என் மலர்
சினிமா செய்திகள்
ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் சாதனைகள் படைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடிக்கிறார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜமைக்காவில் நடந்து வருகிறது. டேனியல் கிரேக் வில்லன்களுடன் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வில்லனை ஓடிச்சென்று பிடிப்பதுபோன்ற காட்சியொன்றில் டேனியல் கிரேக் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் டேனியல் கிரேக்குக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 வாரங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்றும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
இதையடுத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 8-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.
இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.

ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.
இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.

மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.
மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.

அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி கலந்து கொள்வார் என்றும், அப்போது ரஜினிகாந்துடன் அவர் மோதும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.
நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். சமூக கருத்துகளையும் பதிவிடுகிறார்கள். ஆனால் சமீப காலமாக வலைத்தளத்தில் நடிகைகள் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன.
அதில் குறிப்பிட்ட நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள்.
இதனால் நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும் அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இப்போது நடிகை பிரியா பவானி சங்கரும் போலி கணக்கு கும்பல் பிடியில் சிக்கி உள்ளார்.

அவர் பெயரில் டுவிட்டரில் நிறைய போலி கணக்குகளை தொடங்கி உள்ளனர். ஒரு போலி கணக்கில் இருந்து மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள பிரியா பவானி சங்கர், “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வத்தை என்னால் புரிய முடிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதை உங்கள் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.
இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாதவன் தற்போது நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்ல உள்ளது. மாதவன் தற்போது இளவயது நம்பி நாராயணனின் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார்.
அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.

ஒற்றைக் கால் ஆசனம், கால்களையும் முதுகையும் உயரே நிறுத்தியபடியான ஆசனம் என வெவ்வேறு போஸ்களை தந்திருக்கும் அமலாபாலின் பயிற்சிகளை கண்ட ரசிகர்கள், ‘உங்கள் உடல் ரப்பர் போல் வளைகிறதே’ என ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்த சௌந்தரராஜா, தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாக முழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்கிறார்.
காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.

மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்திலும், விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.
அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது.
துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.
பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.

படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,
"நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
தேவி 2 படத்தின் டிரைலர்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
`சென்னை 600028' இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.






