என் மலர்
வழிபாடு
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி-10 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி காலை 6.09 மணி வரை. பிறகு சதுர்த்தசி நாளை விடியற்காலை 4 மணி வரை பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 9.22 வரை பிறகு ரேவதி.
யோகம்: சித்த, அமிர்த யோகம்
ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம் மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-பக்தி
சிம்மம்-இனிமை
கன்னி-பிரமை
துலாம்-ஓய்வு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு-பரிவு
மகரம்-லாபம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-புகழ்
- எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது.
- உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.
வட இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற நூல் லால்கிதாப். இந்திய ஜோதிட கைரேகை சாஸ்திரத்தை பற்றிய பண்டைய நூலான இதில் 12 ராசிகளுக்கும் சில எளிய மற்றும் சிறந்த பலன்களை தரக்கூடிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இதை பின்பற்றி வருகின்றனர்.
மேஷ ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்
* எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது. ஒரு சிறு தொகை கொடுத்தாவது அதை வாங்க வேண்டும்.
* சிகப்பு நிற கைக்குட்டையை பயன்படுத்துவது மிகவும் அதிர்ஷ்டவசமாகும்.
* பின்னம் ஏதும் இல்லாத, டிசைன் இல்லாத வெள்ளிக்காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்துகொண்டால் வாழ்வில் நன்மை ஏற்படும். பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
* சுவீட் அல்லது மிட்டாய் செய்பவராகவோ, சுவீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்பவராகவோ இருக்க கூடாது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை கெடுக்கும்.
* உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.
* தாய் மற்றும் குரு போன்ற ஆன்மிக பெரியவர்களுக்கும், ஞானிகளுக்கு முடிந்த அளவு உதவி, சேவை செய்தல் வேண்டும்.
* உறங்கும் போது தலை பக்கத்தில் ஒரு செம்பு நிறைய நீர் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு உற்றி வரவும்.
இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தையும் நீங்கள் செய்து வந்தால் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபிட்சம் நிறைந்துவிடும், துன்பங்கள் குறையும்.
- குளிகை நேரத்தில் உண்டியலில் காசு போட்டு வந்தால் பணம் சேரும்.
- 1 ரூபாயை போட்டு முதன் முதலாக தொடங்க வேண்டும்.
ஜோதிடம், நல்ல நேரம் இதில் எல்லாம் நம்பிக்கைகொண்டவரா நீங்கள்? அப்படி என்றால் `குளிகை', `குளிகன்' இந்த பெயர்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி... அது என்ன குளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்? `குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன்' என்கிறது புராணம். குளிகனுக்கு, மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜேஷ்டாதேவி `தவ்வை' என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும். அதேபோல, குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனை திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றை செய்வதால், அவை எந்த தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.
குளிகை நேரத்தில் உண்டியலில் காசு போட்டு வந்தால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. எனவே ஒரு உண்டியல் வாங்கி ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம் குளிகை காலம் என்று வரும். இந்த ஒன்றரை மணிநேரத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை (உங்களால் முடிந்த) உண்டியலில் தொடர்ந்து போட்டு வரலாம்.
புதிதாக ஒரு உண்டியல் வாங்கி அதில் முதலில் பச்சைகற்பூரம் போட்டு அதன்பிறகு 1 ரூபாயை போட்டு முதன் முதலாக தொடங்க வேண்டும். தினமும் அந்த உண்டியலில் குளிகை காலத்தில் பணம் போட்டு வர வேண்டும்.
உண்டியல் நிரம்பிவிட்டால் அந்த பணத்தை எடுத்து பசு மாட்டிற்கு பழம் வாங்கி கொடுக்க வேண்டும். மீண்டும் அதே உண்டியலில் பணம் சேர்க்கலாம். அல்லது புது உண்டியல் வாங்கி மேலே சொன்ன முறைப்படி தொடர்ந்து சேமிக்க தொடங்கலாம். நிச்சயமாக பணம் அதிகமாக சேரும். செய்து பார்த்து பயன் அடையுங்கள்.
குளிகைநேரம் (பகல்-இரவு)
ஞாயிறு- 3.00 - 04.30; 9.00 - 10.30
திங்கள்- 1.30 - 3.00; 7.30 - 9.00
செவ்வாய்- 12.00 - 1.30; 12.00 - 1.30
புதன் 10.30- 12.00; 3.00 - 4.30
வியாழன்- 9.00 - 10.30; 1.30 - 3.00
வெள்ளி- 7.30 - 9.00; 12.00 - 1.30
சனி- 6.00 - 7.30; 10.30 - 12.00
- பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம்.
- சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம்.
பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்று சுருட்டப்பள்ளி. சிவபெருமானை நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ லிங்க வடிவிலோ தான் தரிசித்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் உருவானதே பிரதோஷத்தையொட்டி தான்.

பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது. அதனை அடுத்து அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிமரம் பலிபீடம் பிரதோச நந்தி என சிவாலயத்திற்கே உரிய எழிலுடன் விரிகிறது.

தல அமைப்பு:
பள்ளி கொண்டீசனால் பிரபலமான கோவில் என்றாலும் மூலவர் வால்மீகேஸ்வரர் தான். இத்தலத்தில் தவமிருந்த வால்மீகி முனிவருக்கு ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி கொடுத்து அருளியதால் இத்திருநாமம் ஏற்பட்டது. வால்மீகேஸ்வரர் சன்னிதி பின்புறம் உட்பிரகாரத்தில் வால்மீகி சன்னிதியும் உள்ளது. இன்னுமொரு விசேஷம் மூலவர் எதிரே நந்திக்கும் முன்னால் ராமலிங்கேஸ்வரர் லிங்கம் அமைந்துள்ளது. அருகில் பர்வதவர்த்தினி அம்பாள் உள்ளார். பக்கத்தில் ராமர் சன்னதி உள்ளது. சீதாபிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், பரதன், சத்ருக்கன் உடன் உள்ளனர்.
தல வரலாறு:
துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் ராஜ்ஜியத்தை பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்துள்ளார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.
வாசுகி பாம்பை வைத்து பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர்.
சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர சொல்லி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்துள்ளார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எங்களை காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.
உடனே சிவன் மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்திக் கொண்டு சிவபெருமானின் வாயில் இருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் கண்டத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார்.
விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்ட பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது.
லிங்கம் வடிவத்தில் மட்டுமே காட்சி அளிக்கும் சிவபெருமான் சுருட்டப்பள்ளியில் ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்த வாரு பார்க்கலாம்.
இந்த தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், பள்ளி கொண்டீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். மேலும் ஒவ்வொரு மாதம் நடைபெறும் பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.
இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில், ஆலகால விஷம் உண்ட பின்னர், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.
இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.
- கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி 23 யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மாலை 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை (27-ந் தேதி) அதிகாலை 4.30 முதல் 7.30 மணி வரை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.
8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.
நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவினை காண்பதற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கும்பாபிஷேகத்தை எளிதாக காணும் வகையில் விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய டிஜிட்டல் திரையின் மூலம் காண கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு ஆதினங்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று நாளை (27-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
- 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
- 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 28-ம் தேதி திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படுகிறது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
எனவே, 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும்.
29-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.
இதன் காரணமாக 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 9 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி காலை 8.17 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 10.48 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம் திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அபிஷேகத்துடன் உற்சவம் முடிவு. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி நூபுரகங்கையில் எண்ணைக்காப்பு உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான் தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-போட்டி
கடகம்-தனம்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-வரவு
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-உவகை
தனுசு- இன்பம்
மகரம்-முயற்சி
கும்பம்-தெளிவு
மீனம்-நிறைவு
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 8 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி காலை 10.37 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : சதயம் மதியம் 12.24 மணி வரை பிறகு பூராட்டாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகு காலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி, சுப முகூர்த்த நாள். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - கவனம்
ரிஷபம் - புகழ்
மிதுனம் - ஜெயம்
கடகம் - அசதி
சிம்மம் - தனம்
கன்னி - மாற்றம்
துலாம் - அமைதி
விருச்சிகம் - செலவு
தனுசு - போட்டி
மகரம் - பெருமை
கும்பம் - பொறுப்பு
மீனம் - சுகம்
- ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.
அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.
இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அந்த நெல்லில் தமிழில் "அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.
கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.
தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.
கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.
அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.
நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.
குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.
அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.
- மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
- மைசூரு அரண்மனையில் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கர்நாடகா:
கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா 413 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 414-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதனால் மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது. இதற்கிடையே மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜைகளை அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கி அதைத்தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ராஜ உடையில் வீரநடைபோட்டு மன்னர் யதுவீர் தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

மைசூருவில் குவிந்த பொதுமக்கள்
இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும்.
பின் விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






