search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சந்தியாவின் தலை, உடல், இடது கை எங்கே? - பெருங்குடி குப்பை கிடங்கில் தேடுதல் வேட்டை தீவிரம்
    X

    சந்தியாவின் தலை, உடல், இடது கை எங்கே? - பெருங்குடி குப்பை கிடங்கில் தேடுதல் வேட்டை தீவிரம்

    பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தேடும் பணி இன்று 2-வது நாளாக முடுக்கி விடப்பட்டுள்ளது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பெண்ணின் கால்கள், வலது கை ஆகியவை கிடைத்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சுமார் 35 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை யாரோ கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசி சென்றிருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது.

    கொலையுண்ட பெண்ணை கண்டு பிடிப்பதற்காக துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.

    மாயமான பெண்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்ட அதே வேளையில் மீட்கப்பட்ட பெண்ணின் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டிராகன், சிவன்-பார்வதி உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தினர்.

    கடந்த 16 நாட்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நேற்று துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண் நாகர்கோவில் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது.

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்த சந்தியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தூத்துக்குடியில் இவர்கள் படித்து வரும் நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தியா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

    இதன் பின்னர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கினார். சினிமா வாய்ப்புக்காகவே கணவரை பிரிந்து தனியாக தங்கிய சந்தியா, சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சந்தியாவின் நடத்தை சரியில்லாமல் இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டார். இதுபற்றி அவர் பலமுறை கண்டித்தும் சந்தியா கேட்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பாலகிருஷ்ணன், ஜாபர்கான் பேட்டையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு நைசாக அழைத்துச் சென்று சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை 7 பாகங்களாக துண்டித்து 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையிலும் வீசினார்.

    இதனை கண்டுபிடித்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். சந்தியாவின் கால்கள் மற்றும் பச்சை குத்தப்பட்ட வலது கை ஆகியவை கடந்த 21-ந்தேதியே கிடைத்துவிட்ட நிலையில், இடுப்பில் இருந்து முழங்கால் வரையிலான உடல் பாகத்தை காசி தியேட்டர் அருகே வீசி இருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார். இதனை தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று இடுப்பு பகுதியை மீட்டனர். ஒரு சாக்கு மூட்டையில் அது கட்டி போடப்பட்டிருந்தது.

    இதன் மூலம் உடல் பாகங்களில் 2 பார்சல்கள் கிடைத்து விட்டன. தலையை ஒரு பார்சலாகவும், கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பகுதி மற்றும் இடது கை ஆகியவற்றை இன்னொரு பார்சலாகவும் பாலகிருஷ்ணன் கட்டி வீசியதும் தெரிய வந்தது.

    இந்த உடல் பாகங்கள் எங்கே? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

    இடுப்பு பகுதியை மட்டும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வீசிய பாலகிருஷ்ணன், மற்ற பார்சல்கள் அனைத்தையும் குப்பை தொட்டிகளிலேயே வீசியுள்ளார். இதில் ஒரு பகுதிதான் (2 கால்கள், வலது கை பார்சல்) பெருங்குடி குப்பை மேட்டில் கிடைத்தது.

    தலை மற்றும் உடல் பாகத்தை தனித்தனி பார்சல்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள குப்பை தொட்டிகளிலேயே பாலகிருஷ்ணன் வீசி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளும் பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றே கொட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம், சந்தியாவின் தலை, உடல் மற்றும் இடது கை ஆகியவையும் பெருங்குடி குப்பை கிடங்கிலேயே குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் நேற்று முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் சிக்கவில்லை. இன்று 2-வது நாளாக தலையை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைதான பாலகிருஷ்ணன், போலீஸ் விசாரணைக்கு பின்னர் இன்று காலை 11.30 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 19-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Sandhya #Balakrishnan
    Next Story
    ×