என் மலர்tooltip icon

    தரவரிசை

    கமலேஸ்வர் முகர்ஜி இயக்கத்தில் தேவ் - ஸ்வெட்லானா குலகோவா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அமேசான் அட்வென்சர்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் தேவ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரபல ஆராய்ச்சியாளரான நாயகி ஸ்வெட்லானா குலகோவாவின் தந்தை வட அமெரிக்காவில் உள்ள அமேசான் காட்டிற்குள் இருக்கும் தங்க நகரத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து. அதில் தோல்வியடைந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையாகிறார். 

    இதையடுத்து தனது தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கும் ஸ்வெட்லானா குலகோவா, அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக தேவ்வின் உதவியை கேட்கிறார். தேவ் ஏற்கனவே இதுபோன்ற அட்வென்சர் குறித்த ஆய்வில் ஈடுபட்டவர் என்பதால் அவரும், அவர்களுடன் வர ஒப்புக்கொள்கிறார். 



    ஏற்கனவே அந்த தங்க நகரத்தை தேடிச் சென்ற பலரும் உயிருடன் திரும்பாத நிலையில், மூன்று பேரும் அமேசான் காட்டிற்குள் அந்த இடத்தை தேடிச் செல்கின்றனர். அங்கு பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் இவர்கள் மூன்று பேரும் அந்த தங்க நகரத்தை கண்டுபிடித்தார்களா? அங்கிருக்கும் புதையலை கண்டுபிடித்தார்களா? போனவர்கள் அனைவரும் உயிருடன் திரும்பினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

    தேவ், ஸ்வெட்லானா குலகோவா இருவருமே அட்வென்சர் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். டேவிட் ஜேம்ஸ், எடுவார்டோ முனிஸ், லபோனி சர்க்கார், தமல் ராய் சவுத்ரி என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர். 



    தேவ் ஏற்கனவே ஒரு அட்வென்சராக இருக்கும் நிலையில், அவரது உதவியுடன் தங்க நகரத்தை கண்டுபிடிப்பதை மையமாக வைத்து கதையை விறுவிறுப்புடனும், சாகசத்துடனும் இயக்கி இருக்கிறார் கமலேஸ்வர் முகர்ஜி. படத்தின் திரைக்கதை நீளமாக இருப்பது படத்திற்கு மைனஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. 

    டெபோஜோதி மிஸ்ராவின் பின்னணி இசை படத்திற்கு பலம். சவுமிக் ஹால்டரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `அமேசான் அட்வென்சர்' வேகமில்லை. 

    நவனீத் இயக்கத்தில் திலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இடம் பொருள் ஆவி' படத்தின் விமர்சனம்.
    பணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள். 

    தன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம் தர மறுக்கிறார். இதையடுத்து தனது நண்பர்களின் உதவியுடன் தனது தங்கையான அனிஷா ஆம்ப்ரூஸை கடத்தி தனது தந்தையை மிரட்டி பணம் கேட்கிறார். அனிஷாவை ராஜா பங்களா என்று கூறப்படும் பேய் பங்களாவில் வைக்கின்றனர். அங்கு தன்னை கடத்தியவர்கள் தனது அண்ணனின் நண்பர்கள் தான் என்பது அனிஷாவுக்கு தெரிய வருகிறது. 



    அதேநேரத்தில் அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், திலக் சேகருக்கு பணம் கிடைத்ததா? அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    திலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா என படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்துமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். விஜய் செந்தர் அவ்வப்போது காமெடியில் கலக்கியிருக்கிறார். 



    பணத்துக்காக கடத்தலில் ஈடுபடுபவர்கள், பேயிடம் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை த்ரில்லுடன் கொடுத்திருக்கிறார் நவனீத். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சி.ஜே.மோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `இடம் பொருள் ஆவி' திகில் குறைவு.
    ஆர்.சுப்ரமணியன் இயக்கத்தில் பிரகாஷ் சந்திரா - சுனு லக்‌ஷ்மி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சாவி' படத்தின் விமர்சனம்.
    சாவி செய்யும் தொழில் செய்து வருகிறார் நாயகன் பிரகாஷ் சந்திரா. அவரது அண்ணன் ஆட்டோ ஓட்டி வருகிறார். நாயகி சுனு லட்சுமியை, பிரகாஷ் சந்திராவுக்கு நிச்சயம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை செய்யப்படுகிறார். 

    அதேநேரத்தில் மற்றொரு வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்றும் அரங்கேறுகிறது. இரண்டு குற்றங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை குறித்து நாயகனின் அப்பாவிடம் விசாரணை நடத்தும் போது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்து அவர் போலீசிடம் தெரிவிக்கிறார். 



    மறுபுறத்தில் கொள்ளை நடந்த வீட்டின் பூட்டை உடைக்காமலும், எந்த சேதமும் செய்யாமல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு குற்றங்களும் நாயகனுக்கு எதிராக திரும்ப, பிரகாஷ் சந்திரா அதனை எப்படி எதிர்கொண்டார்? பிரகாஷ் சந்திராவின் அண்ணனை கொன்றது யார்? கொள்ளை அடித்ததற்கும், அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்த இரண்டு பிரச்சனையையும் அவர் எப்படி எதிர் கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சாவி செய்யும் இளைஞனாக, கொலை பழி, கொள்ளை பழியை எதிர்கொள்ளும் சாதாரண இளைஞனாக பிரகாஷ் சந்திரா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சுனு லக்‌ஷ்மி அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட அனைவருமே யதார்த்தமாக நடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்தது. 



    மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன், அவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், அவனது வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை யதார்த்தமாக காட்டியிருக்கும் ஆர்.சுப்ரமணியனுக்கு பாராட்டுக்கள். யதார்த்த சினிமா வரிசையில் இந்த படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளை திறக்கும்படியாக திரைக்கதை நகர்வது சிறப்பு. 

    சதீஷ் தாயன்பன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சேகர் ராமின் ஒளிப்பதிவில் படம் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `சாவி' வித்தியாசமானது. 


    ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, சென்ட்ராயன் ஆகியோர் நடிப்பில் விஜய் பாலாஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விதி மதி உல்டா’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன்.

    இதற்கிடையில், நாயகி ஜனனி ஐயரை சந்திக்கும் ரமீஸ் ராஜா, அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை ஜனனியிடம் சொல்ல, முதலில் மறுக்கும் அவர் பின்னர் ரமீஸ் ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

    மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. இவரது ஒரே தம்பி, ஜனனி ஐயரை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரது காதலை ஜனனி ஏற்காததால் ஆட்களை வைத்து கடத்தி, ஒரு பாழடைந்த கம்பெனியில் அடைக்கிறார்கள். அதேநேரத்தில், ரமீஸ் ராஜாவும் சென்ட்ராயனால் கடத்தப்பட்டு, ஜனனி இருக்கும் அதே இடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.

    அதுபோல் திருடனான கருணாகரன், தான் திருடி, பதுக்கி வைத்த தங்க நகைகளை எடுப்பதற்காக அந்த பாழடைந்த கம்பெனிக்கு வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடைகிறார்கள்.

    அப்போது ஒருவருக்கொருவர் இடையே ஏற்படும் மோதலில், எதிர்பாராத விதமாக டேனியல் பாலாஜியின் தம்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் டேனியல் பாலாஜிக்கு தெரிந்து, தம்பி இறப்புக்கு ரமீஸ் ராஜாதான் காரணம் என்று நினைத்து அவரது அப்பா, அம்மாவை கொலை செய்கிறார்.

    மேற்குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ரமீஸ் ராஜாவின் கனவில் நடந்தவை. இந்த கனவு, அப்படியே நிஜத்தில் நடக்க ஆரம்பிக்கிறது. தான் கடத்தப்படுவது, ஜனனி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட ரமீஸ் ராஜா, இவற்றை தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை,

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ரமீஸ் ராஜா, துறுதுறுவான நடிப்பாலும், வெகுளித்தனமான நடிப்பாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடனம், காதல், போலீசிடம் அடிவாங்குதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். கனவில் நடந்ததை நிஜத்தில் நடக்கவிடாமல் தடுக்க இவர் எடுக்கும் முயற்சிகள் பரிதவிக்க வைக்கிறது. 

    நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சிவரை படத்தில் பயணிக்கிறார். முதல் காட்சியிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் இவரது முக பாவனைகள் ரசிகர்களை சீட்டில் இருந்து எழுந்திருக்க விடாமல் தடுத்திருக்கிறது. 

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் டேனியல் பாலாஜி. அதுபோல் கருணாகரனும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். சென்ட்ராயன், ஞானபிரகாசம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுபவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் பாலாஜி. இதுபோன்ற கதைகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இப்படத்தில் காமெடியுடன் சொல்லிருக்கிறார். இதுபோன்ற கதைகளை உருவாக்க ஒரு தைரியம் வேண்டும். ஒரு இடத்தில் சிறு பிழை நடந்தாலும், படத்தின் கதையே மாறிவிடும். அப்படி ஏதும் தவறு நேராமல் படத்தை இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டிருக்கிறார்.

    அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘தாறு மாறா...’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. குறிப்பாக கருணாகரனுக்கான பாடலும் அதை படமாக்கிய விதமும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது. அதுபோல், ரமீஸ் ராஜா, ஜனனியின் ரொமான்ஸ் பாடலும் கேட்கவும் பார்க்கவும் தெளிவாக உள்ளது. 

    மொத்தத்தில் ‘விதி மதி உல்டா’ காமெடி கலாட்டா.
    கே.பழனி இயக்கத்தில் நாக அன்வேஷ் - ஹேபா பட்டேல் - ஷாயாஜி ஷிண்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்' படத்தின் விமர்சனம்.
    ஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி சென்னையில் உள்ள ஒருவரிடம் விற்க்கிறார். 

    அதனை நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேனில் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷை செக்போஸ்டில் வைத்து போலீசார் மடக்குகின்றனர். 

    போலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக்குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார். 



    பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் வருகிறது.

    இறுதியில் அந்த பெண் யார்? அவர் சிலையாக மாற காரணம் என்ன? சிலையை கொடுத்து அனுப்பிய ஷாயாஜி ஷிண்டேவிற்கு இந்த விஷயம் தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் விரைந்து சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாநாயகனாக நாக அன்வேஷ் நடித்திருக்கிறார். அவரது துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பலம். நடனத்தை சிறப்பாக ஆடிய நாக அன்வேஷ், காதல் காட்சிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.



    நாயகியாக ஹேபா பட்டேல் நடித்திருக்கிறார். தேவலோகத்து அழகியாகவும், பூலோக நற்குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்திருக்கிறார். தேவதை போன்ற அழகு முகம் கொண்டு, இப்படத்தின் கதைக்கு கூடுதல் பலத்தையும் சேர்த்திருக்கிறார்.

    நண்பராக வரும் சப்தகிரியின நடை, உடை, பாவனைகள் மற்றும் காமெடிகள் ரசிக்க வைத்திருக்கிறது. பல காட்சிகளில் சிரிக்கவைத்திருக்கிறார். 

    நாயகியின் அப்பாவாக சுமன், சிலை கடத்தல் ஷாயாஜி ஷிண்டே, ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இப்படத்திற்கு, கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி "பாகுபலி" படத்தில் ராஜமெளலியின் உதவியாளராம். மெகா பட்ஜெட் குருநாதரின் பெயரை இந்த மினிமம் பட்ஜெட்டில் பெரிதாகவே காபந்து செய்திருக்கிறார் "பாகுபலி" கே.பழனி என்றால் மிகையல்ல!



    புராண கதையோடு வின்னுலம், பூலோகம் வாழ்க்கையையும் கலந்து காதல், ஆக்‌ஷன், காமெடியுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.பழனி. பாகுபலி முதல் பாகத்தில் பணியாற்றியதால், அதே பாணியில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார். முதல் பாதியில் காமெடி காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு சில காட்சிகள் நம்பகத் தன்மை இல்லாமல் இருக்கிறது.

    வி.பிரபாகரின் வசன வரிகளில் டைம்மிங் வசனங்களும், அரசியல் நையாண்டிகளும் படத்திற்கு பெரிய பலம். பீம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குணாவின் ஒளிப்பதிவில் குறை ஏதுமில்லை!

    மொத்தத்தில் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ திருப்திபடுத்தினாள்.
    ஜே.பி.ஆர். இயக்கத்தில் விஸ்வந்த், ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ், ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தின் விமர்சனம்.
    படம் ஆரம்பத்திலேயே நாயகி ரித்விகா மர்ம நபர்களால் கொலை செய்யப்டுகிறார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியவில்லை. 

    ஏ.வெங்கடேஷ் பெரிய பங்களா ஒன்றில் வாட்ச் மேனாக வேலை பார்க்கிறார். அந்த பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் விஷ்வந்த், ஆடம்ஸ், கேஸியான் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் அந்த பங்களாவில் அவ்வப்போது தங்கி சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த 4 பேருக்கும் பணம் என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. அதற்காக யாரையாவது கடத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். 

    கடைசியில் பணக்காரரான விஸ்வந்த்தின் அக்கா கணவரை, மிரட்டி பணம் சம்பாதிக்க முடிவு செய்கின்றனர். அதற்காக விஸ்வந்த்தின் அக்காவின் குழந்தையையே கடத்துகின்றனர். பின்னர் விஸ்வந்த்தின் மாமாவை மிரட்டி பணம் கேட்கின்றனர். விஸ்வந்த் அவரது மாமாவுடனேயே இருந்து சந்தேகப்படும்படி ஏதாவது செய்கிறாரா என்பதை கவனிக்கிறான். அப்போது அவர் தனது குழந்தைக்காக தனது சொத்து முழுவதையுமே எழுதி கொடுப்பேன் என்று கதறுகிறார். 



    இதையடுத்து தனது நண்பர்களை அழைத்து மேலும் சில கோடிகளை கேட்டு மிரட்ட சொல்கிறார் விஸ்வந்த். அதே நேரத்தில் விஸ்வந்த் தனது அக்கா குழந்தை மீது அதீத பாசத்யைும் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தை விஸ்வந்த்தை பார்த்து விட, அந்த குழந்தையை கொலை செய்து விட முடிவு செய்கிறார்கள். ஆனால் விஸ்வந்த் அதற்கு மறுப்பு தெரிவிக்க அவரையும் கொல்ல முடிவு செய்கின்றனர். 

    கடைசியில் அவர்களுக்கு பணம் கிடைத்ததா? அல்லது அவர்கள் திட்டமிட்டபடி அந்த குழந்தையை கொன்றார்களா? விஸ்வந்த் அதை தடுத்தாரா? தனது தவறை உணர்ந்தாரா? ரித்விகா ஏன் கொலை செய்யப்பட்டார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    விஸ்வந்த் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகைப்படுத்தாமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக குழந்தையை கொல்ல முடிவு செய்யும் நேரத்தில், வேண்டாம் என்றுதடுக்கும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆடம்ஸ் அவ்வப்போது காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரித்விகா இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டு, கடைசியில் கொலை செய்யும் நிலைக்கு செல்லும் நண்பர்கள் 4 பேர், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஜே.பி.ஆர். முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், அடுத்த பாதியில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட காட்சிகள் விறுவிறுப்பை கூட்டியிருப்பது ரசிக்க முடிகிறது. என்றாலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    அதீஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லவிதமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஓநாய்கள் ஜாக்கிரதை' வேகமில்லை.


    எஸ்.பி.பிரசாத், ஏ.எஸ்.தமிழ்ச்செல்வன், ஷாலினி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிடா விருந்து’ படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் நாயகன் எஸ்.பி.பிரசாத் வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். தன் அம்மாவுடன் வாழ்ந்து வரும் பிரசாத், அவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்து வருகிறார். சிறு வயதில் நாயகி ஷாலினியுடன் பழகி வருகிறார் பிரசாத். ஷாலினியோ நாளடைவில் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார்.

    ஷாலினியை மறக்க முடியாமல் அவரது பெயரை பச்சை குத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படிப்பை முடித்து ஊர் திரும்பும் ஷாலினியை காதலிக்கிறார் பிரசாத். ஆனால், காதலை மறுக்கிறார். 

    ஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா? நாயகனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? நாயகி ஷாலினியை பிரசாத் திருமணம் செய்துக் கொண்டாரா? என்பதே படத்தின் கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.பிரசாத் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கை தனமாக உள்ளது. நாயகி ஷாலினி அழகாக வந்து செல்கிறார். கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதளவு கைக்கொடுக்கவில்லை.

    கஞ்சா கருப்புவின் காமெடி ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரஞ்சன், கே.பி.என்.மகேஷ்வர், சேரன்ராஜ், தங்கம், தமிழ், மணிமாறன், சையது, சுகி, ராணி, சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    கிராமத்தில் விருந்து பெயர் பெற்ற ‘கிடா விருந்து’ என்பதை படத்தின் தலைப்பாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.தமிழ்ச்செல்வன். மண் வாசனை மாறாமல் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல இடங்களில் யதார்த்த மீறல்கள் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்திருக்கலாம். சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். 

    பிரின்ஸ் நல்ல தம்பியின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்திருக்கிறது. இவருடைய இசை படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘கிடா விருந்து’ சுமாரான சாப்பாடு.
    ஜேக் காஸ்டன் இயக்கத்தில் டுவைன் ஜான்சன் - காரன் கில்லன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் விமர்சனம்.
    ஜுமான்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய சிறுவன் ஒருவன், அந்த கேமுக்குள் சென்று சிக்கிக் கொள்கிறான். சில வருடங்களுக்கு பிறகு ஜுமான்ஜி என்ற அதே வீடியோ கேமை இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு பள்ளி மாணவர்கள் இணைந்து விளையாடுகின்றனர். அதில் அவர்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்தவுடன் அவர்களும் அந்த கேமுக்குள் சென்று விடுகின்றனர். 

    அந்த கேம் வழியாக ஜுமான்ஜி காட்டுக்குள் சென்ற நான்கு பேரும் அவர்கள் தேர்வு செய்த கதாபாத்திரங்களாகவே மாறி விடுகின்றனர். இதில் அவர்களுக்கு ஒரு பணி (Task) கொடுக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு கேம் விளையாடும் போது நாம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறோமோ அதனை அவர்கள் நேரிலேயே சந்திக்கின்றனர். 



    அந்த காட்டுக்குள் சில வருடங்களுக்கு முன்பு வந்து சிக்கிக் கொண்டவரையும் அவர்கள் சந்திக்கிறார்கள். அவரை சந்தித்த பிறகு தான் அவர்களின் உண்மை நிலை புரிகிறது. கேமின் தீவிரமும் தெரிய வருகிறது. 

    கடைசியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்து முடித்தார்களா? அந்த கேமை விட்டு வெளியேறினார்களா? அல்லது அங்கேயே சிக்கிக் கொண்டார்களா? அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    டுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சரியாக பொருந்தியிருக்கிறார். கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். 



    ஜேக் காஸ்டனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். இதற்கு முன்பு வெளியான ஜுமான்ஜி படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு உருவாகி இருக்கிறது. ஜுமான்ஜியின் மற்ற பாகங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த பாகத்தை பார்க்க முடியாது. எனினும் இந்த பாகமும் ஆக்‌ஷன், காமெடி என திருப்திபடுத்தும்படி வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ் வசனங்கள் படத்தை காமெடியாகவும் காட்டி இருக்கிறது. 

    ஹென்றி ஜேக்மேன் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. கியூலா படோஸின் ஒளிப்பதிவும் சிறப்பு. ஒரு கேம் விளையாடும் அனுபவத்தை கொடுக்கிறது. 

    மொத்தத்தில் `ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்' வேடிக்கை.
    ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி இருக்கும் ‘பலூன்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜெய், அவரது மனைவி அஞ்சலி, ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா என கூறுகிறார்.

    என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், சமூக வலைத்தளம் மூலமாக ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைக்கிறார் ஜெய். இதற்காக, அந்த வீட்டை பற்றி ஆராய்ச்சி செய்ய மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்.

    அங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழந்தையுடன் பப்பு விளையாடி வருகிறான். சில தினங்களில் ஜெய், அஞ்சலி இருவருக்கும் இந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலவுவதை அறிகிறார்கள்.

    ஒரு கட்டத்தில் பப்பு உடம்பிற்குள் அந்த பெண் குழந்தையின் ஆவி புகுந்துக் கொள்கிறது. மேலும் ஜெய்யை அப்பா என்று அழைத்து அம்மா எங்கே என்று கேட்கிறது. 

    இறுதியில் அந்த குழந்தை ஜெய்யை அப்பா என்று அழைக்க காரணம் என்ன? அம்மா யார்? அந்த குழந்தையை ஆவியானதற்கு என்ன காரணம்? இந்த வீட்டில் இருந்து தப்பித்து, தன் கதையை எழுதி படம் இயக்கினாரா ஜெய்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல், சண்டை படங்களில் இதுவரை நடித்து வந்த ஜெய், முதல் முறையாக முழுநீள திகில் படத்தில் நடிக்கிறார். வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவியாக வரும் அஞ்சலி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி ஐயர் நடிப்பால் மனதில் பதிகிறார். யோகி பாபுவின் காமெடி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 

    வழக்கமாக பேய் படங்கள் என்றாலே வீடு, பழிவாங்குவது, பயமுறுத்துவது என அதே ஸ்டைலை பின்பற்றி இருக்கிறார் இயக்குனர் சினிஷ். ஆனால், திரைக்கதையில் ஓரளவிற்கு வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். சமீபத்திய ஹாலிவுட் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் என துவக்கத்திலேயே இயக்குனர் சொல்லியிருப்பது சிறப்பு. படத்தில் வரும் காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய்ப் படத்தை நினைவூட்டுகிறது.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பலூன்’ பறக்கவிடலாம்.
    மாரிசன் இயக்கத்தில் கீதா - திலீப் சுப்பராயன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் சங்கு சக்கரம் படத்தின் விமர்சனம்.
    குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார் திலீப் சுப்பராயன். அதன்படி, விளையாட இடமில்லாமல் தவித்து வரும் குழந்தைகளிடம் தனது ஆளை அனுப்பி, ‘தனியாக ஒரு பங்களா இருக்கிறது, அங்கே சென்றால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று சொல்லி அந்த குழந்தைகளை பேய் பங்களாவுக்கு வர வைக்கிறார். 

    மறுபுறத்தில் பல கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரனான நிஷேஷ், பாதுகாவலர்கள் மூலம் வளர்கிறான். அவன் பெயரில் இருக்கும் சொத்துக்களை பறிக்க பாதுகாவலர்கள் திட்டமிடுகின்றனர். அவனை அந்த பேய் பங்களாவுக்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு பேய் அடித்ததாக பழியை போட்டுவிடலாம் என்று அழைத்து வருகின்றனர்.

    அதேநேரத்தில் அந்த பேய் பங்களாவை விற்று அதனை பிளாட் போட்டு விற்க ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் முடிவு செய்து அந்த பங்களாவுக்கு மந்திரவாதிகளை அழைத்து வருகிறார். 

    இவ்வாறாக உள்ளே வரும் குழந்தைகள், நிஷேஷ், திலீப் சுப்பராயன், நிஷேஷின் பாதுகாவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர் அனைவரும் உள்ளே மாட்டிக் கொள்கின்றனர். அங்கிருக்கும் பேய் அவர்களை என்ன செய்தது? அந்த குழந்தைகள் எப்படி தப்பித்தார்கள்? திலீப் சுப்பராயன், பாதுகாவலர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    மிரட்டும் வில்லனாக நடித்து வந்த திலீப் சுப்பராயன் இந்த படத்தில் ஒரு காமெடி கலந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. கீதா அழகான பேயாக வந்து மிரட்டுகிறார். நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்தால் எப்படி கலகலப்பாக இருக்குமோ, அதேபோல் குழந்தைகள் ஒன்று சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பேயாக நடித்திருக்கும் குழந்தை, பேயாகவே மாறி வியக்க வைக்கிறது. 

    நிஷேஷின் கதாபாத்திரம் படத்தில் வித்தாசமான ஒன்று. பசங்க படத்தை போலவே, இந்த படத்திலும் கேள்வியாக கேட்டு பேயையே பயந்து ஓட வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    பணத்தாசை பிடித்தவர்களால் பேய் பங்களாவில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகள் அந்த இடத்தில் இருந்து எப்படி தப்பித்தார்கள். உலகத்தில் பேயை விட மனிதர்கள் தான் பெரிய பேய். பேயை பார்த்து மனிதர்கள் பயப்படக் கூடாது. பணத்தாசை பிடித்த மனிதர்களை பார்த்து பேய் தான் பயப்பட வேண்டும். எந்த பேயும் காசு, பணத்தை கொள்ளை அடிப்பதில்லை. கொலையும் செய்வதில்லை. மனிதர்கள் தான் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அதனை பேய் பெயரில் மறைத்துவிடுகின்றனர் என்பதை எந்த ஒரு காட்சியும் குழந்தைகளை பாதிக்காத வகையில், மது, புகைப்பழக்க காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மாரிசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். 

    படத்தில் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு கூட்டியிருப்பதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் முதல் பாதியிலும் காமெடி காட்சிகளை கொஞ்சம் இணைத்திருக்கலாம். 

    சபீர் தபாரே அலாமின் மிரட்டும் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஜி.ரவி கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `சங்கு சக்கரம்' கலகல சக்கரம்.
    கார்த்திக்ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா நடிப்பில் வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்கள் கதையாக உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ படத்தின் விமர்சனம்.
    கடலோர மீனவ குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் பால சரவணன். இவர் ரவுடி போல் தன்னை மிகைப்படுத்தி வருகிறார். இந்த சமயத்தில் பால சரவணனை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் தினேஷ் காப்பாற்றுகிறார். இதிலிருந்து இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பின்னர் பால சரவணின் வீட்டிலேயே தங்கி விடுகிறார் தினேஷ். பால சரவணனின் தங்கையான நந்திதாவை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் தினேஷ். 

    அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் சரத் லோகிதஸ்வா. இவர் மகனாக வரும் திலீப் சுப்ராயனும் அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து, அனைவரையும் துன்புறுத்தி வருகின்றார். ஒரு நாள் திலீப் சுப்ராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை, ஒரு பிரச்சனையில் தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறார் தினேஷ். இந்த பகையால் வரும் சண்டையில் திலீப் சுப்ராயனையும் அடித்து விடுகிறார் தினேஷ்.



    இதனால் ரவுடி சரத் லோகிதஸ்வா, தினேஷை கொல்ல நினைக்கிறார். ஆனால், தினேஷ் சமாதானம் பேசி திலீப்பிடம் நண்பராகி விடுகிறார். பின்னர் ஒரு நாளில் திலீப் சுப்ராயனை கொலை செய்து விடுகிறார்.

    நட்பாக பழகின திலீப்பை தினேஷ் ஏன் கொலை செய்தார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமைகளை நிருபித்து வரும் தினேஷ், இந்த படத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்திருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, கதாபாத்திரத்தை உணர்ந்து கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் எதார்த்தமாக செய்திருக்கிறார்.



    நாயகியாக நடித்திருக்கும் நந்திதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பால சரவணனின் காமெடி பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சாயா சிங்கின் நடிப்பு அருமை.

    படத்திற்கு பெரிய பலம் சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு. தனக்கே உரிய வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். அதுபோல், இவரது மகனாக வரும் திலீப் சுப்ராயனும் நடிப்பால் மனதில் நிற்கிறார். ஸ்ரீமன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன் ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.



    அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, பழிவாங்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஓட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது படத்துக்கு மிக முக்கிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கதை இழுத்துக் கொண்டே செல்வது போல் இருக்கிறது. தினேஷிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர்.

    ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னனி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளையும் மிகவும் அழகாக காட்டிருக்கிறது.

    மொத்தத்தில் ‘உள்குத்து’ சிறப்பான குத்து.
    தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா - பூமிகா சாவ்லா - பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களவாடிய பொழுதுகள்' படத்தின் விமர்சனம்.
    கால் டாக்சி டிரைவரான பிரபுதேவா காரில் சென்று கொண்டிக்கும் போது விபத்தில் சிக்கியிருந்த பிரகாஷ் ராஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வரும் பிரகாஷ் லாஜின் மனைவி பூமிகாவை பார்த்த பிரபுதேவா,  சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். 

    இதையடுத்து பிரகாஷின் விருப்பத்தின் பேரில் பிரபுதேவாவுக்கு, போன் செய்யும் பூமிகாவுக்கு தனது முன்னாள் காதலாரான பிரவுதேவா தான், தனது கணவரை காப்பாற்றியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. 



    கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பிரபுதேவாவும், பூமிகாவும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலை விரும்பாத பூமிகாவின் தந்தை, பிரபுதேவா மீது பொய் வழக்கை விழச் செய்து அவரை வெளிவர முடியாத படி செய்து வருகிறார். இந்த இடைவெளியில் தனது மகளை பிரகாஷ் ராஜுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இந்நிலையில், ஜெயில் தண்டனை முடிந்து வெளியில் வரும் பிரபுதேவா பூமிகாவுக்கு திருமணம் ஆனதை அறிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். 

    அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கால் டாக்சி டிரைவராக தனது அன்றாட வாழ்க்கையை ஏழ்மையுடன் வாழ்ந்து வருகிறார். பிரபுதேவாவின் ஏழ்மையை உணர்ந்த பூமிகா, பிரபுதேவாவின் மனைவியிடம் சில லட்சங்களை அவர்களது உதவிக்கு வைத்துக் கொள்ளும்படி கொடுத்துவிட்டு வருகிறார். தனது வாழ்க்கையில் அடுத்தவர் காசுக்கு ஆசை படாதவரான பிரபுதேவா அந்த காசை பிரகாஷ் ராஜிடம் திருப்பிக் கொடுக்கிறார். 



    தனது உயிரைக் காப்பாற்றிய, பணத்தின் மீது ஆசை கொள்ளாத பிரபுதேவாவை, பிரகாஷ் ராஜுக்கு பிடித்துப் போக தனது கம்பெனியிலேயே வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். மேலும் தன்னுடனேயே தங்கியிருக்கும்படியும் பணிக்கிறார். 

    இவ்வாறாக பிரிந்த காதலர்கள் மீண்டும் அடிக்கடி பார்க்கும் சூழல் வருகிறது. அது அந்த காதலர்கள் இருவரது உள்ளத்திலும் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

    இப்படி இருக்க பிரபுதேவா - பூமிகாவின் காதல் மீண்டும் வெளிப்பட்டதா? பிரகாஷ் ராஜுக்கு இவர்கள் முன்னாள் காதலர்கள் என்பது தெரிந்ததா? கடைசியில் அவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    பிரபுதேவா தனக்குரிய ஸ்டைலில், தங்கர் பச்சானை லயித்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதலராகவும், கணவராகவும், யார் பொருளுக்கும் ஆசைப்படாதவராக அவரது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு சாதாரண ஏழை குடிமகனாக வந்து செல்வது படத்துடன் ஒன்றியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் சரி, திருமணமான பின்னர் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி வரம் பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் பூமிகா. 

    பிரகாஷ் ராஜ் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. பெரியாராக வரும் சத்யராஜ் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சத்யன் படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர். 



    பிரிந்த காதலர்கள், திருமணத்திற்கு பிறகு நேரில் சந்தித்தால், அவர்களது சந்திப்பின் போது என்ன நடக்கும்? அவர்களது அன்பு எப்படி இருக்கும். அதை அவர்களது வாழ்க்கைத் துணை எப்படி பார்ப்பார் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் அழுத்தத்துடன் காட்டியிருக்கிறார். தான் என்ன கஷ்டத்திற்கு உள்ளானாலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர், நேர்மையான மனிதர், எதையும் எதிர்பார்க்காத அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். குறிப்பாக படத்தின் கடைசியில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவதும், அதனால் வருத்தப்படுவதும் அதன் இயற்கையை வெளிப்படையாக காட்டியிருப்பது சிறப்பு. வழக்கமான கதை தான் என்றாலும் அதை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம். 

    பரத்வாஜ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஔிப்பதிவையும் தங்கர் பச்சான் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். 

    மொத்தத்தில் `களவாடிய பொழுதுகள்' காதலர் போராட்டம்.

    ×