என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    இந்த நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் தாத்தா, இயக்குநர் டான் சாண்டி, சாதாரண டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் கூறினார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் ராகுல் தாத்தா பேசியதாவது,

    "இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.



    இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்" என்றார்.

    ராகுல் தாத்தா பேசிய வீடியோ:

    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசியிருப்பதாக கூறினார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது,

    "என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும், கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரிய பலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். 



    மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகர். 

    இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

    ராதாரவி பேசிய வீடியோ:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால், ஏற்கனவே அரசியலில் இருப்பதாக கூறினார்.
    சென்னை:

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.

    நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நேற்று மாலை முக.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் விஷால் அளித்த பேட்டி பின்வருமாறு:-

    தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

    சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்றார்.
    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பேய் படமான `பியார்' படத்தின் முன்னோட்டம்.
    விண்டோபாய் பிக்சர்ஸ் வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "பியார்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி, வாசு விக்ரம், ஷபி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆர்.ஆனந்தகுமார், இசை - ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் - வ.கருப்பன், படத்தொகுப்பு - ரமேஷ் வேலுகுட்டி, நடனம் - அசோக்ராஜா, ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், கலை - முத்துவேல், கதை திரைக்கதை வசனம், இயக்கம் - மில்கா எஸ்.செல்வகுமார். 
    இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் சண்டி முனி படத்தை இயக்கி வருகிறார். விரைவில் பியார் என்ற படத்தை இயக்குகிறார்.



    படம் பற்றி இயக்குனர் பேசும் போது,

    வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத் தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

    ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.

    சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
    சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி:-

    மீண்டும் இசை பக்கமும் கவனம் செலுத்துகிறீர்களே?

    சூர்யா நடிப்பில் சூரரை போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு இசை அமைக்கிறேன்.

    சமூக பணிகளில் அடுத்து?

    வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். இதை டிவியில் செய்தால் அது வியாபார நோக்கமாகி விடும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.



    நீங்கள் பேட்டி காண இருக்கும் முதல் மனிதர் யார்?

    ஜவ்வாது மலையில் ஆசிரியையாக இருக்கும் மகாலட்சுமி என்பவர். குக்கிராமங்களில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி பயில வைத்துள்ளார். அவரை பேட்டி எடுத்ததே மகத்தான அனுபவம். எனது சமூக செயற்பாட்டு குழுவில் இருக்கும் குணா இயக்கி உள்ளார்.

    சினிமாவில் பிசியாக இருக்கும்போது இது சிரமம் இல்லையா?

    படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தான் இதற்காக பணிபுரிய போகிறோம். இதுவரையில் இப்படித்தான் நேரம் ஒதுக்கி செயல்பட்டு வருகிறேன். இப்போதைக்கு மாதம் ஒன்று என தொடங்குகிறோம். போகப்போக அதிகப்படுத்தும் திட்டம் உள்ளது.

    அதிக சம்பளம் கேட்டதாக செய்தி வந்ததே?

    நான் இசையமைத்த, நடித்த கம்பெனிகளுடன் தொடர்ந்து பணிபுரிந்துள்ளேன். பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்து இருந்தால் இந்த அளவுக்கு பணிபுரிந்து இருக்க முடியாது.

    எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

    தெரியவில்லை. அரசியலில் ஒரு பகுதியாகவே இருக்கிறேன். கட்சி அரசியலுக்குள் நுழைவதில் ஆர்வம் இப்போது இல்லை.

    சி.விஜயன் இயக்கத்தில் விவேக் - ஷில்பா மஞ்சுநாத் - சச்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் விமர்சனம்.
    சச்சுவின் மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும் இளமையோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார் சச்சு. 

    அதே பகுதியில் வசித்து வரும் நாயகன் விவேக் ஒரு போட்டோகிராபர். அழகான பெண் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து மாடலிங் போட்டோக்கள் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், ஷில்பாவை பார்த்து அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்.



    இதற்கிடையே, சச்சுவின் லூட்டியை தாங்க முடியாத லிவிங்ஸ்டன் அவரை திட்ட, சச்சு வீட்டை விட்டு வெளியேறி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். இளமையுடன் வாழ்வதற்கான மருந்தை சச்சுவை வைத்து அவர்கள் சோதிக்கிறார்கள். அழகிலும் இளமையிலும் அதிக கவனம் செலுத்தும் சச்சு, இந்த கும்பலிடம் சிக்கி தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகிறார். இதற்கிடையே விவேக் - ஷில்பா இடையே காதல் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இவர்களுக்கிடையே விவேக் சிக்கித் தவிக்க, ஒரு கட்டத்தில் இவர்களது காதலில் பிளவு ஏற்படுகிறது. 

    கடைசியில், இளமையான தோற்றத்தில் இருக்கும் சச்சு தனது பழைய தோற்றத்துக்கு மாறினாரா? ஷில்பா - விவேக் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.

    பாட்டி யார், பேத்தி யார் என்பது தெரியாமல் குழம்பும் ஷில்பாவின் காதலர் பாத்திரத்தில் விவேக், சச்சுவின் மகனாக லிவிங்ஸ்டன், கார்ப்பரேட் அதிபராக சரவண சுப்பையா, போட்டோவில் மட்டும் வாழ்ந்துகொண்டு அடிக்கடி பாட்டியுடன் உரையாடும் கணவர் டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.



    புதுமையான ஒருவரிக்கதையை எடுத்து அதில் சரியான கதாபாத்திரங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.விஜயன். முன்பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் பின்பாதியிலும் தொடர்வது சிறப்பு. திரைக்கதை, வசனத்திலும் தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் இன்னும் கவனம் செலுத்தி இன்னும் நன்றாக சிரிக்க வைத்து இருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தில் ஷில்பா, சச்சுவின் நடிப்பால் இந்த பேரழகி கவர்கிறாள்.

    இ.ஜே.நவ்‌ஷத்தின் ஒளிப்பதிவு தரம். சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் ஒட்டவில்லை.

    மொத்தத்தில் `பேரழகி ஐ.எஸ்.ஓ' அழகு தான்.

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2 படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

    ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். 



    இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    செல்வராகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தில் நடித்த அனுபவம் குறித்து விளக்கிய சாய் பல்லவி, சூர்யா சார் நிறைய டேக் வாங்கி நடிப்பதாக கூறிய பிறகு தான் சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினார்.
    முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

    படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.



    நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை, நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

    பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார் சூர்யா சார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது.

    திரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
    `கஜினிகாந்த்', `காப்பான்' படங்களில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி' என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சதீஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.


    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் சாதனைகள் படைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடிக்கிறார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.

    இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜமைக்காவில் நடந்து வருகிறது. டேனியல் கிரேக் வில்லன்களுடன் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வில்லனை ஓடிச்சென்று பிடிப்பதுபோன்ற காட்சியொன்றில் டேனியல் கிரேக் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.



    இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் டேனியல் கிரேக்குக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 வாரங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்றும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 8-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    ×