என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை மணக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் நடித்த பிரபாஸுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.

    இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், பெரும்பாலும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    சமீபத்தில் ராசி சிமெண்ட் நிறுவனத்தின் சேர்மன் பூபதிராஜுவின் பேத்திக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மும்பை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவருடைய பேத்தியைத்தான் பிரபாஸுக்கு பேசி முடித்திருக்கிறார்களோ? என்ற ஒரு ஐயமும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘பாகுபலி-2’ படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த பிரபாஸ், தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    சம்பளத்தை விட கதாபாத்திரமே முக்கியம் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம் உயரவில்லை என்று தகவல் வெளியானது.

    இதுகுறித்து கேட்டபோது, ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில்...

    “நடிப்பவர்களுக்கு சம்பளம் முக்கியம் தான். என்றாலும், கதாபாத்திரம் அதைவிட முக்கியம். சிறந்த கதாபாத்திரங்கள்தான் நடிகர், நடிகைகளை உயரத்துக்கு கொண்டு செல்லும். ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடித்த வேடம்தான் இதுவரை என்னைப்பற்றி பேசவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.


    இன்று வரை நான் சம்பளத்தை விட கதாபாத்திரங்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறேன். என் உயரம் என்னவென்று எனக்குத் தெரியும். எனவே, அதற்கேற்ற சம்பளத்தை வாங்குகிறேன். நான் தற்போது நடிக்கும் ஒரு படத்தில் எனக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகைக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டது.

    ஆனால், எனக்கு குறைந்த சம்பளம் தான் பேசினார்கள். என்றாலும், அது பற்றி யோசிக்காமல் நடித்து வருகிறேன். இந்த படத்துக்குப் பிறகு சம்பளம் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

    ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘காலா’ படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
    சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. படம் ஆரம்பிக்கும்போது எழாத பிரச்சினைகள் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் வந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய இடைஞ்சலை கொடுக்கும். பெரிய நடிகர், சிறிய நடிகர் என்கிற பாரபட்சம் இல்லாமல் எல்லா தரப்பு நடிகர்களின் படங்களும் இந்த பிரச்சினை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

    அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்து வரும் ‘காலா’ படத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது. இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜசேகர் என்பவர்தான் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளார். அதாவது, ‘காலா’ படத்தின் மூலக்கதை என்னுடையது என்றும், என்னுடைய கதையை திருடிதான் ‘காலா’ படத்தை எடுத்து வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.



    மேலும், ‘காலா’ படத்தின் தலைப்பும் என்னுடையதே என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இந்த தலைப்பை பதிவு செய்துள்ளேன் என்றும் அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ‘காலா’ படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ‘காலா’ படத்தின் கதை என்னுடையது என்று எழுந்துள்ள புகார் படக்குழுவினருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். ‘காலா’ படத்தில் சமுத்திரகனி, பாலிவுட் நடிகைகள் ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 
    இசைஞானி இளையராஜா மீண்டும் சிம்பு படத்தில் அவருக்காக ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானாகான், நீது சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். சிம்பு இப்படத்தில் நான்கு கெட்டப்புகளிலும் நடிக்கிறார்.

    யுவன் இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘ரோட்டுல வண்டி ஓடுது’ என்ற அந்த பாடலை இளையராஜாவின் பிறந்தநாளான ஜுன் 2-ந் தேதி வெளியிடவிருக்கிறார்களாம். ஏற்கெனவே, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் இளையராஜா ‘மச்சான் மச்சான்’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வருகிற ரம்ஜானையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிங்கிள் வெளியீட்டுக்கு பிறகு விரைவில் மொத்த பாடல்களையும் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ரஜினியை சுற்றி இருப்பவர்கள் தவறு செய்வதாக ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சைதை ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அனுமதியின்றி பேட்டியளித்தாக கூறி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சைதை ரவி நேற்று மன்றத்தின் அடிப்படை  உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தன் மீதான நடவடிக்கை பற்றி சைதை ரவி கூறியிருப்பதாவது:-

    நான் சாதாரண ஆட்டோ டிரைவர். என் ஆட்டோ முழுக்க ரஜினிதான் இருப் பார். 37 ஆண்டுகளாக ரஜினியின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். 1985-ல் சைதை பகுதி நிர்வாகி ஆனேன்.

    அன்று முதல் இன்று வரை ரஜினிக்காக மன்ற பணிகளில் பாடுபட்டு இருக்கிறேன். ‘கபாலி’ ரிலீஸ் நேரத்தில் எனக்கும், சுதாகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.


    ரசிகர்களுடனான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் மண்டப ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்தனர். ஆனால் பல நூறுபேர் போட்டோ எடுத்தார்கள். அவர்கள் அனைவரும் சுதாகர் மகனால் அழைத்து வரப்பட்டவர்கள். அதை நான் தட்டிக்கேட்டேன். சுதாகர் என்னை நீக்கி விட்டார். நான் மன்றத்தால் சம்பாதிக்கவில்லை.

    ரஜினிக்காகவே உழைக்கிறேன். ஆனால் எதற்காக நீக்கினோம் என்று கூட அவர் விளக்கவில்லை. 37 ஆண்டு காலம் உழைப்புக்கு சில வரி விளக்கம் கூட இல்லை. தனது நண்பர் என்று நினைத்து சுதாகரை மன்ற பொறுப்பில் வைத்தார் ரஜினி. அவரின் தவறை நான் ரஜினியிடம் நேரடியாக சுட்டிக் காட்டினேன். என்னை நீக்கிவிட்டார்கள்.

    என் மனநிலையை மும்பையில் இருக்கும் ரஜினிக்கு கடிதமாக எழுதுவேன். இதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். இப்போது தான் ரஜினி நல்ல முடிவுக்கு வருகிறார். அதை தடுக்க வேண்டாம்.

    ரஜினியிடம் நாம் தனியாக நியாயம் கேட்போம் என்று சொல்லி விட்டேன். ரஜினி நல்லவர். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அப்படி இல்லை. தவறு செய்கிறார்கள்.

    இவ்வாறு சைதை ரவி கூறியுள்ளார்.

    கதைக்கு தேவை என்றால் முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா படப்பிடிப்பு அரங்குகள் எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. தினமும் ஒரு மாணவி போலவே வந்து நடித்து விட்டுப்போகிறேன். தினமும் புதுப் புது விஷயங்களையும் கற்றுக்கொள்கிறேன். வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படாமல் கடுமையாக உழைப்பைக் கொடுக்கிறேன்.

    கவர்ச்சியையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. நடிகைகள் கவர்ச்சியாக தோன்றினால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். கவர்ச்சி உடையில் நடிகைகளை தேவதைகள் போல் பார்க்க முடியும். முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல. கதைக்கு தேவை என்றால் நான் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடிப்பேன். ஆனால் அந்தக் காட்சி ஆபாசமாக இருக்கக் கூடாது.

    சிலர் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக முத்தக் காட்சிகளை திணித்து படங்கள் எடுக்கிறார்கள். அதுபோன்ற முத்தக்காட்சிகளுக்கு நான் உடன்பட மாட்டேன். சினிமா எனக்கு பிடித்தமான தொழிலாக இருக்கிறது. ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.



    கதைகளை நானே தேர்வு செய்கிறேன். நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. இங்கு எதையும் இழந்து விடவில்லை. சிலர் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு நடிக்காமல் இழுத்தடிப்பதாக புகார்கள் வருகின்றன.

    நான் அப்படி செய்ய மாட்டேன். வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு எல்லாருமே பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த படம் வெற்றி பெறும், இது தோல்வி அடையும் என்று எவராலும் கணிக்க முடியாது.

    அதிக பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்துள்ளன. சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்கள் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன.”

    இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.
    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இளையராஜா பணியாற்றி வந்தபோது, இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு நாள் மதுரையில் அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) உடல்நலமில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள் என்றும், செலவுக்கு பணம் வேண்டும் என்றும் மூத்த மகன் ஜீவதுரை வந்தான்.

    அவ்வளவு சீரியசாக இருக்காது என்று நான் நிச்சயமாக நம்பினேன். பணத்தை, தேவையானபோது அனுப்பலாம் என்று சாதாரணமாக இருந்து விட்டேன்.

    அடுத்த நாள், ஜி.கே.வி.யின் ரெக்கார்டிங்குக்குப் போனேன். காலை 7 மணிக்கு, விஜயா ரெக்கார்டிங் தியேட்டரில் ஜி.கே.வி.யுடன் அமர்ந்தேன்.

    அண்ணன் இறந்துவிட்டார்கள் என்று செய்தி வந்தது. அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

    `பணம் கொடுத்திருந்தால் ஒருவேளை பிழைத்திருப்பாரோ?'

    குற்ற உணர்ச்சி, அண்ணன் போய்விட்ட வேதனை எல்லாம் சேர்ந்து, என்னை ஸ்தம்பிக்க வைத்து, துயரத்தில் மூழ்கடித்தன.

    அம்மா, பாஸ்கர், அமர் ஆகியோருடன் நானும், மனைவியும், குழந்தையும் வாடகைக் காரில் கிளம்பினோம். போகும்போது யாருக்கும் பேச்சு வரவில்லை. அம்மா புலம்பிக் கொண்டே வந்தார்கள்.

    உடலை மதுரையில் இருந்து பண்ணைபுரத்துக்கு பிள்ளைகள் கொண்டு போனார்கள்.

    அண்ணன் உடலைப் பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைத்தது. துயரத்தைத் தாங்க முடியவில்லை. அப்பா உயிர் பிரியும்போது, எங்கள் கைகளைப் பிடித்து, அவரிடம் தானே ஒப்படைத்தார்! அண்ணன்தானே எங்களை வளர்த்து ஆளாக்கினார். `எங்கள் வளர்ச்சியைக் காணாமல் போய்விட்டீர்களே' என்று கதறி அழுதோம்.

    இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது, துக்கமும், அழுகையும் அதிகமாகியது. உடலை குழிக்குள் இறக்கியபோது, கண்கள் வற்றும்வரை கண்ணீர் கொட்டியது.

    நான் அழவேண்டியது எல்லாம், அன்றோடு முடிந்தது. அதற்குப் பிறகு, அத்தனை வேதனையோடு நான் என்றும் அழவில்லை.

    திரும்பி வந்தோம். ரெக்கார்டிங்குக்கு போனபோது, ஜி.கே.வி.யை பார்த்ததும், அழுகை அதிகமாக வந்தது. "எங்களுக்கு இனி இந்த உலகில் அண்ணன் என்பது நீங்கள்தான் அண்ணே'' என்று கதறியபடி கூறினேன். அவர் ஆறுதல் சொன்னார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    அண்ணன் - தம்பி போல் ஜி.கே.வெங்கடேசும், இளையராஜாவும் பழகுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களைப் பிரிக்க முயற்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசையமைப்பாளர் கோவர்த்தனும், நானும் சேர்ந்து இசையமைப்பதும், ஆர்க்கஸ்ட்ரா ரிகர்சல் நடத்துவதும், ஜி.கே.வியின் இன்சார்ஜ் சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.

    `நம்ம ரெக்கார்டிங் எல்லாம் ராஜாவுக்குப் பெரிது இல்லை, அவனும் கோவர்த்தனும் மிïசிக் பண்றாங்க! அதோட வெளிநாட்டில் இருக்கும் குரூப்போல ஆர்க்கஸ்ட்ரா கச்சேரியும் பண்ணப்போகிறார்களாம் என்று சொல்லிவிட்டார். "அவன் பிசியா இருந்தா விட்டுடுடா'' என்று ஜி.கே.வி.யை சொல்ல வைத்து விட்டார்.

    இதனால், வழக்கமாக என்னை அழைத்துப்போக வீட்டுக்கு வரும் டாக்சி 2 நாட்களாக வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

    ஜி.கே.வியின் அண்ணன் மகன் வித்யா, வயலின் வாசிப்பவன், என் வீட்டிற்கு வந்து "நீ ஏன் வரவில்லை'' என்றான். அதற்கு நான் "வண்டி என்னை பிக்அப் பண்ண வரவே இல்லை'' என்றேன்.

    பின்னர் நான் ஜி.கே.விக்கு ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டேன். அதில், "நான் ஏதோ தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதைப்போலவும், செய்யத்தகாத நடவடிக்கையைச் செய்துவிட்டதைப் போலவும் அதனால் என்னைத் தண்டிப்பதாகவும் நினைத்துக்கொண்டு, என்னை, அப்படியே விட்டுவிடு என்று சீனிவாசனிடம் சொன்னதாக அறிந்தேன். அண்ணா.. உங்களை நம்பி நான் சென்னைக்கு வரவில்லை. இனிமேல் வேலையே இல்லாமல் போனாலும், பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர உங்களிடம் வந்து எனக்கு வேலை வேண்டும் என்று நிற்கமாட்டேன். இப்படிக்கு ராஜா'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

    இந்தக் கடிதம் கிடைத்ததும், என்னை அழைத்து வர ஆள் அனுப்பினார், ஜி.கே.வி.

    முதலில் அந்த சீனிவாசனே வந்தான். நான் "வரமுடியாது'' என்றேன். பிறகு வித்யா வந்தான்.

    "வாடா! என்ன இருந்தாலும் அவர் பெரியவர்'' என்றான். போனேன்.

    "என்னடா இது லெட்டர்!'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    நடந்ததை சொன்னேன். அவர் வருத்தப்பட்டார்.

    "சரி, சரி! போனது போகட்டும். வாடா!'' என்று அழைத்துப்போனார்.

    கம்போசிங்கிலும், ரெக்கார்டிங்கிலும் `உம்' என்று இருந்தேன்.

    நான் சரியாவதற்கு இரண்டு மூன்று நாட்களாயிற்று.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு படமானது.
    ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு' என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்கி இருக்கிறார்.

    இவர் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை', அருண் விஜய் நடித்த `ஜனனம்' மற்றும் `வஜ்ரம்' படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். மனோ என்ற புதுமுகம் ராம்குமார் வேடத்திலும், ஏ.வெங்கடேஷ் என்பவர் ராம்ராஜ் என்ற வக்கீல் வேடத்திலும் நடித்திருக்கிறார். சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார்.

    நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும், பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் சுவாதி கொலை வழக்கில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
    சங்கமித்ரா படத்திலிருந்து ஏன் விலகினேன்? என்பதற்கு ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
    சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தானே அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

    துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.

    தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும். படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார்.



    ஆனல், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.
     
    ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகிவருகிறார்.

    சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர். ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.



    இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசனை நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ‘சங்கமித்ரா’ படத்திற்காக ஸ்ருதிஹாசன் லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எல்லாம் கற்றுக் கொண்டிருந்தார். அதேபோல், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலும் ஸ்ருதிஹாசனை பயன்படுத்தியிருந்தனர். இந்நிலையில், ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நீக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்து.

    இப்படத்திற் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதால், தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக வேறொரு நடிகையை தேடும் பணியும் படக்குழுவினருக்கு கூடுதல் சிரமமாக ஏற்பட்டுள்ளது. விரைவில், அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக பிரபல இந்தி பட இயக்குனர் ஒருவர் காத்துக்கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றிக்குபிறகு அனுஷ்கா மிகவும் பிரபலம் ஆகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை.

    இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை.


    ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தை தொடங்குவேன். அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும்” என்று டைரக்டர் நிவாஸ் பிடிவாதமாக காத்து இருப்பதாக இந்தி பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    விஜய் 61 படக்குழு தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பை முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஐரோப்பா நாடுகளில் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தனர்.

    இந்நிலையில் இன்றோடு இந்த படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் படக்குழுவினர் இந்தியா திரும்பவுள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஜுன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.



    இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
    ×