search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி விழா"

    • சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்.
    • சுவாமி-அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு மாலையில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல் நடைபெற்று இரவு 11 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ராஜகோபுரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெரு மானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா 8-ம்நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வருதல் நடக்கிறது.

    திருவிழாவில் 21, 22, 23-ந் தேதி வரை 3 நாட்களும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். *** திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்து உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

    இந்த ரெயில் நாளை பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து நாளை (18-ந்தேதி) எண். 06002 சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    இந்த 2 சிறப்பு ரெயில்களும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோனம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது. இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு டாடா நகர் போய் சேருகிறது.

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    • ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகமாயி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி 5-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை (சனிக்கிழமை) மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுவார். அங்கு முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனை சுவாமி வதம் செய்வார்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடு கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. சந்தராஜ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
    • சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற நிலையில் புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
    • ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

    உடுமலை:

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், போடிப்பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதி முருகன் கோவில்கள் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண வண்ண மின்விளக்குகளால் விழா கோலம் பூண்டுள்ளது.

    முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகப்பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தும், காப்பு கட்டியும் விரதம் தொடங்கி உள்ளனர்.

    பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழாவில் காலை 10 மணியளவில் ஞானதண்டாயுதபாணி, சாது சன்யாசி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் இந்திர விமானத்தில் சுவாமி திரு வீதி விழா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேடர் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    நாளை (புதன் கிழமை) பாலசுப்பிரமணியர் அலங்காரம் மற்றும் யானை வாகனத்தில் திருவீதி உலா, வியாழக்கிழமை வைதீகாள் அலங்காரம், சின்னமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அம்மையப்பன் பூஜை செய்து சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும்.

    நிகழ்வின் உச்சமான சூரசம்காரம் வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் வீடுகளில் விரதமிருக்க தொடங்கினர்.

    • சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • 17-ம் தேதி அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர் முடித்ததாக கந்தபுராண வரலாற்றில் கூறும் சிங்கார வேலவர் கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .

    பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கண்ணி சக்தி வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராண வரலாறு.

    நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் திருமஞ்சனத்தில் எழுந்தருளி அதனை தொடர்ந்து வீதி உலா காட்சி நடைபெற்றது முன்னதாக பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகிற 17-ம் தேதி இரவு 8 மணிக்கு பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அப்போது சிங்காரவேலருக்கு வேர்வை சிந்தும் காட்சி உலகில் வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும் மறுநாள் சூரசம்கார விழா எதிர்வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமு கக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளை யத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடியேற்ற நாளில் காலை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராட்டும், இரவு வள்ளி, தெய்வானையுடன் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி நான்கு ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்ப த்தினர் செய்து வருகின்றனர்.

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்கரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடியும், நாழிகிணறு தீர்த்தத்தில் நீராடியும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பலர் 6 நாட்களும் பால், எழுமிச்சைச்சாறு பருகி கந்த சஷ்டி கவசம் பாடியும் , பஜனை பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    2-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×