என் மலர்
வழிபாடு
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
- விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் விடுமுறை நாட்க ளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே கோவிலில் குவிந்தனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
- 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.
ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.
அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணா மலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.
கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், அவைகளை விரட்டு வதற்காகவும் அண்ணாமலை யார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.
ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!
இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!
நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
- அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி.
திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவருக்கு குழந்தை இல்லை. அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு குழந்தை இல்லை என்று வருந்தியபோது இறைவன் அவர் கனவில் தோன்றி நானே உனக்கு மகனாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அரசன் குழந்தை பாக்கியம் இல்லை என்ற வேதனையில் இருந்து விடுபட்டார். சில காலம் கழித்து வல்லாள மகாராஜன் இறந்து விட்டார்.
அரசன் இறந்ததை மாசி மாதம் பூச நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி செல்லும் அண்ணாமலையாரிடம் ஓலை மூலமாக தகவலை தெரிவிப்பார்கள். இதனையடுத்து அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு செல்லாமல் மேளதாளம் இல்லாமல் கோவிலுக்கு திரும்பி வருவார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக் கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள நதிக்கரையில் அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
- இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி-தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 2 தற்காலிக பஞ்சாமிர்த கடைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வடக்கு கிரி வீதி, பாதவிநாயகர் கோவில் செல்போன் பாதுகாப்பு நிலயைம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை மையத்தை இணை ஆணையர் மாரி முத்து தொடங்கி வைத்தார்.
இதில் பஞ்சாமிர்தம் கோவில், முருகன் படங்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுதை மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார்.
- அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர்.
நான்முகனுக்கும் திருமாலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நம்மில் யார் பெரியவர்? என்பதுதான் இந்த போட்டி. இந்த போட்டியை எப்படி நடத்துவது? எப்பொருளை வைத்து நடத்துவது? என்பதில் அவர்களுக்கு இடையே குழப்பம். இதை அறிந்த சிவபெருமான் அவர்களிடையே, ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார். தமது அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர் எனக்கூறி ஓங்கி உயர்ந்து நின்றார்.
திருமால், வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண புறப்பட்டார். திருமால் திருவடிகளைக் காண புறப்பட்டதால், நான்முகன், அன்னமாய் வடிவெடுத்து இறைவனின் திருமுடி யைக்காண பறந்து சென்றார். பாதாளம் ஏழினைக் கடந்து சென்றும் இறைவனின் திருவடியை திருமாலால் காண முடியவில்லை. இதுபோல் இறைவனின் திருமுடியைக்காண உயர உயரப்பறந்தும் நான்முகனால் திருமுடியைக் காண முடியவில்லை.
இதனால் சிவபெருமானின் அடியையும், முடியையும் காண இயலாது போட்டியில் தோல்வி அடைந்தார். தங்களது அகங்காரம் அழியப்பெற்றவர்களாய், `சிவப்பரம் பொருள், உலகில் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்ந்து தங்களது பிழைகளை பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். அப்போது சிவபெருமான் சிவலிங்கத் திருஉருவத்தோடு ஜோதியில் இருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமாயிற்று. அதனின்று தோன்றிய சிவலிங்கம் அருணாசலேஸ்வரர் ஆனார். லிங்கமே மலையாகவும். மலையே லிங்கமாகவும் வழிபடலானது. திருவண்ணாமலை கிருதாகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் மாறின.
- ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது.
- தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன.
அண்ணாமலையார் கோவிலின் ஆட்சிக்குட்பட்ட 3 கோவில்களில் ஒன்றாக விளங்கும் அடி அண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கும் முந்தியதும் என்றும், ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை நகரின் வடமேற்கு திசையில் உள்ள இந்த திவ்விய தலம், முன்னொரு காலத்து பிரம்ம தேவர் தம்மாற் படைக்கப்பட்ட திலோத்தமை மீது கொண்ட அதிமோகத்தினால் எங்கும் ஓடி திரிந்து தன்னிடத்திலே வந்து அங்கு எழுந்தருளும் சிவபெருமானை தரிசிக்கப்பெற்று அவர் அருளால் தங்கிச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டு மகிமை வாய்ந்தது. கிழக்கே திருமாலால் வழிபடப்பெற்ற மூர்த்தி அண்ணாமலை நாதர் எனவும் மேற்கே அவரால் வழிபடப்பெற்ற மூர்த்தி அடி அண்ணாமலை நாதன் எனவும் வழங்கப்படுவதாக புராணம் கூறுகிறது.
கிரிவலத்தின் 9 கி.மீட்டர் தொலைவில் மலையின் மேற்கு பகுதியில் உள்ள இச்சிற்றூரில் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும், மாரியம்மன் கோவில் ஒன்றும், இரு குளங்களும் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப் பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.
இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் "பைங்கு வளை" எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.
கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக சொல்வார்கள்.
- ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.
- தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் ஞானியாக விளங்குவார்கள்.
அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிஷ்ட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிஷ்ட்ட தீர்த்தம் உள்ளது. இதில் வசிஷ்ட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப்பெற்றார்.
அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.
திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.
இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட்கொண்டவர்களும் துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடி களையும் இடமாக பெருவார்கள்.
அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத் தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.
- கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
- 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.
தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.
- திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதிஸ்வரூபமாய் மகாதீப தரிசனம்.
- திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.57 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.40 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று திருக்கார்த்திகை. திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதிஸ்வரூபமாய் மகாதீப தரிசனம், இரவு தங்க விருஷப சேவை. திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். கணம்புல்லர் நாயனார் குருபூஜை. பழனி ஆண்டவர் தீபோற்சவ காட்சி. சூரியனார் கோவில் ஸ்ரீ சூர்ய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-பிரீதி
கடகம்-உவகை
சிம்மம்-ஓய்வு
கன்னி-முயற்சி
துலாம்- பற்று
விருச்சிகம்-பாசம்
தனுசு- சிந்தனை
மகரம்-ஆதாயம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-பயணம்
- ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
- சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓ.பி.கே. புது தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோபால சுவாமி ஆலயம் புதிதாய் நிர்மாணிக்கப்பட்டு ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், உப தலைவர்கள் தீனதயாளன், ராமு, செயலாளர் தயாளன், துணைச் செயலாளர்கள், கருணாமூர்த்தி, வரதன், திருவேங்கடம், பொருளாளர் துரை.கணேசன் மற்றும் அப்பகுதி வாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் தேவராஜ் பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.
ஆலய நிர்வாக பணியினை நந்தகோபால் ஸ்பதி சிறப்பாக செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் 16-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி துரைராஜன், கண்ணன், சப்தகிரி, காஞ்சி காமராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேணுகோபாலின் பேரருளை பெற்று சென்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
- 28-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 22-ந்தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து செல்வர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முதல் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த தங்க கவச தரிசனம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும்.
28-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 22-ந்தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.
தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். முகம் மற்றும் பாதத்தை பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-9 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி மாலை 5.13 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.19 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பவனி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பரிவு
கடகம்-பிரீதி
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- புகழ்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- பணிவு
மகரம்-நட்பு
கும்பம்-மாற்றம்
மீனம்-சாந்தம்






