search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanda Shashti Festival"

    • கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜையை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார்.

    அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல் அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் தங்கி விரதம் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம்.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் ஆகி, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவில் 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி அங்கி ருந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்நாளான 20-ந்தேதி (திங்கட்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    திருவிழா 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழா வெள்ளிக்கிழமை 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முரு கன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று கந்த சஷ்டி விழா தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சூரசம்காரம் நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வந்தார்.

    சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெ ருமான்-தெய்வானை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    தேரோட்டம்

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் வாசல் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய சட்டத் தேரில் எழுந்தருளினர்.

    தேரை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவல பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து இன்று மாலையில் பாவாடை தரிசனமும், மூலவர் முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்கார சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×