என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து முதலீடு செய்தனர்.
- ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என கூறி வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்தவர்கள் அருண்ராஜா (வயது 37), ஜெகன் (39). அண்ணன், தம்பிகளான இவர்கள் 2 பேரும் தருமபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்களிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1,800 வீதம் 100 நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.
இதை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து முதலீடு செய்தனர். முதலீடு செய்த பணத்தை ரியல் எஸ்டேட், டிரேடிங் உள்ளிட்டவைகளை செய்து லாபம் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் வரை முதலீடு செய்தவர்களுக்கு தொகையை வழங்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின்பு அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தருமபுரியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஓசூர் ஏலகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிளை அலுவலகங்களும் மூடப்பட்டன.
இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் 1,000 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பணத்தை மீட்டு தரகோரியும், அருண்ராஜா, ஜெகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு பூனையானூரில் உள்ள வீட்டில் அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணையை தொடர்ந்து நேற்று நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தருமபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் பூனையானூரில் உள்ள அருண் ராஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சில ஆவணங்கள், ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கூட்டர், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் தருமபுரியில் உள்ள தலைமை அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ஓசூர், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள கிளை அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதை தொடர்ந்து மோசடி, தமிழ்நாடு சிறப்பு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர். உரிய விசாரணைக்கு பின் கோவையில் உள்ள முதலீட்டாளர் சிறப்பு கோர்ட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பிரபுவை குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர்.
- கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் ராஜம் (வயது 57). இவரது மகன் பிரபு வை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28- ந்தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் எஸ்.என். சாவடியை சேர்ந்த தங்கபாண்டியன் (27), கம்மியம்பேட்டையை சேர்ந்த சதீஷ் (21), வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.
மேலும் தங்கபாண்டியன் மற்றும் சதீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பிரபுவின் தாய் ராஜம் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர். இதனை மீறி மீண்டும் சாட்சி சொல்ல சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு கத்தியால் வெட்ட முயன்ற போது அங்கிருந்து ராஜம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் , சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏராள மான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 36) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.
இதேபோல் தரணம்பேட்டை பகுதியில் பாபு (62) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ஏராள மான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது38). இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
திருமங்கலம் நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவசேகர் (57) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சிவசேகரை கைது செய்தனர்.
- பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரன் மற்றும் போலீசார் பவானி சாகர் அருகே உள்ள தொப்பம் பாளையம், நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அவர்கள் பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் சீட்டிற்கு கீழே பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பவானி சாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதுரை செல்வன்(21), கவி என்கிற கவியரசன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- போடி அருகே குடிப்பழக்கத்தால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- வருசநாடு பகுதியை சேர்ந்தவர் உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டார்
மேலசொக்கநாதபுரம் :
தேனி மாவட்டம் போடி அருகில் குரங்கணியை சேர்ந்த ஆண்டி மகன் பாலமுருகன் (வயது38). கூலித்தொழிலாளியான இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). சிக்கன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ராஜா தனது கடையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்
- போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்
தேனி:
தேனி அருகே அப்பிபட்டியை சேர்ந்த அய்யர் மகள் சுபிதா(24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஆடிட்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யரின் மனைவி மற்றும் மகன் வெளிவேலையாக சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சுபிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்தவர் நிஜாம் மகள் அப்ரா. இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாததால் உத்தமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அப்ரா திடீரென மாயமானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கத்தில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டில் மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி கமல், குமரன் ஆகிய 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
லாரியை ஏற்றியதில் நவீன் என்ற வாலிபர் படுகாயம் அடைந்திருந்தார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணையாலால், கிளீனர் கிரிஸ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உயிர் பலி 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் போலீசார் வடபெரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் பகுதியில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டுகள் செயல்பட்டு வருகின்றன.
மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கம் வழியாக புழல், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான கமல் என்ற கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோர் மது குடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் 2 பேரும் சாப்பிடுவதற்கு சப்பாத்தி இருக்கிறதா? என கேட்டுள்ளனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கமல், குமரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அதனை வேகமாக பின்னோக்கி ஓட்டினார். மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்ற அவர் கமல், குமரன், நவீன் ஆகியோர் மீது லாரியை ஏற்றினார். இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். நவீன் படுகாயம் அடைந்தார்.
பின்னர் டிரைவர், லாரியை திருப்பி சிறிது தூரம் ஓட்டிச் சென்று விட்டு தப்பினார். அவருடன் இருந்த கிளீனரும் தலைமறைவானார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி யார்டுக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கமல், குமரன் இருவர் மீதும் லாரியை ஏற்றி அவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணையாலால்சிங், கிளீனர் கிரீஸ்குமார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
உயிரிழந்த கமல், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒன்றாக ஒரே பள்ளியிலேயே படித்துள்ளனர். இருவரும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தனர். கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் ஒரே நேரத்தில் கொலையுண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக அங்கு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட கமல், குமரன் இருவருமே இளம் வயதை சேர்ந்தவர்கள். கமலுக்கு 36 வயதும், குமரனுக்கு 34 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர்.
படுகாயத்துடன் உயிர் தப்பிய நவீனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து லாரியை ஏற்றி 2 வாலிபர்களை கொலை செய்துள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து செங்குன்றம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.