என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்குவது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.



    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்கும் திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் கோபமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிறுவனம் வாட்ஸ்அப் மொபைல் போன் நம்பர்களை ஃபேஸ்புக்குடன் இணைந்து, வாட்ஸ்அப் அக்கவுண்ட்களில் எதுபோன்ற விளம்பரங்களை பதிவிடலாம் என்பதை முடிவு செய்யும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சர்ச்சை ஏர்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

    இதை செயல்படுத்தும் பட்சத்தில், பெரும்பாலான பயனர்கள் தங்களின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்க வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் நிறுவனம் கருதுவதாக தெரிகிறது.  

    வாட்ஸ்அப்

    முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. பின் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்க இருப்பதாக தெரிவித்தார். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது செயலியில் விளம்பரங்களை வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. 

    மேலும் சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் விளம்பரங்களை வழங்க நியமிக்கப்பட்டு இருந்த குழுவை களைத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின் செயலியின் குறியீடுகளில் இருந்து விளம்பரங்களை சேர்க்கும் குறியீடுகளை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதன்படி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.356 பதிப்பில் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை சேர்க்க செய்யும் குறியீடுகள் எதுவும் இல்லை என வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது மேக் சாதனங்களில் சொந்தமாக சிப் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது மேக் கம்ப்யூட்டர்களில் சொந்த பிராசஸர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆப்பிள் தனது சொந்த சிப்செட்களை வழங்கி வருகிறது. 

    புதிய ஐபோன் மாடலில் வழங்கப்பட இருக்கும் ஏ14 பிராசஸரை தழுவி புதிய மேக் பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக் சாதனங்களில் இன்டெல் பிராசஸர்களுக்கு மாற்றாக சொந்த பிராசஸர்களை படிப்படியாக வழங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    2006 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் கம்ப்யூட்டர்களில் இன்டெல் பிராசஸர்களை வழங்கி வருகிறது. அன்று முதல் இன்டெல் நிறுவனம் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு சிப்செட்களை உருவாக்கி வழங்கி வருகிறது. தனது சாதனங்களில் பயன்படுத்துவதற்கான மோடெம் சிப்செட்களை ஆப்பிள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளது.

    ஐமேக்

    எனினும், சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் முயற்சியாக ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் மோடெம் பிரிவை இந்திய மதிப்பில் ரூ. 7600 கோடிகளை கொடுத்து வாங்கியது. இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனத்துடன் நீண்ட காலமாக இருந்து வந்த காப்புரிமை சார்ந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து கொண்டது.

    கடந்த காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மேக் கம்ப்யூட்டர்களில் இருந்து மட்டும் ரூ. 54,453 கோடி வருவாய் கிடைத்தது. இதே காலக்கட்டத்தில் இன்டெல் பிசி பிரிவு ரூ. 76 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதலே தனது மேக் கம்ப்யூட்டர்களில் சொந்த சிப்செட்களை பயன்படுத்த திட்டமிட்டதாக 2018 ஆம் ஆண்டிலேயே தகவல்கள் வெளியாகின. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உற்பத்தி பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
     


    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆப்பிள் நிறுவன உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் 12 உற்பத்தி பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய ஐபோன் எஸ்இ மாடல் எதிர்பார்ப்புகளை கடந்து அதிகளவு முன்பதிவு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ஐபோன் 11 விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.  

    ஐபோன் 12 மாடலுக்கான முதற்கட்ட பணிகள் ஆன்லைன் மூலம் துவங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் நான்கு ஐபோன் 12 மாடல்களை வெளியிட இருக்கிறது. இவை 6.1, 5.4 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் உருவாகி வருகிறது. 

    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரென்டர்

    புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என்றும் 6.7 இன்ச் மாடல் மட்டும் அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றுக்கான அறிவிப்பு மற்றும் விநியோக தேதிகள் ஒரேகட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் எஸ்இ முன்பதிவுகள் எதிர்பார்ப்புகளை கடந்து இருந்தாலும், சந்தையின் தற்போதைய சூழலில் இது குறைவு தான் என கூறப்படுகிறது. ஐபோன் 12 மட்டுமின்றி ஐபோன் எஸ்இ பிளஸ் மாடலின் வெளியீடு தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ. 43 ஆயிரம் கோடிக்கு வாங்கி இருக்கிறது.



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டெட் நிறவனத்தின் 9.99 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரம் கோடி (ரூ. 43,574 கோடி) கொடுத்திருக்கிறது. 

    நிறுவனம் ஒன்றின் மிக குறைந்த அளவு பங்குகளை வாங்க இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருக்கும் உலகின் முதல் நிறுவனமாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதுதவிர இந்திய தொழில்நுட்ப துறையின் மிகப்பெரும் அந்நிய நேரடி முதலீட்டாளராகவும் ஃபேஸ்புக் இருக்கிறது.

    ஃபேஸ்புக்

    முதலீட்டின் அங்கமாக ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை வணிக ரீதியில் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் புதிய வணிக வியாபாரமான ஜியோமார்ட் தளத்தை வாட்ஸ்அப் கொண்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    வாட்ஸ்அப் கொண்டு ஜியோமார்ட் மூலம் மக்களின் வீடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை சீராக வழங்க ஏதுவாக இருநிறுவனங்களும் பணியாற்றும் என கூறப்படுகிறது.
    அந்த மாதிரி ஒரு செயலியை உருவாக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



    நாடு முழுக்க கொரோனா நோய் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் விடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலையில் உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வீடியோ கான்ஃபரென்சிங் சேவைகளே ஒற்றை தீர்வாக மாறியிருக்கிறது.

    மேலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளும் வீடியோ கான்ஃபரென்சிங் மூலமாகவே நடைபெறுகிறது. அந்த வகையில் வீடியோ கான்ஃபரென்சிங் சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய போட்டியை அறிவித்து இருக்கிறது. இன்னோவேஷன் சேலஞ்ச் என அழைக்கப்படும் போட்டி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீடியோ கான்ஃபரென்சிங் செய்ய பொதுமக்கள் ஜூம் எனும் செயலியை பயன்படுத்த துவங்கினர். எனினும், அதில் அதிகளவு பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அரசு சார்பில் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் இதர செயலிகளை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் இன்னோவேஷன் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொள்வோர் நாட்டிற்கென பிரத்யேக வீடியோ கான்ஃபரென்சிங் செயலி ஒன்றை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை அறிவித்து இருக்கிறது. 

    வெற்றிகரமாக செயலியை உருவாக்குவோருக்கு ரூ. 1 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. போட்டியில் கலந்து கொள்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை மற்றும் விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இன்னோவேஷன் சேலஞ்ச் அறிவிக்கை

    அதன்படி இந்த போட்டியில் மென்பொருள் துறையில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

    முதற்கட்டமாக செயலியை உருவாக்குவோர் வழங்கும் திட்டங்களில் உள்ள புதிய யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். இதில் 10 சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட ப்ரோடோடைப் உருவாக்குவதற்கான தொகையும் வழங்கப்படும்.

    இரண்டாவது கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பத்து குழுக்களில் இருந்து மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பணிகளுக்காக ரூ. 20 லட்சம் வழங்கப்படும். மூன்றாவது கட்டம் இறுதி சுற்றாக இருக்கும். இதில் வெற்றி பெறும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு, சிறந்த குழுவிற்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். மேலும் இது மேக் இன் இந்தியாவின் முதல் வீடியோ கான்ஃபரென்சிங் செயலி என்ற பெருமையை பெறும். 

    இதுதவிர செயலியை வெற்றி பெறும் குழுவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செயலியை பராமரிப்பது மற்றும் நிர்வகிக்க ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் குழு செயலியை குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளுக்காவது செயலிக்கு தேவையான பராமரிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.



    நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

    கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    அதற்கு மறுநாள், இந்த நிறுவனங்கள் 20-ந் தேதி முதல் செல்போன், டி.வி., லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி, ஆயத்த ஆடைகள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமேசான்

    இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்வதற்கான ஆர்டர்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற தொடங்கின.

    இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா நேற்று உத்தரவிட்டு உள்ளார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உரிய அனுமதியுடன், விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.
    உலக சந்தையில் சாம்சங் நிறுவனம் அந்த துறையில் ஆப்பளை பின்னுக்கு தள்ளியிருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக சாம்சங் நிறுவனம் 2019 ஆண்டிற்கான உலகின் மூன்றாவது ஸ்மார்ட்போன் பிராசஸர் விநியோகம் செய்யும் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.  சாம்சங் நிறுவனம் ஆப்பிளை நான்காவது இடத்திற்கு தள்ளி மூன்றாவது இடம்பிடித்துள்ளது.

    2019 ஆண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் பிராசஸர் விநியோகம் செய்யும் முதல் ஐந்து நிறுவனங்களில் சாம்சங் மற்றும் ஹைசிலிகான் மட்டுமே கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன. சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரின் 990 5ஜி

    விலை மற்றும் செயல்திறன் என இரண்டு விஷயங்களிலும் அதிக கவனமாக இருந்தது சாம்சங்கிற்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. எனினும், கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கான பிராசஸர்களை குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்டவற்றிடம் இருந்து வாங்கியது சற்றே பின்னடைவாக அமைந்துள்ளது என கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன மூத்த ஆய்வாளர் ஜேன் பார்க் தெரிவித்து இருக்கிறார். 

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.6 சதவீதம் சரிவடைந்து இருந்தாலும், குவால்காம் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. குவால்காமை தொடர்ந்து மீடியாடெக் நிறுவனம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
    இந்தியாவில் பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மனுவில் ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மனரீதியில் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட கோரப்பட்டுள்ளது. 

    அதன்படி, அரசு மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவை டிடிஹெச் சேவை வழங்குவோரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, ஊரடங்கு காலக்கட்டத்தில் சேவையை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போன் பயன்பாடு கோப்புப்படம்

    இத்துடன் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களும் தங்களது சேவையை ஊரடங்கு முடியும் வரை இலவசமாக வழங்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    விரும்பியவருடன் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்வது, பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாக குறைக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சார்பில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் தங்கும் இடம் உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், மக்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஊரடங்கு போன்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம் ஆகும். குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பிரிந்து வாழ்வோருக்கு மன ரீதியில் அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் அரங்கேறி இருப்பது மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    வோடபோன் நிறுவனம் ஐந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 399, ரூ. 499, ரூ. 555 மற்றும் ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வோடபோன் ரூ. 249 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இத்துடன் ஐடியா டிவி, வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகை வோடபோன் நிறுவனத்தின் இருமடங்கு சலுகையின் கீழ் வருவதால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    போன் பயன்பாடு

    ரூ. 399 சலுகையிலும் ரூ. 249 சலுகையை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இரு சலுகைக்கான வித்தியாசம் ரூ. 399 சலுகையின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆரும். இந்த சலுகையும் இருமடங்கு டேட்டா திட்டத்தின் கீழ் வருகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.  

    ரூ. 499, ரூ. 555 மற்றும் ரூ. 599 சலுகைகளிலும் ஒரே மாதரியான பலன்களே வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி மட்டும் ஒவ்வொரு சலுகையிலும் வேறுபடுகிறது. அதன்படி ரூ. 499 சலுகையில் 70 நாட்களும், ரூ.555 சலுகையில் 77 நாட்களும், ரூ. 599 சலுகையில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.

    இந்த சலுகைகள் தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் இவை அனைத்து வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர வோடபோன் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல் ரவுண்டர் ரூ. 95 சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து 56 நாட்களாக மாற்றியது. இந்த சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் ரேட் கட்டர் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.
    நோயாளிகளின் இதயதுடிப்பை தூரத்தில் இருந்தபடி கேட்க வழி செய்யும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    ஐஐடி மும்பையை சேர்ந்த குழு ஒன்று ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனம் கொண்டு தூரத்தில் இருந்து கொண்டே இதய துடிப்பை கேட்க முடியும். இதனால் கொரோனாவைரஸ் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும்.

    நோயாளிகளின் இதய துடிப்பு சத்தம் வயர்லெஸ் முறையில் மருத்துவருக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவர் நோயாளியின் அருகில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.  ஐஐடி குழு உருவாக்கி இருக்கும் சாதனத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. 

    ஐஐடி பம்பாய்

    இந்த சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்படுகிறது. மேலும் இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

    ஐஐடி-யின் தொழில்நுட்ப வியாபார தளம் சார்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆயுடிவைஸ் எனும் ஸ்டார்ட்அப் துவங்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் இதுவரை 1000 ஸ்டெத்தோஸ்கோப்கள் நாடுமுழுக்க வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. 

    இந்த சாதனம் ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் பிடி இந்துஜா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய செயலியை கொண்டு வாடிக்கையாளர்கள் வருவாய் ஈட்ட முடியும்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் ஆகி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பங்கேற்பவர் எவ்வித சான்றையு்ம சமர்பிக்க தேவையில்லை என ஜியோ தெரிவித்துள்ளது.

    இதில் கலந்து கொள்வோர் தங்களது விவரங்களை பதிவிட்டு, தேவையான ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இது ஐஒஎஸ் தளத்திலும் வெளியாகலாம்.

    ஜியோபோஸ் லைட்

    ஜியோபோஸ் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி?

    - ஜியோபோஸ் லைட் செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்

    - மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்

    - வாலெட்டில் பணத்தை சேர்க்க வேண்டும்

    - இனி ஜியோ நம்பர்களுக்கு ரீசார்ஜ் செய்து அதற்கான கமிஷன் தொகையை பெறலாம்

    - தினசரி வருவாய் விவரங்களை அதற்கான டேஷ்போர்டு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்

    - ஜியோபோஸ் லைட் மூலம் ரூ. 100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 4.16 வரை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற சேவையை தனது ஏர்டெல் தேங்ஸ் செயலியில் அறிவித்தது. இந்த திட்டத்தை ஏர்டெல் சூப்பர் ஹீரோ என அழைத்தது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரீசார்ஜிலும் 4 சதவீதம் வரை சம்பாதிக்க முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் மூன்று ரெட் டிக்குகள் வந்தால் கவனம் அவசியம் என்ற வாக்கில் பழைய தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.

    வாட்ஸ்அப் செயலி மற்ற சமூக வலைதளங்களை போன்று தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகமுக்கிய தளமாக மாறியிருக்கிறது. எனினும், மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் போலி மற்றும் தவறான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது. 

    வேகமாக பரவும் குறுந்தகவல்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.

    வைரலாகும் குறுந்தகவல் முற்றிலும் போலி என அரசு நிறுவனமான பிஐபி (Press Information Bureau) தெரிவித்துள்ளது. இதனை பிஐபி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.

    வைரல் புகைப்படம்

    முன்னதாக இதேபோன்ற குறுந்தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது. முந்தைய வைரல் பதிவுகளில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேர்க்கப்பட்டு இருந்தது. தற்சமயம் இதே தகவலினை பிஐபி வெளியிட்டு இருப்பதாக கூறி பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பிஐபி விளக்கம் அளித்துள்ளது. 

    வாட்ஸ்அப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. வலைத்தளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன. 

    முன்னதாக வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்ய வழி வகுக்கும் புதிய கட்டுப்பாடை வாட்ஸ்அப் அமலாக்கியது. ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. கட்டுப்பாடு மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி உலகம் முழுக்க பரவும் போலி செய்திகளை முடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    ×