என் மலர்tooltip icon

    தரவரிசை

    சசிகுமார், மகிமா, பூர்ணா, சனுஷா, பசுபதி, வித்தார்த் ஆகியோர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் விமர்சனம்.
    ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்கு பிடித்து விடுகிறது. சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரை திருமணம் செய்துக்கொள்ள மகிமாவிடம் கேட்கிறார்.

    அதற்கு மகிமா, உன் அண்ணனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், என் அண்ணன் வித்தார்த்தை திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு சசிகுமார் சம்மதம் தெரிவிக்கிறார்.

    இந்நிலையில், வட்டாட்சியரான வித்தார்த்தை அதே ஊரில் இருக்கும் பசுபதி, தன் தங்கையின் கணவர் விஷயத்தில் அவர் பிரச்சனை செய்வதால், வித்தார்த்தை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

    வித்தார்த்தை விட்டுவிடும்படி பசுபதியிடம் கேட்கிறார் சசிகுமார். ஆனால் பசுபதியோ தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார். இறுதியில் பசுபதி, வித்தார்த்தை கொலை செய்தாரா? வித்தார்த்தை சசிகுமார் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், குறி சொல்பவராகவும், தங்கை மீது பாசம் கொண்டவராகவும், கோபம் வந்தால், வீரனாகவும் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மகிமா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் சனுஷா. ’’இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே" என்று அண்ணனை புகழ்ந்து பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் பூர்ணாவின் நடிப்பு அருமை. இப்படத்திற்காக மொட்டைப் போட்டு, வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் பசுபதி. இவர் ’’நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்" என்று சசிகுமாரை புகழ்ந்து பேசுவது ஏற்கமுடியவில்லை. வட்டாட்சியராக வந்து மனதை கவர்ந்திருக்கிறார் வித்தார்த்.

    குட்டிப்புலி, கொம்பன், மருது பட வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வெட்டு, குத்து, காட்சிகளை குறைத்திருக்கலாம். கர்ப்பிணி தாய் தற்கொலை செய்யும் காட்சி நெருடலை தருகிறது.

    ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். கதீரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் ‘கொடி வீரன்’ பாசக்காரன்.
    தேஜ் சரண்ராஜ், ஷிவானி நடிப்பில் ஆறுபடையப்பன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘லாலி’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தேஜ் சரண்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தேஜின் அம்மா அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் டீச்சராக இருக்கும் ஷிவானி, தேஜை காதலித்து வருகிறார். வழக்கமாக இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில், வீடுகளை அபகரித்து வருபவர், தேஜ் இருக்கும் வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.

    இதற்காக வீட்டுக்கு அடியாட்களை அனுப்புகிறார். தன் அம்மா குளிப்பதாக சொல்லி அடியாட்களை அனுப்பி விடுகிறார். அதுபோல், மறுநாள் தேஜின் மாமா வீட்டிற்கு வருகிறார். அவரிடம் அம்மா எங்கே என்று கேட்க, அதற்கு வீட்டிற்குள் சென்று, அம்மா போல் குரல் மாற்றி பேசுகிறார்.

    தேஜ், தன் அம்மாவை மறைப்பதற்கு காரணம் என்ன? தேஜின் வீட்டை அபகரித்தார்களா? இதன் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.


    பிரபல வில்லன் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோ தனமான நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி, தேஜை காதலிப்பதாகவும், அவரை மேல் பாசத்துடனும் நடித்து ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.

    சைக்கோ திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆறுபடையப்பன். தாய், மகன் பாசத்தை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் பெரியதாக படம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் திரைக்கதை தோய்வு ஏற்பட்டிருக்கிறது. பல காட்சிகள் முந்தைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்து கிறது. அடுத்தடுத்து என்ன காட்சிகள் நடக்கும் என்பது யூகிக்க முடிகிறது.

    ராம் கோபால் கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையும் எடுபடவில்லை. நாகபுஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘லாலி’ போலி.
    ஜி. ஸ்ரீனிசிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - டயானா சாம்பிகா - ஜுவல் மேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அண்ணாதுரை' படத்தின் விமர்சனம்.
    அண்ணாதுரை, தம்பிதுரை என முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி, தனது காதலியின் மறைவால் அவளது நினைவிலேயே வாடுகிறார். குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார். தப்பு என்று தெரிய வந்தால் அதனை தட்டிக் கேட்க முதல் ஆளாக வரும் அண்ணாதுரை, யாராவது உதவி என்று வந்தால் கர்ணனாகவே மாறிவிடுகிறார்.  

    அதேநேரத்தில் காதலியின் நினைவிலேயே இருக்கும் அண்ணாதுரை, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஆனால் அண்ணாதுரை மீது ஜுவல் மேரிக்கு, காதல் வருகிறது. ஆனால் அவளது காதலை ஏற்க மறுக்கிறார் அண்ணாதுரை.



    மறுபுறத்தில் தம்பிதுரையாக வரும் மற்றொரு விஜய் ஆண்டனி அமைதியானவராக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். பி.டி மாஸ்டராக இருக்கும் அவருக்கு, டயானா சாம்பிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருந்தி வாழ முடிவு செய்யும் அண்ணாதுரை, ஜுவல் மேரியை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார்.

    அதற்கு முன்னதாக தனது குடிப்பழக்கத்தை விட முடிவு செய்து, பாருக்கு செல்கிறார். அங்கு நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கிறார். அதற்கு பொறப்பேற்றுக் கொண்டு அண்ணாதுரை சிறைக்கு செல்கிறார். பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் அண்ணாதுரை, சிறை வாசலில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுவதை பார்க்கிறார். அதிலும் அந்த கொலையை தம்பிதுரை செய்வதை பார்க்கும் அண்ணாதுரை அதிர்ச்சி அடைகிறார்.



    அண்ணாதுரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன? அமைதியான இருக்கும் தம்பிதுரை கொலைகாரனாக மாறியது எப்படி? அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது? அண்ணாதுரை ஜுவல் மேரியுடன் சேர்ந்தாரா? தம்பிதுரை டயானா சாம்பிகாவை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அண்ணன், தம்பி என முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி வழக்கம் போல தனது எதார்த்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ரவுடி, பொறுமையானவன், காதலன், மகன் என பல்வேறு கோணங்களில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. இரண்டு வேடங்களிலும் நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். அதுபோல், விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது. முதல் படம் போல இல்லாமல் தேர்ச்சி பெற்றவராக எடிட்டிங்கிலும் விஜய் ஆண்டனி கலக்கி இருக்கிறார். 



    டயானா சாம்பிகாவுக்கு இது முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஜுவல் மேரி ரசிகர்களை கவரும்படியாக நடித்திருக்கிறார். அவரது முகபாவணையும், பேச்சும் அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது. காளி வெங்கட் காமெடியில் கலக்கியிருக்கிறார். ராதாரவி, நளினி காந்த், மொட்டை ராஜாகுமார், ரிந்து ரவி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டயானா சாம்பிகாவின் அப்பாவாக வரும் செந்திலின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த செந்தில், இப்படம் முழுவதுமே வலம் வந்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வழக்கம் போல வரும் அண்ணன், தம்பி கதை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஸ்ரீனிசானுக்கு பாராட்டுக்கள். முதல்  பாதி அண்ணாதுரையை மையப்படுத்தியே  சென்றாலும், இரண்டாவது பாதியில் முற்றிலும் மாறுபட்டு தம்பிதுரையை மையப்படுத்தி உருவாக்கி இருப்பது புதுமையாக ரசிக்கும்படி இருக்கிறது. 



    விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கே.தில்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `அண்ணாதுரை' இரட்டைவிருந்து.

    சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருட்டுபயலே-2 படத்தின் விமர்சனம்.
    காவல்துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் முக்கிய பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் பணியை செய்து வருகிறார். நேர்மையாக இருந்ததால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாபி சிம்ஹா ஒரு கட்டத்திற்கு மேல் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது என்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்.

    அப்போது அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன் காலை ஒட்டுக் கேட்கிறார். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை திருடிவிடுகிறார். மேலும் சிலரது பேச்சை ஒட்டுக் கேட்டு அவர்களிடம் இருந்தும் காசை பறிக்கிறார். மறுபுறத்தில் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீட்டிலேயே தனியாக இருக்கும் அமலாபால் பேஸ்புக்கே கதியென இருக்கிறார்.

    இந்நிலையில், அமலா பால் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அதில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், பாபி சிம்ஹாவின் வேலையான ஒட்டுக் கேட்பது பற்றி பேசுகின்றனர். இதையடுத்து தனது நண்பர்களது போன் கால்கள் மற்றும் அமலாபாலின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் பாபிசிம்ஹா. இதில் திருமணமான பெண்களிடம் தகாத முறையில் பேசி வரும் பிரசன்னாவை நோட்டம் விடுகிறார்.

    ஒரு நாள் பிரசன்னா, அமலா பாலிடம் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா அவரை போலீஸ் மூலம் அடித்து நொறுக்குகிறார். இந்நிலையில், பிரசன்னாவின் பேச்சு திசைமாறுவதை உணர்ந்த அமலா பால், அவரிடம் பேசுவதை தவிர்க்கிறார். இந்நிலையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா செய்யும் தில்லாங்கடி வேலைகள் குறித்த தகவல்களை பிரசன்னா சேகரித்து அவரை பழிவாங்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் அமலா பாலை அடையவும் முயற்சி செய்கிறார்.

    கடைசியில், நேர்மையான போலீஸ் என பெயர் வாங்கிய பாபி சிம்ஹா தனது பெயரை காப்பாற்றிக் கொண்டாரா? பிரசன்னாவின் திட்டம் என்ன ஆனது? பாபி சிம்ஹாவும் திருட்டு பையன் தான் என்பதை பிரசன்னா நிரூபித்தாரா? அமலா பால் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

    மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா சிறப்பாகவே நடித்திருக்கிறார். அமலா பாலுடனான காதல் காட்சிகளிலும் சரி, போன் கால்களை ஒட்டுக் கேட்கும் போதும் அவரது நடிப்பும், தோரணையும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பாபி சிம்ஹாவுக்கு சரி சமமான கதாபாத்திரத்தில் பிரசன்னாவின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மொத்தத்தில் இருவருமே திருட்டுப்பயலேவாக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

    காதல், கிளாமர், பேஸ்புக்கே கதி என இருக்கும் வீட்டுப் பெண்ணாக அமலாபால் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் கிளாமர் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விவேக், ரோபோ ஷங்கர் காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.

    ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, அதனால் அவர்கள் என்ன தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. தொழில்நுட்பம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். குறிப்பிட்ட இடங்களில் வரும் வசனங்களும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தை ரசிக்கும்படியாக இருக்கிறது. எனினும் ஒரு சில காட்சிகளில் தொய்வு ஏற்படும்படியாக இருக்கிறது என்றாலும் அதுவும் பெரிதாக தெரியவில்லை.

    வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ரசித்துக் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.செல்லதுரை ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் `திருட்டுபயலே-2' நல்ல பையன்.
    குரு ஜீவா, ஆரா, பாண்டியராஜன், இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா ஆகியோர் நடிப்பில் தண்டபாணி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் குரு உச்சத்துல இருக்காரு படத்தின் விமர்சனம்.
    பட்டதாரியான நாயகன் குரு ஜீவா வேலைக்கு ஏதும் போகாமல், ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். இவரது அப்பா எந்த வேலைக்கும் போகாததால், இவரும் அதே வழியில் பின் பற்றி வருகிறார். ஊர் தலைவரின் பெண்ணான நாயகி ஆராவை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரை சந்திப்பதற்காக ஊரில் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு ஊர் தலைவர் வீட்டுக்கு சென்று வருகிறார். ஒரு கட்டத்தில் ஆராவிற்கு குரு ஜீவாவின் காதலை ஏற்று இருவரும் காதலித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், குரு ஜீவாவின் நண்பரின் பாட்டி இறந்து விடுகிறார். இவரை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். அப்போது ஊர் மக்கள் அனைவரும் பணத்தை திரட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு, இனிமேலாவது பணம் சம்பாரிக்க முயற்ச்சி செய்யுங்கள் என்று அறிவுறை கூறுகிறார்கள்.

    இதே சமயம், ஊரின் எம்.பி.யாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நேர்மையானவர். எந்த ஊழலும் செய்யாதவர் என்று மக்களை நம்பவைத்து வருகிறார். ஆனால், 100 கோடி ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் டிரைவரிடம் கொடுத்து காட்டுக்குள் பதுக்கி வைக்க சொல்கிறார். பணத்தை மறைத்து வைத்த டிரைவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.

    பணம் இருக்கும் விஷயம் அறிந்த குரு ஜீவா, தன் ஊரில் இருக்கும் பாண்டியராஜன், இமான் அண்ணாச்சி மற்றும் நண்பர் ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார். எம்.பி.யான எம்.எஸ்.பாஸ்கரும் பணத்தை தேடி செல்கிறார்.

    இறுதியில் அந்த பணம் யாருக்கு கிடைத்தது? குரு ஜீவாவும் ஆராவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குரு ஜீவா, தன்னால் முடிந்த வரை நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் பாண்டியராஜனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல், இமான் அண்ணாச்சி, எம்.பியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், எதிர்கட்சியை சேர்ந்த நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பணம் மட்டுமே மூலக்கதையாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தண்டபாணி. இதில் காதல், காமெடி கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், இந்த திரைக்கதை ஒரு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டியராஜனை இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தி இருக்கலாம். காட்டுக்குள் லொகேஷன்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்.

    தாஜ் நூர் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். தளபதி குரேசியின் ஒளிப்பதிவு காட்டுப்பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘குரு உச்சத்துல இருக்காரு’ சுமாரா இருக்காரு.
    ராம்கி, மீனாட்சி, சஞ்சீவ், ஸ்ரீஜா, சிங்கமுத்து நடிப்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இங்கிலீஷ் படம்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் நாயகன் சஞ்சீவ் வேலை ஏதும் செய்யாமல், தன்னுடைய மாமா சிங்கமுத்துவுடன் ஊரை சுற்றி வருகிறார். பிக் பாக்கெட் தொழில் செய்து வரும் நாயகி ஸ்ரீஜாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சஞ்சீவ் வேலையில்லாமல் இருப்பதை அறிந்த குமரேஷ் குமார் என்பவர் ஒரு பேய் பங்களாவில் தங்கினால், பணம் நிறைய தருவதாக கூறுகிறார்.

    பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பங்களாவில் சஞ்சீவ் மற்றும் சிங்கமுத்து தங்குகிறார்கள். அந்த பங்களாவில் பேய் ஒரு உருவம் அவர்களை மிரட்டுகிறது. இவர்களை மிரட்டுவதற்காக நாயகி ஸ்ரீஜாவை ஒப்பந்தம் செய்கிறார் குமரேஷ் குமார். ஒரு வழியாக பேய் மிரட்டலுக்கு பயந்து இரவு முழுவதும் பங்களாவில் தங்கிவிடுகிறார்கள். மறுநாள் காலை, பெரிய தாதாவாக இருக்கும் ராம்கி அந்த வீட்டிற்கு வந்து சஞ்சீவை விரட்டுகிறார்.

    அதுபோல் நாயகி ஸ்ரீஜாவையும் விரட்டுகிறார். சஞ்சீவும், ஸ்ரீஜாவும் பணத்திற்காக தங்களை ஒப்பந்தம் செய்த குமரேஷ் குமாரை தேடுகிறார்கள். அவரும் எனக்கும் பணம் தருவதாக கூறி உங்களை ஒப்பந்தம் செய்ய சொன்னார்கள். ஆனால், பணம் தரவில்லை. இதற்கு அந்த தாதா ராம்கி தான் காரணம் என்று கூறுகிறார்.

    இறுதியில் தங்களை ஏமாற்றிய ராம்கியை பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சீவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பாடல், நடனம், ரொமன்ஸ், பேய்க்கு பயப்படுவது என நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகி ஸ்ரீஜா, பிக் பாக்கெட் பெண், பேயாக பயமுறுத்துதல் என நடித்திருக்கிறார். கிளாமர் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தாதாவாக தோன்றியிருக்கிறார் ராம்கி. மாடர்னாகவும் லோக்கல் தாதாவாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல், மீனாட்சியும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

    வழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். பல இடங்களில் திரைக்கதை மந்தமாக செல்கிறது. லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. கடைசியில் இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்ததற்கான காரணம் சொல்லுவது ஏற்கும்படியாக இல்லை. அதுபோல் காமெடியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது.

    சாய் சதிஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. எம்.சி.ரிகோ இசையில் ‘இது இங்கிலீஷ் படம்...’ பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.

    மொத்தத்தில் ‘இங்கிலீஷ் படம்’ சுமாரான படம்.
    யூ சாங் இயக்கி நடித்திருக்கும் `தி பாடிகார்ட்' படத்தின் விமர்சனம்.
    அண்ணன் - தம்பிகளான ஜிங் யூவும், யூ சாங்கும் சிறுவயதிலேயே குங் பூ கலையை கற்று வருகின்றனர். இதில் அண்ணன் அவரது குங் பூ மாஸ்டரிடம் இருக்கும் இரும்பாலான குங் பூ ஷீவை திருடிவிடுகிறார். இதையடுத்து குங் பூ கலை பயில அவர் தகுதியில்லாதவர் என்று அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.

    இதையடுத்து அதுவரை கற்ற குங் பூ கலையை வைத்து ஒரு பாடிகார்டு கம்பெனியை தொடங்கி, அந்த ஊரில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்நிலையில், வளர்ந்து பெயரியவனாகும் யூ சாங் நகரத்திற்கு வருகிறார். அங்கு பிரபலம் ஒருவரிடம் இருந்து கொலை செய்ய முயற்சி செய்யும் கும்பலை அடித்து துவம்ஷம் செய்கிறார்.

    அதனை அவரது அண்ணனாக ஜிங் யூ பார்த்து, தனது தம்பியை தன்னுடன் அழைத்து செல்கிறார். இந்நிலையில், யூ சாங் காப்பாற்றிய அந்த நபர், தனது மகளுக்கு பாதுகாப்பு கேட்டு அங்கு வருகிறார். அவரது மகளுக்கு பாடிகார்டாக யூ சாங் செல்கிறார். சுதந்திரமாக இருக்க ஆசைப்படும் நாயகி லி யூ ஃபி, யூ சாங்கை கலட்டி விட்டு தனியாக செல்லும் நாயகிக்கு, வரும் ஆபத்துகளை யூ சாங் சமாளிக்கிறார்.



    ஒரு கட்டத்தில் அந்த ஆபத்துக்கள் தனது அண்ணன் ஜிங் யூ மூலமாக வருவதை தெரிந்து கொள்ளும் யூ சாங் அடுத்ததாக என்ன செய்தார்? லி யூ ஃபியை எப்படி பாதுகாத்தார்? யூ சாங்கின் அண்ணன் ஏன் அவருக்கு எதிராக செயல்படுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    இயக்கம், நடிப்பு மட்டுமில்லாமல் குங் பூ கலையிலும் தேர்ந்தவராகவே யூ சாங் நடித்திருக்கிறார். எதிரிகள் 100 பேர் வந்தாலும் அவர்களை அசால்ட்டாக அடித்து நாலா பக்கமும் பறக்க விடுகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் படியாக ஜிங் யூவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி லி யூ ஃபி, காலின் ஃசோ, மைக்கேல் சான் வாய் மேன் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

    இயக்கத்தைப் பொறுத்தவரையில், வாக்கமான அண்ணன், தம்பி பழிவாங்குதல் கதையாக இருக்கிறது. ஹாலிவுட் படமாகவே இருந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை நாயகன் அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை. அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் மாறி மாறி வருவது திரைக்கதைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. மற்றபடி குங் பூ சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.

    படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `தி பாடிகார்ட்' பறக்க விடுகிறான்.

    ஜஸ்டிஸ் லீக் என்னும் இங்கிலீஸ் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் எப்படி இருக்கிறது....
    கவுதம் சிட்டியில் பேட் மேன் வழக்கம் போல் உதவிகளை செய்து வருகிறார். அப்போது ஏலியன்கள் நடமாட்டத்தை பார்க்கும் அவர் ஏலியன்களால் ஏதோ ஆபத்து ஏற்பட போவதை உணர்கிறார். எதற்காக ஏலியன்கள் உலாவுகிறது? என்பதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார் பேட் மேன்.

    சக்தி வாய்ந்த மூன்று பெட்டிகள் உள்ளது. அந்த பெட்டிகளில் உள்ள சக்தியை எடுத்தால் யாரும் வெல்ல முடியாதளவிற்கு ஏலியன் வலிமை பெற்றதாக மாறிவிடும். இதனால், அந்த பெட்டிகளை எடுப்பதற்காக ஏலியன்களின் தலைவன் ஸ்டெப்பின் உல்ப் முயற்சி செய்து வருகிறார். இந்த பெட்டிகள் வொண்டர் வுமன் உலகம், ஆக்குவா மேன் உலகம் மற்றும் பூமியில் இருக்கிறது.

    முதலில் வொண்டர் வுமன் உலகத்தில் இருக்கும் அந்த பெட்டியை ஸ்டெப்பின் உல்ப் எடுத்து விடுகிறது. இந்த செய்தியை வொண்டர் வுமன் மூலம் பேட்மேனுக்கு தெரிய வருகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஸ்டெப்பின் உல்ப் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் பேட் மேன்.

    இதற்காக, வொண்டர் வுமன், ஆக்குவா மேன், ஃப்ளஸ், சைபார்க் உள்ளிட்டவர்களை ஒன்று சேர்த்து ஸ்டெப்பின் உல்பை அழிக்க நினைக்கிறார் பேட் மேன். ஆனால், அவர்கள் ஒன்று சேர்க்க மறுக்கிறார்கள். இதற்கிடையில், ஸ்டெப்பின் உல்ப், ஆக்குவா மேன் உலகத்தில் இருக்கும் பெட்டியை எடுத்து விடுகிறார்.

    இறுதியில் ஸ்டீபன் உல்ப் மூன்றாவது பெட்டியை எடுத்தாரா? பேட் மேனுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்டெப்பின் உல்ப்பின் திட்டத்தை முறியடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பொதுவாக டிசி படங்களில் மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக சூடுபிடிக்கும். ஆனால், இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்ந்து விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. மார்வல் படங்களில் தான் விறுவிறுப்பும், திரைக்கதையில் சுவாரஸ்யமும் இருக்கும். தற்போது அதையும் தாண்டி டிசி படம் வெளியாகியுள்ளது. டிசி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமைந்திருக்கிறது.

    கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக, ஸ்டெப்பின் உல்ப் தோற்றம், சண்டைக்காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. வொண்டர் வுமனின் எண்ட்ரி காட்சி சிறப்பு. வொண்டர் வுமன் உலகத்தில் முதல் பெட்டியை ஸ்டெப்பின் உல்ப் எடுக்கும் காட்சியும் அருமை. தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு காமெடியுடன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜஸ்டிஸ் லீக்’ சிறப்பு.
    கே.எம்.ஆனந்தன் இயக்கத்தில் மணீஷ் - சந்தியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மேச்சேரி வனபத்ரகாளி' படத்தின் விமர்சனம்.
    கோவிலில் பாம்பு கடித்ததால் மனைவியை இழந்த பூசாரியான கே.எம்.ஆனந்தன் அன்று முதல் கோவிலுக்கு செல்வதை நிறுத்துகிறார். மாறாக மது அருந்துதல், பிகைப்பிடித்தல் என மாறிவிடுகிறார். அம்மன் மீது தீவிர பக்தியோடு இருக்கும் ஆனந்தனின் மகளான சந்தியாவை, வில்லனின் மகன் காதலித்து வருகிறார். அதே நேரத்தில் ஆனந்தனின் மகன், வில்லனின் மகளை காதலித்து வருகிறார்.

    இதில் சந்தியாவுடன் பேசிக்கொண்டிருப்பதை அவரது காதலரின் அப்பா பார்த்து விடுகிறார். இந்நிலையில், மந்திரவாதி ஒருவர்,  மேச்சேரி வனபத்ரகாளி அம்மனின் சிலைக்கு கீழே புதையல் இருப்பதாகவும், அதை எடுத்தால் அவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் கூற, அதற்கு முன்னதாக திருமணம் ஆகாத பெண் ஒருவரை பலி கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    அந்த மந்திரவாதியின் பேச்சை கேட்டு, தனது மகனை காதலிக்கும் சந்தியாவை கடத்தி வந்து பலி கொடுக்க முயற்சி செய்யும் போது, சந்தியா அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய, சந்தியாவின் தோற்றத்தில் அவளது வீட்டிற்கு அம்மன் வருகிறது.

    இதையடுத்து, சந்தியாவை கொல்ல முயற்சி செய்தவர்களுக்கு அம்மன் என்ன தண்டனை கொடுத்தது? அம்மன் சிலைக்கு கீழே இருந்த புதையல் என்ன ஆனது? ஆனந்தனின் மகனின் காதல் வெற்றி பெற்றதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    கே.எம்.ஆனந்தன், மணீஷ், சந்தியா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும், கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நடிகை சீதா அம்மனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    வழக்கமான பழிவாங்குதல் கதையை மையமாக வைத்து மேச்சேரி பத்ரகாளி அம்மன் படத்தை இயக்கியிருக்கிறார் கே.எம்.ஆனந்தன். படத்தின் கதை வழக்கமானதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை சற்று வித்தியாசமாகவே அமைத்திருக்கிறார். இருப்பினும் அந்த வித்தியாசம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சாமியை மையமாக வைத்து பல பழிவாங்கும் படங்கள் வந்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக இந்த படம் அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

    ஆதிஷ் உத்ரியனின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை ஓரளவுக்கு பலம் சேரத்திருக்கிறது.  

    மொத்தத்தில் `மேச்சேரி வன பத்ரகாளி' வழக்கமானவள்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷான், லீமா பாபு, மீஷா கோஷல், டேனியல் பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் `யாழ்' படத்தின் விமர்சனம்.
    இலங்கையில் போர் நடந்து வருவதால் ஈழத்தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அதனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த கதையில் நாயகன் வினோத் கிஷன், லீமா பாபுவை காதலிக்கிறார். அங்கு நடத்தப்படும் வான்வெளித் தாக்குதலால் லீமா பாபு உள்ளிட்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு செல்கின்றனர்.

    அதே நேரத்தில் குண்டுவெடிப்பால் தாயை இழந்த பேபி ரக்‌ஷனாவை தன்னுடன் அழைத்து செல்லும் வினோத், ரக்‌ஷனாவை அவளது அம்மாவிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறார்.



    இதுஒருபுறம் இருக்க கைக்குழந்தையுடன் வரும் நீலிமா, அங்கு வரும் இலங்கை ராணுவ அதிகாரியான டேனியல் பாலாஜியிடம் சிக்கிக் கொள்கிறார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பெண் என்று நினைத்து, நீலிமாவை சரணடையச் சொல்கிறார். இவ்வாறாக நீலிமாவை தன்னுடன் பலவந்தமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கும் போது டேனியல் பாலாஜி கன்னி வெடி ஒன்றை மிதித்து விடுகிறார்.

    மற்றொரு பக்கத்தில் லண்டனின் இருந்து வரும் மீஷா கோஷல் தனது காதலனை தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக இலங்கை வருகிறார். சமீபத்தில் கன்னி வெடியால் அவரின் தாய் இறந்ததால், மீஷாவுடன் வர மறுக்கும் அவரது காதலர், கன்னி வெடியால் வேறு எந்த உயிரும் போகக் கூடாது என்று கன்னி வெடிகளை தேடி அதனை செயலிழக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.



    கடைசியில் வினோத் அந்த குழந்தையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்த்தாரா? தனது காதலி லீமாவுடன் சேர்ந்தாரா? டேனியல் பாலாஜி, நீலிமா என்ன ஆனார்கள்? மீஷா கோஷல் தனது காதலரை தன்னுடன் அழைத்து சென்றாரா? போர் முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வினோத் கிஷன், லீமா பாபு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுத்தனர். டேனியல் பாலாஜி வழக்கம்போல தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீலிமா, மீஷா கோஷல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    இலங்கை ராணுவத்தின் அட்டகாசத்தால் யாழ்பாணத்தில் ஈழத் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை மேலோட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எதையும் மிகைப்படுத்தி காட்டவில்லை. அதே நேரத்தில் அவர்களது வாழ்க்கையில் அவர் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்னென்ன தொல்லைகள் வருகின்றன என்பதையும் சொல்ல முயற்சித்திருக்கிறார். டப்பிங் வசனங்களில் தொய்வு இருக்கிறது.

    எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமார் ரகம் தான்.

    மொத்தத்தில் `யாழ்' சத்தமில்லை.

    தீபக் சிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி - நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூலி-2' படத்தின் விமர்சனம்.
    நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார்.

    இந்த செய்தி மறுநாள் பேப்பர், மீடியாக்களில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு நகை கடைக்கு செல்கிறார் ராய் லட்சுமி. அப்போது நான்கு முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் ராய் லட்சுமியையும் சுட்டுவிடுகிறார்கள்.



    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராய் லட்சுமி, கோமா நிலைக்கு செல்கிறார். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து நான்கு கொலையாளிகளை பிடித்து விடுகிறார். இவர்கள் தெரியாமல் ராய் லட்சுமியை சுடவில்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.

    மேலும் ராய் லட்சுமியை எப்படி சினிமா உலகத்திற்கு வந்தார். அதன் பின்னணி என்ன என்று விசாரிக்க தொடங்குகிறார். இந்த விசாரணையின் முடிவில் ராய் லட்சுமியை திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்தது யார்? ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் ஜூலியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி. மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பெரிய கைத்தட்டல். கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

    சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. விஜு ஷா, ரூ பேண்ட், அதிப் அலி, ஜேவ்டு-மோஹ்சனின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `ஜூலி-2' கவர்ச்சி கன்னி.
    கவுதம் கார்த்திக் மற்றும் அர்ஷிதா ஷெட்டி நடிப்பில், கலா பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இந்திரஜித்’ படத்தின் விமர்சனம்.
    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு துகள் பூமியில் வந்து விழுகிறது. மனிதனுக்கு ஏற்படும், காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

    இதை தொல்பொருள் ஆராய்ச்சியின் பேராசிரியராக இருக்கும் சச்சின் கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்து சேருகிறார் இந்திரஜித். அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். இறுதியில் அந்த துகள் யாரிடம் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவுதம் கார்த்திக், தனக்கெரிய உரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுடன் ரொமன்ஸ் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சொனாரிகா முதல் சில காட்சிகளிலும், அஷ்ரிதா ஷெட்டி கவுதம் கார்த்திக் குழுவினருக்கு உதவி செய்யும் பெண்ணாக வருகிறார்.

    புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தொழில்நுட்பக் குறைபாடுகளால் பல தமிழ்ப் படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், 'இந்திரஜித்' படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருக்கிறது.

    புதையல் தேடும் கதையை அறிவியல் ரீதியாக மாற்றி பேன்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கலா பிரபு. கிராபிக்ஸ், VFX காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. பல காட்சிகள் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    காட்டுக்குள் நடக்கும் சேசிங் காட்சிகளையும், அடர்ந்த காட்டின் ரம்மியத்தையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி. கே.பி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘இந்திரஜித்’ சுவாரஸ்யம்.
    ×