search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nachiyar temple"

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது.
    • 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது, திருநறையூர் நம்பி கோவில். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தல வரலாறு

    அனைத்தையும் துறந்து இறைவன்பால் நாட்டம் கொள்ள வேண்டியவர்கள், முனிவர்கள். ஆனால் மேதாவி மகரிஷி என்பவர், மகாவிஷ்ணுவே தனக்கு மருமகனாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆகாமல், பெண் பிள்ளை இல்லாமல் எப்படி இந்த வேண்டுதல் நிறைவேறும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாது அனுதினமும், தான் வழிபடும் திருநறையூர் வைணவ ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்யலானார்.

    முனிவரின் ஆசையை நிறைவேற்ற விருப்பம்கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியைப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்த மகாலட்சுமி, மேதாவி முனிவர் தவம்செய்த வகுள(மகிழ) மரத்தடியில், ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். யாருமற்ற அந்தக் குழந்தையை தன் மகளாக நினைத்து வளர்த்தார் முனிவர். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் சூட்டப்பட்ட அந்த பெண் பிள்ளை, முனிவரது குடிலில் அவரோடு இணைந்து திருமாலை வணங்கி வந்தது.

    தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேவியை மணம்புரிய விரும்பி, தேவி இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். அதன் படியே மகாலட்சுமி தேவியை தேடி புறப்பட்டார், கருடன். பல ஊர்களைச்சுற்றி காணக்கிடைக்காத நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் தலத்திற்கு வந்துசேர்ந்தார்.

    திருநரையூரை சுற்றி வட்டமடித்த கருடாழ்வார் சோர்ந்து போய், முனிவர் வசித்த குடிலின் மீது அமர்ந்தார். அப்போது குடிலை விட்டு வெளியே வந்த மேதாவி முனிவரின் மகள்தான், தான் தேடி வந்த மகாலட்சுமி என்பதை கருடன் அறிந்து கொண்டார். பின்னர் நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தை கூறினார்.

    முனிவரிடமும், தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய மகாவிஷ்ணு, மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கே தனியாக இருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு கேட்டார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார்.

    அந்த சமயம் அங்கே வந்த முனிவர் இந்த காட்சியைப் பார்த்து வெகுண்டெழுந்தார். அப்போது பெருமாள் தன்னுடைய இரு தோள்களிலும் சங்கு, சக்கர அடையாளத்தைக் காட்டி தான் யாரென்று முனிவருக்கு உணர்த்தினார்.

    வந்திருப்பது தான் தினமும் வழிபடும் பரந்தாமன் என்பதையும், இதுவரை தன்னிடம் வளர்ந்தவர் மகாலட்சுமி என்பதையும், தனக்கு அருள் செய்யவே இறைவன் இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்பதையும், மேதாவி முனிவர் புரிந்து கொண்டார்.

    மகாவிஷ்ணுவை வணங்கினார். அப்போது மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மணம் முடித்து தருமாறு கேட்க, அதற்கு ஒரு தந்தையாகவும், பக்தனாகவும் சில நிபந்தனைகளை இறைவன் முன் வைத்தார், மேதாவி முனிவர்.

    `வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்கவேண்டும். தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்கவேண்டும்' என்று மேதாவி முனிவர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அடுத்து தனிஒருவராய் வந்து பெண் கேட்பதை ஊரார் ஏற்கமாட்டார்கள், பந்துமித்திரர்களுடன் வரவேண்டும் என்ற நடைமுறையை லேசான தயக்கத்துடன் கூற, அதை புரிந்துக்கொண்ட பெருமாள் தன் முன்னோர்களான ப்ரித்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தானே எடுத்து வந்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். பின்னர் பிரம்மனை அழைத்து திருமணம் செய்யப்பட்டது.

    முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப் பெண்களை 'நாச்சியார்' என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதன் அடிப்படையில் இக்கோவில் 'நாச்சியார்கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    ஆலய வாசலிலும், கருவறைக்கு அருகிலும் நின்றுபார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகிறார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை, தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால் திருமணத்திற்கு வந்ததாகக் கூறப்படும்

    ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சி அளிக்கின்றனர்.

    மூலவர் சன்னிதியின் விமானம், ராஜகோபுரத்தை நினைவூட்டுகிறது. இதை `ஹேம விமானம்' என்கின்றனர். ஆழ்வார்களால் பெருமாளும், நாச்சியாரும் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி 'திருநரையூர் நம்பி-வஞ்சுளவல்லி' என்னும் திருநாமம் கொண்டும், உற்சவர் 'இடர்காத்தவரதன்' என்னும் திருநாமம் கொண்டும் அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவன் ஸ்ரீனிவாசன் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். கல் கருடன் இவர்களுக்கு முன்னால் தனிச் சன்னிதியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விஷேச திருமஞ்சனங்கள் நடக்கிறது.

    பிரகார சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலதுசுற்றில் லட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர்.

    பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள், மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க, அதன் நடுவே மேதாவி முனிவர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். கருடனால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இரண்டு நிஜக் கருடன்கள், உச்சிக்கால பூஜைநேரத்தில் வந்து நைவேத்திய பொருட்களை உண்டு வந்துள்ளன. அவைகளின் மறைவிற்குப் பின் பிரகாரத்தில் அதற்கென தனி சன்னிதி அமைத்துள்ளனர்.

    இங்கு மோட்சதீபம் ஏற்றி வழிபடுவது நடைமுறையாக உள்ளது. கோவிலின் வடபுறத்தில் தலதீர்த்தமான மணிமுத்தா தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் ஆகும்.

    இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றை கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்களும் மிகவும் பிரபலமானதாகும்.

    இந்த சமயத்தில் நடைபெறும் வீதி உலாவின்போது தாயார் அம்ச வாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் பின்னே செல்கிறார். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    கவலை தீர்க்கும் கல் கருடன்

    இவ்வாலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடதுபுறம் இருந்து அருள்பாலிக்கிறார், கல் கருடன். பெருமாளுக்கும், தாயாருக்கும் நடப்பதுபோலவே தினசரி ஆறுகால பூஜை இந்த கல் கருடனுக்கும் நடைபெறுகிறது. பெரும்பாலான வைணவ தலங்களில் கருட பகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதைச் சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.

    கல் சிற்பமாக இருந்தால் சிறிய அளவில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்தக் கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையே உற்சவ காலத்தில் வீதிஉலா கொண்டு வரப்படுவதும் எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

    கர்ப்ப கிரகத்தில் இருந்து நான்கு பேர், பின்னர் எட்டு பேர், அடுத்து பதினாறு பேர், முப்பத்திரண்டு பேர், கடைசியாக அறுபத்து நான்கு பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி கல் கருடனை தேரடி வரை சுமந்துவந்து, அவர்மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்து செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல் கருடனின் மேனி வியர்ப்பது, புராணகாலத்தில் இருந்து இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் செய்தியாகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் உள்ளது.

    நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை மிகவும் சிறப்பானது.
    கும்பகோணத்திற்கு அருகில் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இப்படி கருடாழ்வாருக்கு தனி சன்னதி நாச்சியார் கோவிலில் மட்டுமே உள்ளது.

    இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்கு தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராக பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக காட்சி கொடுக்கிறார். மற்ற கருடனுக்கு இல்லாத ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

    இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழக்கிழமை தோறும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது. பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இனிப்பு நைவேத்யம் அது.

    இங்கு கருடசேவை மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில் கல் கருடனுக்கு சிறப்பாக விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவக்காலத்தில் நான்காம் நாளன்று கல்கருடன் வீதி உலாவருகிறார்.

    பங்குனி மாதத்தில் நடை பெறும் பெருவிழாவில் சன்னதியிலிருந்து கருடனை நாலுபேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ் வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சன்னதியை அடைவார்கள்.

    விழாக் காலங்களில கல்கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு போன்ற வாசனை திரவியங்களை அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு வெகுகாலம் இருந்த இரண்டு கருடப் பறவைகள் ஒரே நேரத்தில் உயிர்துறந்து முக்தி அடைந்தன. இவற்றுக்கு அதிஷ்டானம் ஒன்று அமைத்து வழிபடுகின்றனர்.
    பூதங்குடியில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த 28-ந்தேதி அனுக்ஞை, வாஸ்து யாகம், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து 29-ந்தேதி காலை முதல் கால யாகசாலை பூஜையும், மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடைபெற்றது.

    நேற்று காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதையடுத்து கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 9.30 மணிக்கு அங்கிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து பரிவார தெய்வமான சுதர்சனர், யோக நரசிம்மர், அய்யப்பன், ராமபாதம், நவகிரகங்கள் மற்றும் நாக கண்ணி, தும்பிகை ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை ஆச்சாரியார் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நடத்தினர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மறைந்த பி.டி. ஜெயராமன் குடும்பத்தை சேர்ந்த டாக்டர் மோகன், என்ஜினீயர் மனோகரன், கலையரசன் ஆகியோர் தலைமையில் ராசகண்ணு, ஆத்மநாபான், சுந்தரவதனம், பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் கோவில் சிற்ப வடிவமைப்பு மற்றும் சிற்பகலை ஏற்பாடுகளை அரங்கப்பன் செய்திருந்தார்.

    விழாவில் அருண்மொழி தேவன் எம்.பி., பாண்டியன் எம்.எல்.ஏ., ஜோதி பிரகாஷ், விநாயகம், ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு வியாபாரி சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன், மகாலிங்கம், ஆனந்தபாபு, குஞ்சிதபாதம், கலைவாணன், மணிகண்டன், நன்மாறன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர், பி.டி. ஜெயராமன் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆர்.கே. செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துட விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணா குதி நடந்தது. பின்னர் மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.

    நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    1-7-2018 ஆலய கும்பாபிஷேகம்

    இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

    மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.

    முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.

    அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.

    இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.

    தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.

    இத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.

    வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள்.

    அதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.



    கோவில் அமைப்பு

    வீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், தேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.

    ஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.

    தாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.

    வெளி மண்டபத்தின் சிறப்பு

    ஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது.

    அமைவிடம்

    விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. 
    ×