என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரியை விடுதலை செய்து மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மும்பையை சேர்ந்த பிரபல இந்தி திரைப்பட பாடகர் அங்கீத் திவாரி. இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு மே 8-ந்தேதி 28 வயது பெண் ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதில், பாடகர் தன்னை பிறந்தநாள் விருந்திற்கு அழைத்து மது கொடுத்து கற்பழித்ததாக கூறியிருந்தார்.

    மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அங்கீத் திவாரியின் சகோதரர் அங்குர் திவாரி தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாடகர் அங்கீத் திவாரி மற்றும் அவரது சகோதரர் அங்குர் திவாரியை கைது செய்தனர்.



    இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது பாடகருக்கு எதிராக யாரும் வந்து சாட்சி கூறவில்லை.

    இதனையடுத்து பாடகர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.எஸ். ராஷ்வி, பாடகர் அங்கீத் திவாரி அவரது சகோதரர் அங்குர் திவாரியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
    ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணிந்து நடிக்கக் கூடாது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

    “நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள். உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள். இதை நான் நம்ப மாட்டேன். குடும்ப பாங்காக வரும் நடிகைகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம் கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து விட்டேன்.

    எனவே ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது. திறமைகள்தான் அவர்களை உயர்த்தி விடும். டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்லும்போது கதாபாத்திரத்துக்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவேன்.

    நடிகர் கார்த்தியுடன் ‘பையா’ படத்தில் நடித்தபோது இரண்டு மூன்று ஆடைகளுக்கு மேல் நான் அணியவில்லை. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த படம் நன்றாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களை தாண்டி விட்டது. இத்தனை வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது சாதாரண விஷயம் இல்லை.



    தற்போது தமிழில் மூன்று படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் வந்து என் கதவை தட்டுகின்றன. இப்போது எனக்கு நிறைய பக்குவம் ஏற்பட்டு இருக்கிறது. கதைகளை நானே தேர்வு செய்கிறேன். உடைகள் விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருக்கிறேன். டைரக்டர்களும் அரைகுறை உடையில் என்னை கவர்ச்சியாக காட்ட முயன்றது இல்லை.

    எல்லா தொழில்களிலும் பலன் கிடைக்காவிட்டால் அதை கசப்பான அனுபவமாக உணர்வார்கள். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இங்கு பலனை எதிர்பார்க்காமல் தொழிலை மட்டும் நேசிக்க வேண்டும். படங்கள் தோல்வி அடைந்தாலும் சிறப்பாக நடித்து இருந்ததால் பாராட்டுகள் கிடைக்கும். எனது ஒவ்வொரு படமும் சிறந்த படங்கள்தான்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

    குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்,  இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.

    இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது 'ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் 'ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.

    பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.

    தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.

    அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.

    நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.

    எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.

    கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த 'விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.

    ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.

    எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.

    பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் 'ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.

    அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய 'ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.

    இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.

    இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.

    வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் 'மாற்றல்' வேலையை தொடர்வேன்.

    இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டியூன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.

    என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.

    அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.

    தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.

    அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக் கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார் அம்மா.

    அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.
    `ப.பாண்டி' படத்தை தொடர்ந்து பிரசன்னா தனது அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
    தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் - பிரசன்னா நடிப்பில் வெளியான `பா.பாண்டி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பிரசன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது.

    இந்நிலையில் பிரசன்னா தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து `துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் `திருட்டு பயலே 2', `நிபுணன்', `இதானோ வலிய காரணம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.



    இதையடுத்து, தனது அடுத்த படத்தில் பிரசன்னா போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல எழுத்தாளரான குட்டி ரேவதி மற்றும் பத்திரிக்கையாளர் புதிய பருதி இணைந்து எழுதியுள்ள கதையை குட்டி ரேவதியே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்க இருக்கிறார். இதில் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரசன்னா சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.  

    இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இப்படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.


    கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகை பிரீத்தி ஜெயின், அப்பீல் செய்ய அவகாசம் அளிக்கும் வகையில் 4 வாரங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், 4 வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
    உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின் பேரனுபவமாக நிறுவப்படும் "லைவ் ஆர்ட் மியூசியம்". இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3-வதாக உருவாகி உள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்".
     
    உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகங்கள் உள்ளன. ஆனால் மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் அச்சிலைக்கு உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.
     
    யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்‌ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரேட்டிவ் டிசைன்ஸ்-சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.


     
    அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோணி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். அந்த சிலைகளின் அருகே செல்லும்போது நீங்கள் நெகிழப்போவது உறுதி.
     
    வரும் 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1.30 மணியளவில் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைக்க இருக்கிறார்.

    `மாநகரம்' படத்தில் நடித்த சதீஷ் சினிமாவில் தனக்கு வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்த அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    நடிகர் சதீஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் ‘மாநகரம்’ படம் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு இவருக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

    இது பற்றி சதீஷிடம் கேட்ட போது...

    “எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான். பி.பி.ஏ முடித்தேன். எனக்குச் சினிமாவில் ஆர்வம் இருந்தது. நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’. அதில் விஷ்ணுவர்தன் சார் தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு. தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். பிறகு இடைவெளி விழுந்தது. மனம் சோர்வு அடையும் நிலை. எனவே மஸ்கட்டில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனாலும் சினிமா ஆர்வம் விடவில்லை. திரும்பி வந்து விட்டேன்.



    இப்போது ‘மாநகரம்‘ எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. இடையில் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. என் தம்பிதான் குடும்ப பொறுப்பையும் சுமந்து வருகிறான். அந்தக் குணமே எனக்குள் ஜெயிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தைக் கொடுத்து இருக்கிறது.

    சினிமாவில் வில்லனாக ஒரு ரவுண்ட் வரவேண்டும். இதுவே எனது இப்போதைய இலக்கு” என்றார்.
    ரிலீசுக்கு முன்பே ‘பாகுபலி-2’ படம் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ‘பாகுபலி-2’ படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், இன்று அதிகாலையில் இருந்தே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களிலும், இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிக மான தியேட்டர்களில் வெளியானது.

    ‘பாகுபலி-2’ தமிழ் பதிப்பை வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே ‘பாகுபலி-2’ படம் இணைய தளத்தில் வெளி யாகி உள்ளது. முதலில் இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகின. பின்னர் 30 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டது. பின்னர் முழு படமும் இணைய தளத்தில் வெளியானது. இதன் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படம் 2 மணி 40 நிமிடங்கள் ஓடுகிறது.



    படம் ரிலீஸ் ஆகி ஒரு சில நிமிடங்களிலேயே முழு படமும் இணைய தளத்தில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ஆயிரக்கணக்கானோர் இந்த படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    இணைய தளத்தில் படம் வெளியானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ‘பாகுபலி-2’ வெளியான இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸின் வரலாறு படமாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவை சேர்ந்த தார்வின் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

    கி.பி.52-ல் புனித தாமஸ் இந்தியா வந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் போதனை செய்தது, கொலையுண்டது பற்றிய சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர், நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து பணி புரிகிறார்கள். இந்த படத்துக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
    தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு'. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை' புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படம் மூலம் நடிகை ஆனார்.

    கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த சீசனில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகே எடுத்த படங்களை ரூஹி சிங் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது காண்பவர்களை மேலும் சூடேற்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



    முன்னதாக அஜித்தின் `பில்லா 2' படத்தில் நடித்த பிரெஞ்சு மாடல் புரூனா அப்துல்லா தனது மேலாடை இல்லாத படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டது சிவகார்த்திகேயன் படத்திற்காகத்தான் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சமந்தா சமீபத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் சிலம்பாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அவர் அந்த வீடியோவை பதிவு செய்து, என்னுடைய பொழுதுபோக்குக்காக சிலம்பம் விளையாடி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், சினிமா வட்டாரங்களிலோ அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காகத்தான் சிலம்பம் கற்று வருவதாக செய்திகளை பரப்பி விட்டனர். தற்போது, இந்த செய்தி உண்மையாகியுள்ளது. இவர் சிலம்பம் கற்றுக்கொண்டது அவர் நடிக்கவிருக்கும் படத்திற்காகத்தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.



    சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்திற்காகத்தான் சமந்தா சிலம்பம் கற்று வருவதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்காக கடந்த 10 மாதங்களாக அவர் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    நேற்று மாலை காலமான வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் - நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, இன்று மாலை அவரது உடல் போரூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி.

    உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒருவருடமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

    அவருக்கு, கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர். லண்டனில் இருக்கும் அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.

    வினுசக்கரவர்த்தி மரணம் பற்றிய தகவல் அறிந்ததும், விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

    தென்இந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்சங்கம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடிகர் நடிகைகளும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



    மறைந்த வினுசக்ரவர்த்தியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

    அவரது உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த், மற்றும் சிவகுமார், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், சூரி, உதய், ஸ்ரீமன், தாமு, மயில்சாமி உள்பட ஏராளமான திரைஉலகினர் வினு சக்கரவர்த்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இன்று மாலை 6 மணி அளவில் போரூர் மயானத்தில் வினுசக்கரவர்த்தியின் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    முன்னதாக அவரது உடல் சாலிகிராமத்தில் இருந்து போரூருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதில் திரை உலகினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.
    ×