என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் இவன் தந்திரன் படத்தின் விமர்சனம்.
    இன்ஜினியரிங் படித்து வந்த நாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் பிரபலபான இடத்தில் கடை ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அங்கு லேப்டாப், கணினி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பல எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எலக்ட்ரானிக் மீது அதீத ஈடுபாடு உடைய கவுதம் கார்த்திக் பல்வேறு புதிய முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

    அதன் பயனாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற, தனித்துவமான புதிய மொபைல் போன் ஒன்றையும் உருவாக்குகிறார். பின்னர் அந்த போனை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதுஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுதம் கார்த்திக்கிடம் இருந்து லேப்டாப் ஒன்றை வாங்கி செல்கிறார். அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இவர்களது சந்திப்பு மோதலுக்கு செல்கிறது.



    அதே நேரத்தில் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா மாட்டும் பணி கவுதம் கார்த்திக்குக்கு கிடைக்கிறது. கேமரா வைத்துவிட்டு, அதற்கான பணத்தை சுப்பராயனின் மச்சானான ஸ்டன்ட் சில்வாவிடம் கவுதம் கார்த்திக் கேட்க, பணம் கொடுக்காமல் கவுதமை விரட்டி விடுகிறார் சில்வா. இதனால் கடுப்பாகும் கவுதம் கார்த்திக், தனக்கு வரவேண்டிய பணத்தை சில்வாவிடம் வசூலித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

    இந்நிலையில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்று அமைச்சர் சூப்பர் சுப்பராயன், குறி்பிட்ட கல்லூரிகளுக்கு தடை விதிக்கிறார். அதில் நாயகி ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியும் ஒன்று. இவ்வாறாக கல்லூரிகளுக்கு தடை விதிப்பது போல் விதித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சுப்பராயன் ஈடுபடுகிறார். அமைச்சருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்க, பணத்தை கொடுக்க முடியாமல், மாணவர் ஒருவர் கவுதம் கார்த்திக் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.



    இந்த பிரச்சனைக்கு சுப்பராயன் தான் காரணம் என்று கவுதம் கார்த்திக்குக்கு தெரிய வர, தனது சாதுரியத்தின் மூலம் அமைச்சருக்கு எதிரான ஆதரங்களை திரட்டுகிறார். இதையடுத்து சூப்பர் சுப்பராயன் குறித்த தகவல்களை ரகசியமாக இணையதளங்களில் வெளியிடுகிறார். இதனால் சூப்பர் சுப்பராயனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் அமைச்சராக முயற்சி செய்கிறார் சுப்பராயன்.

    மறுபுறத்தில் அமைச்சரை மாட்டி விட்டது கவுதம் கார்த்திக் தான் என்பதை கண்டுபிடித்துவிடும் சில்வா, கவுதமை தேடி செல்கிறார். இந்நிலையில், கல்லூரி பிரச்சனையில் தன்னை பற்றிய தகவல் வெளியேறி விடக்கூடாது என்பதால், தனது மச்சான் சில்வாவையும், சுப்பராயன் கொலை செய்து விடுகிறார். இதையடுத்து அவரது பதவி பறிபோக காரணமானது கவுதம் தான் என்பதை அமைச்சர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அல்லது கவுதம் அமைச்சரை வெளிவரமுடியாத சிக்கலில் சிக்க வைத்தாரா? ஷ்ரத்தாவுடனான மோதல் காதலில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.



    சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவுதம் கார்த்திக், கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், செய்முறையில் இன்ஜினியரிங் மாணவர்களை விட சிறந்து விளங்குபவராக ஜொலிக்கிறார். இன்ஜினியராக இல்லாவிட்டாலும், அதற்குறிய தனித்துவத்துடன் வலம் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

    காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், நடுத்தர வீட்டு பெண் என்று கூறிவிட்டு, பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பெண் போல இருப்பது படத்திற்கு மைனஸ்.



    நகைச்சுவையில் ஆர்.ஜே.பாலாஜி ரசிக்க வைக்கிறார். பல கவுண்டர்கள் கொடுத்தாலும், ஒரு சில கவுண்டர்களுக்கே சிரிக்க முடிகிறது.  இன்ஜினியரிங் படித்து வேலையின்றி இளைஞர்கள் கஷ்டப்படுவதை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். நகைச்சுவை கலந்த எதார்த்தத்தை எடுத்துரைத்திருக்கிறார்.

    சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா இருவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அமைச்சருக்குண்டான கெத்துடன் வலம் வரும் சூப்பர் சுப்பராயன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி பாரத் ரெட்டி, மயில்சாமி, மதன் பாப் காமெடி கலந்த நடிப்புடன் காட்சிக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.



    படிப்பு இல்லை என்ற ஒரு குறை இல்லை. இன்ஜினியரிங் படித்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இருப்பர்களுக்கு, தனது தனித்துவத்தின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான முயற்சியில் தொடந்து ஈடுபட்டால் அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதை கூறியிருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். தனக்குரிய தனித்துவத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்கி இருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

    தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. இவன் தந்திரன் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் டிஜிட்டல் லுக்கில் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `இவன் தந்திரன்' சிக்கலானவன்.
    பணத்துக்காக நடிக்கவில்லை. ரசிகர்கள் பாராட்டுதான் எனக்கு முக்கியம் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி டைரக்டு செய்துள்ளனர். சஷிகாந்த் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து நடிகர் மாதவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “தமிழில் ‘இறுதி சுற்று’ படத்துக்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம் கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நான் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதா கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறோம். விஜய் சேதுபதி சிறந்த நடிகர். எளிமையானவர். இயல்பாக அனைவரிடமும் பழகக்கூடியவர்.

    படப்பிடிப்புகளில் நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன். டைக்ரடர் கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என்ற சிந்தனைதான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களை கவனிக்க மாட்டேன். ஆனால் விஜய் சேதுபதி தனக்குள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் வைப்பதுடன் படப்பிடிப்பை காண வந்து இருப்பவர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார்.



    அவரது பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன். நான் மற்ற நடிகர்களைப்போல் ரூ.40 கோடி ரூ.50 கோடி சம்பளம் வாங்கவில்லையே என்று கேட்கிறார்கள். நல்ல திறமைக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு இல்லை. தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

    அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதை விட நல்ல கதையம்சத்தில் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எனக்கு போதுமான வசதி இருக்கிறது. எனவே பணத்துக்காக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கும் படங்களில் நடித்த திருப்தி இருந்தால் போதும். அதிக சம்பளம் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை.

    இவ்வாறு மாதவன் கூறினார்.
    அரசியலுக்கு வருவது குறித்து தனது நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுப்பதை தள்ளி வைத்து விட்டு 2.0, காலா பட வேலைகளில் இருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதங்கள் பரபரப்பாகி இருக்கிறது. ரசிகர்களோ, ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

    ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் ஜெயலலிதா மறைவாலும், கருணாநிதி வயது முதிர்வாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி மக்கள் செல்வாக்கை பெற்றுவிட முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரது முதல் அறிவிப்பே ஊழல் ஒழிப்பாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    ரசிகர்களை சென்னையில் சந்தித்தபோது நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்று பிரகடனப்படுத்தியதையும் அவர்கள் நினைவுபடுத்துகின்றனர்.



    மாநில அரசியலையும், தேசிய அரசியலையும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் என்பதும் அரசியலில் ஈடுபட்டால் மக்களை கவரும் கொள்கை திட்டங்களை அறிவித்து அவர்களை தன் பக்கம் எளிதாக இழுத்து விடுவார் என்பதும் அவரை சந்தித்தவர்கள் கருத்தாக உள்ளது.

    எதிர்ப்பாளர்களோ ரஜினியின் அரசியல் காலம் முடிந்து விட்டது என்கின்றனர். ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க.-த.மா.கா கூட்டணியை உருவாக்கிய நேரத்தில் புதிய கட்சி துவங்கி அரசியலுக்கு வந்து இருந்தால் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கும் என்றும், இப்போது அவருக்கு ஆதரவு இல்லை என்றும் கூறுகிறார்கள்.

    காவிரி விவகாரம், ஈழத்தமிழர்கள், இந்தி மொழி திணிப்பு பிரச்சினைகளில் ரஜினிகாந்த் கொள்கைகள் உறுதியாக இல்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.



    எனவே அரசியல் குறித்து ரஜினிகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. அரசியலுக்கு வருவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் அவர் நண்பர்கள், அரசியல் கட்சி நடத்தும் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரிடம் கருத்து கேட்டு வருகிறார். இந்தி நடிகர் அமிதாப்பச்சனிடமும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1991-ம் ஆண்டு வெளியான ‘ஹம்’ இந்தி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அமிதாப்பச்சனுக்கு திடீர் அரசியல் ஆசை ஏற்பட்டு 1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அலகாபாத் பாராளுமன்ற தொகுதியில் உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி பகுகுனாவை எதிர்த்து போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு போபர்ஸ் ஊழல் வழக்கில் தனது பெயர் அடிபட்டதால் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்.

    ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்து அவர் பல ஆலோசனைகள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையில் ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
    நட்டி குமார் இயக்கத்தில் அகில் - நயனா - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எவனவன்' படத்தின் விமர்சனம்.
    சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார்.

    அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.



    இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகித்து, போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார். இதில் நயனாவின் குளியல் வீடியோ இருக்க, காதலியை இப்படி வீடியோ எடுத்திருக்கிறாயே என்று சரண், அகிலை விமர்ச்சிக்கிறார். இதையடுத்து, சரண் என்ன சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாக அகில் கூற, அவருக்கு தண்டனையாக சமூகத்தில் இவரை போன்று தவறுகள் செய்யும் சிலரை அகில் மூலமாக சரண் பாடம் புகட்டுகிறார்.

    இதில் அமைச்சர் ஒருவரை பொதுமேடையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். சரணின் பேச்சை கேட்டு அகிலும், அமைச்சரை செருப்பால் அடித்துவிட்டு, பின்னர் அமைச்சரை தனியாக சந்தித்து, மொபைல் தொலைந்தது முதல், அதில் இருக்கும் வீடியோ வரை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். அந்தநேரம் பார்த்து, அமைச்சரை சந்தித்து பேசும் நயனா, தான் அகிலை காதலிப்பதாக அவரது போட்டோவை காட்ட அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் அகில் கூறிய அனைத்தையும் நயனாவிடம் சொல்லிவிடுகிறார்.



    பின்னர் நயனாவை சந்திக்கும் அகிலிடம், அந்த அமைச்சர் தான் தனது அண்ணன் என்று நயனா கூற அகில் அதிர்ச்சி அடைகிறார். இதுஒருபுறம் இருக்க சரண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் அகில், தனது நண்பர்கள் உதவியுடன் அவரை அடித்து, உதைத்து கடலில் தூக்கி எறிந்து விடுகிறார்.

    இந்நிலையில், நயனா காணாமல் போக, அமைச்சரின் உத்தரவால் போலீஸ் அதிகாரிகளான அசோகன், சோனியா அகர்வால், அகிலை கைது செய்கின்றனர். இந்த விசாரணையில் நடந்தது அனைத்தையும் அகில் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில், கடலில் தூக்கி எறிந்த அந்த நபரும் திரும்ப வர, அந்த நபர் எப்படி உயிருடன் வந்தார்? அகில் - நயனாவின் காதல் வெற்றி பெற்றதா? நயனாவின் அண்ணனின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் அகில், நயனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் காட்சிகள் பார்பதற்கு ரசிக்கும்படியாக இல்லை. நடிகர் அசோகன்  படத்திற்காக சிறப்பு உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அவரது உழைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். சமீபகாலமாக படவாய்ப்புகள் அமையாததால், கிடைக்கும் வேடத்தில் நடத்து வரும் சோனியா அகர்வால், இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சாயா படத்திலும் சோனியா போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே வந்து செல்கிறது.

    திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள் என்றாலும், விளைவுகள் பற்றி  தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலரும் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறால் அவன் என்ன சிக்கலில் மாட்டுகிறான். அவனது வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார் நட்டி குமார்.



    ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு சுமார் ரகம் தான். படம் பார்பதற்கான மனநிலையே இல்லாமல், சீரியல் தொகுப்புகளை இணைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த சிந்தனையே இருக்கிறது.

    மொத்தத்தில் `எவனவன்' சொல்ல முடியவில்லை.
    அரவிந்த்சாமி-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘சதுரங்கவேட்டை2’ படத்தின் மோஷன் போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.
    நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ பெரிய வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இப்படத்தையும் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தை இயக்கிய வினோத் இப்படத்திற்கு திரைக்கதை எழுத, நிர்மல் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி வில்லனாக நடித்து வந்த அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்த மோஷன் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார். இதனால், இந்த மோஷன் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
    ‘நாகேஷ் திரையரங்கு’ என்ற திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு, நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய தந்தை நாகேஷ், 1958-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.

    அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கை சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் திரைப்படமான இது மிகவிரைவில் வெளியாக உள்ளது.



    திரைப்படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படத்தின் பெயர் உள்ளது.

    எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் எங்களது தந்தையின் பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பிடம் சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க சிலர் சதி செய்வதாக திலீப் புகார் கூறினார்.
    பிரபல நடிகை பாவனா படப்பிடிப்பை முடித்து விட்டு கொச்சியில் இருந்து திருச்சூருக்கு தன்னுடைய காரில் பிப்ரவரி 17-ந் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த மர்ம கும்பல் பாவனாவை அவருடைய காரில் கடத்தி சென்றது. அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது.

    பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த பாவனா இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.

    இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார். மேலும் சுனிலின் நண்பர் வினோத் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை திலீப் வழங்கினார்.



    இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது.

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் நேற்று முன் தினம் மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர்.

    விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என்று திலீப்பிடம் போலீசார் தெரிவித்தனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.



    அப்போது திலீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாவனா கடத்தல் வழக்கில் என்னிடம் போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் தெளிவாக பதில் கூறி விட்டேன். விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க சிலர் சதி செய்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது.

    மலையாள திரைப்பட கலைஞர்கள் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் ஊடகங்கள் முன்பு அமர்ந்து தற்போது தெரிவிக்க இயலாது. அதற்கான பதிலை போலீசாரிடமும், கோர்ட்டிலும் தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து இந்த வழக்கு மறுபடியும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    பிரசாந்த் ஜி சேகர் இயக்கத்தில் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் `யானும் தீயவன்' படத்தின் விமர்சனம்.
    அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும் அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. காவல் அதிகாரியாக வரும் பொன்வண்ணன், ராஜு சுந்தரம் செய்து வரும் தவறுகளை மேலோட்டமாக கவனித்து வருகிறார்.

    மறுபுறத்தில் நாயகன் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். வசதியான வீட்டைச் சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக காதலித்து வரும் இவர்கள், ஒருநாள் வெளியே சென்று வருகையில், மதுபோதையில் அங்கு வரும் ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வர்ஷாவை கிண்டல் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வர்ஷாவை தரகுறைவாக திட்டியும் விடுகின்றனர்.



    இதனால் கடுப்பாகும் அஸ்வின் அவர்களை அடிக்க செல்கிறார். இந்நிலையில், அஸ்வினை சமாதானப்படுத்தும் வர்ஷா, அவனை அங்கிருந்து கூட்டிச் செல்கிறார். வர்ஷாவை அவளது வீட்டில் பத்திரமாக கொண்டுவிடும் அஸ்வின் மீண்டும் அதே இடத்திற்கு சென்று, வர்ஷாவை கிண்டல் செய்த ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளை சரமாரியாக தாக்கிவிட்டு செல்கிறார்.

    ஊருக்கே தாதாவாக வலம் வந்த தன்னை, சாதாரண இளைஞன் ஒருவர் தாக்கி சென்றதால், அவனை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு சுந்தரம், அஸ்வினை தேடி வருகிறார். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் சந்தான பாரதிக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் கோபமடையும் சந்தான பாரதி, ராஜு சுந்தரத்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். இந்நிலையில், பெற்றோரின் சம்மதம் கிடைக்காத அஸ்வினும், வர்ஷாவும் ரகசிய திருமணம் செய்து ராஜு சுந்தரம் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடிபெயர்கின்றனர்.



    அஸ்வினை தேடிவரும் ராஜு சுந்தரம், தனது வீட்டிற்கு மேல் மாடியிலேயே அஸ்வின் இருப்பதை தெரிந்து கொண்டு, இருவரையும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு, அவர்களை வைத்து போலீசில் இருந்து தப்பிக்கவும் முடிவு செய்கிறான். இவ்வாறாக ராஜு சுந்தரத்திடம் மாட்டிக் கொண்ட அஸ்வின், எப்படி தப்பித்தார்? போலீஸ் ராஜுவை கைது செய்ததா? அஸ்வின் - வர்ஷாவின் திருமணத்தை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது படத்தின் மீதிக்கதை.

    நாயகன் அஸ்வின் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. வர்ஷா அழகு பதுமையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. வர்ஷா வரும் காட்சிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.



    ராஜு சுந்தரத்தின் கதாபாத்திரம் தான் படத்திற்கே பலம். இதற்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்த சாயலில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மாஸான தாதாவாக வலம் வரும் ராஜு சுந்தரம், கதைக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார். பொன்வண்ணன், சந்தான பாரதி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விடிவி கணேஷ், அருண்ராஜா காமராஜ், ஜாங்கிரி மதுமிதா கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    எல்லோருடைய மனதிலும் ஒரு  நல்லவன், ஒரு தீயவன் இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அதனை படத்தின் மூலம் தெரிவிக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்ய வேண்டும். யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை காதல், கிரைம் கலந்து உருவாக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் ஜி சேகர் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம்.



    அச்சுராஜாமணியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `யானும் தீயவன்' மாற்றம் கொண்டவன்.
    கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பது தமிழர்கள் உரிமை என்று பெங்களூருவில் நடந்த கன்னட பட விழாவில் நடிகர் விஷால் பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவிரி தண்ணீர் பிரச்சினை குறித்து காரசாரமாக பேசினார்கள்.

    “நடிகர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்துகொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை” என்று தங்களுடைய பேச்சில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

    இதைத்தொடர்ந்து விஷால் பேசியதாவது:-

    “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.



    நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை.

    மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. இந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள்?. கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமை இருப்பதால் கேட்கிறோம்.

    தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்”

    இவ்வாறு விஷால் பேசினார்.
    ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள `2.0' படத்தின் அடுத்தகட்ட படத்தின் புரமோஷன் குறித்த அறிவிப்புகளை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0' பட புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலா மேற்கொள்ள இருப்பதாக ராஜு மகாலிங்கம் அறிவித்திருந்தார். அதன்படி `2.0' பட விளம்பரங்கள் இருக்கும் பலூன்களை சுமார் 100 அடி உயரத்தில் பறக்கவிட்டனர்.



    இந்நிலையில், `2.0' படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் குறித்த அறிவிப்பையும் படத்தின் தயாரிப்பாளரான ராஜு மகாலிங்கம் வெளியட்டிருக்கிறார். அதன்படி `2.0' படத்தின் புரமோஷனுக்காக படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது.

    ஜுலை மாதம் 28 - 30 தேதிகளில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் சீசர் திருவிழா (QucikChek Festival) நடத்த உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
    ஜெய பிரகாஷ் இயக்கத்தில் அத்விக் ஜலந்தர் அறிமுகமாகும் ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ படத்தின் முன்னோட்டம்.
    லெமூரியன் திரைக்களம் சார்பில் தயாராகிவரும் திரைப்படம் ‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’.

    இந்த படத்தில் கதை நாயகனாக அத்விக் ஜலந்தர் அறிமுகமாகிறார். இவர் லண்டன் பெட்போர்ட் யுனிவர் சிட்டியில் மாஸ் கம்யுனிகே‌ஷன் படித்தவர். பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் நடிப்புக்கலை பயின்றவர். இவருடன் புஜா ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், தற்காப்புக்கலை வீரர் ஜோகிகுமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நேரியல் முரண் வடிவில் திரைக்கதை அமைத்து இதை அறிமுக இயக்குனர் ஜெய பிரகாஷ் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் அவரே கவனிக்கிறார். தயாரிப்பு - யாழ்மொழிரா பாபுசங்கர், ஜெய பிரகாஷ்.



    ஒரு சிறு நகரத்தில் அரசியல் பின்புலத்தோடு அதிகாரம் செலுத்திவரும் படிப்பறிவற்ற கதைநாயகன். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அவன் செய்யும் முயற்சிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிவரும் நகர மக்கள் அவனுடைய கோமாளித்தனங்களுக்கு முடிவு கட்ட திட்டமிடும் போது, தனது விண்வெளி சுற்றுலா பயணத்திட்டத்தை அறிவிக்கிறான்.

    கதை நாயகனுக்கு எப்படி விண்வெளிப்பயணம் செல்லும் ஆசை வந்தது? தனது குறிக்கோளில் அவன் எப்படி வெற்றியடைந்தான்? அவனைத் தடுக்க நகர மக்கள் செய்த முயற்சிகள் என்ன? இவற்றையெல்லாம் சுவாரசியமான, அவல நகைச்சுவையாக (பிளாக் காமெடி) சொல்லியிருக்கும் படமே “விண்வெளிப் பயணக் குறிப்புகள்” .

    இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வாளர் பறையிசைக் கலைஞர் சே.தமிழ் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

    இசை, பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.
    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.

    இந்த நிகழ்ச்சி, 1993 ஜுலை மாதத்தில் நடந்தது.

    "சிம்பொனி'' என்றால் என்ன?

    வெளிநாடுகளில், அந்தந்த காலத்திய இசைக் குழுவினர் வாசிப்பதற்காக, இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசைத் தொகுப்புகளை உருவாக்கினார்கள். இந்த இசைத் தொகுப்புகளுக்கு "சிம்பொனி'' என்று பெயர்.

    சாஸ்திரிய முறைப்படி பழுதற்ற உயர்ந்த இசை வடிவங்களை, 15-ம் நூற்றாண்டில் இருந்தே விவால்டி, கேன்டல், பீதோவான் போன்ற இசை மேதைகள் உருவாக்கித் தந்தார்கள்.

    இளையராஜாவின் இசைத் திறமை பற்றி, லண்டனில் உள்ள "ராயல் பில் ஹார்மனி'' என்ற இசைக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த இசைக்குழு, ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்குவதாகும்.

    இந்த இசைக்குழுவினர் மைக்கேல் டவுன்எண்ட் என்பவரை சென்னைக்கு அனுப்பி, இளையராஜாவின் இசையைப் பற்றி நேரில் அறிந்துவர ஏற்பாடு செய்தனர்.

    சென்னையில் ஒரு படத்துக்கு இளையராஜா இசை அமைத்துக் கொண்டிருந்ததை டவுன்எண்ட் பார்த்தார். இளையராஜாவின் இசைத் திறமையை வெகுவாகப் புகழ்ந்து, லண்டனுக்கு தகவல் அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு "ராயல் பில் ஹார்மனி'' இசைக்குழு அழைப்பு அனுப்பியது.

    "1993 ஜுலை 6-ந்தேதி அவர்கள் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "வருகிற 19 முதல் 21-ந்தேதி வரை தங்கள் இசையை (சிம்பொனி) பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். எலிசபெத் ராணி அவர்களின் ஆதரவில், இது உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவாக இருந்தபோதிலும், ஆசியாவின் எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இதுவரை பதிவு செய்தது இல்லை. ராயல் பில்ஹர்மோனி இசைக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் இசையை பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையைப் பதிவு செய்தார்.

    அகில இந்திய திரை இசையின் பிதாமகன் என்று போற்றப்படுகிறவர் நவுஷாத். அகில இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய "ரத்தன்'', "அன்மோல்கடி'', "ஆன்'', "மொகல்-ஏ-ஆஜாம்'' முதலிய படங்களுக்கு இசை அமைத்தவர்.

    அவர் ஒரு சமயத்தில், "இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நிலை சரியாக இருந்து நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறுகையில், "இசை என்றால் என்னவென்றே அறியாத இந்தப் படிக்காத பட்டிக்காட்டானிடம் இசையை கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய - என் முன்னோடிகளில் மூத்தவரான நவுஷாத் அவர்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்துவதற்கு பதிலாக - சிறிய புழுவாக்கிவிட்டது'' என்று சொன்னார்.

    புகழ்ச்சி, சிலரை கர்வப்பட வைக்கும். இளையராஜாவை நாணப்பட வைத்தது.

    இளையராஜா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

    "நான் படித்தவன் இல்லை. முறையாக சங்கீதம் கற்றவனும் இல்லை. எனக்குள் இருப்பது, என்னில் இருந்து மாறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

    சில இசை உருவாக்கங்களை, படைப்புகளைச் செய்துவிட்டு, பிறகு நிதானமாக ஆராயும்போது, `இதைச் செய்தது நான்தானா?' என்று தோன்றுகிறது. `இதைப் படைத்தது நானில்லையோ' என்று தோன்றுகிறது. இதுபோல் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

    இந்தப் பிறவியில் உருவான ஒன்றாகவும் இது தோன்றவில்லை. இது என்னுடையது இல்லையோ, இதை என்னால் சிந்திக்க முடியுமா என்றும் தோன்றுகிறது.''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

    ×