search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Anna University corruption"

  அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

  சேலம்:

  சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் கூறியதாவது-

  ஒரு அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்ளை நிறைவேற்றி வருவதாகவும், மக்களுக்கு எது நன்மை என்பதை அறிந்து அவற்றை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் பச்சைப் பொய்.

  அதாவது, திராவிட கட்சிகள் மேடையில் பேசுவார்கள் ஜமுக்காலத்தில் வடி கட்டுன பொய் என்பார்கள். அந்த மாதிரி பச்சைப்பொய். அவர் பதவி ஏற்று 1½ வருடங்கள் ஆகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தையாவது அவரால் சொல்ல முடியுமா?.

  உண்மையில் பார்க்கும் போது, முன்னேறுவதற்கு பதிலாக தமிழகம் பின் நோக்கி செல்கிறது. எல்லா துறைகளிலும். ஆனால் ஒன்று மட்டும் முன்னேறி செல்கிறது. அது ஊழல். கடந்த ஆண்டில் மட்டும் மோட்டார் வாகனத்துறையில் தமிழகத்திற்கு வரவேண்டிய 25 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் போயிருக்கிறது. இதற்கு காரணம் ஊழல்.

  அதே மாதிரி கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி.வரி. இதில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநில பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் இருக்கிறது.

  இந்த 6 ஆண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண் டும். ஆனால் 9 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி பதவி காலத்தில் மட்டும் 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊழல் தான் அதிகரித்துள்ளது. இவருடைய பதவி காலதத்தில் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்.


  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 அதிகாரிகள் தேர்வில் ஊழல், மணல் கொள்ளையில் ஊழல், தாதுமணல் கொள்ளையில் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல், அரசுத்துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், மருத்துவக் காப்பீட்டில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

  இவருடைய ஆட்சியால் தான் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சிலர் வாய்கிழிய பேசுகிறார்கள். அவரது ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? அல்லது ஊழலா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தயாரா?

  2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். இதனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 3558 கோடி. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் அவர்கள் கொடுப்பார்கள். இவர்கள் அந்த பணத்தை தேர்தல் நடத்தாமலே கேட்டுப் பார்த்தார்கள். அவர்கள் முடியாது என்று விட்டனர்.

  உயர் நீதிமன்ற வழக்கில் இருக்கிறது என்கின்றனர். உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஏன்? நடத்தவில்லை என்று கேட்கிறது. இதைவிட வேடிக்கை என்னவென்றால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தெரிவிக்காவிட்டால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆகவே இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிகிறது.

  ஏன் தேர்தலை நடத்த வில்லை என்றால் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறது. இதனால் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

  தமிழ்நாட்டில் இனி பிளஸ்-2 படித்தாலே வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். 80 லட்சம் பேர் பிளஸ்-2 படித்து முடித்தவர்கள், அதற்குமேல் படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். 1 கோடி பேர் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். இந்த 1½ வருடத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார்? ஜெயலலிதா இருக்கும்போது இந்த கேள்வியை நாங்கள் கேட்டுக் கொண்டேதான் இருந்தோம். அரசு வேலையில் 5 லட்சம் காலியிடங்கள் பல வருடங்களாக இருக்கிறது. இப்போது எப்படியும் 10 லட்சம் காலிஇடம் இருக்கும். இதை அவர்கள் நிரப்பவே இல்லை.

  அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் குறித்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். தமிழ்நாட் டில் 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைழக்கழகங்களுக்கு வேந்தர் கவர்னர் ஆவார். ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வேந்தர் முதல்-அமைச்சர். அது இசைப்பல்கலைக்கழகம்.

  இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ததில் 1000 கோடிக்கு ஊழல் என்று சொல்லி இருந்தோம். இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என சொல்லியிருந்தோம். பூதம் கிளம்புற மாதிரி, ஒரு ஊழல் அடங்குவதற்குள் மேலும் பல ஊழல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.

  ஒரு ஆண்டுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் விடைத்தாள்கள் மட்டும் தான் தேவை. ஆனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் விடைத்தாள்களை கூடுதலாக அச்சடித் திருக்கிறார்கள். இதன் மூலமாக ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைக்கும், எங்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிந்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு எடுப்போம். அன்புமணி பிரதமர் வேட்பாளர் இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல், மாணவர்களை பணியில் சேர்த்த பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

  சென்னை:

  அண்ணா பல்கலைக் கழகத்தில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

  இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, அதிக மார்க் வழங்கி முறைகேடு செய்ததாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது.

  இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  மார்க் சீட்டுகளை தயாரித்து கொடுப்பது, பல்கலைக்கழக பல்வேறு ஆவணங்களை தயாரித்து கொடுப்பது போன்றவற்றுக்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

  இதன்படி சென்னையை சேர்ந்த ‘மைஈசி டாக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்த போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜாராம் இருந்து வந்தார். இந்த ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

  எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு இப்போதைய துணைவேந்தர் சூரப்பா தனி விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.அந்த குழு ஒப்பந்தம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து வருகிறது.

  ஒப்பந்தம் பல்கலைக்கழக விதிகளின்படி முறையாக செய்யப்பட்டதா? அதன் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டனவா? என விசாரணை குழு விசாரித்து வருகிறது.

  இது சம்பந்தமாக அந்த நிறுவனத்திடமும் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நிறுவனம் அளித்த பதிலில் விசாரணை குழு திருப்தி அடையவில்லை.

  எனவே, தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

  இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்ற மாணவர்களை பணியில் சேர்த்துள்ள நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.

  அண்ணா பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறர்கள். அவர்களில் 58 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

  மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது, அண்ணா பல்கலைக்கழக மார்க்கையும் முக்கியமாக எடுத்து கொள்கிறார்கள்.

  அதில் எடுத்துள்ள மார்க் அடிப்படையில்தான் மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக மாணவர்களை தேர்வு செய்யும் போதே 60 சதவீதத்துக்கு மேல் மார்க் பெற்றவர்களைதான் பணி தேர்வுக்கு அழைக்கிறார்கள்.

  அதை விட குறைந்த மார்க் எடுத்து அல்லது தேர்ச்சி பெறாமலேயே முறைகேடு மூலமாக அதிக மார்க் எடுத்து பலர் பணி தேர்வுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  அப்படிப்பட்ட மாணவர்களை கொண்டு நிறுவனங்கள் செயல்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

  எனவே, இதுபோன்ற மாணவர்கள் வேலையில் சேர்ந்திருப்பார்களோ என்று பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் 75 சதவீத ஊழியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான பணிகளுக்கு தான்பயன்படுத்துகின்றன.

  வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும தரத்தை எதிர் பார்க்கும். அந்த தரம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று தொழில்துறை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  மேலும் ஒரு நிர்வாகி கூறும் போது, பணிக்கு தேர்வு செய்யும் போது, பல்வேறு கட்ட ஆய்வுகளை நாங்கள் மேற்கொள்கிறோம். தவறாக மார்க் எடுத்த ஒரு நபர் வேலைக்கு சேர்ந்தாலோ அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் வேலையில் தொடர முடி யும்.

  ஆனால், தவறான மாணவரை தேர்வு செய்து நாங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் நிலையை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

  ஊழல் புகாரில் சிக்கி உள்ள பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

  தர்மபுரி:

  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

  அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக 26 லட்சம் பேர் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 20 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.

  சாதாரணமாக தேர்வு எழுதுபவர்களில் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர். மறுமதிப்பீட்டில் 76 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுவது நம்பும்படியாக இல்லை.

  தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, துணை வேந்தர் பதவி பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும். உயர் கல்வித்துறை செயலரை இடமாற்றம் செய்து, விசாரணை நடத்த வேண்டும்.

  தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக உள்ளார்.


  இசைப் பல்கலைக்கு மட்டும் முதல்வர் வேந்தராக உளார். தற்போது இந்த 20 பல்கலைக்கழகங்களும் ஊழல் புகாரில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார்கள் அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

  பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் ஆளுநர், பல்கலைகழகங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பல்கலைக் கழக ஊழல் தொடர்பாக விரைவில் ஆளுநரிடம் அன்புமணி மனு அளிக்க உள்ளார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதான நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

  தமிழகத்தில் பா.ம.க.வால் மட்டுமே மக்கள் விரும்பக்கூடிய ஊழலற்ற சிறப்பான ஆட்சியை தர முடியும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று இளைஞர்கள், படித்தவர்கள் விரும்புகிறார்கள்.

  பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மற்ற கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

  அண்ணா பல்கலைக்கழக ஊழல் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற சதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் இந்த ஊழலில் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட சிலர் மீது மட்டும் பெயரளவில் நடவடிக்கை எடுத்து விட்டு, மற்றவர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகத் தோன்றுகிறது. இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.

  அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே, அதுகுறித்து பல்கலைக்கழக உள் விசாரணைக்கு ஆணையிட்டு இருந்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கிறார்.

  விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது தான் துணைவேந்தரின் நோக்கம் என்றால் அது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த ஊழல் தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளவேறு சில தகவல்கள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாக உள்ளது.

  கடந்த காலங்களில் பொறியியல் படித்து, தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான் முகவர்கள் மூலம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயல்வதாகவும், அது தான் இத்தகைய ஊழலுக்கு காரணம் என்றும் சூரப்பா கூறியிருக்கிறார். இது தான் மிகவும் ஆபத்தான கருத்து ஆகும்.

   


  இதன்மூலம் இப்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் எவரும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடவில்லை; தனியார் பொறியியல் கல்லூரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த துணைவேந்தர் முயல்கிறார். இது இந்த விசாரணையை திசை திருப்பும் செயலாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  அண்ணா பல்கலைக்கழ கத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3.02 லட்சம் பேர் மறுமதிப்பீடு கோரியுள்ளனர். இவர்களில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்களும் பெற்ற சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கல்லூரிகளில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

  அவ்வாறு இருக்கும் போது, 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் தான் இந்த மோசடிக்கு காரணம் என்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். கடந்த 7 ஆண்டுகளில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சம் என்றும், அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பேரும் பழைய மாணவர்கள் என்பது முழுப் பூசணிக்காயை அல்ல.... இமயமலையையே சோற்றில் மறைக்கும் செயலாகும். விசாரணையை திசை திருப்பும் வகையில் இத்தகைய கருத்துகளை சூரப்பா கூறக்கூடாது.

  விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலைப் பொறுத்த வரை அண்ணா பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தான் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டு ஆகும். இம்முறைகேடுகளுக்கு உயர் கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது.

  ஆகவே, இவர்களை ஒதுக்கிவிட்டு விசாரணை நடத்தப்பட்டால் அது இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றும் செயலாகவே அமையும். இது மறுமதிப்பீட்டு ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.

  அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு ஊழலை கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நிலையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தான் விசாரித்து வருகிறார். அவரின் திறமை குறித்தோ, நேர்மை குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மிகவும் சிக்கலான இந்த ஊழல் குறித்த புலனாய்வு விசாரணையைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் மட்டும் மேற்கொள்ள முடியாது. விடைத்தாள் திருத்தும் நடைமுறையும், அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கூடுதல் மதிப்பெண் மோசடி நடந்த விதமும் மிகவும் சிக்கலானவை ஆகும். இதில் உள்ள நுணுக்கங்கள் கல்வியாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் மட் டுமே புரிந்துக்கொள்ளக் கூடியவை ஆகும்.

  இவற்றை முழுமையாக புரிந்து கொண்டு, விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடும் ஆபத்து உள்ளது.

  எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் வழக்கை கையூட்டுத் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய பல்துறை வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். விசாரணை முடிவடையும் வரை இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  ×