என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.



    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 



    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • நகைச்சுவை கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

    மலையாளத்தில் 2015 இல் அல்போன்ஸ் புத்ரனின் பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

    தமிழில் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இதற்கிடையே மலையாளத்தில் பிரணீஷ் விஜயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தி பெட் டிடெக்டிவ்" என்ற படத்திலும் அனுபமா நடித்துள்ளார்.

    ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஷராபுதீன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயிலர் புகழ் விநாயகன் நடித்துள்ளார்.

    நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. 

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
    • தனுஷ் நடித்து வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் 'இட்லி கடை. இப்படம் கடந்த 1-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படம் மீதான எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில், 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இணைந்துள்ள தனுஷ்- அனிருத் காம்போ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் வெளியான தனுஷின் 'இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தையும் டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போது மீண்டும் தனுஷின் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடித்து வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'தங்கமகன்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்களால் இருவரின் கூட்டணிக்காகவே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி எப்போது அமையும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ள இன்ப செய்தியால் உற்சாக மிகுதியில் உள்ளனர். 

    • இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
    • திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

    தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

    42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார். 

    • நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
    • படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.

    தென்னிந்திய திரை உலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நாகார்ஜுனா. திரை உலகில் இவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் இருந்தது.

    நாகார்ஜூனா தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ரஜினி நடித்த கூலி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    இந்நிலையில் நாகார்ஜுனா மீண்டும் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். நாகார்ஜூனா நடிக்கும் 100-வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை தபு நடிக்கிறார்.

    நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.

    இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவும் தபுவும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
    • சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் ‘பேபி குயின்’ என்று அழைக்கப்படுகிறார்.

    திரை உலகில் 'ஹிட்' படங்கள் கொடுத்து வருமானத்தை பெருக்கி கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல நடிகைகள் முதலீடு செய்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் முன்னணி கதாநாயகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர்.

    நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து சென்னையில் அபார்ட்மென்ட், ஐதராபாத், கொச்சியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    சமந்தா: சினிமா உலகில் உச்சத்தை தொட்டுள்ள சமந்தா ஐதராபாத்தில் பலகோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கி 'பிராபர்டி குயின்' என்று பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.

    காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டிலும் பேரரசியாக இருக்கிறார். மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வணிக வளாகங்களில் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.



    ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் 'சின்ன குஷ்பு' என்று வர்ணிக்கப்படுபவர் ஹன்சிகா. சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் 'பேபி குயின்' என்று அழைக்கப்படுகிறார்.

    ராஷ்மிகா: ராஷ்மிகா ஐதராபாத், பெங்களூரு, மும்பையில் அபார்ட்மென்ட்கள், வீடுகள் வாங்கி இருக்கிறார். 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் 'பிராபர்டி கிரஷ்' ராஷ்மிகா மந்தனா.

    ஷில்பாஷெட்டி: ஷில்பா ஷெட்டி மும்பையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள், பங்களாக்கள் மட்டுமின்றி துபாயிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து வணிக வளாகங்களிலும் பங்கு வைத்துள்ளார்.

    கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி மும்பையில் அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்.

    தமன்னா: தமன்னா மும்பை ஐதராபாத்தில் வீடுகள் மட்டுமின்றி சில தொழில் அதிபர்களுடன் இணைந்து பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    வித்யாபாலன்: நடிகை வித்யாபாலன் மும்பையில் பல அபார்ட்மெண்ட்கள் வாங்கி 'ஸ்மார்ட் இன்வெஸ்டர்' என புகழ் பெற்று வருகிறார்.

    • ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. 



    • மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.

    இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

    இதனை தொடர்ந்து, கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'ஆரோமலே' திரைப்படம் அடுத்தம் மாதம் (நவம்பர்)7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 



    ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.

    ராட்சசன் வரிசையில், ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலக்கட்டத்தில் தான் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும், இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    அதற்கு ஏற்றார்போல் இந்தப்படம் அமைந்துள்ளது. நிச்சயமாக ராட்சசன் போன்று இருக்காது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. கட்டா குஸ்தி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும், பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.

    வெப் சீரிஸ் தொடர்பான பணிகளுக்காக நானும் ஆர்யன் படத்தின் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தோம். அப்போது நடிகர் அமீர் கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பொதுவாக பேசும் போது, இந்தப் படத்தின் கதையை கேட்பதாக சொன்னார்.

    அதன்படி ஒருநாள் இரவு 10 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து, மறுநாள் காலை 6 மணி வரை ஆர்யன் படம் மட்டுமின்றி பொதுவில் சினிமா தொடர்பான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் தான், வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.

    அமீர்கான் நடிப்பதாக தெரிவித்த கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் இந்தப் படத்தை தொடங்கும் போதே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

    எனக்கு பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்ததாகவும், அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. இந்தப் படம் முற்றிலும் வேறானது. இந்தப் படம் அதிக மொழிகளில் வெளியாகி, சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவில் இரு மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தாலே போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், இன்று 6 மணிக்கு 'காளமாடன் கானம்' பாடல் வெளியாக உள்ளதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

    அதன்படி, காளமாடன் கானம் பாடல் வெளியாகியுள்ளது. 

    • விருஷபா படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • விருஷபா படத்திற்கு Sam CS இசை அமைத்துள்ளார்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், விருஷபா படம் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.

    நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார். இதனையடுத்து கன்னட பிக்பாஸ் செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடி சீலிடப்பட்ட பிக்பாஸ் ஸ்டூடியோ, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தலையீட்டின் பேரில் மீண்டும் திறக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாச்சாரத்திற்கும் கேடான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இதற்கு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    ×