என் மலர்
- தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட விழா, வேடபரி விழா ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி விழாவான விடையாற்றி எனும் காப்புகளைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, காப்பு உள்ளிட்டவைகளை மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜவீதியின் வழியாக வாகைக்குளம் அருகில் உள்ள கோவில் கிணற்றை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டன. அதேபோல் முளைப்பாரிகளும் நீரில் விடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது. அதில் மஞ்சள் மற்றும் வண்ணப்பொடிகள் கலந்த நீரால் ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
- கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம்.
- குளிர்காலத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.
இந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.
மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும்.
இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…
அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும்.
அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை
கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் என்ற வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடானார்.
மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவத்தில் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவமும், வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவமும் நடைபெறும்.
- வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம்.
- உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.
வயதானவர்களை அதிகமாகத் தாக்கும் மூட்டுவலி பிரச்சினை, தற்போது இளம்பெண்களிடமும் பரவலாக இருக்கிறது. உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது, ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரை நோய், காசநோய், மரபுவழி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை மூட்டுவலி பாதிப்புகளை உண்டாக்கும்.
உடலில் கால் மூட்டு, தோள்பட்டை, கைமூட்டு, மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய முக்கிய மூட்டு பகுதிகள் உள்ளன. எலும்புகள் இணையும் இடங்களான இப்பகுதிகளில் ஏற்படும் அசவுகரியமான உணர்வு, சோர்வு, வலி, வீக்கம் போன்ற உணர்ச்சிகள் மூட்டுவலி பிரச்சினைகளின் அறிகுறியாகும். இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு மூட்டுவலி பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டே உலக 'ஆர்த்ரைடிஸ் தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது 'ஆர்த்ரோ' எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு 'மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி' என்பது பொருள்.
தற்போது இளம்பெண்கள் பலரும் மூட்டுவலியால் அவதிக்குள்ளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக 'ஈஸ்ட்ரோஜன்' எனும் ஹார்மோனின் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். இது மூட்டுகளின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான 'கார்டிலேஜ்' உருவாக்கத்தைக் குறைக்கும். இதனால் இளம்பெண்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது.
மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களும் மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் எளிதில் மூட்டுவலி பிரச்சினை தாக்குகிறது. மூட்டுவலிக்கான வாழ்வியல் காரணங்களை அறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.
காசநோய், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பக்கவிளைவின் காரணமாக மூட்டுவலி இருந்தால், சிகிச்சை பெற்று அந்நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மூட்டுகளுக்கு வலிமை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இது சரும துவாரங்களின் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜென் புரதத்தை அதிகரிப்பதால் மூட்டுவாத நோய்கள் வராமல் தடுக்கும்.
- இளம் தலைமுறையினர் பலருக்கு இளநரை பிரச்சினை உண்டாகிறது.
- நரைமுடி வருவதற்கு முக்கிய காரணமான மனஅழுத்தம், யோகா செய்வதால் குறையும்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபணு காரணமாக இளம் தலைமுறையினர் பலருக்கு இளநரை பிரச்சினை உண்டாகிறது. இதற்கு ரசாயனங்கள் கலந்த வண்ணங்கள் பூசுவது, மூலிகைகள் கலந்த எண்ணெய் பயன்படுத்துவது போன்றவை மட்டுமே வழி அல்ல. யோகாசனம் மூலமாகவும் நரைமுடி பிரச்சினைக்கு தீர்வு காணலாம். நரைமுடி வருவதற்கு முக்கிய காரணமான மனஅழுத்தம், யோகா செய்வதால் குறையும். தலைமுடியின் வேர்ப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி உதிர்தல் நின்று, அடர்த்தி அதிகரிக்கும். இதற்கு உதவும் யோகாசனங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. உஷ்ட்ராசனம்: யோகா விரிப்பில் முழங்காலில் நின்று, பின்பக்கமாக லேசாக முதுகை வளைத்து, இரண்டு கைகளினாலும் இரண்டு குதிகால்களைப் பிடிக்க வேண்டும். முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உச்சந்தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து நரைமுடி மற்றும் முடி உதிர்வு குறையும். இந்த ஆசனம் தொடர்ந்து செய்வதால் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சினைகளையும் குறைக்கலாம்.
2. அதோ முக ஸ்வானாசனம்: பாதங்களும், உள்ளங்கைகளும் தரையில் படுமாறு மேஜை போன்ற வடிவில் நிற்க வேண்டும். பின்னர், மார்புப்பகுதியை முழங்காலை நோக்கி தள்ளியவாறு, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி மலை போல வளைந்து நிற்க வேண்டும். முகம் கால்களை பார்த்தவாறு கீழ்நோக்கி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் நரைமுடி மறைந்து இயற்கையான கருமை நிறத்தை பெறமுடியும்.
3. பவன முக்தாசனம்: முதுகுப்பகுதி தரையில் படுமாறு படுத்து, கால்களை மடக்கி தலையைத் தூக்கி, கைகளால் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, நெற்றி முழங்காலை தொடுமாறு செய்யவேண்டும். இந்த நிலையில் தாடைப் பகுதி மார்பை நோக்கி இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் குடலியக்கம் சீராகும். நரை நீங்கும்.
4. திரிகோணாசனம்: இரண்டு கால்களையும் விரித்து, நிமிர்ந்து நின்று கைகளை பக்கவாட்டில் விரித்து உள்ளங்கை பூமியை பார்த்தவாறு வைக்கவேண்டும். பின்னர் உடலை வலது புறமாக வளைத்து வலது கை, வலது கால் அருகில் இருக்குமாறும், இடது கை மேல் நோக்கி இருக்குமாறும் நிற்க வேண்டும். இதேபோல் இடது புறமும் செய்ய வேண்டும்.
5. ஹலாசனம்: முதுகுப்பகுதி தரையில் படுமாறு நிமிர்ந்து படுத்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உடலையொட்டி வைக்க வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக மேலே உயர்த்தி தலைக்கு பின்னால் கொண்டுபோய், கால் விரல்கள் தரையை தொடுமாறு வளைக்க வேண்டும். அனைத்து ஆசனங்களையும் மருத்துவரின் ஆலோசனையுடன், சிறிது நேரம் இடைவெளி விட்டு செய்ய வேண்டும். தினமும் இவற்றை சீராகக் கடைப்பிடித்தால் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.
- பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடந்தது. கடந்த 11-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது.
விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழுவை சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.
சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்டு அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புத்துஅம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது.
பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மின் பணியாளர்கள் பூ பல்லுக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதாலும், இரவிலும் அனல் காற்று வீசுவதாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூப்பல்லக்கு செல்லும் பகுதிகளில் பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.
- அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
- விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி நேற்று முன்தினம் 'ரோஜ்கார் மேளா'வில் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி வழியாக பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசினார். அப்போது அவர், "அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆள்தேர்வில் ஊழலுக்கும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.
இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபற்றி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஆள் எடுப்பு செயல்முறையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதும் முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறி இருக்கிறார். பாராட்டுகள். ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக, தற்காலிக ஆசிரியர்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்டவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதுதான் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கான ஒளிரும் எடுத்துக்காட்டு. பிரதமர் அவர்களே, என்ன சொல்கிறீர்கள்" என கூறி உள்ளார்.
- நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
- ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.
புவனேஸ்வர் :
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.
இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
- கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.
தஞ்சாவூர் :
தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் வெயிலின் தாக்கம் இன்றி சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மனிதர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை காணப்பட்டது..
வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் நேற்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் இது போன்று தலையில் தண்ணீர் ஊற்றியபடியே இருசக்கர வாகனத்தில் சென்றதையும், அதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சிரித்தபடியே சென்றதையும் அதில் காண முடிந்தது.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.
- சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி திணறி வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
இருவரும் பிடிவாதமாக இருப்பதால், கட்சி மேலிடம் திணறி வருகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்க அவர் கூறியதாக தகவல் வெளியானது.
சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்க உள்ளனர்.
இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும், அவரது சொந்த ஊரான மைசூரு மாவட்டம் சித்தராமய்யனகுந்தியிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், அவரது உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது.
- ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான்.
புதுடெல்லி :
டெல்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பல இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டு இருப்பது குறித்து அவர் பேசினார்.
அவர் கூறும்போது, 'ஆங்கிலேயர்களின் தெளிவற்ற பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயரை மாற்றுவதையும், அதற்கு பதிலாக இந்தியர்களின் பெயரை சூட்டி கவுரவப்படுத்துவதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது என்று எனக்கு தெரியவில்லை' என கூறினார்.
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையை, கடமைப்பாதை என பெயர் மாற்றியது குறித்து சசிதரூர் கூறுகையில், 'இது வெறும் அரசியல். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஏனெனில் ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான். இதுபோன்ற விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
- கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது.
- தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி :
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.







