என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
    • அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தரும். 2-வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்தநிலையில் தீபத்திருவிழா நிறைவ டைந்ததும், உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.

    இன்று காலை கோவிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது.

    அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். இன்று 3-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-12 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 2.43 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு. திருவண்ணாமலை அபிதகுசலாம்பாள் சமேத அருணாசலேசுவரர் கைலாசகிரி பிரதட்சணம். பராசக்தி அம்மன் தெப்பம். திருப்பாணாழ்வர் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-நலம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-அன்பு

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- நிறைவு

    மகரம்-நன்மை

    கும்பம்-சுபம்

    மீனம்-ஆர்வம்

    • உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
    • நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருகிறார்.

    கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்.

    தை மாதம் மாட்டு பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் திருவூடலின்போது, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று விடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.

    கார்த்திகை தீப திருவிழா முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, 2-ம் நாள் கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத்தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார்.

    அதன்படி நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடக்கிறது.

    உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    மேலும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.

    நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாாகள்.

    மேலும் கிரிவல பாதை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.
    • தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதி முன்பு அதிகாலை 3.40 மணியளவில் சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர்.

    பின்னர், அந்த தீபத்தை வெளியே கொண்டு வந்து, 5 விளக்குகளை ஏற்றினர். தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது.

    மாலையில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்தார்.

    தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்புறமுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மாலை 6 மணியளவில் 'மகா தீபம்' ஏற்றப்பட்டது.

    பருவதராஜ குல சமூகத்தினர் மகா தீபத்தை ஏற்றி வைத்தபோது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர். பரணி தீபம் மற்றும் அர்த்த நாரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 40 லட்சம் பக்தர்கள் மகா தீபம் தரிசித்தனர்.

    மகாதீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • சுகத்துடன் வாழ கடவுள் துணை வேண்டும்.
    • தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்வது சிறப்பு.

    மனித பிறவி மகத்தான பிறவி, முற்பிறவியில் தற்செயல்களால் வாய்ந்தது. இப்பிறவியை எள்ளளவும் வீணாக்காமல் நலம் தரும் இகபர சுகத்துடன் வாழ கடவுள் துணை வேண்டும்.

    மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அதனால் அவர்கள் மகிழ்வதை கண்டு மகிழ்வதே பெருவாழ்வு, அது அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை.

    குறையாத அன்பும், மாறாத வாக்கும், தடையில்லா கொடையும், பிறருக்கு அருளும் குணமும் பெற்று வாழ்வோர் எண்ணிலடங்கா சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

    தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்வது சிறப்பு. இயற்கையே நமக்கு அனைத்தையும் பகிர்ந்தே அளித்துள்ளது.

    அதிக ஆசையின்றி அளவாக அனைத்தையும் துய்த்த நல்வாழ்வு வாழவேண்டும்.

    வாழ்க்கை ஒரு மனித விளையாட்டு, இதில் தற்செயலைகள் என்னும் ஏணி மூலம் ஏறினால் துன்பமின்றி வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெறலாம்.

    நமது குறைகளையும், தவறுகளையும் நினைத்து மனம் வருத்திக்கொண்டே இருப்பதை விட்டு மீண்டும் நல்ல முறையில் வாழும் முறையை வகுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நிலையை அனைவரும் பெற இறைவழிபாடு இன்றியமையாதது. எனவே அனைவரும் அருணாச்சலேஸ்வரர் தீப தரிசனம் கண்டு வணங்கி, மற்றவர்களுக்கு உபயோகமாக வாழவேண்டும்.

    • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-11 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி பிற்பகல் 3.07 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பாஞ்சராத்ர தீபம். பவுர்ணமி. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவண்ணாமலை அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம். நத்தம் மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-வரவு

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நட்பு

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆதாயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-துணிவு

    மீனம்-பண்பு

    • திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
    • பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.

    தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.

    திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.

     பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.

    இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.

    மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.

    இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

    இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.

    பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.

    சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.

    அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.

    அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.

    கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.

    7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.

    கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

    எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!

    அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

    • இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருகிறார்.
    • அளவற்ற புண்ணியமும், பாவ விமோசனமும் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ம் நாள் நிகழ்ச்சியாக அன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. (இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றன).

    அந்த தீபத்தை தரிசனம் செய்ய அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுகிறார்கள்.

    வழிபாடு முடிந்ததும் அந்த கொப்பரையில் இருக்கும் மையை தேவஸ்தானம் சேகரித்து சிறிய, சிறிய பாலித்தீன் பைகளில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும்.

    அண்ணாமலையார் `மை` என அழைக்கப்படும் அந்த மையைநெற்றியில் இட்டுக்கொண்டால் நம்மை எதிர்நோக்கி இருக்கும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைப்பதுடன் நமக்குள்ள எதிரிகளும் காணாமல் போய்விடுவதாகவும், அளவற்ற புண்ணியங்களும், பாவ விமோசனமும் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் நெய் காணிக்கை செலுத்தியவர்கள் இந்த மையை கோவிலில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    • கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
    • நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.

    நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்திற்கு நிகரான பேறு பெற்ற ஆலயம் திருவண்ணா மலை. முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்தவாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது.

    மகா சிவராத்திரி தோன்றிட காரணமாக திகழ்ந்ததும், தமது உடலில் பாதியை அன்னை பார்வதி தேவிக்கு அருளி உமையொரு பாகனாக காட்சியளித்த பெருமைக்குரியதும் இத்திருத்தலமே. முக்திபுரி, சிவலோகம், தலேச்சுரம், சுத்த நகரம், கவுரி நகரம், சோணாச்சலம், சோணாத்திரி, அருணாத்திரி, அருணாசலம், அக்னிகிரி, திருவருணை, திருவண்ணாமலை இப்படி பல திருநாமங்களை தாங்கி நிற்கும் தவபூமி.

    இப்புண்ணிய சேத்திரத்தின் புராதன புனித பெயர் அண்ணா. இந்நகரை சுற்றியிருந்த பகுதிகளை சேர்த்து அக்காலத்தில் இதனை அண்ணாநாடு என மக்கள் அழைத்து வந்தனர். இதன் காரணமாகவே இங்குள்ள மலையும் அண்ணாமலை என்றும், இறையனார் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருளாட்சி பூமி என்பதால் திருவண்ணாமலை எனவும் வழங்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், இக்கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.

    • எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலமாகும். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

    பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத்தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்ற தலம்.

    ஐந்து முகமாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை மலையை சுற்றி வரும்போது முதலில் ஓர் முகமாக காட்சியளித்து இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும், அடுத்து இரண்டு முகமாக (அர்த்தநாரீஸ்வரராக) ஆண், பெண் சமமே என்ற தத் துவத்தையும் விளக்குகிறது. சூல முகமாக (மூன்று முகம்) காட்சி தந்து மும்மூர்த்தியாக விளங்கி படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சதுர்முக (நான்கு முகம்) மலையாக காட்சியளித்து வேதங்கள் நான்கு என்பதை விளக்குகிறது. பஞ்ச முகமாக தரிசனம் தந்து பஞ்ச பூதங்கள் கொண்ட மலை என்பதை உணர்த்தும் வகையில் அமைந் துள்ளது திருவண்ணமலை.

    பிரச்சினைகள் நீங்கும்

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலைப் பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்க ளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே கோவிலில் குவிந்தனர்.

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

    ×