என் மலர்
தரவரிசை
விஜய் கே.மோகன் இயக்கத்தில் சரீஷ் - அட்சய ப்ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இமை' படத்தின் விமர்சனம்.
மதுரையில் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நாயகன் சரீஷை காதலிக்கிறார் நாயகி அட்சய ப்ரியா. விபத்தில் சிக்கிக் கொள்ளவிருந்த அட்சய ப்ரியாவை, சரீஷின் அம்மா, தனது உயிரை கொடுத்து காப்பாற்றுகிறார். சரீஷின் தாயாருடைய தியாகமும், அதனால் கார்த்தி தனி மரம் ஆனதும் சரீஷின் மீது அட்சய ப்ரியா காதல் வயப்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.
சரீஷீக்கு முதலில் அட்சய ப்ரியாவின் காதல் புரியாமல் போகிறது. ஒரு கட்டத்தில் அவளது காதலை புரிந்து கொண்டு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில், இவர்களது காதல் போலீஸ் தேிகாரியான அட்சய பிரியாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. இதையடுத்து அவர்களை பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் அட்சய ப்ரியாவின் தந்தை.

ஒரு கட்டத்தில் இருவரும் பொல்லாப்பால் பிரிகின்றனர். பின்னர் சில வருடங்கள் கழித்து, காதலர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் மீண்டும் சந்திக்கின்றனர். தங்களது காதலை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறாள் அட்சய ப்ரியா. அப்படி இருக்கையில், சரீஷ் அங்கு பெரும் தாதாவாக இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து அவரை நல்வழிப்படுத்தி, தன் நாயகனாக அடைய துடிக்கிறார் நாயகி.
கடைசியில், அட்சய ப்ரியாவின் ஆசை, நிறைவேறியதா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை பிரச்சனை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியதற்காக சரீஷீக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ரவுடியாகவும், காதலனாகவும், பள்ளி மாணவராகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அட்சய ப்ரியா படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ப வந்து ரசிக்க வைக்கிறார். நாயகியின் தோழியாக வரும் ரியா, நாயகனின் நண்பனாக வரும் வெற்றிவேல் மற்றும் மார்த்தாண்டம் படத்தில் காமெடிகளை முயற்சி செய்திருக்கின்றனர்.

நாயகன் - நாயகிக்கு இடையே ஏற்படும் காதல், ரவுடியாகும் நாயகனை திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர போராடும் நாயகி என காதலை வைத்தே படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய் கே.மோகன். வழக்கமான கதையில், சில மசாலாக்களை கலந்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அது ஓரளவுக்கே பலித்திருக்கிறது.
மிக்கு காவில் மற்றும் ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வி.கே.பிரதீப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `இமை' மூடுகிறது.
வி.டி.வி. கணேஷ் தயாரிப்பில் சந்தானம், வைபவி, விவேக், ரோபோ சங்கர், சம்பத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.
சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

இறுதியில் சந்தானம் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளித்தார்? நாயகி வைபவியை திருமணம் செய்தாரா? தாதாவான சம்பத், சந்தானத்தை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். ரோபோ சங்கரை கலாய்ப்பது, விவேக்குடன் பேசும் காட்சிகள், சம்பத்துடனான காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி நடித்திருக்கிறார். ''பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது எல்லாம் பழைய ஸ்டைலு, பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு'', ''போனவாரம் கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி வெட்டுன'' போன்ற வசனங்கள் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தி இருக்கிறார் சந்தானம்.

நாயகியாக நடித்திருக்கும் வைபவி படம் முழுக்க வருகிறார். ஆனால், அவருக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. விவேக்கின் காமெடியும், ரோபோ சங்கரின் காமெடியும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வி.டி.வி கணேஷ், சஞ்சனா சிங், மயில்சாமி, சேது, பவர்ஸ்டார் ஆகியோர் சரியான கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
தங்கைக்காக எதையும் செய்யத் துடிப்பவராக நடித்திருக்கிறார் சம்பத். சரத் லோகிதஸ்வாவும், நாராயண் லக்கியும் தங்களின் வழக்கமான வேலையை செய்துவிட்டுப் போகிறார்கள்.
குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேதுராமன். கொஞ்சம் பழைய கதை என்றாலும், அதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். விவேக், சம்பத் காட்சிகளில் பழைய டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சோர்வூட்டுகிறது. லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள், முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்கள் என அனைத்தும் படத்திற்கு தோய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றை தவிர்த்து படத்தை ரசிக்கலாம்.

சிம்புவின் இசையின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காதல் தேவதை, கலக்கு மச்சான் பாடல்களின் வரிகளும், இசையும் ரசிக்க வைக்கிறது. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சக்க போடு போடு ராஜா’ சாதாரண ராஜா.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - பகத் பாசில் - நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வேலைக்காரன்' படத்தின் விமர்சனம்.
சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின் பேச்சைக் கேட்டு கொலை உள்ளிட்ட தவறான வழிகளிலும் செல்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடனே இருந்து அவர் சொல்வதை செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது குப்பத்தின் நிலையை மாற்றி அங்குள்ள அனைவரையும் நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், அந்த குப்பத்திற்கு மட்டும் கேட்கும் எப்.எம். ஒன்றை வடிவமைக்கிறார். அதில் அந்த குப்பத்து மக்களின் பிரச்சனை என்னவென்பதை தனது குப்பத்து ஜனங்களின் மூலமாகவே உணர்த்தி, அவர்களை தொழில் செய்ய வைக்கிறார். அதேநேரத்தில் தனது குடும்ப கஷ்டத்தால் தானும் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.

பகத் பாசிலிடம் இருந்து தொழிலை கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன், தனது நண்பன் விஜய் வசந்தையும் அதே கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இந்நிலையில், விஜய் வசந்த், பிரகாஷ் ராஜால் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து பிரகாஷ் ராஜை பிடித்து கேட்கும் சிவாகார்த்திகேயனிடம், அவர் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தான் விஜய் வசந்தை கொலை செய்ய சொன்னதாக கூறுகிறார்.
மேலும் தான் கூலிக்கு கொலை செய்பவன் தான். அதேபோல் நீங்களும் அவர்களிடம் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்கள் தான் என்று பிரகாஷ் ராஜ் கூற, அதற்கான அர்த்தம் புரியாமல் இருக்கும் சிவாவிடம் பிரகாஷ்ராஜ் அவர்கள் செய்யும் வேலையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்குகிறார்.

இதையடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் மூலம், தானும் ஒரு வேலைக்காரனாக சிவகார்த்திகேயன், மக்களுக்கு எதிரான பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார்? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? கடைசியில் வேலைக்காரன் எப்படி வென்றான்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயிசம் இன்றி சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. சிவகார்த்திகேயன் படம் என்றாலே அது காமெடி கலந்துதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சியிலும், ஆக்ஷன் காட்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறலாம்.
படத்தின் இரண்டாவது பாதியில் இருந்து வந்தாலும், பகத் பாஷில் வரும் காட்சிகளும், எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல், பேசாமல் இருக்கும் அவரது நடிப்பும், புயலுக்கு பின் அமைதி என்பதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நயன்தாரா வழக்கம் போல வந்து ரசிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனை காதல் செய்யும் காட்சிகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது.
குப்பத்து ரவுடியாக வந்தது பிரகாஷ் ராஜ் மிரட்டிச் செல்கிறார். இதுவரை ஏற்காத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் சினேகாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவரது ஸ்டைலில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் வசந்த்தின் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. படத்தின் சீரியசுக்கு நடுவே ரோபோ சங்கர் அவ்வப்போது வந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
மற்றபடி தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கின்றனர். சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவாக சார்லி, ரோகிணி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என தன்னுடன் வேலைபார்க்கும் வேலைகாரர்களை கொண்டு போராடும்படியாக படம் சிறப்பாகவே வந்திருக்கிறது.

பின்னணி இசையில் அனிருத் பட்டைய கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக கருத்தவலெ்லாம் கலீஜாம் பாட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வேலைக்காரன்' வென்றான்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாவண்ணன் இயக்கி இருக்கும் ‘சொல்’ படத்தின் விமர்சனம்.
ஊட்டியில் அண்ணனுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் பாவண்ணன். மிகவும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர், எப்போதும் தூய தமிழில் தான் பேசி வருகிறார். இவருடைய அண்ணன், இவருக்கு பஸ் கண்டெக்டர் வேலை வாங்கித் தருகிறார்.
அங்கேயும் இவர் தமிழில் பேசி வருகிறார். இதனால் பொதுமக்கள் இவரை கேலியாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாயகி அஞ்சனா ராஜ் ஊட்டி வருகிறார். ஆண்களால், பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் தெரியாத அஞ்சனா ராஜ், தமிழ் தெரிந்துக் கொள்ள பாவண்ணனுடன் பழகுகிறார். இருவரும் நட்பாக பழகினாலும், பார்ப்பவர்கள் இவர்கள் காதலர்கள் என்று நினைத்து வருகிறார்கள். நாயகன் எங்கு சென்றாலும் ஜாதி ஒழிப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
தமிழ் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகன், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டார்? எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாவண்ணன், தமிழ் மீது அதிக ஆர்வமும், பற்றும் கொண்டு இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கிறார். தற்போதுள்ள இளைஞர்கள் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் சூழ்நிலை இருப்பதாகவும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

படம் முழுக்க தமிழ் மொழி பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் பாவண்ணன். தெரியாத பல வார்த்தைகள் கூட இப்படத்தில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ஒரு பாடலில் 247 எழுத்துக்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. படத்தின் நாயகி அஞ்சனா ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள், சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். தற்போதுள்ள இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கி இருக்கிறார்.
கஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். மோகனராமனின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொல்’ விழிப்புணர்வு.
அங்கேயும் இவர் தமிழில் பேசி வருகிறார். இதனால் பொதுமக்கள் இவரை கேலியாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாயகி அஞ்சனா ராஜ் ஊட்டி வருகிறார். ஆண்களால், பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் தெரியாத அஞ்சனா ராஜ், தமிழ் தெரிந்துக் கொள்ள பாவண்ணனுடன் பழகுகிறார். இருவரும் நட்பாக பழகினாலும், பார்ப்பவர்கள் இவர்கள் காதலர்கள் என்று நினைத்து வருகிறார்கள். நாயகன் எங்கு சென்றாலும் ஜாதி ஒழிப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
தமிழ் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகன், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டார்? எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாவண்ணன், தமிழ் மீது அதிக ஆர்வமும், பற்றும் கொண்டு இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கிறார். தற்போதுள்ள இளைஞர்கள் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் சூழ்நிலை இருப்பதாகவும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

படம் முழுக்க தமிழ் மொழி பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் பாவண்ணன். தெரியாத பல வார்த்தைகள் கூட இப்படத்தில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ஒரு பாடலில் 247 எழுத்துக்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. படத்தின் நாயகி அஞ்சனா ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள், சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். தற்போதுள்ள இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கி இருக்கிறார்.
கஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். மோகனராமனின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொல்’ விழிப்புணர்வு.
நகுல், ஆஷ்னா சவேரி, சித்தார்த் விபின், மொட்டை ராஜேந்திரன், சோனா, நீது சந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிரம்மா.காம்’ படத்தின் விமர்சனம்.
விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள்.

இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல சிக்கல்களும் நகுலுக்கு ஏற்படுகிறது. இறுதியில் நகுல், இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டாரா? மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாரா? நகுல் - அஷ்னாவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நகுல், தன்னுடைய துறுதுறுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினாலும், இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆஷ்னா சவேரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சித்தார்த் விபின் நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட உபயோகப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஜெகன் காமெடிகள் சிறப்பு. சோனா, நீதுசந்திரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பல ஆள்மாறட்ட படங்கள் வெளிவந்தாலும், இப்படத்தில் வித்தியாசமான திரைக்கதைக் கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் புரஸ் விஜயகுமார். ஓரளவிற்கு மட்டுமே வெற்றிக் கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். தன்னை விட தகுதி குறைந்தவர் உயரிய பதவியில் இருப்பதால், தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் பிரம்மா என்பவர் குறிக்கிட்டு வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். வாழ்க்கை ஒருவனுக்கு பிடித்த மாதிரி நகர்ந்தால் கடவுளை வாழ்த்துவதும், பிடிக்கவில்லை என்றால் கடவுளை திட்டுவதுமாக பலர் இருக்கிறார்கள். கொடுத்த வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்ற கருத்தை பேன்டஸி மூலம் சொல்ல வந்திருக்கிறார். சுவாரஸ்யமான திரைக்கதை இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘பிரம்மா.காம்’ பிரம்மாண்டம் குறைவு.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அருவி' படத்தின் விமர்சனம்.
அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் அதிதியின் பெற்றோர் அதிதியை வெறுத்து ஒதுக்குகின்றனர். தமது மகள் தவறான வழிக்கு போனதால் தான் அவளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். பின்னர் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார்.

பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட அதிதியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதில் தனது வாழ்க்கையில் நடந்தது குறித்து கூறும் அதிதி, அதனை போலீசில் சொல்கிறார்.
இவ்வாறாக வீட்டை விட்டு வெளியேறியது முதல் அதிதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்னென்ன தொல்லைகளுக்கு உள்ளானார்? அவருக்கு எச்.ஐ.வி. தொற்று எப்படி வந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அருவி என்ற கதாபாத்திரத்தில் அதிதி பாலன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு தான் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக படத்தின் முடிவில் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாக, அதிதியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மொத்த படத்தையே தனது தோளில் தாங்கிச் செல்கிறார். லக்ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
எச்.ஐ.வி. பாதித்த ஒருவரின் வாழ்க்கை, வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஒரு பெண் என்னென்ன இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். என்றாலும் கதைக்கு ஏற்ப திரைக்கதையின் போக்கை அமைக்காமல், கமர்ஷியல் வாசம் வீச வேண்டும் என்பதற்காக இணைத்திருக்கும் காட்சிகள் படத்தின் போக்கை மாற்றுகிறது. வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `அருவி' ஒன்மேன் ஆர்மி.
அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் கோகுல் ஆனந்த் - அஞ்சு குரியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் விமர்சனம்.
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் பாஸ்போர்ட், பணத்தையும் பறிகொடுக்கிறார்.
இவ்வாறாக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கோகுல் ஆனந்த் சொந்த நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அங்கு நடக்கும் ஷூட்டிங் ஒன்றை பார்த்து, அங்கு செல்கிறார். அங்கு வீடியோ எடுக்கும் சத்யாவிடம் தான் ஒரு இயக்குநர் என்று கூறி தனது நிலையை கூறி உதவியையும் கோருகிறார்.

பின்னர் இருவரும் நண்பர்களாகின்றனர். சத்யா தனக்கு தெரிந்த தயாரிப்பாளரிடம் பேசி கோகுல் ஆனந்துக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக அவரிடம் அழைத்து செல்கிறார். அந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் அது காதல் படமாக இருக்க வேண்டும், அந்த படத்தில் தானும், தனது மனைவியும் நாயகன், நாயகியாக நடிப்போம் என்றும் கூறுகிறார்.
இந்நிலையில், இந்தியா செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்கும் முயற்சியிலும் கோகுல் ஈடுபடுகிறார். பாஸ்போர்ட் கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் கோகுல், அங்கு அழுது கொண்டிருக்கும் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே நாயகியுடன் காதல் ஏற்படுகிறது. அவளுடன் பேச்சுக் கொடுத்து அவளது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டு அதையே படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்கிறார்.

இந்த முயற்சியில், அஞ்சு குரியனுக்கு கேன்சர் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார். பின்னர் அஞ்சு குரியனின் சிகிச்சைக்காக தயாரிப்பாளரை ஏமாற்றி ஒரு பெரிய தொகையையும் வாங்கி விடுகிறார். இதையடுத்து அந்த தயாரிப்பாளர் கோகுல் ஆனந்த்தை பழிவாங்க முடிவு செய்கிறார்.
கடைசியில் கோகுல் ஆனந்த் இயக்குநராக அவதாரம் எடுத்தாரா? இந்தியாவுக்கு திரும்பினாரா? அஞ்சு குரியன் உடல்நலம் பெற்று திரும்பி வந்தாரா? கோகுல் ஆனந் - அஞ்சு குரியன் இணைந்தார்களா? பழிவாங்க துடிக்கும் தயாரிப்பாளர் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்குநராக சாதிக்க துடிக்கும் இளைஞராக கோகுல் ஆனந்தின் நடிப்பு சிறப்பு. அவருக்கு வரும் கஷ்டங்கள், அதை அவர் எதிர்கொள்ளும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இவருடன் இணைந்து சத்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. சத்யாவின் காமெடிக்கு சிரிப்பு வந்தாலும், பல இடங்களில் அவரது காமெடி எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் புதுமையான காமெடிக்கு முயற்சித்திருக்கும் இந்த கூட்டணிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

அஞ்சு குரியன் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கிறார். காதல் காட்சிகள், பாடல் என அவரது நடிப்பும் சிறப்பு. மற்றபடி எம்சி ஜெஸ், ராஜேஷ் பாலசந்திரன், ஷிவ் கேசவ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
இயக்குநராக ஆசைப்பட்டு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை காதல், காமெடி என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். படத்தில் காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதற்கு ஜிப்ரானின் இசை முக்கிய காரணமாக அமைகிறது. இவர்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது. கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `சென்னை 2 சிங்கப்பூர்' காமெடி பயணம்
வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் நந்தன் ராம் - வெண்பா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பள்ளிப் பருவத்திலே' படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா மறுக்கிறார். இருப்பினும் விடாப்பிடியாக வெண்பா பின்னால் சுற்றித் திரியும் தனது மகனை தான் சரியாக வளர்க்கவில்லையோ என்ற மனவேதனையில் கே.எஸ்.ரவிக்குமார் பள்ளியிலேயே உயிரை விடுகிறார்.

இந்த நிலையில், வெண்பாவுக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இருப்பினும், வெண்பா தன்னை காதலிப்பதாகவே நினைக்கும் நந்தன் ராம், வெண்பாவை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.
கடைசியில் நந்தன் ராம் - வெண்பாவை கரம் பிடித்தாரா? அல்லது வெண்பா அவர்களது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தாரா? உண்மையில் வெண்பா, நந்தன் ராமை காதலித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்தை.
மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகத்துடன் நந்தன் ராமின் நடிப்பு சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரை நாயகி மீதான தனது காதலில் உறுதியுடன் இருக்குமட கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசியுடன் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெண்பாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பொங்கி வரும் காதலையும் அடக்கிக் கொண்டு குடும்பப் பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் தலைமை ஆசிரியராகவே வாழ்ந்திருக்கிறார். ஊர்வசி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் ஆக்ரோஷமாகவும், பாசமான சித்தப்பாவாகவும் வந்து மிரட்டுகிறார். பொன்வண்ணன், ராமதாஸ், சுஜாதா சிவக்குமார், தம்பி ராமையா, வேல்முருகன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கஞ்சா கருப்பு படம் முழுக்க வருகிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார்.
பள்ளி படிப்பின் போது ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனை, அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள் என பள்ளிப் பருவத்தை நினைவுபடுத்திய இயக்குநர் வாசுதேவ் பாஸ்கருக்கு பாராட்டுக்கள். முதல் பாதி, பள்ளி படிப்பு, காதல், காமெடி என விறுவிறுப்பாக சென்றாலும், திரைக்கதைக்கு ஏற்றவாறு முதல் பாதியில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இரண்டாவது பாதியில் செண்டிமண்ட் காட்சிகள் மூலம் கண்கலங்க வைத்திருக்கிறார்.
விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பள்ளிப் பருவத்திலே' பழைய நினைவுகள்.
சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷான் - லாவண்யா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாயவன்' படத்தின் விமர்சனம்.
போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன் குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போது, திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப்பையும் அவர் கொலை செய்ய முயற்சி செய்ய, சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தீப் உடல்நிலை சரியான பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார்.

லாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்கிறார். முதல் கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் மனதளவில் பயப்படும் அவரை பார்க்க வரும் லாவண்யா, அவருக்கு சிகிச்சை அளித்து தேற்றி அனுப்ப குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கிறார் சந்தீப்.
இந்நிலையில் மூன்றாவது கொலை நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நினைக்கும் சந்தீப், முதல் இரு கொலைகளை செய்தவர்களின் செய்கையும், மனநல நிபுணரான டேனியல் பாலாஜியின் செய்கையும் ஒரே மாதிரி இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் டேனியல் பாலாஜியை யாரோ இயக்குவதையும் தனது குழு மூலம் கண்டுபிடிக்கிறார்.

கடைசியில், சந்தீப் அந்த மாயவனை கண்டுபிடித்தாரா? தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார்? ஏன் இந்த கொலைகளை செய்கிறான்? டேனியல் பாலாஜி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சந்தீப் ஒரு போலீஸ் அதிகாரியாக வாழ முயற்சி செய்திருக்கிறார். மாயவன் யார் என்பதே தெரியாமல் குழம்பும் காட்சிகள், லாவண்யாவுடன் சண்டை பிடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. லாவண்யா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சந்தீப் - லாவண்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஜேக்கி ஷெராப் இராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி இந்த படத்திலும் மிரட்டியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. மற்றபடி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பகவதி பெருமாள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
முதலில் படம் முழுக்க விறுவிறுப்பை கூட்டும்படி எடுத்திருக்கும் இயக்குநர் சி.வி.குமாருக்கு பாராட்டுக்கள். கொலை பற்றிய விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை எளிதில் சொல்லும் படி இருந்தாலும், அதற்கான திரைக்கதை எளிதில் புரியும்படியாக இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. மாயவன் யார் என்பதில் த்ரில், டுவிஸ்ட் வைத்து காட்டியிருப்பது சிறப்பு. ஒரு நல்ல முயற்சி.

பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `மாயவன்' ரகசியமானவன்.
நிவின்பாலி, ஷ்ரதா, ஷ்ரதா ஸ்ரீநாத், நட்டி, லட்சுமி பிரியா ஆகியோர் நடிப்பில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ‘ரிச்சி’ படத்தின் விமர்சனம்.
பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார்.
இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா. அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.

நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன? ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டந்தே' படத்தின் ரீமேக்காக 'ரிச்சி' உருவாக்கி இருக்கிறார்கள். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் நிவின் பாலி. வெற்றிலை வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், வித்தியாசமான நடை என நிவின் பாலி ரௌடிக்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

நட்ராஜ் இந்தப் படத்தில் படகு மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவிடம் எப்படியாவது காதலை ஏற்க வைக்க முயற்சிப்பதும், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சி என அசத்தியிருக்கிறார். குறிப்பாக புலியாட்டம் ஆடும் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
படம் ஆரம்பத்தில் ஷ்ரத்தாவை சுற்றி கதை நகர்கிறது. ஆனால், அதிகமான காட்சிகள் அவருக்கு இல்லை. கதை கேட்கிற காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தின் இறுதியில் கண் கலங்கும் காட்சியில் பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார். மீன் விற்கும் பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் லட்சுமி பிரியா.
நிவின் பாலியின் அப்பாவாகவும், ஊர் சர்ச் பாதராகவும் மனதில் பதிகிறார் பிரகாஷ்ராஜ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ராஜ் பரத்.

கதாபாத்திரங்கள் எவரும் குறை சொல்ல முடியாதளவிற்கு நடித்தாலும், படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் செல்கிறது. மூன்று பேர் கோணத்தில் திரைக்கதையை அமைத்து, அதில் சுவாரஸ்யம் இல்லாமல் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். கதைகளம் வலிமையாக இருந்தாலும், சொன்ன விதம் வலிமை இல்லாமல் இருக்கிறது. நீண்ட காட்சிகள், தேவையில்லாத காட்சிகள் என படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைத்திருக்கிறார். ராவாக படத்தை இயக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதியில் திரைக்கதை தெளிவில்லாமலேயே நகர்கிறது. ரிச்சியின் வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கதை சொல்லும் போக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
அஜனீஷ் லோக்நாத் இசையில் ஒரே பாடல் மட்டுமே படத்தில் இடம் பிடித்திருக்கிறது. அந்தப் பாடலும் கேட்கும் வித்தத்தில் அமைந்தது சிறப்பு. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார். நிவின் பாலியின் பி.ஜி.எம், புலியாட்டத்தின் போது ஒலிக்கும் ரணகளமான பறை இசை ஆகியவை படத்தின் களத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இருட்டில் அமைக்கப்பட்டாலும் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார்.
மொத்தத்தில் ‘ரிச்சி’ ஏமாற்றுகாரன்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் - ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சத்யா' படத்தின் விமர்சனம்.
சிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.
இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் சிபிராஜ், அங்கு இருக்க பிடிக்காமல் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். சிபிராஜ் உடன் யோகி பாபுவும் பணியாற்றி வெளிநாட்டிற்கு செல்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு சிபிராஜுக்கு போன் செய்யும் ரம்யா நம்பீசன், தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், சிபிராஜ் வந்து கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.

இதையடுத்து மீண்டும் சென்னை வரும் சிபிராஜ், ரம்யா நம்பீசனின் குழந்தை என்ன ஆனது என தேட ஆரம்பிக்கிறார். அப்போது அப்படி ஒரு குழந்தையே கிடையாது என ரம்யா நம்பீசனின் கணவர் கூறுகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் ரம்யா நம்பீசன் கோமா நிலைக்கு சென்றதாகவும், கண்முழித்த பிறகு தனத குழந்தை எங்கே என்று கேட்பதாகவும் ரம்யாவின் கணவன் கூறுகிறார். கற்பனையில் குழந்தை இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தனக்கு குழந்தை இருப்பது உண்மை என ரம்யா திட்டவட்டமாக கூறுகிறாள்.
கடைசியில், என்ன நடந்தது? சிபிராஜ் யார் சொன்னதை நம்பினார்? ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையை தேடினாரா? உண்மையிலேயே குழந்தை கிடைத்ததா? அல்லது ரம்யாவின் கற்பனை தானா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்தை.

வழக்கம் போல சிபிராஜ் தனது அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் நடித்திருக்கும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிராஜுக்கு நல்ல ஏற்றத்தை கொடுக்கும் படமாக சத்யா படம் இருக்கும். குறிப்பாக ரம்யா நம்பீசனுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
ரம்யா நம்பீசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜின் காதலியாகவும், குழந்தையை இழந்த ஒரு தாயாகவும் ரம்யா நம்பீசன் நடிப்பு கவரும்படியாக இருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதேபோல் ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. யோகி பாபு தனது பங்குக்கு காமெடியில் சிரிக்க வைக்கிறார். சதீஷ் இந்த படத்தில் மாறுபட்டு காமெடி இல்லாமல், பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாகவே வேலை வாங்கி இருக்கிறார். தெலுங்கில் ஷனம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. திரைக்கதையில் இருக்கும் ட்விஸ்ட் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
சிமோன் கே.எஸ் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண்மணி பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `சத்யா' த்ரில்லானவன்.
ரஜினி ரசிகராக கபாலி செல்வா இயக்கிய நடித்துள்ள `12-12-1950' படத்தின் விமர்சனம்.
ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் ஆகிய 4 பேரும் நண்பர்கள். இவர்களுக்கு குங் பூ சொல்லிக் கொடுக்கும் மாஸ்டரான கபாலி செல்வா தீவிர ரஜினி ரசிகர். சிறு வயதில் இருந்தே ரஜினி மீது தீவிர பக்தியுடன் இருக்கும் கபாலி செல்வாவை பார்த்து, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்களும் ரஜினியின் ரசிகர்களாகவே வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதி கவுன்சிலர், ரஜினி படத்தின் போஸ்டரை கிழிப்பதை பார்க்கும் கபாலி செல்வா அவருடன் சண்டை பிடிக்கிறார்.
இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கபாலி செல்வா அவரை தள்ளிவிட அவர் அருகிலிருந்த கம்பி மீது விழுந்து உயிரிழக்கிறார். இந்த குற்றத்திற்காக கபாலி செல்வாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கும் செல்கிறார். பின்னர் சில நாட்களில் ரஜினி நடிப்பில் கபாலி படம் திரைக்கு வருகிறது.

அந்த படத்தை பார்க்க ஆசைப்படும் கபாலி செல்வாவை, பரோலில் வெளியே கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அதேநேரத்தில் செல்வாவை ரஜினியுடன் சந்திக்க வைக்கவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் படம் ரிலீசுக்கு பரோல் கிடைக்காது என்பதால், சாகும் நிலையில் இருக்கும் செல்வாவின் 100 வயது மதிக்கத்தக்க தாத்தாவை பட ரிலீசின் போது கொலை செய்ய முடிவு செய்ய, அதற்கு முன்பே அவர் இறந்து விடுகிறார்.
இதையடுத்து படம் ரிலீசாகும் சமயத்தில் அவரது இறந்துவிட்டதாகக் கூறி பரோல் வாங்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில், போலீசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தம்பி ராமைய்யா, வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை ரமேஷ் திலக் மற்றும் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துவிடுகின்றனர். இதையடுத்து செல்வாவை வெளியே கொண்டு வர பரோல் வாங்கி தராவிட்டால் அவரது மனைவியிடம் அந்த வீடியோவை காட்டிவிடுவதாக தம்பி ராமைய்யாவை மிரட்டுகின்றனர்.

அதே நேரத்தில் வெளியே வரும் செல்வாவை கொலை செய்ய கவுன்சிலரின் தம்பியும் திட்டம் போடுகிறார். கடைசியில் கபாலி செல்வா பரோலில் வெளியே வந்தாரா? கபாலி படத்தை பார்த்தாரா? ரஜினியை சந்தித்தாரா? கவுன்சிலர் தம்பியின் திட்டம் என்ன ஆனது? கபாலி செல்வாவின் ஆசை முழுமை அடைந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கபாலி செல்வா ஒரு ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பும், ரஜினி ரசிகராக அவர் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் உள்ளிட்ட 4 பேரின் நடிப்பும் கதைக்கு பக்கபலமாகவே இருக்கிறது. 4 நண்பர்கள் சேர்ந்தால் என்ன கலகலப்பு இருக்குமோ அதை பார்க்க முடிகிறது. யோகி பாபு காமெடியில் ரசிக்க வைக்கிறார். கபாலி செல்வாவுக்கு அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாகவும், கமல் ரசிகராகவும் தம்பி ராமையா அவரது ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகர் ஒருவருக்கு, அவரது படத்தை ரிலீஸ் ஆகும் நாளில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை மையப்படுத்திய கதையை காமெடி, சண்டை என அனைத்தும் கலந்து கொடுக்க கபாலி செல்வா முயற்சி செய்திருக்கிறார். அது ஓரளவுக்கு பலித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இது ஒரு ரஜினி ரசிகரின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையப்படுத்தியே செல்வதால், சுவாரஸ்யம் அதிகமில்லை.
ஆதித்யா, சூர்யா, டபாஸ் நாயக் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. விஷ்ணு ஸ்ரீ கேவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாகவே வந்திருக்கிறது.
மொத்தத்தில் `12-12-1950' விழா நாள்.






