search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்
    X

    பழனி கோவிலில் "கந்த சஷ்டி விழா" வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×