என் மலர்
வழிபாடு
- கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம்.
- திருமூலவ நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 11 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி பின்னிரவு 2.27 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ரேவதி காலை 8.09 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பவுர்ணமி. வாஸ்து நாள் (இன்று காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சென்னை பாரிமுனை காளிகாம்பாள் சமேத கமடேசுவரர் ஆலயத்தில் மாலை 108 மகளிரால் திருவிளக்கு பூஜை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி உற்சவம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். திருமூலவ நாயனார் குருபூஜை. திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-உற்சாகம்
மிதுனம்-பெருமை
கடகம்-புகழ்
சிம்மம்-வெற்றி
கன்னி-இன்சொல்
துலாம்- அன்பு
விருச்சிகம்-பக்தி
தனுசு- விவேகம்
மகரம்-தெளிவு
கும்பம்-ஜெயம்
மீனம்-பாராட்டு
- சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும்.
- சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.
சந்திர கிரகணம் நாளை (28-ந்தேதி) இரவு நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும். இந்த சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து இருப்பதாக ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சந்திர கிரகணம் நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.
இந்த சந்திர கிரகணத்துக்கான தோஷ கிழமை சனி ஆகும். எனவே சனிக்கிழமை பிறந்தவர்கள் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கிரகணத்தால் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது.
மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவர்கள் தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் நிகழும் போது இவர்கள் தோஷ நிவர்த்தி மந்திரத்தை உச்சரிக்கலாம்.
`இந்த்ரோ அநலோ யமோ ரிக்ஷோ வருணோ
வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து
உபராக உத்தவ்யதாம் மம றீறீ '
கிரகணம் முடிந்த பிறகு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மற்றும் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குளித்து அவரவர் சம்பிரதாயப்படி பரிகார பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பரிகார பூஜை செய்பவர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்திய பிறகு குளித்து விட்டு விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வங்களுக்கு வெல்லத்தால் செய்த பலகாரங்களை படைத்து பரிகார பூஜை செய்யலாம். அதாவது அதிரசம், இனிப்பு முருக்கு, எள் உருண்டை, கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களும் பரிகார பூஜை செய்ய வேண்டும்.
மேலும் பூஜை செய்யும் முன்பு குளிக்கும் போது அதே மந்திரத்தை செப்பு தகடு அல்லது காகிதத்தில் எழுதி கையில் கட்டிக்கொண்டு குளிக்கலாம். குளித்ததும் அதை அப்படியே தண்ணீரில் விட்டு விட வேண்டும்.
மேலும் இந்த சந்திர கிரகணத்தால் பல்வேறு பொதுவான பலன்களும் ஏற்படும். செல்வந்தர்களுக்கு மிகுந்த கெடுதல்கள் உண்டாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, வடமாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரிக்கும். குப்பைகள் மூலம் நோய் பரவும். விவசாயம் செழிப்பாக இருக்கும்.
அதே நேரத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு உச்சத்தை தொடும். கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.
தமிழ்நாட்டில் சில இடங்களில் சுமாரான மழை பெய்யும். எதிர்காலத்தில் கடுமையான மழை பொழியும். புயல் சின்னம் உருவாகும். சூறாவளி காற்றும் வீசும். விவசாயம் 2 போகம் விளையும். தென் மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். வெளி மாநில திருடர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். சாதி பாகுபாடு முற்றிலும் அகலும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் விபத்துக்களும் அதிகரிக்கும்.
சந்திர கிரகணம் நிகழும் அன்று இரவு 10 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். கர்ப்பிணிகள் இரவு 1 மணி முதல் 2.30 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.
- மரங்கள் தெய்வீகத் தன்மைகளை கொண்டவை.
- மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது.
மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது. முன் ஒரு காலத்தில் மர வழிபாட்டின் தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்த மக்கள் பின்னாட்களில் குருமார்களும், பெரியோர்களும் செய்து வந்திருந்த போதனைகளினால் ஈர்க்கப்பட்டு பசுமையான மரங்களில் தெய்வங்கள் குடிகொண்டுள்ள தாக நம்பி மர வழிபாட்டை கடைப்பிடித்து வந்தார்கள்.
அதன் இன்னொரு முக்கியமான காரணம் முன்காலத்தில் நாட்டுப்புறங்களில் இருந்த ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் மரங்களின் அடியில் அமைந்து இருந்ததினால் மரங்கள் தெய்வீகத் தன்மைகளை கொண்டவையாக உள்ளன என்பதாக மக்கள் நம்பினார்கள். மர வழிபாடு காலப்போக்கில் இயற்கை வழிபாடு என்பதாக கருதப்பட்டது.
மகிழமரம்
இதை ஞான மரம் என்று புகழ்வார்கள். வியாழக்கிழமை தோறும் இந்த மரத்தை குருவாக எண்ணி பூஜை செய்து வருவோருக்கு அறிவுக்கூர்மை கிடைக்கும்.
கொன்றை மரம்
இந்த மரத்தை பிரணவ மரம் என்று சொல்வார்கள். இந்த மரத்தை முருகரை மனதில் நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்து வணங்கிட துஷ்ட சக்திகள் நம்மிடம் அண்டாது.
குறுந்த மரம்
வாஸ்து பரிகாரமாகிய இந்த மரத்தை வாஸ்து குறைபாடு உள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.
வெள்ளை மந்தாரை
இந்த மரத்தை பூஜை செய்து வருவோருக்கு நினைத்ததை கொடுக்கும் தன்மை கொண்டது.
சம்தானக மரம்
இது நந்தி விருட்சம். இந்த மரத்தை வளர்த்து பூஜித்து வந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்ந்த நிலையை அடைவார்கள்.
பும்சிக மரம்
சந்தான பாக்கியத்தை தரக்கூடிய இந்த விஷேச தெய்வ விருட்சத்தை பூஜித்து வந்தால் மலடியும் குழந்தை பெறுவாள்.
அரிசந்தன மரம்
இந்த மரத்தை தோட்டத்தில் வளர்ப்பவர்களுக்கு சோதனை நிறைய வந்தாலும், அருகில் வந்ததும் மறைந்துவிடும்.
பன்னீர்பூ மரம்
இந்த மரத்தை வீட்டில் வணங்கி வருபவர்களுக்கு வாகன விபத்துகள் தடுக்கப்படும்.
பெருந்தும்பை
தனலட்சுமி என்றும் இதற்கு பெயர் உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள், தீய செயல்கள் அகலும்.
ஜலம்தரா செடி
தொட்டால் சிணுங்கி செடியை தனலட்சுமி செடி என்று கூறுவார்கள். அந்த செடி வளர்க்கும் இடத்தில் நல்ல செல்வவளம் பெறுகும்.
குடும்பநல செடி
தொட்டால் சிணுங்கி செடியும், துளசி செடியும் ஒரே தொட்டியில் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்து வந்தால் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.
அகண்ட வில்வம்
இதற்கு அதிஷ்ட மரம் என்று இன்னொரு பெயர் உண்டு. திங்கள் கிழமை தோறும் பூஜை செய்து வந்தால் வீடு அதிஷ்டகரமாக விளங்கும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.
விடத்தலை மரம்
ஆரோக்கியமாக வாழவும், நோய்கள் நீங்கி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வர வேண்டும். இந்த மரத்தை சனீஸ்வர மரம் என்று கூறுவர். சனீஸ்வரனின் 71/2 காலம் மற்றும் அர்த்தாஷ்டம சனி காலத்தில் இந்த விருட்ச பூஜை பலன் தரும்.
திருமண மரம்
பின்னை மரம் தான் திருமண பேற்றைத்தரும் தெய்வ விருட்சமாக திகழ்கிறது. திருமணம் தடைபட்டுக்கொண்டே வரும் ஆண், பெண் இருவரும் இந்த மரத்தை பூஜை செய்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
கதம்ப மரம்
இந்த மரம் தீய சக்திகளை விரட்டும் சக்தி கொண்டது.
செல்வ மரம்
கருநெல்லி மரத்தை செல்வமரம், லட்சுமி மரம் என்று கூறுவர். இந்த மரத்தை வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெறுகும்.
சவுபாக்கிய மரம்
செண்பக மரத்தை சவுபாக்கிய விருட்சம் என்றும் கூறுவர். இந்த மரத்தை அஷ்டோத்திரம் சொல்லி வழிபட குடும்பத்தில் சவுபாக்கிய நிலை உருவாகும்.
- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர்.
- சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்கள்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார். அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.
அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.
பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.
கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).
ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.
திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.
பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.
ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.
மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.
பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.
உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.
ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.
சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.
மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.
பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.
உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.
திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.
பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.
உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.
ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.
எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெற்றலாம்.
- கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம்.
- தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.
மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பயன் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள். களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
ஆசிரம வளாகத்தில் வட சுற்றில் வளர்ந்துள்ள நாகலிங்க மரத்தை 3 முறை வலம் வந்தால் சிவனருளும், குருவருளும் ஒருசேர வாய்க்கின்றன. கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.
சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.
- புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் கோரக்கர்.
- அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர்.
பதினெண் சித்தர்களுள் புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் "கோரக்கர்". இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16-வது இடத்தில் உள்ள இவர், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தமது இளம் வயதை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாதசைவத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் 880 வருடம், 11 நாள் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் தென், வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் இவரின் வரலாறு அறியப்பட்டுள்ளது.
இவரின் ஜீவசமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குபொய்கை நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது. வடக்குபொய்கை நல்லூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1233-ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்கு பின்னும் வாழ்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதிய மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (மானாமதுரை), பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் இவரது ஜீவசமாதிகள் உள்ளன.
இவற்றில் வடக்குபொய்கைநல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிகை மலை, ஆனை மலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக் நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள ஜீவசமாதிக்கு சித்ரா பவுர்ணமி அன்று பொங்கலிட்டு படையல் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேப்போல், உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'கோரக்நாத் மந்திர்" என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
வரங்கள் அருளும் 'கோரக்கர்'
இவருடன் தொடர்புடைய பிற மடங்களாக பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
ஐப்பசி பவுர்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்த இவரை வடக்குபொய்கை நல்லூரில் சென்று வழிபடுபவர்களுக்கு வரங்கள் பல அருள்வதாக இன்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
- அம்மையாரை நோக்கி தம் பசிதீர உணவிடுமாறு வேண்டி நின்றார்.
- தம் கணவருக்காக எடுத்து வந்த உணவை சிவனடியாருக்கு படைத்தார்.
வடக்கு பொய்கைநல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.
இவ்வணிகரின் துணைவியார் தினமும் உணவு சமைத்து பாத்திரத்தில் வைத்து எடுத்து சென்று கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார். உடல்தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசிதீர உணவிடுமாறு வேண்டி நின்றார். மனம் இறங்கிய அம்மையார், சிறிதும் தாமதிக்காமல் கொண்டு வந்த இலையை அந்த இடத்திலேயே விரித்து தம் கணவருக்காக எடுத்து வந்த உணவை சிவனடியாருக்கு படைத்தார்.
பசித்துயர் தீர்ந்த அடியார் அந்த அம்மையாருக்கு ஆசிகள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். அம்மையாரும் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டு வருவதற்காக தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள். சிவனடியார் அம்மையாரை தடுத்து இந்த பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக்கொண்டு உன் கணவரின் இருப்பிடம் சென்று அவனுக்கு உணவு படை என்று கூறி அங்கிருந்து அகன்றார்.
அம்மையாரும் அடியவர் சொன்னது போல் கணவரின் இருப்பிடம் சென்று, அவரின் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! பாத்திரங்களில் உணவு குறையாமல் எடுத்து வைத்தது போல் அப்படியே இருந்தது! அம்மையாரோ நடந்தது எதையும் சிறிதும் வெளிக்காட்டாமல் கணவருக்கு உணவு படைத்தார். அதனை உண்ட கணவர் உணவு என்றும் இல்லாத அளவுக்கு சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மையை கூறுமாறு கேட்டார். அம்மையாரோ நடந்ததை நடந்தபடியே கணவருக்கு எடுத்துரைத்தார். இதனை கேட்டு வியந்து போன மஞ்சுபத்து செட்டியார் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.
அங்கே சிவனடியாரை காணவில்லை. மணல் வெளியில் 2 திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த அவரின் துணைவியாரின் 2 அடிச்சுவடுகளும் காணப்பட்டன. இந்த திருவிளையாடலை நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரியவந்தது.
சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானை காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அந்த காட்சி கிட்டவில்லையே என வேதனை அடைந்தார். இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுல பெண்ணிடம் அமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி மாதம் பரணி நாளாகும். எனவே, இந்த நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாளாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.
திண்டுக்கல்:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள்.
- ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய்.
ஞானி ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமத்திலேயே பெரும் பணக்கார மனிதர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கஞ்சத்தனம் மிக்கவர். அவர் அந்த ஞானியிடம் வந்து,`நான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள் ஐயா' என்று கேட்டார்.`நீ, தினமும் ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய். கருணையே மிகச்சிறந்த இறை வழிபாடு' என்று பதில் சொன்னார் ஞானி.
பணக்காரர் ஞானியின் அறிவுரையைக் குறைந்தபட்சமாவது பின்பற்றலாம் என்று முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு யாசகனுக்கு ஒரு கைப்பிடி அரிசியை தானமாகக் கொடுத்தார். அதை பெருமையோடு அடுத்த நாள் ஞானியிடம் வந்து சொன்னார்.
அதைக்கேட்டதும் ஞானி, அருகில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடிப்பாகத்தை விரல் நகத்தால் கீற ஆரம்பித்தார். பணக்காரர் குழம்பிப் போய், அவரது செயலுக்கு காரணம் கேட்டார். `நான் நகத்தால் கீறி இந்த மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார் ஞானி.
பணக்காரருக்குச் சிரிப்பு வந்தது. `இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்ட முடியுமா?" என்று கேட்டார். `ஒரு பிடி அரிசியை யாசகனுக்கு கொடுத்து நீ வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்போது, இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்டுவது பெரிய விஷயம் அல்ல" என்றார் ஞானி. பணக்காரருக்குத் தன் தவறு புரிந்தது.
- தந்தையின் மரணத்தால் பாதிக்கப்பட்டார்.
- காற்றுபோல் சுதந்திரமாக சுவாமிகள் இருந்தார்.
சேஷாத்திரி சுவாமிகள் நான்கு வயதிலேயே துதிகள், கீர்த்தனைகள் முதலியனவற்றை தாயின் மூலம் கற்றுணர்ந்தார். பின்னர் வடமொழியில் தேர்ச்சி பெற்றார். நன்னூல், நைடதம், நாலடியார் என பழம்பெரும் நூல்களை ஆராய்ந்து அறிந்து சிறுவயதிலேயே அசாதாரண குழந்தையாக விளங்கினார்.
ஏழாவது வயதில் உபநயனம் நடைபெற்றதும் தந்தையின் மரணத்தால் பாதிக்கப்பட்டார். தந்தை அடிக்கடி கூறிவந்த 'அனுபவ ஞானமே பெரிது' என்ற சொல், அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தவத்தாலும் இறை வழிபாட்டாலும் பொழுதைப் பொருள் உள்ளதாக மாற்றிய அவரது வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் நேர்ந்தது. அவரது தாய் மரண காலத்தில் சுவாமிகள் மார்பில் மும்முறை அடித்து, 'காசியந்தே மரணான் முக்தி ஸ்மரணாதருணாசலே' என்றும், 'அருணாசல, அருணாசல' என்றும் கூறியபடி தலையைச் சாய்த்தார். தாயிட்ட பேரை ஊரிட்டு அழைக்கும் என்பதுபோல் தாயிட்ட `அருணாசல நெருப்பு' அகண்டாகாரமாகப் பற்றி எரிந்தது. வீட்டில் கட்டுப்பாடு அதிகரிக்கவே, அவர் கோவிலிலும், மயான பூமியிலும் ஜபம் செய்ய ஆரம்பித்தார்.
பித்தனைப் போல் திரிந்து, நிரந்தர இடம் என்று ஒரு குறிப்பிட்ட இருக்கையின்றி காற்றுபோல் சுதந்திரமாக சுவாமிகள் இருந்தார். அன்ன ஆகாரம் தேவையின்றி தவக்கோலம் பூண்டு திருவண்ணாமலையில் உலவினார். ரமண மகரிஷிகளின் தவத்தின் தன்மையை உணர்ந்து 'பாலயோகி' என்று சுட்டிக்காட்டி, உலகுக்கு ரமண மகரிஷியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
அற்புதங்கள்
சிறுவயதில் பொம்மை விற்பவரிடமிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை எடுத்தார் சேசாத்திரி சாமிகள். அதன்பிறகு அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்தன. இதுபோன்ற வியாபார இடங்களுக்கு சேசாத்திரி சாமிகள் சென்றால் அந்நாளில் அக்கடையில் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதனால் சேசாத்திரி சாமிகளை "தங்க கை சேசாத்திரி சாமி" என்று அழைத்தனர்.
ஒருநாள் இரவு நேரத்தில் உணவு விடுதியில் நுழைந்து மைதா மாவு மூட்டையினை அடுக்கி வைத்த இடத்திலிருந்து எடுத்து, தண்ணீர் பீப்பாயில் கொட்டிவிட்டார். சாமிகளின் செயலைக் கண்டு பதறிய உணவு விடுதி ஆட்கள் அவரைத் துரத்திவிட்டனர். இரவு நேரத்தில் அவர் மூட்டையளவு மாவை வீண் செய்ததாக வருத்தப்பட்டனர். ஆனால் சற்று நேரத்தில் ஒரு வாகனம் நிறைய ஆட்கள் வந்து அருகில் சர்க்கஸ் அமைக்க வந்திருப்பதாகவும், உணவு வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அவர் கொட்டிய மாவு அனைத்துமே உணவானது. இச்செய்தி அனைத்து உணவு விடுதிக்காரர்களுக்கும் சென்று அனைவரும் சுவாமிகளின் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.
பாலாஜி சுவாமிகளை குருவாக ஏற்று மந்திர உபதேசமும், சன்னியாசமும் பெற்றார்.
- கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
- கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது.
- 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது, திருநறையூர் நம்பி கோவில். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தல வரலாறு
அனைத்தையும் துறந்து இறைவன்பால் நாட்டம் கொள்ள வேண்டியவர்கள், முனிவர்கள். ஆனால் மேதாவி மகரிஷி என்பவர், மகாவிஷ்ணுவே தனக்கு மருமகனாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆகாமல், பெண் பிள்ளை இல்லாமல் எப்படி இந்த வேண்டுதல் நிறைவேறும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாது அனுதினமும், தான் வழிபடும் திருநறையூர் வைணவ ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்யலானார்.
முனிவரின் ஆசையை நிறைவேற்ற விருப்பம்கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியைப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்த மகாலட்சுமி, மேதாவி முனிவர் தவம்செய்த வகுள(மகிழ) மரத்தடியில், ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். யாருமற்ற அந்தக் குழந்தையை தன் மகளாக நினைத்து வளர்த்தார் முனிவர். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் சூட்டப்பட்ட அந்த பெண் பிள்ளை, முனிவரது குடிலில் அவரோடு இணைந்து திருமாலை வணங்கி வந்தது.
தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேவியை மணம்புரிய விரும்பி, தேவி இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். அதன் படியே மகாலட்சுமி தேவியை தேடி புறப்பட்டார், கருடன். பல ஊர்களைச்சுற்றி காணக்கிடைக்காத நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் தலத்திற்கு வந்துசேர்ந்தார்.
திருநரையூரை சுற்றி வட்டமடித்த கருடாழ்வார் சோர்ந்து போய், முனிவர் வசித்த குடிலின் மீது அமர்ந்தார். அப்போது குடிலை விட்டு வெளியே வந்த மேதாவி முனிவரின் மகள்தான், தான் தேடி வந்த மகாலட்சுமி என்பதை கருடன் அறிந்து கொண்டார். பின்னர் நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தை கூறினார்.
முனிவரிடமும், தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய மகாவிஷ்ணு, மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கே தனியாக இருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு கேட்டார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார்.
அந்த சமயம் அங்கே வந்த முனிவர் இந்த காட்சியைப் பார்த்து வெகுண்டெழுந்தார். அப்போது பெருமாள் தன்னுடைய இரு தோள்களிலும் சங்கு, சக்கர அடையாளத்தைக் காட்டி தான் யாரென்று முனிவருக்கு உணர்த்தினார்.
வந்திருப்பது தான் தினமும் வழிபடும் பரந்தாமன் என்பதையும், இதுவரை தன்னிடம் வளர்ந்தவர் மகாலட்சுமி என்பதையும், தனக்கு அருள் செய்யவே இறைவன் இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்பதையும், மேதாவி முனிவர் புரிந்து கொண்டார்.
மகாவிஷ்ணுவை வணங்கினார். அப்போது மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மணம் முடித்து தருமாறு கேட்க, அதற்கு ஒரு தந்தையாகவும், பக்தனாகவும் சில நிபந்தனைகளை இறைவன் முன் வைத்தார், மேதாவி முனிவர்.
`வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்கவேண்டும். தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்கவேண்டும்' என்று மேதாவி முனிவர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் பெருமாள் ஏற்றுக்கொண்டார்.
அடுத்து தனிஒருவராய் வந்து பெண் கேட்பதை ஊரார் ஏற்கமாட்டார்கள், பந்துமித்திரர்களுடன் வரவேண்டும் என்ற நடைமுறையை லேசான தயக்கத்துடன் கூற, அதை புரிந்துக்கொண்ட பெருமாள் தன் முன்னோர்களான ப்ரித்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தானே எடுத்து வந்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். பின்னர் பிரம்மனை அழைத்து திருமணம் செய்யப்பட்டது.
முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப் பெண்களை 'நாச்சியார்' என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதன் அடிப்படையில் இக்கோவில் 'நாச்சியார்கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
ஆலய வாசலிலும், கருவறைக்கு அருகிலும் நின்றுபார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகிறார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை, தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால் திருமணத்திற்கு வந்ததாகக் கூறப்படும்
ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சி அளிக்கின்றனர்.
மூலவர் சன்னிதியின் விமானம், ராஜகோபுரத்தை நினைவூட்டுகிறது. இதை `ஹேம விமானம்' என்கின்றனர். ஆழ்வார்களால் பெருமாளும், நாச்சியாரும் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி 'திருநரையூர் நம்பி-வஞ்சுளவல்லி' என்னும் திருநாமம் கொண்டும், உற்சவர் 'இடர்காத்தவரதன்' என்னும் திருநாமம் கொண்டும் அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவன் ஸ்ரீனிவாசன் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். கல் கருடன் இவர்களுக்கு முன்னால் தனிச் சன்னிதியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விஷேச திருமஞ்சனங்கள் நடக்கிறது.
பிரகார சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலதுசுற்றில் லட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர்.
பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள், மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க, அதன் நடுவே மேதாவி முனிவர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். கருடனால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இரண்டு நிஜக் கருடன்கள், உச்சிக்கால பூஜைநேரத்தில் வந்து நைவேத்திய பொருட்களை உண்டு வந்துள்ளன. அவைகளின் மறைவிற்குப் பின் பிரகாரத்தில் அதற்கென தனி சன்னிதி அமைத்துள்ளனர்.
இங்கு மோட்சதீபம் ஏற்றி வழிபடுவது நடைமுறையாக உள்ளது. கோவிலின் வடபுறத்தில் தலதீர்த்தமான மணிமுத்தா தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் ஆகும்.
இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றை கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்களும் மிகவும் பிரபலமானதாகும்.
இந்த சமயத்தில் நடைபெறும் வீதி உலாவின்போது தாயார் அம்ச வாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் பின்னே செல்கிறார். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
கவலை தீர்க்கும் கல் கருடன்
இவ்வாலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடதுபுறம் இருந்து அருள்பாலிக்கிறார், கல் கருடன். பெருமாளுக்கும், தாயாருக்கும் நடப்பதுபோலவே தினசரி ஆறுகால பூஜை இந்த கல் கருடனுக்கும் நடைபெறுகிறது. பெரும்பாலான வைணவ தலங்களில் கருட பகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதைச் சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.
கல் சிற்பமாக இருந்தால் சிறிய அளவில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்தக் கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையே உற்சவ காலத்தில் வீதிஉலா கொண்டு வரப்படுவதும் எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.
கர்ப்ப கிரகத்தில் இருந்து நான்கு பேர், பின்னர் எட்டு பேர், அடுத்து பதினாறு பேர், முப்பத்திரண்டு பேர், கடைசியாக அறுபத்து நான்கு பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி கல் கருடனை தேரடி வரை சுமந்துவந்து, அவர்மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்து செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல் கருடனின் மேனி வியர்ப்பது, புராணகாலத்தில் இருந்து இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் செய்தியாகும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் உள்ளது.






