என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளவர் ரக்ஷிதா சுரேஷ்.
    • இவர் சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண் முன் வந்து சென்றதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணத்து கொண்டிருந்த கார் காலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் - சீனியர் என இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் னிழு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.


    ரக்ஷிதா சுரேஷ்

    ரக்ஷிதா சுரேஷ்

    இந்நிலையில் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று பெரிய விபத்தில் சிக்கினேன். இன்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது. இந்தப் பெரிய பாதிப்பில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின.



    ஏர் பேக்குகளுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். இப்போதும் நடந்தது மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொரு வரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என பதிவிட்டுள்ளார்.

    இவர் பொன்னியின் செல்வன் -2 படத்தின் கன்னடம் மொழியில் கிரு நகே பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
    • இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    லால் சலாம்

    லால் சலாம்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.


    லால் சலாம் படக்குழு

    லால் சலாம் படக்குழு

    இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையித்தில் இருந்து விமானம் மூலம் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

     

    குஷி

    குஷி


    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

     

    குஷி

    குஷி

    இந்நிலையில் குஷி படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 9ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • கொடைக்கானலில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

     

    கங்குவா படக்குழு

    கங்குவா படக்குழு


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    கங்குவா

    கங்குவா

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 வாரங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் முக்கியமான வரலாற்று பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.


    கங்குவா

    கங்குவா

    இந்நிலையில் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. முழுவீச்சில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு மழையிலும் இடைவிடாமல் நடந்துள்ளதாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் சூர்யா அனைவருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தில் மலையாள நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரிஷ்யம் 2 பட நடிகை சாந்தி மாயாதேவி லியோ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜுடன், சாந்தி மாயாதேவி எடுத்தக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் மலையாள நடிகை இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஆதிபுருஷ்' .
    • இப்படம் ஜூன் மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

     

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

    ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

     

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் வருகிற மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ஐஸ்வர்யா கவுடா, தற்போது ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து இவர் பான் இந்திய படமாக உருவாகவுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

    'ஜாகுவார்' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா கவுடா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் 'பிரவீணா'-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்றார். இவர் தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரேவ் பார்ட்டி' என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.

    இந்நிலையில், இயக்குனர் ராஜு போனகானி இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'எங்கேஜ்மெண்ட்' (Engagement) படத்தில் ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கிறார்.


    ஐஸ்வர்யா கவுடா

    ஐஸ்வர்யா கவுடா

    போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'ரேவ் பார்ட்டி' கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    'எங்கேஜ்மெண்ட்' படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில், "சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு 'ஜாகுவார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு 'பிரவீணா' படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. தற்போது 'ரேவ் பார்ட்டி' படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி 'எங்கேஜ்மெண்ட்' படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. 'எங்கேஜ்மெண்ட்' படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றார்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஜவான்

    ஜவான்

    இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
    • தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு.

    கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

    இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.

    சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.

    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.

    தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடபட்டிருந்தது.


    விடாமுயற்சி

    விடாமுயற்சி

    இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் தனது நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார்.

    இந்நிலையில் ரம்யா நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தொலைந்த தனது நாயை கண்டுபிடித்து தருமாறு அனைவரிடமும் கோரிக்கை வைத்து, கண்டுபிடித்து கொடுப்போருக்கு அரிய பரிசு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ×