search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த கால அட்டவணையை தாக்கல் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டனர்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.

    இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31-ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.



    அதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.

    அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து விசாரணையை ஆகஸ்டு 6-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்புசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆனால், உள்ளாட்சி தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடையவில்லை என்றும், அதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும் காரணம் கூறி, தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும், இந்த தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தயாரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #DMK #EdappadiPalanisamy
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உள்ளிட்ட 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது “மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல்” நோயை அடையாளம் காட்டியிருக்கிறது.

    அதுமட்டுமின்றி 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் விதவிதமான முறைகேடுகளும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை எப்படி சீரழிந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது.

    கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளனர் என்றும், அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள் பல்கலைக்கழகத்தின் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண்ணப்பிக்கும் “மறு மதிப்பீட்டின்” மீது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிட கொடுமையான செய்தியாக இருக்கிறது.

    தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அந்த மறுமதிப்பீட்டு முறையில் ஒரு விடைத்தாளுக்கு ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண்கள் போட்டிருப்பதும், ஒரு விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறு மதிப்பீட்டில் அளித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.



    ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், விடைத்தாள் அச்சடிப்பதில் ரூ.60 கோடி ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக்கிறது.

    ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர் கல்வித்துறைக்கு இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு “துணை வேந்தர்கள் அடங்கிய குழு” ஒன்றினை அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin #DMK #EdappadiPalanisamy
    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் கூறியதாவது-

    ஒரு அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்ளை நிறைவேற்றி வருவதாகவும், மக்களுக்கு எது நன்மை என்பதை அறிந்து அவற்றை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் பச்சைப் பொய்.

    அதாவது, திராவிட கட்சிகள் மேடையில் பேசுவார்கள் ஜமுக்காலத்தில் வடி கட்டுன பொய் என்பார்கள். அந்த மாதிரி பச்சைப்பொய். அவர் பதவி ஏற்று 1½ வருடங்கள் ஆகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தையாவது அவரால் சொல்ல முடியுமா?.

    உண்மையில் பார்க்கும் போது, முன்னேறுவதற்கு பதிலாக தமிழகம் பின் நோக்கி செல்கிறது. எல்லா துறைகளிலும். ஆனால் ஒன்று மட்டும் முன்னேறி செல்கிறது. அது ஊழல். கடந்த ஆண்டில் மட்டும் மோட்டார் வாகனத்துறையில் தமிழகத்திற்கு வரவேண்டிய 25 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் போயிருக்கிறது. இதற்கு காரணம் ஊழல்.

    அதே மாதிரி கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி.வரி. இதில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநில பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் இருக்கிறது.

    இந்த 6 ஆண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண் டும். ஆனால் 9 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி பதவி காலத்தில் மட்டும் 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊழல் தான் அதிகரித்துள்ளது. இவருடைய பதவி காலதத்தில் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்.


    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 அதிகாரிகள் தேர்வில் ஊழல், மணல் கொள்ளையில் ஊழல், தாதுமணல் கொள்ளையில் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல், அரசுத்துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், மருத்துவக் காப்பீட்டில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

    இவருடைய ஆட்சியால் தான் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சிலர் வாய்கிழிய பேசுகிறார்கள். அவரது ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? அல்லது ஊழலா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தயாரா?

    2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். இதனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 3558 கோடி. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் அவர்கள் கொடுப்பார்கள். இவர்கள் அந்த பணத்தை தேர்தல் நடத்தாமலே கேட்டுப் பார்த்தார்கள். அவர்கள் முடியாது என்று விட்டனர்.

    உயர் நீதிமன்ற வழக்கில் இருக்கிறது என்கின்றனர். உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஏன்? நடத்தவில்லை என்று கேட்கிறது. இதைவிட வேடிக்கை என்னவென்றால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தெரிவிக்காவிட்டால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆகவே இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிகிறது.

    ஏன் தேர்தலை நடத்த வில்லை என்றால் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறது. இதனால் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் இனி பிளஸ்-2 படித்தாலே வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். 80 லட்சம் பேர் பிளஸ்-2 படித்து முடித்தவர்கள், அதற்குமேல் படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். 1 கோடி பேர் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். இந்த 1½ வருடத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார்? ஜெயலலிதா இருக்கும்போது இந்த கேள்வியை நாங்கள் கேட்டுக் கொண்டேதான் இருந்தோம். அரசு வேலையில் 5 லட்சம் காலியிடங்கள் பல வருடங்களாக இருக்கிறது. இப்போது எப்படியும் 10 லட்சம் காலிஇடம் இருக்கும். இதை அவர்கள் நிரப்பவே இல்லை.

    அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் குறித்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். தமிழ்நாட் டில் 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைழக்கழகங்களுக்கு வேந்தர் கவர்னர் ஆவார். ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வேந்தர் முதல்-அமைச்சர். அது இசைப்பல்கலைக்கழகம்.

    இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ததில் 1000 கோடிக்கு ஊழல் என்று சொல்லி இருந்தோம். இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என சொல்லியிருந்தோம். பூதம் கிளம்புற மாதிரி, ஒரு ஊழல் அடங்குவதற்குள் மேலும் பல ஊழல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.

    ஒரு ஆண்டுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் விடைத்தாள்கள் மட்டும் தான் தேவை. ஆனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் விடைத்தாள்களை கூடுதலாக அச்சடித் திருக்கிறார்கள். இதன் மூலமாக ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைக்கும், எங்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிந்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு எடுப்போம். அன்புமணி பிரதமர் வேட்பாளர் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று டிடிவி. தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran

    கும்பகோணம்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதி தங்கியிருந்த தினகரன் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபகாலமாக முட்டையில் முறைகேடு, மதிப்பெண்ணில் முறைகேடு, கோவில் சிலைகளில் முறைகேடு என ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழலில் தமிழகம் சிக்கியுள்ளது. அம்மாவின் பேரைச் சொல்லிக் ஏமாற்றும் இந்த ஆட்சி அம்மாவின் கொள்கையில் இருந்து தடம் மாறிச் செல்கின்றனர். இந்த சுயநல கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். எனவே தேர்தலின் மூலம் இந்த ஆட்சி அகற்றப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைதொடர்ந்து ரகுபதி கமி‌ஷன் கலைக்கப்பட்டது குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தினகரன் கூறுகையில் , ‘‘இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும்’’ என்றார் .

    இதன் பின்னர் சுவாமிமலையில் இருந்து மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். #Dhinakaran

    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #Rajini

    மதுரை:

    அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மதுரை முனிச்சாலையில் இன்று புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக சேரும் இளைஞர்கள் கூட தகுதியும், திறமையும் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

    அதற்காக கட்சியின் தலைமையிடத்தில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

    தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.


    ஊழியர்களின் போராட்டத்தால் நாளை ரேசன் கடை பொருட்கள் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்கும் அ.தி. மு.க.வின் கோட்டை ஆகும். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்.

    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கலைச்செல்வம், முனிச்சாலை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #Rajini

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CooperativeSocietiesElection

    சென்னை:

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

    முதல் அடுக்கில் வரும் 18,465 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்கட்டத்தில் 12.03.2018 முதல் 7.05.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உள்ளது உள்ளபடியே நிறுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 9.04.2018 நாளிட்ட ஆணைக்கிணங்க அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்ததின் பேரில் உச்ச நீதிமன்றம் மதுரை அமர்வின் அறிவித்தல் தவிர்த்த இதர அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்திட ஆணை பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தியது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்பியது.

    நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையினை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் 3.08.2018 அன்று ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகார்கள் மற்றும் சட்ட ஒழுங்கு மற்றும் இதர காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த, ரத்து செய்யப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பாதியில் நிறுத்தப்பட்ட நிலுவையிலிருந்து தொடர தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ள சங்கங்கள் தவிர்த்து அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடன் அறிவித்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 6-ந்தேதி 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ம் தேதி அறிவிக்கப்படும். 3 மற்றும் 4 நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#CooperativeSocietiesElection

    ஊழல் புகாரில் சிக்கி உள்ள பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    தர்மபுரி:

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக 26 லட்சம் பேர் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 20 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.

    சாதாரணமாக தேர்வு எழுதுபவர்களில் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர். மறுமதிப்பீட்டில் 76 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுவது நம்பும்படியாக இல்லை.

    தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, துணை வேந்தர் பதவி பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும். உயர் கல்வித்துறை செயலரை இடமாற்றம் செய்து, விசாரணை நடத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக உள்ளார்.


    இசைப் பல்கலைக்கு மட்டும் முதல்வர் வேந்தராக உளார். தற்போது இந்த 20 பல்கலைக்கழகங்களும் ஊழல் புகாரில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார்கள் அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் ஆளுநர், பல்கலைகழகங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பல்கலைக் கழக ஊழல் தொடர்பாக விரைவில் ஆளுநரிடம் அன்புமணி மனு அளிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதான நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகத்தில் பா.ம.க.வால் மட்டுமே மக்கள் விரும்பக்கூடிய ஊழலற்ற சிறப்பான ஆட்சியை தர முடியும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று இளைஞர்கள், படித்தவர்கள் விரும்புகிறார்கள்.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மற்ற கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு அ.தி.மு.க. வரவேற்பதாக கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #ParliamentElection
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கரூர் மாவட்டம் நெரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் வழக்கை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிலை கடத்தல் என்பது தமிழகம் மற்றும் அண்டை மாநிலம் மட்டும் அல்லாமல் வெளி நாடுகளிலும் விரிந்து கிடக்கிறது. அதனால் இதனை விசாரித்து புலனாய்வு செய்ய மத்திய அரசு ஒத்துழைப்பு தேவைபடுகிறது. அதனால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளில் வாக்கு சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர். #ADMK #ThambiDurai #ParliamentElection
    ரகுபதி ஆணைய செயல்பாடுகளை நிறுத்திவைப்பது தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #CBIProbe #IdolTheftCases #MinisterJayakumar
    சென்னை:

    நீதிபதி ரகுபதி ஆணையம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரகுபதி ஆணைய செயல்பாடுகளை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. இதற்காக தமிழக அரசு ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், இந்த ஆணையத்திற்கு வழங்கப்படும் நிதி, இதர சலுகைகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.



    இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்படும் முன், அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ரகுபதி ஆணைய தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரகுபதி ஆணையம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்றார்.

    மேலும், சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது சரியான முடிவு என்றும் அமைச்சர் கூறினார்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், அரசின் செயல்பாடு சரியாக இருப்பதால்தான் தவறு செய்பவர்கள் சிக்குகிறார்கள் என்றார். #CBIProbe #IdolTheftCases #MinisterJayakumar
    அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கை அரசு சிபிஐக்கு மாற்றம் செய்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். #Idolsmuggling

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு, ஷேல் கேஸ் அதிகம் இருப்பதாகவும், அதனை எடுப்பதில் அரசு கொள்கையில் தங்களை மாற்றிக் கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இதில் மாநில அரசு தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்த சிலைகள் மீட்கப்பட்டது. அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கடத்தலில் ஈடுட்டுள்ளதை கண்டுபிடித்து பலர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அவரை செயல் படவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சேலம் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். எனவே உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #Parliamentelection #ElectionOfficer

    சென்னை:

    அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கிண்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு கலந்துகொண்டு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியை இயக்க பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சவுமியாஜித் கோஷ், தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர், பெங்களூர் பி.எச்.இ.எல். தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.

    பின்னர் தமிழக தலைமை அதிகாரி சத்தியபிரதாசாகு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குப் பதிவின்போது பயன் படுத்தக் கூடிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களையும் சோதனை செய்யப்படும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை கொடுத்துள்ளது.


    இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் அதிகாரிகளான 32 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆணையம் தேதியை அறிவித்த பின் தேர்தல் நடத்தப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும். அதற்கான பயிற்சி தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #EdappadiPalaniswami

    கரூர்:

    கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சிதான் அ.ம.மு.க., அம்மாவின் உண்மையான கட்சி என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது ஒரு கோடிக்கும் மேலாக உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 2 கோடியை எட்டி விடுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் உணர்வில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. சிலர் தொடர்பிலேயே இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    வால்டர் தேவாரம், ஐ.ஜி.அருள் ஆகியோர் மாதிரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேர்மையானவர், நடுநிலையானவர். யாரையோ காப்பாற்ற எதையோ மறைக்க, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு உதவியாக சி.பி.ஐ. செயல் படுவதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.

    காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாண்பை மறந்து பேசி கொண்டிருக்கிறார். நாலாந்திர அரசியல்வாதி போன்று இருக்கும் அவரது செயல்பாட்டினால் தமிழக மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எதிர் கட்சி தலைவர்களையும் ஒருமையில் பேசி வருகிறார். ஆசிரியர்களுக்கு ஏதோ இவர் சம்பளம் வழங்குவது போன்று பேசுகிறார். குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பின்னர் மக்களாட்சி வரும்.

     


    அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை வைத்து சிலை கடத்தல் வழக்கு விசாரிக்கப்படும். அ.தி.மு.க.வின் செல்வாக்கு தமிழகத்தில் எங்கும் உயரவில்லை. பாகிஸ்தானில் வேண்டு மென்றால் உயர்ந்திருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆர்.கே.நகர் தேர்தலை போன்று 50ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

    இந்த ஆட்சியில் சாலை, பாலம் அமைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்திகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் அர்வம் காட்டுகின்றனர். அமைச்சர்கள் என்ன பேச வேண்டும்என்று தெரியாமலேயே பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×