என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.

    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார். அவர் கூறினார்:-

    "ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து கொள்வார்.

    மதுரைக் கச்சேரி என்றால் கம்யூனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.

    மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

    அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.

    முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.

    "மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.

    இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.

    எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம். "ஆமாம்'' என்பார்கள். உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.

    உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள். நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.

    இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும். "சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம். "அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.

    "அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!

    வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளியூர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள். "ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும். சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள். அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.

    இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.

    "பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல். கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன். பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.

    "ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன். பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம். "அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.

    பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார். "வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம். ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.

    உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார். அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார். அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.

    ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.

    ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான். பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார். பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும். கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.
    உலகமெங்கும் நேற்று வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2' உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத சில ஸ்வாரஸ்ய தகவல்களாவன,



    * `பாகுபலி', ‘பாகுபலி-2’ படங்களின் பிரமாண்டத்துக்கு காரணம் அதில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்கிகள். 33 நிறுவனங்களில் இவை உருவாக்கப்பட்டன. 70 நிபுணர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். 1 லட்சத்து 45 ஆயிரம் பிரேம்கள் இவர்களால் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

    * ‘பாகுபலி-2’ படத்தை ‘பி.பி.சி’ தொலைக்காட்சி முதன் முறையாக ‘டாக்குமென்டரி’ படமாக தயாரித்து வெளியிடுகிறது. பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் துல்லியமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.



    * ‘பாகுபலி’ படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடல் எடையை 30 கிலோ வரை அதிகரித்தனர். இதற்காக தங்களை 8 மாதங்கள் தயார் செய்தனர். இதற்காக உடற்பயிற்சி செய்தவற்காக பிரபாஸ் அவரது வீட்டில் ரூ. 1.5 கோடி செலவில் ‘ஜிம்’ அமைத்தார்.

    * ‘பாகுபலி’ படத்துக்காக ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் 199 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் இடம் பெறும் பிரமாண்ட செட்டுகளை அமைக்க 150 நாட்கள் ஆகின. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்க வசதி இருந்தது என்ற இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடித்து வரும் `2.0' படம் குறித்த புதிய தகவலை அப்படத்தின் நாயகியான எமிஜாக்சன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவல்களை கீழே பார்ப்போம்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ‘2.0’. நவீன தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் கதை, காட்சிகள் உள்பட அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்ட காட்சிகளின் வடிவமைப்பு போன்ற பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு எவ்வாறு உருவானது என்பது பற்றி தெரிவித்த எமிஜாக்சன்...

    “இந்த படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்கள். அங்கு அவர்களை ‘மோல்ட்’ எடுத்து அதன்பிறகு, அதற்கு ஏற்ப ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான தோற்றம் இருக்கும்படி ஆடைகள் உருவாக்கப்பட்டன. இதில் இயக்குனர் ‌ஷங்கர் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

    நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றதாக அப்படத்தின் வில்லன்களில் ஒருவரான வெற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் அளித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    நயன்தாரா நடிப்பில் வெளியான ‘டோரா’ படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் 3 வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகர் வெற்றி.

    அந்த கதாபாத்திர வாய்ப்புக்காக பட்ட பாடு பற்றி கூறிய வெற்றி...

    “எனக்குச் சினிமா மீது ஆசை.ஆர்வம், மோகம் உண்டு. எனக்குச் சிறிதளவு வருமானமும் வர வேண்டும்.எனவே நிறைய விளம்பரங்கள், சிறிய படங்கள், டிவி தொடர்களில் டப்பிங் பேசினேன். மேடை நாடக அனுபவங்களும் உண்டு. ஏழு குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.



    ‘டோரா’ படத்தில் பானிபூரி விற்பவன் பாத்திரத்துக்கு ஆள் தேடுவதாக அறிந்து இயக்குனர் தாஸ் ராமசாமியிடம் போய் வாய்ப்பு கேட்டேன். எப்படியாவது இந்த வாய்ப்பைப் பெறுவது என்று தீர்மானித்து அசல் பானிபூரிக்காரன் போல என்னை மாற்றிக் கொண்டேன். மறு நாள் இயக்குநரைச் சந்தித்த போது ஒருவழியாக சமாதானம் ஆகி.. நீயே நடி என்றார். இப்படி வந்ததுதான். ‘டோரா’ பட வாய்ப்பு. இதில் நான் புதிய நடிகன். ஆனால் பெரிய ஸ்டாரான நயன்தாரா மேடம் எங்களுடன் எளிமையாகப் பழகினார்” என்றார்.

    `வைகைப் புயல்' என்று செல்லமாக அழைக்கப்படும் வடிவேலு தனது அடுத்த படத்தில் வில்லன் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்' வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

    சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது.



    இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61-வது படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே.யுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்' படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தில் ஆர்.கே.யுடன் மற்றொரு நாயகன் போன்ற வேடத்தில் வடிவேலு வருகிறாராம். இதில் காமெடி கலந்த வில்லன் வேடம். இருவருக்கும் எதிரும் புதிருமான பாத்திரம். இந்த படத்தில் வடிவேலு புதிய கெட்-அப்பில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காமெடியிலேயே கலக்குவார். வில்லத்தனம் நிறைந்த காமெடியிலும் சொல்லவா வேணும். தெறிக்க விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    எப்.சி.எஸ் கிரியே‌ஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரிப்பில் உருவாகியுள்ள 5-வது படமான ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    எப்.சி.எஸ் கிரியே‌ஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரித்துள்ள 5-வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.

    பரதன், அன்சிபா நாயகன், நாயகியாக நடித்துள்ள இதில், கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    இந்த படத்தில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அருள்தேவின் இசையில் பாடல்கள் ஹிட். அதில் “உன் ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் பிரபலமாகி உள்ளது.



    கஞ்சா கருப்பு, சூரியின் கலக்கல் காமெடி, பரதன், அன்சிபா ஜோடியின் காதல், தாளம் போட வைக்கும் பாடல்கள், பரவசமடைய செய்யும் பிரம்மாண்ட காட்சிகள் என்று நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறும் படமாக இருக்கும்” என்றார்

    ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் தொடர்ந்து 5 படங்களை தயாரிக்க போவதாக கூறி இருக்கிறார்.
    `ப.பாண்டி' படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக `ப.பாண்டி 2' படத்தையும் இயக்குவேன் என்று நடிகரும், இயக்குநருமான தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ‘ப.பாண்டி’ படம் மூலம் தனுஷ் இயக்குனராக கால்பதித்து இருக்கிறார். அவருடைய திறமையை பிரபல இயக்குனர்களும் திரை உலகினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

    “படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதற்கு முன்பு இயக்கம் பற்றி கற்றுக் கொள்வதற்காக 17 குறும்படங்களை இயக்கினேன். படம் இயக்க முடிவு செய்த பிறகு கதை எழுதினேன்.



    `ப.பாண்டி' திரைக்கதையை எழுதி முடித்த பிறகு நாயகனாக நடிக்க பாண்டி கிடைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு ஒருவரை தேர்ந்து எடுப்பது கடினமாக இருந்தது. ‘வடசென்னை’ படப்பிடிப்பில் இருந்த போது ராஜ்கிரண் நினைவு வந்தது. அவரைத்தவிர வேறு யாராலும் பாண்டியாக நடிக்க முடியாது என்று தோன்றியது.

    ரேவதி மேடம் படங்களில் நடிக்காமல் இருந்தார். என்றாலும், என் படத்தில் நடிக்க சம்மதித்தார். எனக்காக அவர் நடிக்கவில்லை. கதை மிகவும் பிடித்ததால் நடித்தார். ‘ப.பாண்டி-2’ எடுக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் அது எப்போது நடக்கும் என்பது எனக்கு தெரியாது. மீண்டும் படம் இயக்க நான் அவசரப் படவில்லை” என்றார்.

    ஜிப்சி ராஜ்குமார் இயக்கத்தில் பொன்வண்ணனும், பாக்யராஜ், சாராஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் `அய்யனார் வீதி' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    அய்யனார் வீதியில் வசிக்கும் பொன்வண்ணனும், பாக்யராஜும் பால்ய கால நண்பர்கள். பொன்வண்ணன் அந்த ஊரில் சாமியாடியாக இருக்கிறார். பாக்யராஜ் கோவில் பூசாரியாக இருந்துவருகிறார். பாக்யராஜின் பெண்ணான சாரா ஷெட்டி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் நாயகன் யுவனும் படித்து வருகிறார்.

    யுவனின் தாத்தா செய்த தவறுக்காக அவருடைய குடும்பத்தையே பொன்வண்ணனின் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார். இதனால், காலங்காலமாக அவர்கள் ஊரைவிட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள். இதனால், பொன்வண்ணன், பாக்யராஜ் மற்றும் ஊர்க்காரர்கள் மீது வெறுப்பில் இருக்கும் யுவனுடைய குடும்பத்தார் ஊர்க்காரர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மறுமுனையில், யுவன், சாராஷெட்டியை ஒருதலையாக காதலித்து வருகிறார். சாராவோ யுவனை கண்டுகொள்வதாக இல்லை. அதேநேரத்தில், பொன்வண்ணனின் மகளான சிஞ்சு மோகன் யுவனின் மீது ஆசையாக இருக்கிறாள்.



    இந்நிலையில், அய்யனார் வீதியில் ஊர் திருவிழா நடக்கவிருக்கிறது. அந்த திருவிழாவில் கள்ளச்சாராயத்தை கொடுத்து ஊர் மக்கள் அனைவரையும் கொல்ல யுவனின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் திட்டம் போடுகிறார்கள்.  

    இந்த திட்டம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததா? யுவன் குடும்பத்தாரிடமிருந்து ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    யுவனுக்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், இப்படத்தில் அவருக்கென்று பெரிதாக வேலையில்லை. இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.



    சாரா ஷெட்டிக்கு காதலை வெறுத்து ஒதுக்கும் கதாபாத்திரம். அதேநேரத்தில், சிஞ்சு மோகனுக்கு விழுந்து விழுந்து காதலிக்கும் கதாபாத்திரம். இதை இரண்டையும் இவர்கள் அழகாக செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    படத்தில் அதிக வசனங்கள் பேசியிருப்பது நடிகர் பாக்யராஜ்தான். பூசாரியாக இருந்தாலும் ஊர் மக்கள் இவரை ஒரு பெரிய மனிதராகத்தான் பார்க்கிறார்கள். அதற்கேற்றார்போல், தனது நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பொன்வண்ணன், சாமியாடியாக வந்து நம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

    வில்லனாக நடித்துள்ள செந்தில்வேல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பாக்யராஜ், பொன்வண்ணனுக்கு இணையாக நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சிங்கம் புலி, சிங்கமுத்து காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை.



    தமிழ் சினிமாவில் அதர பழசான இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் பகை, அதையொட்டி நடக்கும் பிரச்சினையையே இப்படத்தில் இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள் என வித்தியாசமான கோணத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், திரைக்கதையின் சொதப்பலால் அதை சரியான கோணத்தில் சொல்ல மறந்துவிட்டார். இரண்டு குடும்பங்களுக்குள் இருக்கும் பிரச்சினையுடன் காதலை சொல்ல வந்த இயக்குனர் அதை அழுத்தமாக சொல்லாததும் வருத்தம்.

    சக்திவேலின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது. யுகே முரளியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘அய்யனார் வீதி’ இடைஞ்சல்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று வெளியான `பாகுபலி-2' படத்தில் வசூல் ரூ.240 கோடியை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ‘பாகுபலி-2’ படம் அதிரடி சாதனை படைத்துள்ளது.

    நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடித்த ‘பாகுபலி-2’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

    இது பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். நேற்று படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

    உலகம் முழுவதும் வெளியானாலும் ஆந்திராவில் பிரபாஸ், ராணா ரசிகர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தனர். சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் நடித்ததால் தமிழ்நாட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் கதாநாயகன் பிரபாஸ் என்றாலும் சத்யராஜ் படம் போல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடம் பெற்றுள்ளார்.



    `பாகுபலி' முதல் பாகத்தில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்’ என்ப தற்கு `பாகுபலி 2'-ல் விடை கிடைக்கும் என படம் முடிவடைந்ததால் 2-ம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    வெளிநாடுகளுக்கு இணையான ‘கிராபிக்ஸ்’ தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் 2 ஆண்டுகளாக படம் தயாரிப்பில் இருந்தது. இதனால் ரசிகர்கள் 2 வருடம் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஆங்கில படம் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

    உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் ஆனது. முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    `பாகுபலி-2' படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு வசூலாகி உள்ளது. இவை அனைத்துமே ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனையான டிக்கெட் வசூல் ஆகும். ஆன்லைனில் முதல்நாளில் ஒரு வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.



    தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்நாளில் ரூ.13 கோடி வசூலாகி உள்ளது. கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி முதல்நாளில் ரூ.5 கோடி வசூலித்து கொடுத்துள்ளது.

    மலையாளம் அல்லாத பிற மொழிப்படம் கேரளாவில் ஒரே நாளில் ரூ.5 கோடி வசூலித்து இருப்பது புதிய சாதனையாகும்.

    ஆந்திராவில் `பாகுபலி-2' படம் பார்க்க காலை 6 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஐதராபாத்தில் ஆன்லைன் முன்புதிவு தொடங்கியதும் ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி' ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை வசூலானது.



    கர்நாடகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. பெங்களூரில் 95 சதவீத தியேட்டர்களில் `பாகுபலி-2' படம் ஓடியது. இங்கு தெலுங்கு மொழியில் படம் வெளியானது.

    பெங்களூர், மும்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.1000, ரூ.1,500, ரூ.2,000 என ரகசியமாக விற்கப்பட்டது.

    வெளிநாடுகளில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி-2' படம் ரிலீஸ் ஆனது. நாளை வரை 3 நாளில் மொத்தம் ரூ.240 கோடி வரை முன்பதிவு மூலம் வசூலாகி உள்ளது.
    சுசி லீக்ஸ் பிரச்சனையில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சுசித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    கடந்த மாதம் கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தவர் பின்னணி பாடகி சுசித்ரா. தற்போது கணவன் கார்த்திக் உடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறிய வந்தார். பின்னர் தனது டுவிட்டர் கணக்கையும் முடக்கினார்.

    இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சுசித்ராவின் கணவர் கார்த்திக், அவரது டுவிட்டர் பக்கத்தில் அவரது அடுத்த நிகழ்ச்சி குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவின் முடிவில் அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த சுசித்ராவை காண்பித்தார்.



    தற்போது, அமெரிக்காவில் இருக்கும் சுசித்ரா, தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த மாதம் நடந்த சம்பவங்கள் குறித்து தான் மிகவும் வருத்தப்பட்டு வருவதாகவும், தனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதே வேளையில் எனது நண்பர்கள் யாரையும் நான் இழக்க நினைக்கவில்லை. யாரும் என்னை விட்டு  விலகாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

    என்னால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரமுடியவில்லை, எனினும் அதற்காக போராடி வருகிறேன். என் மீது சினிமா துறையில் இருக்கும் யாரும் கோபப்பட வேண்டாம். என் மனநிலை குறித்து கார்த்திக் கூறியதை அடுத்து, அதில் இருந்து மீண்டு வர தான் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விரைவில் ஒரு சில மாதங்களில் இந்தியா திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
    நடிகர் வினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் தலைமுறை நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு என்று நடிகர் ரிஷிகபூர் வேதனை தெரிவித்துள்ளார்.
    பழம்பெரும் இந்தி நடிகரும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன வினோத் கன்னா புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் மும்பையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரிஷிகபூர், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, வினோத் கன்னா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில், வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் இளம் தலைமுறை நடிகர்கள் யாரும் பங்கேற்காததை கண்டு, பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் நேற்று கூறியதாவது:-



    இந்த தலைமுறையை சேர்ந்த ஒரு நடிகர் கூட வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது வெட்கக்கேடு. அதிலும், அவருடன் பணிபுரிந்தவர்கள் கூட பங்கேற்கவில்லை. முதலில் மரியாதை என்றால் என்ன? என்பதை இந்த தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளுங்கள். நான் இறக்கும்போது நான் தயாராக இருக்க வேண்டும். எனக்காக யாரும் தோள் கொடுக்க மாட்டார்கள். இன்றைய நடிகர்கள் மீது ஆத்திரம், ஆத்திரமாக வருகிறது.

    வினோத் கன்னா மறைவுக்கு முந்தைய நாள் இரவு நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த விருந்தில், ஏராளமான ஜால்ரா அடிக்கும் நடிகர்களை காண முடிந்தது. ஆனால், வினோத் கன்னா இறுதிச்சடங்கில் வெகு சிலரே கலந்து கொண்டனர். வெளிப்படையாக இருங்கள். உங்கள் மீது கோபம் தான் வருகிறது.



    என்னுடைய மகன் ரண்பீர் சிங்கும், மனைவி நீத்து சிங்கும் வெளிநாடு சென்றிருப்பதால், வினோத் கன்னா இறுதிச்சடங்கில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. எனினும், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் சொல்ல கூடாது.

    இவ்வாறு அதில் ரிஷிகபூர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் தான் பங்கேற்காதது குறித்து பிரபல இயக்குனர் மகேஷ் பட் விளக்கம் அளித்தார். அதில், “வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு ஊடகத்தினர் அனுமதிக்கப்பட்டது மிகவும் தாமதமாகவே எனக்கு தெரியவந்தது. மற்றபடி, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
    விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொக்‌ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

    முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `காற்று வெளியிடை' படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்த சாய் பல்லவி, அடுத்ததாக விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திலும் நடிக்காமல் அதனை தட்டிக்கழித்தார்.



    இந்நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவிருந்தார். இந்நிலையில், அதற்கு முன்னதாக பெண்களை மையக்கருவாக கொண்ட கதை ஒன்றை விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு `கரு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் `வனமகன்' படம் மே 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், விஜய் தனது அடுத்த படத்தில் சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×