என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    • இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 85,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது.
    • டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.

    ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்துள்ளது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்துள்ளது.

    மேற்கூறிய மாடல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    குஷாக் மாடல் இப்போது ரூ.10.89 லட்சம் முதல் ரூ.18.79 லட்சம் வரையிலும், ஸ்லாவியாவின் விலை ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 11.99 லட்சமாக இருந்த குஷாக் ஆக்டிவ் தொடக்க விலை இப்போது ரூ.1.1 லட்சம் குறைந்துள்ளது.


    இந்த காரின் டாப் எண்ட் மாடல் இப்போது ப்ரெஸ்டீஜ் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 16.09 லட்சம் முதல் ரூ. 18.79 லட்சம் வரை உள்ளது. இது முந்தைய டாப்-எண்ட் வேரியண்ட் உடன் (ரூ. 17.29 லட்சம்-20.49 லட்சம்) ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் குறைவு ஆகும்.

    அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது. மேலும் இதன் விலை ரூ.15.60 லட்சம் முதல் ரூ.18.30 லட்சம் வரை இருக்கும்.

    ஸ்லாவியா ஆக்டிவ், மிட்சைஸ் செடான் பிரிவில் எண்ட்ரி லெவல் மாடலாக இருந்தது. இதன் விலை ரூ.11.63 லட்சம். இருப்பினும், புதிய ஸ்லாவியா கிளாசிக் தொடக்க நிலை விலையை ரூ.94,000 குறைந்து ரூ.10.69 லட்சமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.

    • உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    பீஜிங்:

    பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.

    எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.

    கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.

    ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தகவல்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய தலைமுறை ரெனகேட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்.யு.வி. 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவல் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த கார் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் காமன் மாட்யுலர் பிளாட்ஃபார்மில் (CMP) உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோயன் C3 மாடல் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஜீப் எஸ்.யு.வி. ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    புதிய ஜீப் ரெனகேட் மாடல் பேட்டரி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கும் போது, அதன் பெட்ரோல் வெர்ஷனின் விலை சில லட்சங்கள் வரை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், புதிய ஜீப் எஸ்.யு.வி.யின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கலாம். 

    • யமஹா அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
    • ரிவர் மொபிலிட்டியில் ரூ. 332 கோடியை முதலீடு செய்தது.

    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இருந்தே இது தொடர்பான பணிகளில் யமஹா ஜப்பான் மற்றும் இந்திய பிரிவு ஈடுபட்டு வருகிறது.

    அதிவேகம், சீரான செயல்திறன் மற்றும் அசத்தலான ஸ்டைலிங் என யமஹாவின் டி.என்.ஏ.வுக்கு ஏற்ற வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படும் என்று யமஹா அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ரக்கட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டியில் ரூ. 332 கோடியை முதலீடு செய்தது.

    தற்போதைய திட்டத்தின் படி யமஹா நிறுவனம் 2025-27 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் சந்தைகளில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விற்பனையில் கவனம் செலுத்த யமஹா முடிவு செய்துள்ளது. 

    • இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.
    • இது மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும்.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயர் ரக கார் தயாரிக்கும் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா மாநில தொழில்துறை மந்திரி உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உதய் சமந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

    ஜெர்மனி நாட்டின் பயணத்தின்போது இன்று (வியாழக்கிழமை) மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகிகளை சந்தித்தேன். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விவாதித்தோம். இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. இது மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரவேண்டிய பல தொழில்கள் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக சரத்பவார் கட்சி- காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி விமர்சனம் செய்த நிலையில், இந்த அறிவிப்பு கைக்கொடுக்கும் என ஆளுங்கட்சி கூட்டணி நம்புகிறது.

    • புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
    • முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
    • சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது எங்கள் இலக்கு அல்ல என கூறியது.

    பிரசெல்ஸ்:

    வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எந்த ஒரு வாகனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவின் BYD மாடல்கள் 17.4 சதவீதமும், Geely 20 சதவீதமும், SAIC 38.1 சதவீதம் வரியையும் பெறுகிறது.

    உள்ளுர் உற்பத்தியாளர்களின் நலன்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், எங்கள் விரிவான விசாரணையின் தெளிவான சான்றுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை முழுமையாக மதிக்கும் வகையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த விசாரணையை இறுதி செய்யும் நோக்கில் சீன அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இப்போது ஈடுபடுவோம்.

    சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது இலக்கு அல்ல. எங்கள் இலக்கு சமநிலையை மீட்டெடுப்பது மற்றும் சீனாவில் இருந்து மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தை திறந்திருப்பதை உறுதி செய்வதாகும் என தெரிவித்தனர்.

    • டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
    • தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

    இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.

    வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் கொண்டிருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது குறைந்த விலை எஸ்.யு.வி. மாடல் காம்பஸ் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு ஜூன் மாதம் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய விலை குறைப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலைரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    முன்னதாக ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல்: ஸ்போர்ட், லாங்கிடியூட், நைட் ஈகிள், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ஜீப் காம்பஸ் மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது.
    • கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.

    கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிரெட்டா. கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கிரெட்டாவின் ஈவி (EV) எனப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.




     


    தற்போது இந்தியா சாலைகளில் இந்த கிரெட்டா EV-யை சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். அப்படி கிரெட்டா EV சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரெட்டா EV மாடல் ரூ.15 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரெட்டா EV காரில் என்னனென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    ×