search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irumbuthirai Review"

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். 

    இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.



    இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.

    அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். 

    அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். 



    பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.

    இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.



    நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

    வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது. 

    ×