search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தியா"

    கணவரால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #Sandhya #Balakrishnan

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35).

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் (51). இவருக்கும் சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் சந்தியா வசித்து வந்தார். சினிமாவிலும் சந்தியா துணை நடிகையாக நடித்து வந்தார்.

    இந்த நிலையில் சந்தியா திடீரென்று மாயமானார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கணவர் பாலகிருஷ்ணன் கொடூரமான முறையில் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் சந்தியாவின் உடல் பாகங்களை சென்னையின் பல இடங்களில் அவர் வீசி உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சந்தியாவை பாலகிருஷ்ணன் கொலை செய்தார். சந்தியாவின் 2 கால், ஒரு கை ஆகியவை பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்தும், இடுப்பு முதல் தொடை பகுதி வரை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் இருந்தும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சந்தியாவின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.


    சந்தியாவின் உடல் பாகங்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மகள் சந்தியாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காக அவரது உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் பள்ளிக்கரனை போலீசில் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சந்தியாவின் உடலை இன்று காலை 11.15 மணி அளவில் ஞாலத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். அதன்பிறகு சந்தியாவின் உடல் ஞாலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. #Sandhya #Balakrishnan

    சென்னையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பை தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை போலீசார் தேடி வந்தனர்.

    ஆனால் 2½ மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் ராமச்சந்திரன், தாய் பிரசன்னகுமாரி, சித்தி உஷா, அவரது மகள் விஜி ஆகியோர் இன்று சென்னை வந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை பெற்றுக் கொண்டு அவர்கள் இன்று மாலை ஊருக்கு செல்கிறார்கள். ஞாலம் கிராமத்தில் சந்தியாவின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    தலை கிடைக்காத நிலையில் கொலையுண்டது சந்தியாதான் என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அந்த சோதனை நடைபெறவில்லை.

    பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இதுவரையில் டி.என்.ஏ. சோதனை நடத்தப்படாதது ஏன்? என்கிற கேள்வியை சந்தியாவின் குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர்.

    இதுபற்றி போலீஸ் தரப்பில் கோர்ட்டு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் விரைவில் டி.என்.ஏ. சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். #Sandhya #Balakrishnan
    துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சந்தியா தனது காதல் கணவரான பாலகிருஷ்ணன் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார்.

    சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல் கொலை செய்யும் நாள் வரை குறையவே இல்லை. என் மீதுகொண்ட அளவு கடந்த காதலால் என்னை எந்த சூழ்நிலையிலும் மறக்க கூடாது என்று உடலில் 3 இடங்களில் பச்சை குத்திக்கொண்டார்.

    முக்கியமாக அவர் வலது நெஞ்சில் என் பெயரை குத்திக் கொண்ட போது வலியால் துடித்தார். அதை பார்த்து நானே அழுது விட்டேன். ஆனால் அவர் பிடிவாதமாக குத்திக் கொண்டார். எங்களுக்கு சிவனை மிகவும் பிடிக்கும். தினமும் வணங்குவோம். அதனால் சிவன் பார்வதியை வலது கையில் பச்சை குத்திக்கொண்டார். சிவன் பார்வதி போல நாங்கள் வாழ வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம்.

    நான் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். சினிமா வாய்ப்பு இல்லாததால் பிரியாணி கடை வைத்தேன். அதன் பின்னர் தான் டைரக்டர் ஆனேன். என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த புதுமுகங்களுக்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தேன். சமீபத்தில் தான் என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டது.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.



    சந்தியாவின் உடலை துண்டித்தபோது பாலகிருஷ்ணன் முதலில் வலது கையை தான் துண்டித்துள்ளார். தன்னை காதலிப்பதற்காக பச்சை குத்திக்கொண்ட வலது கையை முதலில் துண்டிக்க காரணம் சந்தியா செய்த துரோகத்தால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்புதான் என்கிறார்கள்.

    இதற்கிடையே சந்தியாவின் தலையையும் இடது கையோடு கூடிய உடல்பாகங்களை தேடும் பணியில் 20 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு பகலாய் தேடி வருகிறார்கள். பெருங்குடி குப்பை கிடங்கை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்திலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.

    பெருங்குடியில் 20 அடி உயர குப்பையில் 15 அடி வரை தோண்டி தேடிவிட்டார்கள். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் டைசன் நாய்க்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து இதற்காக பெங்களூருவில் இருந்து இன்னொரு மோப்ப நாய் வரவைக்கப்பட உள்ளது.

    துணை நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஞாலம் பகுதியில் வசித்து வருகிறார்கள். மகள் சாவு குறித்து பிரசன்னகுமாரி கூறியதாவது:-

    கொடூரமான முறையில் எனது மகள் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்னி, இதயம், கண் போன்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை. அவரது உடல் உறுப்புகள் திருடி விற்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த கொலையில் பாலகிருஷ்ணனுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

    எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனது மகள் சாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

    இவ்வாறு பிரசன்னகுமாரி கண்ணீர் மல்க கூறினார். #Sandhya #Balakrishnan
    சந்தியாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றதற்கான காரணம் குறித்து அவரது கணவரும் சினிமா டைரக்டருமான பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையில் துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் பதட்டம் இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

    சந்தியாவின் உடலை ஏன் துண்டு, துண்டாக வெட்டினீர்கள் என்று கேட்டபோது, அதற்கு மட்டும் பதில் அளிக்காமல் அமைதி ஆனார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    என் மனைவி மீது எனக்கு எந்த அளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. 2000-ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு இப்போது 35 வயது. எனக்கு 51 வயது. அவள் நல்ல அழகு. நானோ சுமாரான அழகுதான். நான் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என் மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சந்தியாவும் நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் இருந்தன. ஆனாலும் இல்லற வாழ்வு திருப்தியாக இல்லை.

    எங்கள் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதால் கிழவனை திருமணம் செய்து வைத்துவிட்டதாக தன் பெற்றோரிடம் சந்தியா கூறி வந்தாள். படுக்கைக்கு அழைக்கும் போதெல்லாம் கிழவன் என்று கிண்டல் செய்தாள். தாம்பத்திய உறவால் அழகு சிதைந்துவிடும் என்று கூறி என்னுடன் உறவு வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டாள். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால் அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டாள். தன் விருப்பம் போல வாழ்ந்தாள். அதை தட்டிக்கேட்டால் நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினாள்.

    அவள் அழகாக இருப்பதை காரணம் காட்டி பல வகையில் நிராகரித்தாள். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்.’’

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    மனைவியைக் கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணன், அதன் பிறகு சர்வசாதாரணமாகவே இருந்துள்ளார். அவரின் இந்த மனநிலை குறித்து போலீசார் கேள்வி கேட்டனர். அதற்கு பாலகிருஷ்ணன் சிரித்துள்ளார்.



    சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து அவரின் பெற்றோர், தங்கை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்களை போலீசார் காண்பித்த போது சந்தியாவின் அம்மா பிரசன்னா, ‘உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்’ என்று கதறி உள்ளார். அவருக்கு போலீசாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். #Sandhya #Balakrishnan
    பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தேடும் பணி இன்று 2-வது நாளாக முடுக்கி விடப்பட்டுள்ளது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பெண்ணின் கால்கள், வலது கை ஆகியவை கிடைத்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சுமார் 35 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை யாரோ கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசி சென்றிருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது.

    கொலையுண்ட பெண்ணை கண்டு பிடிப்பதற்காக துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.

    மாயமான பெண்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்ட அதே வேளையில் மீட்கப்பட்ட பெண்ணின் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டிராகன், சிவன்-பார்வதி உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தினர்.

    கடந்த 16 நாட்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நேற்று துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண் நாகர்கோவில் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது.

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்த சந்தியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தூத்துக்குடியில் இவர்கள் படித்து வரும் நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தியா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

    இதன் பின்னர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கினார். சினிமா வாய்ப்புக்காகவே கணவரை பிரிந்து தனியாக தங்கிய சந்தியா, சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சந்தியாவின் நடத்தை சரியில்லாமல் இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டார். இதுபற்றி அவர் பலமுறை கண்டித்தும் சந்தியா கேட்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பாலகிருஷ்ணன், ஜாபர்கான் பேட்டையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு நைசாக அழைத்துச் சென்று சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை 7 பாகங்களாக துண்டித்து 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையிலும் வீசினார்.

    இதனை கண்டுபிடித்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். சந்தியாவின் கால்கள் மற்றும் பச்சை குத்தப்பட்ட வலது கை ஆகியவை கடந்த 21-ந்தேதியே கிடைத்துவிட்ட நிலையில், இடுப்பில் இருந்து முழங்கால் வரையிலான உடல் பாகத்தை காசி தியேட்டர் அருகே வீசி இருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார். இதனை தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று இடுப்பு பகுதியை மீட்டனர். ஒரு சாக்கு மூட்டையில் அது கட்டி போடப்பட்டிருந்தது.

    இதன் மூலம் உடல் பாகங்களில் 2 பார்சல்கள் கிடைத்து விட்டன. தலையை ஒரு பார்சலாகவும், கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பகுதி மற்றும் இடது கை ஆகியவற்றை இன்னொரு பார்சலாகவும் பாலகிருஷ்ணன் கட்டி வீசியதும் தெரிய வந்தது.

    இந்த உடல் பாகங்கள் எங்கே? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

    இடுப்பு பகுதியை மட்டும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வீசிய பாலகிருஷ்ணன், மற்ற பார்சல்கள் அனைத்தையும் குப்பை தொட்டிகளிலேயே வீசியுள்ளார். இதில் ஒரு பகுதிதான் (2 கால்கள், வலது கை பார்சல்) பெருங்குடி குப்பை மேட்டில் கிடைத்தது.

    தலை மற்றும் உடல் பாகத்தை தனித்தனி பார்சல்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள குப்பை தொட்டிகளிலேயே பாலகிருஷ்ணன் வீசி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளும் பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றே கொட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம், சந்தியாவின் தலை, உடல் மற்றும் இடது கை ஆகியவையும் பெருங்குடி குப்பை கிடங்கிலேயே குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் நேற்று முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் சிக்கவில்லை. இன்று 2-வது நாளாக தலையை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைதான பாலகிருஷ்ணன், போலீஸ் விசாரணைக்கு பின்னர் இன்று காலை 11.30 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 19-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Sandhya #Balakrishnan
    வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி என் மகள் சந்தியாவை மொட்டை அடித்து, அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாக தாயார் கண்ணீருடன் தெரிவித்தார். #BodyPartsInDumbyard #WomanKilled
    ஆலந்தூர்:

    சந்தியா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அவருடைய தந்தை ராதாகிருஷ்ணன், தாய் பிரசன்னா, தங்கை சஜிதா ஆகியோர் சென்னை பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் சந்தியாவின் உடல் பாகங்களை பார்த்த பிறகு அது சந்தியாதான் என்பதை உறுதி செய்தனர்.

    சந்தியாவின் தாய் பிரசன்னா, நிருபர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது:-

    கணவன்-மனைவி இடையே நடக்கும் குடும்ப சண்டை என்றுதான் நினைத்தோம். பாலகிருஷ்ணன், ஆள் வைத்து எனது மகளுக்கு மொட்டை அடித்து உடலில் ஆண்களை வைத்து பச்சை குத்தியதாக சந்தியா கூறினார். மொட்டை அடிக்கக்கூடாது என்று நான் சொன்னேன். அடிக்கடி என் மகளை தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். சில விஷயங்கள் பற்றி எங்களிடம் சந்தியா எதுவும் கூறமாட்டாள்.

    நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டார். நான் செலவுக்கு பணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவேன். ஆனாலும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்து பெறப்போகிறேன் என தூத்துக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தாள்.

    அப்போது போலீசார் அழைத்து என்னிடம் கேட்டார்கள். நான், 2 குழந்தைகள் இருப்பதால் பிரித்துவிடவேண்டாம் என்று கூறினேன். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சந்தியா சென்னைக்கு வந்து வேலை செய்வதாக கூறினாள்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், என்னிடம், நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்றும், பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம் என்றும், வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதாகவும் கூறினார். ஆனால் என் மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்து உள்ளார். அவர்களுக்குள் என்ன பிரச்சனை? என்று எனக்கு தெரியாது. கடந்த சில ஆண்டுகளாக மாமியார், கொழுந்தனின் மனைவி ஆகியோரும் சந்தியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்தியாவின் தங்கை சஜிதா கூறியதாவது:-

    அக்காவிடம் இருந்து போன் வந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அவளை பற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. இதற்கிடையில் பாலகிருஷ்ணன், என் தாய்க்கு போன் செய்து, நீங்கள் சந்தியாவை தேடவேண்டாம். வெளிநாட்டுக்கு போக பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம் என்றார்.

    இதனால் அவர் அக்காவுடன் நல்லமுறையில் இருக்கிறார் என்று சந்தோஷமாக இருந்தோம். ஆனால் அவர் 19-ந்தேதியே எனது அக்காவை கொலை செய்துவிட்டார். கையில் பச்சை குத்தப்பட்டு இருப்பதை கண்டுதான் அது சந்தியா என்று உறுதிசெய்தோம். கணவர் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்து கேட்டு சந்தியா மனு அளித்து இருந்தாள்.

    எனது அக்காவுக்கு 8 முறை மொட்டை போட்டு இருக்கிறார். என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியாது. அக்காவின் மாமியாரும் அவரை கொடுமைப்படுத்தி உள்ளார். அனுசரித்து வாழ் என்று எனது அம்மா கூறினார். பாலகிருஷ்ணன் தேடவேண்டாம் என்று கூறியதால் நாங்கள் கவலைப்படவில்லை. டிசம்பர் மாதம் ஊருக்கு வந்த அக்கா, ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வழக்கில் குற்ற சம்பவங்கள் அனைத்தும் ஜாபர்கான்பேட்டையில் நடந்ததால் இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்தபின்னர், குமரன்நகர் போலீசுக்கு மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #BodyPartsInDumbyard #WomanKilled
    ×