என் மலர்
வழிபாடு
- கடன் வாங்கும் முன் யோசித்தாலே கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
- ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது.
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் கடன்களை தீர்க்கும் பரிகாரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பசுவுக்கு கொடுத்துவர கடன் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயார் செய்து அதை வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வந்தால் கடன்களை அடைத்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் இதனை செய்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.
கடகம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிது வெல்லக்கட்டியை எடுத்து ஓடும் நீரில் விட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வெல்லக்கட்டியை எடுத்து குரங்குகளுக்கு கொடுத்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரி போட்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் தீர வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்ய வேண்டும். (நீங்கள் அதை உண்ணக்கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து ஒரு மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வர கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதனை 24 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக கடன்கள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடியில் உள்ள விநாயகருக்கு 11 அகலில் தீபமேற்றி அதனை 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன்கள் தீரும்.
விருச்சிகம்
ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை சொல்ல வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்கலாம். 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி ஏற்படும்.
தனுசு
வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட அல்லது கோவில் கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து வளம் பெருகும்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளு உருண்டை செய்து தானமாக கொடுத்துவர கடன்தொல்லைகள் தீரும்.
கும்பம்
வியாழக்கிழமை மாலை 5 அல்லது 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு தானமாய் பிரசாதமாக கொடுத்துவர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 அல்லது 2 மணி அல்லது இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
- திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில் நவம்பர் 9-ந்தேதி மாதாந்திர ஏகாதசி, 11-ந்தேதி சிவராத்திரி, 12-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 13-ந்தேதி வரலட்சுமி விரதம், 14-ந்தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ந்தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17-ந்தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.
18-ந்தேதி வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19-ந்தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26-ந் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி, 27-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28-ந்தேதி திருப்பானழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- இடங்கழி நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 13 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை நள்ளிரவு 12.15 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: பரணி காலை 6.40 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஆண்டவர், திருச்செந்தூர் முருகப்பெருமான், திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. இடங்கழி நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்மாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அரளாகேசியம்பாள் சமேத ரத்தினகீரீசுவரர், லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப்பிராட்டியார் சமேத சப்தரிஷீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-பயணம்
கடகம்-குழப்பம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-அன்பு
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பிரீதி
மகரம்-வெற்றி
கும்பம்-உண்மை
மீனம்-ஊக்கம்
- கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.
முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா்.
- மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது.
- மணிகண்டீஸ்வரர் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டான்குளம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது. இந்த லிங்கம் வெட்ட வெளியில் இருப்பதை கண்டு, கிராம மக்கள் கோவில் கட்டமுடிவு செய்தனர். இதற்காக கால்கோள் பூஜை திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய திருப்பணிக் குழுவினர், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் தோண்டான்குளம் கிராமம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தலவரலாறு
பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரரை வழிபட்டு உள்ளனர். மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சுவால் துயரம் அடைந்த, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்ந நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் ஆகியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் `மணிகண்டம்' எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும்.
சிவன் அருள் பெற்ற இங்குள்ள குளம் மனிதர்களால் தோண்டப்படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டாகுளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவியது.
- உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும்.
- தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
சூரியபகவானை வழிபடும் நாளும், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வரும் இந்நாளில், சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்களை வழிபடலாம். அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டால், உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அமிர்தகலசத்தோடு வெளிப்பட்டவர் தன்வந்திரி பகவான், தன்வந்திரி பகவானிடம் அமிர்தம் பெற்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை காத்து வருபவர்கள் அஸ்வினி தேவர்களாவர். எனவே, அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தன்வந்திரி பகவானையும் வழிபடலாம். தன்வந்திரி பகவான் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தனி சன்னிதியில் இருந்து அருள் பாலிக்கிறர்.
உலகுக்கே வெளிச்சம் தருபவர் சூரிய பகவான். அப்பேற்பட்ட சூரிய பகவானே வெளிச்சத்தை இழந்து உடல் வலிமையற்று இருந்த போது சூரிய புத்திரர்களான அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய சக்தியை கொடுத்து காப்பாற்றினர். 27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்கள்.
அஸ்வினி குமாரர்கள் சூரியனுக்கும்-சரண்யு தம்பதிக்கும் பிறந்தவர்கள் என்று வேதம் சொல்கிறது. குதிரை முகம் கொண்ட இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள். இவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய, மற்றொருவர் பெயர் தஸ்ரா, சிவபெருமானிடமும், விஷ்ணுபகவானிடமும் இருந்து பிரம்ம தேவர் ஆயுர்வேத மருத்துவ முறைகளை அறிந்து அதற்கான விளக்கமுறைகளை எழுதி தட்சபிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவ கலையை கற்றுக்கொண்டனர்.
வேதலோக மருத்துவ பதவியை அடைய சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து அந்த பதவியை அடைந்தார்கள். இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். மகரிஷி ததீட்சர் பிரம்மவித்யாவை இந்திரனிடம் இருந்து கற்றுக்கொண்டார். பிரம்மவித்யா என்பது நோயுற்றவர்களை இறக்கவிடாமல் காக்கும் மந்திரம்.
இந்திரன், ததீட்சருக்கு பிரம்மவித்யாவை யாருக்கும் கற்றுக்கொடுக்க கூடாது என ஆணையிட்டார். ஆனால் அஸ்வினிகுமாரர்கள் பிரம்மவித்யாவை தங்களுக்கு கற்றுக்கொடுக்குமாறு வேண்டினார்கள். அதற்கு கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பாவம் என்று ததீட்சர் கருதினார். இந்திரனுடை ஆணையை அறிந்த அஸ்வினிகுமாரர்கள் ததீட்சரின் தலையை எடுத்து குதிரை தலையை பொருத்தினார்கள். அதன்பிறகு ததீட்சர் பிரம்மவித்யாவை அஸ்வினிகுமாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
இதை அறிந்த இந்திரன் ததீட்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார். உடனே அஸ்வினி குமாரர்கள் மீண்டும் அவருடைய தலையையே பொருத்தினார்கள். அஸ்வினி குமாரர்கள் பற்றிய குறிப்புகள் ரிக்வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்திலும் காணப்படுகிறது. மனிதர்களுக்கு முதலில் மருத்துவம் பார்த்தவர்கள் இவர்கள். நோய்களை குணப்படுத்துவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர் என்று நம்பப்படுகிறது.
ஆபத்தில் சிக்கொக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினிகுமாரர்கள் என்னும் இரட்டையர். அஸ்வினி தேவர்கள் தங்களுடைய தேரில் சூரியனையும், சந்திரனையும் ஏற்றிச்செல்வார்கள். கூடவே தேனையும் கொண்டு செல்வார்கள். அவர்களுடைய தேரில் குதிரை, கழுதைகள், கழுகு, அன்னங்கள் ஆகியவைகள் இருக்கும். அவர்கள் இருக்கும் இடம் ஆகாயம், மலை உச்சி, தாவரம், அந்தர வானம், வீடுகள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் பாண்டுவின் 2-வது மனைவி மாதுரி பிள்ளைவரம் வேண்டி இவர்களை வணங்கி பின்னர் பிறந்தவர்கள் தான் நகுலனும், சகாதேவனும். இருவரில் சகாதேவன் ஜோதிடத்திலும், நகுலன் குதிரைகளை பழக்குவதிலும் வல்லவர்கள். அஸ்வினி புத்திரர்களால் தான் இவர்களுக்கு இந்த கலைகள் கைவந்தன என்கிறது இதிகாசமும், புராணமும்.
இன்றைக்கும் கூட மேற்குவங்கத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமாரர்கள் என்று அழைக்கின்றனர். அஸ்வினி தேவர்கள் தம்முடை தந்தை சூரியபகவானின் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரின் சாரதிகளாகவும் இருப்பார்கள். இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் குறிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அஸ்தினா என்றால் தமிழில் ஐப்பசி என்கிறோம். யாகங்கள் வளர்க்கும் போது அஸ்வினி தேவர்களும் வணங்கப்படுவதாக வேதங்கள் குறிப்பிடுகிறது.
இந்த அஸ்வினிகுமாரர்கள் எந்தநேரமும் உலகை சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கும் போது யாருக்காவது அருகில் வரும் போது நாம் என்ன நினைக்கிறோமோ, அது அப்படியே பலிக்கட்டும் என்று ஆசீர்வதித்து செல்வார்கள். அதாவது நீங்கள் நல்லது நினைத்தாலும், கெட்டது நினைத்தாலும் அது உங்களுக்கு நடக்கும்.
- கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன.
- ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு கோவில் நடை மூடப்பட்டது. சந்திர கிரகணத்தை ஒட்டி 6 மணி நேரம் முன்னதாக 7.05 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. நேற்று நள்ளிரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்பட்டு 2.22 மணிக்கு நிறைவு பெற்றது.
இதையடுத்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் 13 மணி நேரத்திற்கு பிறகு 3.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
திருப்பதியில் நேற்று 47,35 1 பேர் தரிசனம் செய்தனர். 23,836 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.
- உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாழ்வில் நமக்கு பாதகமான விஷயங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க முடிந்த அளவு நாம் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் நம்மில் பலருக்கு கடும் நோய்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், தீய எண்ணம் நடத்தை கொண்ட மனிதர்களுடன் சகவாசம் அல்லது தொடர்பு போன்றவை ஏற்படுகிறது. இவை எல்லாவற்றில் இருந்தும் நம்மை காக்க வல்லவர்கள் அஸ்வினி தேவர்கள். அவர்களுக்குரிய அஸ்வினிதேவ மந்திரம்.
அஸ்வினி தேவ மந்திரம்
அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
தாவஸ்விநௌ துமஹ
அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் எப்படிப்பட்ட உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகும்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருநெல்வேலி காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 12 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை நள்ளிரவு 1.08 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: அசுவினி காலை 7.12 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் புறப்பாடு. பூங்கோவில் சப்பரத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம். தென்காசி, பத்தமடை வீரவநல்லூர், தூத்துக்குடி தலங்களில் அம்பாளுக்கு உற்சவம் ஆரம்பம். திருப்போரூர் முருகப்பெருமான், சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-நிம்மதி
கடகம்-வரவு
சிம்மம்-பக்தி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நலம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- உதவி
மகரம்-பண்பு
கும்பம்-பாசம்
மீனம்-ஊக்கம்
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.
அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஏழுமலையான் கோவிலில் 63,404 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26,659 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணிமுதல் நாளை அதிகாலை 3.15 வரை 8 மணிநேரம் கோவில் மூடப்படுகிறது. நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளது. நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.
இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
- சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.
மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.






