search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் போராட்டம்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest #CBI
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் தொடரப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 
    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்றத்தில் பல முறை நாடிய வைகோவுக்கு, நாஞ்சில் சம்பத் ஸ்டெர்லைட் நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்க காலம் முதலே போராடி வருபவர் வைகோ. பல முறை நீதிமன்றத்தை நாடி ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக வாதிட்டுள்ளார். கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் வைகோ என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

    மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைக்கு பின்னர் சசிகலாவை எதிர்த்து பின்னர் சசிகலா அணிக்கு ஆதரவாளராகி பின்னர் தினகரனுடன் இணைந்து செயல்பட்டு பின்னர் அவருடன் முரண்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகோவை நிகழ்ச்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசியிருந்தார். அவர் மீண்டும் மதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் சடலங்கள் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடலை ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி எவ்வளவு சீக்கிரம் உடற்கூறு பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் உள்ளே நுழைந்ததாக ரஜினிகாந்த் ஆவேசத்துடன் கூறியுள்ளார். #Rajinikanth #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

    காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்.

    என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார். 
    அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முதலாக பொது களத்தில் இறங்கும் விதமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதுக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். #Rajinikanth #Thoothukudi
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற நாளை ரஜினிகாந்த் தூத்துக்குடி செல்ல உள்ளார். காலை விமானத்தில் அங்கு செல்லும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர். #ThoothukudiShooting #NHRC
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும், பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ரஜினிகாந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மேற்கண்ட மூன்று மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #SterliteShut #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டர். இதற்கிடையே, சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது:-

    மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்பாயம் வெளியிட்ட விதிமுறைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து, அனுமதியை புதுப்பிக்க அந்நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

    ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×