketchReview
    வட சென்னையில் இருக்கும் சேட்டுவிடம், டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விபத்தில் அருள்தாசுக்கு கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார் ஆர்.கே.சுரேஷ்.

    ஆனால், அருள்தாசோ, தன்னுடைய மச்சானான விக்ரமை முன்னிறுத்துகிறார். இதிலிருந்து விக்ரமுக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து வாகனங்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம். அப்போது, தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார்.

    அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும்  பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார்.

    சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் தமன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ், அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். சூரியின் காமெடி ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.

    ஒரு கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சந்தர். விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு, எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை.

    தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் தனித்துவம் பெற்றிருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

    மொத்தத்தில் ‘ஸ்கேட்ச்’ ஷார்ப்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விமர்சனம்.
    சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகனான சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவலகத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். சிபிஐ தலைமை அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன், ரெய்டு நடத்திய இடத்தில் லஞ்சம் வாங்குகிறார். இதனை கவனிக்கும் தம்பி ராமையா, சுரேஷ் மேனனைப் பற்றி தலைமை அலுவலகத்துக்கு மொட்டக் கடிதாசி அனுப்புகிறார். 

    இதையறிந்த சுரேஷ் மேனன், தம்பி ராமையா மீதான கடுப்பில் சிபிஐ தேர்வில் பங்கேற்கும் சூர்யாவை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். திறமை இருந்தும் வேலை கிடைக்காத வருத்தத்தில் சூர்யா மனம் நொந்து போக, மறுபுறத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனுக்கும் போலீஸாகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் போலீசாக வேண்டும் என்ற அவரது கனவு கலைந்து விடுகிறது.



    இதனால் படித்தும், வேலையில்லாமல் தவிக்கும் கலையரசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதனால் தற்கொலை செய்துகொள்கிறார் கலையரசன். 

    இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் சூர்யா ஒரு குழுவை அமைக்கிறார். அதில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவ சங்கர், சத்யன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதற்கிடையே கீர்த்தி சுரேஷ்க்கும், சூர்யாவுக்கும் இடையே காதல் வருகிறது. 

    தனது குழு மூலம் ஊழல் மற்றம் வருமான வரி செலுத்தாமல் பணத்தை பதிக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து, சுரேஷ் மேனன் பெயரை பயன்படுத்தி அவர்களிடம் சிபிஐ அதிகாரியாக நடித்து சோதனை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.



    சுரேஷ் மேனன் பெயரை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்கப்படுகிறது. அதற்கு தலைமை ஏற்கிறார் நவரச நாயகன் கார்த்தி. 

    கடைசியில் சிபிஐ அதிகாரியாக முயற்சி செய்யும் சூர்யா, ஏன் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார்? அந்த பணத்தை என்ன செய்தார்? சூர்யா தான் கொள்ளை அடித்தார் என்பதை கார்த்தி கண்டுபிடித்தாரா? கடைசியில் சூர்யா சிபிஐ அதிகாரியானாரா? சூர்யாவின் கூட்டம் வெற்றி பெற்றதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சில வருடங்களுக்கு பிறகு அமைதியான, கலகலப்பான சூர்யாவை பார்க்க முடிகிறது. சமீபத்தில் வெளியான அவரது படங்களில் அவரது முழு எனர்ஜியையும் பயன்படுத்தி ஆக்ரோஷமானவராக சூர்யா வந்திருப்பார். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான பழைய சூர்யாவை பார்க்க முடிகிறது. குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. கார்த்தி தனது ஸ்டைலில் வந்து அசத்துகிறார்.



    முதல் காட்சியில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன், அடுத்தடுத்த காட்சிகளில் குடும்ப பெண்ணாக வலம் வந்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் செந்தில் ஓரளவுக்கு திருப்திபடுத்தி இருக்கிறார். கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் சிரிக்க வைக்கிறார். 

    தம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

    திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள், மெரிட்டில் வேலை கிடைத்தும் லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள். முதல் பாதியில் திரைக்கதையை மெதுவாக கொண்டு சென்றாலும், இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவை முற்றிலும் வேறு விதமாக காட்ட முயற்சித்திருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்களிடமும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார் விக்னேஷ்.



    அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆல்பம் ஹிட்டடித்திருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

    மொத்தத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' கொண்டாட்டம்.

    எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `குலேபகாவலி' படத்தின் விமர்சனம்.
    சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள்.

    தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி. 

    மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார்.



    இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட ரேவதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.

    இவர்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சத்யன், இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். 

    இறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். நடனம், காமெடி, முக பாவனைகள் அனைத்திலும் நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.

    நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவதும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை அவர்களுக்கு உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர்.



    முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கல்யாண். கதாபாத்திரங்கள் தேர்விலே முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும், அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முழுநீள காமெடி என்றாலும் முழுவதும் ரசிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் காமெடி பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

    ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் புத்துணர்வுடன் இருக்கிறது. அதுபோல், மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இசையும், ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘குலேபகாவலி’ பார்க்கலாம்.

    தாடி சிவா, பிராமினி முரளா நடிப்பில் புவனேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘டிசம்பர் 13’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தாடி சிவா மிகவும் வசதியானவர். மலை சூழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மாடர்னான பெண்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து அவரது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார். 

    இப்படி இருக்கும் நிலையில், வீட்டிற்கு அருகே இருக்கும் நாயகி பிராமினி முரளாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பிராமினி முரளாவையும் வழக்கம் போல் கொலை செய்ய நினைக்கிறார் தாடி சிவா. ஆனால் நாயகி அவரை காதலிக்கிறார். இந்நிலையில், நாயகன் தாடி சிவாவிற்கு ஒரு பேய் ஒன்று தொந்தரவு செய்கிறது.

    இறுதியில் அந்த பேய் அவரை தொந்தரவு செய்ய காரணம் என்ன? எதற்கு பெண்களை கொலை செய்கிறார்? நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தாடி சிவா, பெண்களை ஏமாற்றுபவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. போலீஸ் தோற்றத்திற்கு பொருந்திருந்தாலும், நடிப்பு அவ்வளவாக பொருந்தவில்லை.

    நாயகியாக நடித்திருக்கும் பிராமினி முரளா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. 

    சைக்கோ திரில்லர் கதையை பேய், திகில் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் புவனேஷ். நாயகனை சுற்றியே படத்தை நகர்த்தி இருக்கிறார். அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இது போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருப்பதால், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்திருக்கிறது.

    நரேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். செல்வம் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘டிசம்பர் 13’ வழக்கமான நாள்.
    லின் ஷெய் நடிப்பில் அமானுஷ்யம், பேய் ஆகியவற்றை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் ‘இன்ஸியடிஸ் தி லாஸ்ட் கி’ படத்தின் விமர்சனம்.
    தன்னிடம் உள்ள சக்தியை வைத்து, அமானுஷ்யங்களால் பாதிக்கப்பட்டவர்களை விடுவித்து வருகிறார் லின் ஷெய். அப்போது போனில் ஒரு அழைப்பு வருகிறது. ஒரு வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதை விரட்ட வரும் படி கேட்கிறார்கள். அவர்கள் கூறும் முகவரியை கேட்ட பின், உங்களுக்கு உதவ முடியாது என்று லின் ஷெய் கூறுகிறார்.

    தான் ஏற்கனவே அந்த வீட்டில் இருந்ததாகவும், அந்த வீட்டில் என் அம்மா இறந்ததாகவும், அந்த வீடு இல்லை, ஒரு சுடுகாடு என்றும் தன் உதவியாளரிடம் கூறுகிறார் லின் ஷெய். அதனால் தான் அந்த வீட்டிற்கு செல்ல மறுத்தேன் என்றும் கூறுகிறார்.

    பின்னர், தான் பட்ட கஷ்டம் தற்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் அனுபவிக்க கூடாது என்று நினைக்கிறார் லின் ஷெய். இதனால் அந்த வீட்டிற்கு செல்கிறார் லின் ஷெய். இறுதியில் அந்த வீட்டில் இருப்பவர்களை லின் ஷெய் காப்பாற்றினாரா? அமானுஷ்ய சக்தியை விரட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    லின் ஷெய்யை சுற்றியே சுற்றியே கதை நகர்கிறது. ஒரு பழைய வீடு, அச்சுறுத்தும் பேய், குழந்தைகளை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்துப் பயங்காட்டுவது, இரண்டு ட்விஸ்ட்கள் என ஆங்கிலப் பேய் படங்களுக்கே உரித்தான டெம்ப்லேட்தான் இந்தப் படமும் பயணித்திருக்கிறது.   

    நடிகை லின் ஷெய் எலிஸ் ரெயினியர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து, வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பேய்களை முதலில் பார்க்கும்போது தோன்றும் நடுக்கம், தள்ளாத வயதில் வரும் சோர்வு என தன் இயலாமையை மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். 

    அந்த ரகசிய அறையில் லின் ஷெய் அவரது உதவியாளனுடன் சேர்ந்து மர்ம முடிச்சை அவிழ்க்கும் காட்சி மிரள வைத்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் முன்னரே யூகிக்கும்படி அமைந்தது சற்று ஏமாற்றமே. அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாமல் செய்தால் மட்டுமே திகிலான காட்சிகள் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கே அந்த உணர்வு எங்கேயும் ஏற்படவில்லை.

    நல்ல கதையை பிடித்தவர்கள், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி, திகில் காட்சிகளை கவனமாகக் கட்டமைத்து, இன்னமும் பயமூட்டியிருந்தால் இப்படம் சிறப்பாக அமைந்திருக்கும்.

    மொத்தத்தில் ‘இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி’ திகில் குறைவு.
    ×