என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு.
    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால், உக்ர சீனிவாசமூர்த்தியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மகாவிஷ்ணு ஆசாட மாதம் சுக்கல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச் செல்வார். அப்போது சயன கோலத்துக்குச் சென்றவர், கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது.

    உக்ர சீனிவாசமூர்த்திக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் இவருக்கு பெயருண்டு. 14ம் நுாற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர் இவரே. சூரிய ஒளி மேனியில் பட்டால் உக்ரம் அடைவார் என்பதால், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசியன்று அதிகாலையில் மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த ஒரு குறிப்பிட்ட நாளில் (கைசிக துவாதசி) மட்டுமே, உக்ர சீனிவாசமூர்த்தி (உற்சவர்) கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார்.

    சூரியக் கதிர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை தொடக்கூடாது என்பதால், இந்த விழா பாரம்பரியம் மாறாமல், அதிகாலையில் தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாக முடிவடைகிறது.

    • கவசம் திறக்கப்பட்டதும் 3 நாட்கள் தைல அபிஷேகம் நடைபெறும்.
    • வருகிற 28-ந்தேதி இரவு கவசம் மூடப்படும் திருநிகழ்ச்சி நடைபெறும்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம் நடைபெறுவது வழக்கம். இதற்காக ஆதிபுரீசுவரர் சுவாமியின் கவச திறப்பு விழா நடைபெறும்.

    இந்நிலையில் சுயம்பு லிங்க தரிசனத்துக்காக வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆதிபுரீசுவரர் சுவாமியின் கவச திறப்பு விழா நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

    கவசம் திறக்கப்பட்டதும் 3 நாட்கள் தைல அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு வருகிற 28-ந்தேதி இரவு கவசம் மூடப்படும் திருநிகழ்ச்சி நடைபெறும்.

    ஆண்டிற்கு ஒரு முறையே நடைபெறும் இந்த பூஜை சிவபெருமானின் விஷேச பூஜைகளில் மிகவும் முக்கியமானதாகும்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் அம்மையப்பர் நேரடியாக காட்சி கொடுத்து திருமணம் செய்து வைத்த ஸ்தலம் என்பதாலும், வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியாக காட்சிதர அருள் புரிந்த ஸ்தலம் என்பதாலும், 100 -க்கணக்கான சித்தர்களின் ஜீவ சமாதிக்கான முக்கிய ஸ்தலம் என்பதாலும் இந்த 3 நாட்களும் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அபிஷேகத்தை கண்டு களிக்க உள்ளனர். மேலும் இந்த 3 நாட்களும் ஆதிபுரீசுவரர் அடியார்கள் டிரஸ்ட் சார்பில் அதிகாலை முதல் இரவு வரை அன்ன தானமும் வழங்கப்படுகிறது.

    • ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்வதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இங்கு ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு 10.30 டிரஸ்டிகள் இல்லத்தில் இருந்து சந்தனங்கள் நிரப்பிய குடங்கள் தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் தொடங்கி நடைபெற்றது. பின்னர், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று, 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர்

    எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தனக்குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது.

    சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று, பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு வந்தடைந்து, மீண்டும் தர்காவை 3 முறை சுற்றியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது தூவி பிராத்தனை செய்தனர்.

    பின்னர் அதி காலை 5 மணிக்கு சந்தன கூட்டில் இருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு, ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவிட்டார்.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர்ராஜேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து, இன்று மாலை உள்ளூர் மக்களுக்காக அந்திக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா முடிவடைகிறது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் நடந்த இந்த கந்தூரி விழாவால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
    • வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும்.

    கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

    திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும்.

    இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

    இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் 5 விளக்குகளைக்கொண்டு ஏற்றப்படுகிறது.

    அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

    நமது வீட்டு பூஜையறை யில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருவண்ணாமலையில் நேற்று பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் மகாதீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
    • பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.

    பக்தர்கள் கிரிவலம் வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். ஒன்று கார்த்திகை தீபத் திருநாளன்று, மற்றொன்று தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று.

    அண்ணாமலையார் திருக்கோவிலில் வீற்றிருக்கும் செந்தூரப் பிள்ளையார், கம்பத்து இளையனார் (முருகன்), கருவறையில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையை வணங்கி, கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தின் முன் நிற்க வேண்டும். அங்கிருந்து கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலம் செல்வதற்கு முன்தினம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தமான ஆடை அணிந்து, விபூதி பூசி, தானம் கொடுத்து, மலையைச் சுற்ற வேண்டும். காலணி அணிதல் கூடாது. பயம், கோபம், சோகம், குடும்பப் பிரச்னைகளை கோவிலின் முன் உள்ள பலிபீடத்தில் விட்டுவிட வேண்டும். வாகனங்களில் செல்லுதல், உரக்க சத்தம் போட்டு பேசுதல், கையை வேகமாக வீசி நடத்தல் கூடாது. ஒரு பத்துமாத கர்ப்பிணி பெண் எண்ணெய் குடத்தை தலையில் சுமந்துகொண்டு செல்வதைப் போல கிரிவலம் வரவேண்டும். சிவநாமம், பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.

    • விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
    • யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.

    அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.

    அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.

    `அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.

    `நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.

    • திருமலையில், வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை.
    • வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருமலை:

    உலக மக்கள் நன்மைக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட்டது.

    முன்னதாக கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உற்சவர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர்கள் விஷ்ணு சாளக்கிராம பூஜை, பிரார்த்தனை சூக்தம், அஷ்டதிக் பாலக பிரார்த்தனை, நவக்கிரக பிரார்த்தனைகளுடன் பூஜையை தொடங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத அர்ச்சகர்கள் பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கும், சாளக்கிராமங்களுக்கும் ஆரத்தி காண்பித்தனர். இதையடுத்து பிரசாதம் வழங்கி வேத மந்திரம் மற்றும் மங்களத்துடன் பூஜை முடிந்தது.

    சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் உண்மையான அவதாரம். சாளக்கிராம பூஜையால் அனைத்து மக்களையும் காத்து, அவர்களின் துன்பங்கள் நீங்கும். சாளக்கிராமங்களில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால், சகல பாவங்களும் நீங்கும், சகல நோய்களும் விலகும் என்பது ஐதீகம் என்று பண்டிதர் ராமகிருஷ்ண சேஷசாயி கூறினார்.

    சாளக்கிராம பூஜையில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் தர்மகிரி வேத பள்ளியின் வேத பண்டிதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உலக மக்கள் நன்மைக்காக சீனிவாச திவ்ய அனுகிரக ஹோமம்.
    • பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் கலந்து கொள்ளலாம்.

    திருமலை:

    உலக மக்கள் நன்மைக்காக சீனிவாச திவ்ய அனுகிரக ஹோமம் வெங்கடாசலபதியின் பாத அடியான அலிபிரியில் தொடங்கியது.

    வெங்கடேஸ்வர சங்கல்பத்துடன் அக்னி பகவானின் ஆசிர்வாதத்தை அழைக்கும் இந்து தர்ம நூல்களில் இந்த சடங்குக்கு முக்கிய இடம் உண்டு. இது ஒரு நாள் நிகழ்வல்ல, வெங்கடாசலபதி இருக்கும் வரை நீடிக்கும்.

    வழக்கமாக தனித் தனியாக ஹோமம் செய்வது பலருக்கு அதிக பொருள் செலவாகும். ஆனால், இந்த ஹோமத்தில் பங்கேற்று ஹோமம் செய்ய விரும்பும் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் கலந்து கொள்ளலாம்.

    இந்த தனித்துவமான ஹோமத்துக்கு நாங்கள் பரவலாக விளம்பரம் செய்வதற்கு முன்பே, ஆன்லைனில் டிக்கெட்டுகளை வெளியிடுகிறோம். அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

    400-500 பக்தர்கள் தங்குத் தடையின்றி வெவ்வேறு நேரத்தில் பங்கேற்கும் வகையில், காணிக்கை யாளர்களின் பங்களிப்புடன் நிரந்தர ஹோம வேதிகா விரைவில் கட்டப்படும்.

    இந்த ஹோமத்தில் ஒரே நேரத்தில் 100 தம்பதிகள் பங்கேற்கலாம். இதுபோன்ற ஹோம நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான தேதி அல்லது விசேஷ நாட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பக்தர்களுக்கு வெங்கடாசலபதியின் ஆசி கிடைக்கும்.

    முன்னதாக எஸ்.வி.வேத பல்கலைக்கழகத்தில் இருந்து ஹோம வேதிகா வரை வேத மாணவர்களின் வேத கோஷங்களுக்கு மத்தியில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாசர், கருடன் உருவங்களை காட்சிப்படுத்தும் பல்வேறு கலைஞர்களின் வண்ணமயமான ஊர்வலம் நடந்தது.

    ஹோம வேதிகாவில் பல வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது ஹோம வேதிகாவின் மகிமையையும் பிரமாண்டத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஹோம வேதிகாவில் பக்தர்கள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

    சிறப்பு மேடையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசர் உருவச்சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. எஸ்.வி.வேத பல்கலைக்கழக வேத பண்டிதர்களால் ஹோமம் மிகுந்த பக்தி பரவசத்துடன் நடத்தப்பட்டது.

    • சிவகாஞ்சி பகுதியில் ஆறு கலைநயமிக்க கோவில்கள் இருக்கின்றன.
    • மணல் கற்களால் கட்டப்பட்டது மதங்கீஸ்வரர் ஆலயம்.

    மகாகவி காளிதாசரால் `நகரேஷீ காஞ்சி' என்று போற்றப்பட்ட பெருமை கொண்ட நகரம், காஞ்சி மாநகரம். `நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்பது இதன் பொருள். காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கலைநயமிக்க கற்றளி வகைக்கோவில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியில் ஆறு கலைநயமிக்க கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மதங்கீஸ்வரர் திருக்கோவில்.

    பல்லவமன்னரான ராஜசிம்ம பல்லவன் (கி.பி.700 முதல் கி.பி. 728 வரை) தொடங்கப்பட்ட இந்தக் கோவிலின் கட்டிடப்பணி, இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731 முதல் கி.பி.796 வரை) காலத்தில் முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1400 வருடங்கள் பழமையான இக்கோவில் பல அற்புதமான சிற்பங்களைக் கொண்டு இன்று வரை காண்போரை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காஞ்சி புராணத்தில் இத்தலத்தின் சிவலிங்கமானது, மதங்கி முனிவரால் நிறுவப்பட்டு வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    மதங்கி முனிவர் இத்தலத்து ஈசனை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெற்றதாக ஐதீகம்.

    இவ்வாலயத்தின் சிறிய நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், முதலில் தென்படுகிறது, ஒரு சிறிய மேடையில் அமைந்த நந்தி சிற்பம். வலதுபுறத்தில் சற்று தொலைவில் ஆலயம் காட்சி தருகிறது. மணல் கற்களால் கட்டப்பட்ட மதங்கீஸ்வரர் ஆலயம், அளவில் மிகச்சிறியதாகக் காணப்படுகிறது. ஆனால் இத்தலத்திலுள்ள சிற்பங்கள், வியக்க வைக்கும் அளவிற்கு கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.

    மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் கருவறைக்குள் அமைந்துள்ள ஈசனை வழிபட, கோவிலின் முன் புறத்தில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு பக்க முனைகளிலும் சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள வீரனின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் பல்லவர்களுக்கே உரிய சிம்மத்தூண்கள் அழகுற காட்சி தருகின்றன. முகமண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தின் கருவறைக்குள் 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது. லிங்கத்தின் முன்னால் நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

    லிங்கத்தின் பின்புறச்சுவற்றில் சோமாஸ்கந்த வடிவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் கருவறை நுழைவாயிலின் இருபுறமும் இரு துவாரபாலர்கள் அமைந்துள்ளனர். முக மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கயிலாய மலையை அசைக்கும் ராவணனின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக காட்சி தருகிறது. மேலும் கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதர மூர்த்தி மற்றும் ஊர்த்துவதாண்டவ மூர்த்தி முதலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவபெருமான், லிங்கோத்பவர், நடனமாடும் சிவபெருமான், பிரம்மன், திருமால், துர்க்கை, சண்டேஸ்வர அனுக்கிரஹ மூர்த்தி முதலான கலைநயமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல சிற்பங்கள் காலஓட்டத்தால் சிதைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.

    கோவிலின் நான்கு மூலைகளிலும் கீழ்ப்புறத்தில் யானை ஒன்று அமர்ந்து இக்கோவிலைத் தாங்கி உள்ளதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தில் தினமும் காலை ஒருகால பூஜை நடைபெறுகிறது.

    மதங்கீஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

    • சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 6.51 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரேவதி மாலை 4.18 மணி வரை. பிறகு பிறகு அசுவினி.

    யோகம்: அமிர்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று) சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாதனை

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-சுகம்

    கடகம்-நலம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-முயற்சி

    துலாம்-திறமை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு-தெளிவு

    மகரம்-அமைதி

    கும்பம்-வெற்றி

    மீனம்-கடமை

    • முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • பங்குனி உத்திர திருநாளில் சிவனுக்கு விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம்.

    முன்காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்த்தும் விதமாக இறைவன் ஓரிடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய தலம் அக்னீஸ்வரர் ஆலயம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கு சென்று இறைவனை வணங்கினால் முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.

    பங்குனி உத்திர விழா

    தேவார பாடல் பாடியவர்களில் ஒருவரான சுந்தரர், சிவ பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளில் விமரிசையாக விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்றி வந்தார்.

    இந்த சேவையில் சுந்தரரின் துணைவியார் பரவை நாச்சியாரம்மாளும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார். ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் விழா எடுப்பதில் சிக்கல் உண்டானது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சுந்தரர் ஒவ்வொரு ஆலயமாக சென்று வேண்டினார். இறுதியில் திருப்புகலூர் ஆலயத்திற்கு வந்தடைந்தார். அப்போது அங்கு திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அதனால் ஆலயத்தின் கற்றுப்பகுதியில் மணலும், செங்கற்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    வாஸ்து பரிகார தலம்

    நெடுந்தூரம் பயணம் செய்து வந்த காரணத்தினால் சுந்தரருக்கு சோர்வு ஏற்பட்டது. கட்டுமான பணிக்கு குவிக்கப்பட்டிருந்த மணலில் படுத்து ஓய்வெடுத்தார். செங்கற்களை தலையணையாக்கிக் கொண்டார். கண் அயந்தாலும் கூட 'மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது?' என்பதிலேயே அவரது சிந்தனை இருந்தது. அவரது கனவில் "பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?" என்று மனைவி கேட்பதுபோல இருந்தது. சட்டென்று கண் விழித்து பார்த்தார். தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக்கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு சுந்தரர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது இறைவனின் லீலை என்று நினைத்து ஆனந்தப்பட்டார்.

    இந்த சம்பவத்துக்கு பின்பு அக்னீஸ்வரர் ஆலயம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்க ஆரம்பித்தது. இப்போது கூட புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வட கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

    அக்னிதேவன்

    இந்த ஆலயத்திற்கு அக்னீஸ்வரர் என்று பெயர் வர ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம் அக்னி தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது அக்னி தேவன், வாயு தேவனை பார்த்து, "இந்த உலகத்தில் நானே பெரியவன், என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன். நான், தாக்கத் தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும்" என்று தற்பெருமை கொண்டார்.

    அதற்கு வாயு தேவன், "அக்னியே! நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும் கூட நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக" என சாபமிட்டார். தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்குவதற்கு என்ன வழி என்று தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார்.

    அதற்கு அவரோ, "உன் தந்தையின் சாபம் பொல்லாதது. சோழ நாட்டில் புன்னாக வனம் என்றொரு தலம் இருக்கிறது. அங்கே நீ சென்று நாற்புறமும் அகழியை தோண்டி அங்கு தங்கி இருந்து சிவ நாமம் சொல்லி, சிவ பூஜை செய்து வா. அப்படி செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது" என்று அருளினார்.

    அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தின் நடுவில், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதில் மனம் இரங்கிய சிவபெருமான், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அக்னி தேவனுக்கு காட்சி கொடுத்தார்.

    உடனே அக்னிதேவன் சிவபெரு மானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நான் எதைத் தீண்டினாலும். எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும். நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே அக்னிக்கு அருள் புரிந்ததால், இத்தல இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் விளங்குகிறது. மேலும் இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழி, 'பாண தீர்த்தம்' என்றும், 'அக்னி தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    திருமண தடை நீங்கும்

    இத்தல இறைவியின் திருநாமம் கருந்தாள் குழலி என்பதாகும். சாய ரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள். அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்த கால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களில் இருந்து விடுபடலாம். நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள்.

    சனி தோஷம் விலகும்

    சனி தோஷத்தை போக்கும் தலமாகவும் இது அறியப்படுகிறது. இந்த தலத்தில் நள சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் ஒரே சன்னிதியில் வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். ஒரு சமயம் நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்திற்கு வந்து சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் "திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கிக்கொள்கிறேன்" என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை 'அனுக்கிரக சனி என்று அழைக்கிறார்கள். இந்த தலத்துக்கு வந்தாலே சனிதோஷம் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து ௩௭ கிலோ மீட்டர், திருவாரூரில் இருந்து 20 கிலோ மீட்டர், மயிலாடுதுறையில் இருந்து 32 கிலோ மீட்டர், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருப்புகலூரை அடையலாம்.

    • இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம்.
    • காமாக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.

    இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம் அமைந்துள்ளன. அவற்றுள் வட இந்தியாவில் உயரமான இடங்களில் அமைந்துள்ள கோவில்கள் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...

    அமர்நாத்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான குடைவரை கோவில் அமர்நாத். இது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் பனிக்கட்டி வடிவில் அமைந்துள்ளது. இந்த பனி லிங்கம்மே முதல் ஆகஸ்டு வரையான காலகட்டங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்து புராணங்களின்படி இங்கு தான், சிவன் வாழ்வின் ரகசியங்களை பார்வதிதேவிக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இக்குகை 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

    காமாக்யா கோவில்

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் நிலாச்சல் என்ற மலையில் கடல் மட்டத்தில் இருந்து 700 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள், குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்திய வரலாற்றின் படி இந்த கோவில் 16-ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்பு 17-ம் நூற்றாண்டில் பீகார் மன்னர் நாராயண் நரசிங்கால் மீண்டும் கட்டப்பட்டது. இங்குள்ள சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர்.

    ஜாகேஷ்வர் கோவில்

    உத்தரகாண்டின் மலை மாவட்டமான அல்மோராவில் 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜட கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது 'ஜாகேஷ்வர் தாம்' கோவில். இது 125 கோவில்களின் பழமையான தொகுப்பாகும். கி.பி. 7 முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்திற்குள் கட்டப்பட்ட இந்த கோவில்கள் சிவன், விஷ்ணு, சூரியன் குபேரன், எமன், சண்டி, விநாயகர், சக்தி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

    இந்த ஜாகேஷ்வர் கோவில்களை இந்திய தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. சிவ புராணம், லிங்க புராணம், கந்த புராணம் ஆகியவற்றிலும் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏராளமான கேதுரு மரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில மரங்களில் சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகியோரின் உருவங்களை காணலாம்.

    படால் புவனேசுவர்

    இது சுண்ணாம்பு குகைக் கோவிலாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதவுரகர் மாவட்டத்தில் புவனேசுவர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. அழகான மலையில் அமைந்துள்ள இந்த குகைக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த குகையில் விநாயகப் பெருமானின் தலை, பாறை வடிவில் உள்ளது. அதன்மேல் 108 இதழ்கள் கொண்ட பிரம்மகமலம் உள்ளது. இந்த வாய் வழியாக கருப்பையில் நுழைந்து வாலை அடைபவர் முக்தி அடைவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    இது தவிர, குகையில் ஷேஷ்நாக் சிலையும், கருடன் சிலையும் உள்ளது. குகையில் முக்கியத்துவம் வாய்ந்த பல குளங்களும் உள்ளன. உலக அழிவின் ஆழமான ரகசியமும் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோவிலுக்குள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பைஜ்நாத் கோவில்

    இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் பைஜ்நாத் என்னும் சிறிய நகரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வைத்தியநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் உள்ளது. பிரதான மண்டபத்தில் உள்ள கல் பலகைகளில் இரண்டு நீண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 8-ம் நூற்றாண்டில் வணிகர்களான மன்யுகா, அகுகா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    1905-ம் ஆண்டு. காங்க்ராவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இந்த வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியது. பின்பு தொல்லியல் துறையினர் சீரமைத்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3.274 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் கட்டுமானத்தைக் கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர்.

    ஹிடிம்பா தேவி கோவில்

    இது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மணாலியில் அமைந்துள்ளது. மகாபாரதத்தில் பீமனின் மனைவி ஹிடிம்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான குகைக்கோவிலாக அறியப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் துங்கிரி வான்விஹார் என்ற தேவதாரு காடுகளால் இக்கோவில் சூழப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 1553-ம் ஆண்டு மகாராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்டது. மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை தெய்வமாக வழிபடுகின்றனர். நவராத்திரியின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் துர்கா தேவியை வழிபடுகிறார்கள். ஆனால் மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை வணங்குகிறார்கள். இது கடல் மட்டத்திலிருந்து 3,360 மீட்டர் உயரத்தில் உள்ளது.

    ×