என் மலர்
வழிபாடு
- ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?
- தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?
அன்பானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?, உயர் கல்விக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, பதவி உயர்வுக்காக, நெடுங்காலமாக காத்திருக்கின்றீர்களா?. தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?,
உங்களுக்குரிய வாய்ப்புகள் இன்னொருவரால் தடைப்படுகிறதா?, பிறருக்கு உங்களாலான உதவிகளை செய்தும், நன்றி மறந்து அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட துரோகத்தினால் துயரப்படுகிறீர்களா? உங்களால் நன்மை பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களா?, உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டிப்பறித்து விட்டார்களா? கவலைப்படாதீர்கள்.
உங்கள் வேதனைகள், சோதனைகள், தோல்விகள் விரைவில் மாறும். குறித்த காலத்தில் உங்களுக்குரிய, வாய்ப்புகள், உயர்வுகள், தேவைகள் அனைத்தும் உங்களைத்தேடி வரும்.
பிரியமானவர்களே! வேதாகமத்தில், `அகாஸ்வேரு' என்றொரு ராஜாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ராஜாவைக் கொல்ல அவரது தளபதிகளில் இருவர் ரகசிய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை அரண்மனையின் வாசலில் இருந்த மொர்தெகாய் என்ற ராஜ ஊழியன் அறிந்து தடுத்தான். ராஜாவைக் கொல்ல திட்டமிட்டவர்கள் தூக்கில் போடப்பட்டனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் ராஜ சமூகத்தின் முக்கிய குறிப்புகளை எழுதும் நாளாகமப் புத்தகத்திலே எழுதப்பட்டது. இதன் பின்னர் மொர்தெகாய் மறக்கப்பட்டுப் போனான்.
இந்த நிலையில் மன்னர் அகாஸ்வேரு தனது பிரதான மந்திரியாக ஆமான் என்பவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும், அங்கீகாரமும் அளித்தான். அரண்மனையில் உள்ளவர்களும், மக்களும் ஆமானை வணங்க வேண்டும் என்றும் ராஜா கட்டளையிட்டிருந்தார். ஆனாலும் அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் அவனை வணங்கவில்லை.
இதை அறிந்த ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபம் கொண்டான். அவனுக்கு தண்டனை அளிக்க திட்டமிட்டு, அதற்காக 50 முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டருகில் நாட்டி விட்டு, ராஜாவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று தகுந்த சமயத்திற்காக காத்திருந்தான்.
இந்த நிலையில் ஒரு நாள் இரவு ராஜா தூக்கம் வராத நிலையில் அன்றாட நிகழ்வுகளை குறித்து வைத்துள்ள நாளாகம புத்தகத்தை கொண்டுவரச்சொல்லி நடந்த நிகழ்வுகளை வாசிக்கச்சொன்னார். அப்போது ராஜாவை கொல்ல முயன்றதும், அது மொர்தெகாய் மூலம் தடுக்கப்பட்டதும் ராஜாவுக்கு தெரியவருகிறது.
உடனே ராஜா, இந்த நல்ல செயலுக்காக மொர்தெகாய்க்கு உரிய மரியாதை செய்யப்பட்டதா என்று கேட்டார். அதற்கு ஊழியர்கள் `அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை' என்று சொன்னார்கள்.
அந்த நேரத்தில், மொர்தெகாயைத் தூக்கில் போட மன்னரிடம் அனுமதி கேட்க ஆமோன் வந்திருந்தான். ராஜா அவனை நோக்கி: 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு ஆமான், `என்னையன்றி யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார்' என்று தன் மனதிலே நினைத்து, ராஜாவை நோக்கி: `ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிப்பிக்கப்படும் ராஜ முடியும் கொண்டுவரப்படவேண்டும்.
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும். அந்த வஸ்திரத்தால் ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, எல்லா மக்களாலும் மரியாதை செய்யப்பட வேண்டும்' என்று சொன்னான்.
அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: `சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், அரண்மனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரமே செய் என்றான்.
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து கவுரவப்படுத்தினான்.
இதற்கிடையில் ராஜாவிடம் ஆமான், மொர்கதாய்க்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து காரியங்களும் கூறப்பட்டது. ராஜாவின் நன்மைக்காக பேசிய மொர்தெகாய்க்கு ஆமான் செய்துள்ள ஐம்பது முழ தூக்குமரம் ஆமானின் வீட்டருகில் நாட்டப்பட்டதையும் கூறினார்கள்.
அப்பொழுது ராஜா கோபமடைந்து `ஆமானைத் தூக்கி அந்த தூக்குமரத்திலேயே போடுங்கள்' என்றார். அப்படியே ஆமானைத் தூக்கில் போட்டார்கள்.
ராஜாவுக்கு அடுத்த இடத்தில் மொர்தெகாய் உயர்த்தப்பட்டார்.
இன்றைக்கு நீங்களும் ஒரு கடினமான சூழ்நிலையில் சஞ்சலத்தோடு, வேதனையோடு இருக்கின்றீர்களா, மன விருப்பங்கள் நிறைவேறாமல் கவலையோடு இருக்கின்றீர்களா, கவலைப்படாதிருங்கள், நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பார்ப்போம்.
அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாயை பிரதான அமைச்சராக மாற்றிய இயேசு இன்றைக்கும் உங்கள் மன வாஞ்சைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார். நீங்கள் உயர்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.
- இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்று, அதன் வழி நடந்து நன்மைபெறும் வகையில் அதன் சிறப்புகள் அமைந்துள்ளன. ஏக இறைவன் அல்லாஹ் அனைத்து தரப்பு மக்களும் நல்வழி அடைய தனது கருத்துக்கள் நிறைந்த திருக்குர்ஆன் மூலம் வழிகாட்டுகின்றான். மனிதனின் மனதில் மறைந்திருக்கும் தீய குணங்களை அகற்றி நற்குணங்களை போதிப்பதில் திருக்குர்ஆன் தீவிரம் காட்டுகின்றது.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது, உற்றார்களையும் உறவுகளையும் அவன் எப்படி பேணி நடக்க வேண்டும் என்பது உள்பட அவனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் விளக்கிக் கூறுகிறது. உலகில் உள்ள மனித குலம் முழுமைக்கும் தேவையான, பயன்தரும் வழிகாட்டுதல்களும், கருத்துக்களும் திருக்குர்ஆனில் ஏராளம் நிறைந்துள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கது தற்பெருமை, அகந்தை, தன்னைவிட உயர்ந்தது எதுவும் இல்லை என்ற இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும் என்பதாகும்.
ஒரு மனிதன் 4 காரணங்களால் பெருமை கொள்கிறான். அவை:
1) தான் அடைந்த கல்வி,
2) தான் பெற்ற செல்வம்,
3) தனக்கு கிடைத்த பதவி, அதிகாரம்,
4) தான் பெற்ற மக்கட் செல்வம்.
இந்த நான்கும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும்போது அவன் இதற்காக பெருமைப்படக்கூடாது. இறைவனின் அருளால், இறைவனின் நாட்டத்தால் மட்டுமே தனக்கு இத்தகைய சிறப்புகள் கிடைத்துள்ளன என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இதைமீறி அவன் பெருமை கொண்டு, தலைக்கனம் பிடித்து நடந்து கொண்டால் இறைவனிடம் இருந்து வரும் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்க நேரிடும்.
கல்வி
`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். அதன்படி சிறப்புகள் கிடைக்கும் போது அவர் அதை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் போற்றப் படுவார். அதேநேரத்தில் அவர் கல்விச்செருக்குடன் பண்பில்லாமல் நடந்து கொண்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். என்ன தான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நல்ல பண்புகள் இல்லை என்றால் அந்தக்கல்வியினால் அவருக்கு சிறப்பும், பலனும் கிடைக்காது. ஒருவேளை சிறப்புகள் கிடைத்தாலும் அது நிலைக்காது.
இதையே திருக்குர்ஆன் (2-269) இவ்வாறு கூறுகின்றது: "தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) எராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெற மாட்டார்கள்."
செல்வம்
செல்வம் சேரச்சேர செருக்கும், ஆணவமும் சேர்ந்தே வளரும். பணம் பகட்டையும், அகந்தையையும் அதிகரிக்கும். மற்றவர்களை மதிப்பின்றி நடத்த தூண்டும். செல்வத் தால் விரும்பியதை வாங்கிவிடலாம் என்ற அகந்தை தோன்றும். எனவே செல்வம் சேரும் போது, `இறைவனின் அருளால் இந்த செல்வம் கிடைத்துள்ளது. இதை இறைவன் காட்டும் வழியில், நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மனிதனுக்கு செல்வம் ஒரு சோதனையாகும் என்பதை இந்த நபி மொழி மூலம் அறியலாம்.
`ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனை யாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அஹ்மத்)
அதிகாரம்
பதவியும், அதிகாரமும் வரும்போது பணிவு வர வேண்டும். நமக்கு கிடைத்த பதவி, அதிகாரத்தை பயன் படுத்தி மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு, ஆணவத் துடன் நடந்து மக்களை வாட்டி வதைத்தால் அதற் குரிய தண்டனை கிடைத்தே தீரும்.
இதற்கு உதாரணமாக எகிப்தை ஆண்ட மன்னன் பிர் அவ்ன் ஆட்சியை குறிப்பிடலாம். ஆட்சி அதிகாரத்தின் மூலம் மக்களை கொடுமைப்படுத்தியதால் அவனும் அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
அதுபோல ஒரு மனிதனிடம் பணம், செல்வாக்கு எது இருந்தாலும் அவனது மரணத்திற்கு பிறகு எதுவும் அவன் கூட வருவதில்லை. உயிரற்ற அவன் உடல் மட்டுமே அடக்கம் செய்யப்படும்.
மக்கட் செல்வம்
இறைவனின் அருட்கொடைகளில் மக்கட் செல்வமும் ஒன்று. அதே நேரத்தில் அதுவும் சோதனைக்குரியது என்று திருக்குர்ஆன் (8:28) சுட்டிக்காட்டுகிறது.
"நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்".
கல்வி, செல்வம், ஆட்சி அதிகாரம், மக்கட் செல்வம் என எத்தனை செல்வங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை இறைவன் வகுத்த வழியில் இருந்து விலகினால் அது துன்பத்தையே தரும். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்வோம், அல்லாஹ்வின் நல்லருள் பெறுவோம். ஆமின்.
- பிரியமானவளாக கருதப்படுபவள் பிருந்தா என்னும் துளசி தேவி.
- கார்த்திகை மாதம் சுக்கில பட்ச துவாதசி திதியன்று பகவானை வந்தடைந்தாள்.
மகாவிஷ்ணுவின் பிரியமானவளாக கருதப்படுபவள் பிருந்தா என்னும் துளசி தேவி. இவள் கார்த்திகை மாதம் சுக்கில பட்ச துவாதசி திதியன்று பகவானை வந்தடைந்தாள். ஒரு சமயம் கிருஷ்ண பகவான் ராதையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துளசி, கிருஷ்ண பகவானுக்கு பணிவிடை செய்ய நினைத்தாள். `நாங்கள் இருவரும் அமர்ந்திருக்கும் பொழுது இத்தனை கோபிகா ஸ்ரீகள் வராத பொழுது நீ ஏகாந்த வேளையில் உள்ளே வந்தாய். இங்கிருக்கும் தகுதியை நீ இழந்து விட்டாய்' என்று கூறி பூலோகத்தில் மானிடப் பெண்ணாய் பிறப்பாய் என்று ராதை சபித்தாள்.
உடனே கிருஷ்ண பகவான் ''நீ வருந்தாதே, என் தேகத்திலிருந்து தோன்றிய சுதர்மன் என்ற கோபாலனும், ராதையின் சாபத்திற்கு ஆளாகி பூமியில் மானிடனாக பிறக்கப் போகிறான். அவன் பல்லாயிரம் வருடம் தவம் செய்து பிரம்மன் அருள் பெற்று உன்னை மணம் செய்வான்' எனக் கூறினார்.
பூலோகத்தில் தர்மதுஜன் என்ற மன்னனின் மனைவி மாதவி தனக்கு குழந்தை வேண்டும் என்று 100 வருட காலம் தவம் செய்தாள். அந்த தவத்தின் பயனாக மகாலட்சுமி அம்சமாக துளசி தேவி கார்த்திகை மாதம், வெள்ளிக்கிழமை, பவுர்ணமி அன்று பிறந்தாள். `துள' என்றால் `ஈடு', `சி' என்றால் `இல்லாதது' என்று பொருள். அவளது அழகுக்கு ஈடு இணை இல்லை என்பதால் துளசி என்று பெயரிட்டார்கள். துளசி தனக்கு நல்ல கணவனாக கிருஷ்ண பகவான் வர வேண்டுமென்று எண்ணி 20 ஆயிரம் ஆண்டு காலம் தண்ணீர் பழம் மட்டும் சாப்பிட்டும், 30 ஆயிரம் ஆண்டுகள் இலைகளை மட்டும் உண்டும், 40 ஆயிரம் ஆண்டுகள் வெறும் காற்றை மட்டும் சுவாசித்தும், 16 ஆயிரம் ஆண்டுகள் ஆகாரம் எதுவும் இன்றியும், கடுந்தவம் புரிந்தாள். இதனால் பிரம்மதேவன் தோன்றி, நீ எதிர்பார்த்த நல்ல கணவனை அடைவாய் என்று வரம் கொடுத்தார்.
மானிடப் பெண்ணாக பிறந்த துளசி கிருஷ்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று எண் ணினாள். ஆனால் சங்கு சூடனை கண்டவுடன் மதி மயக்கத்தால் காந்தர்வ விவாகம் செய்து கொண்டாள்.
சங்கு சூடன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றவன். சிவன் அருளால் மந்திர கவசத்தையும் பெற்றிருந்தான். தான் பெற்ற செல்வம், செல்வாக்கு, தவப்பயன், அவற்றைக் கொண்டு எதை செய்யக்கூடாதோ அதை செய்தான். தேவர்களையும் மூன்று உலகங்களையும் ஆட்டிப் படைக்க எண்ணினான். எவராலும் அவனை வெல்ல முடியவில்லை.
சிவபெருமானிடம் முறையிட அவர் தன் சேனைகளுடன் வந்து சங்கு சூடனுடன் யுத்தம் புரிந்தார். சூலாயுதத்தால் எவ்வளவு முறை தாக்கியும் அவன் இறக்கவில்லை. அப்பொழுதுதான் துளசி தேவியின் பதிவிரதா தன்மை அவனை காப்பாற்றுகிறது என்று புரிந்து கொண்டனர்.
தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் ஒரு வயோதிகர் வடிவத்தில் உருமாறி போர்க்களத்திற்கு வந்து சங்கு சூடனிடம் தானம் கேட்டார். சங்கு சூடன் தனது மந்திர கவசத்தை தானமாக கொடுத்தான். பின் அந்த மந்திர கவசத்தை அணிந்து கொண்டு (இதில் கவனிக்க வேண்டியது சங்கு சூடனாக உருமாறினால் கூட மந்திர கவசம் இல்லாவிட்டால் சங்கு சூடனாக மாறியது பரிபூரணம் அடையாது) யுத்த களத்தில் இருந்து துளசி தேவி இருக்கும் இடத்திற்கு சென்றார். சங்குசூடன் உருவில் வந்துள்ள மகாவிஷ்ணுவை சங்கு சூடன் வந்துள்ளார் என எண்ணி அவருக்கு துளசி பாத பூஜை செய்தாள்.
முக்கியமான ரகசியம் இதில் கவனிக்க வேண்டி உள்ளது. கோபிகாஸ்ரீகளோ, ராதையோ, துளசி தேவியோ, பகவானிடம் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டது இல்லை என்பதுதான் உண்மை. பரமாத்மா ஜீவாத்மா தொடர்பு மட்டுமே உண்டு என்பதை அறிய வேண்டும். பாகவதத்தை நன்கு படித்தவர்களுக்கு இது நன்கு புரியும்.
வட தேசத்தில் ஒரு பகுதியில் வசிப்பவர்களும், நேபாளத்திலும், பெண்கள் கணவன்மார்களை தவிர மற்றவர்களின் பாதத்தை தொடுவது இல்லை. பாத பூஜை செய்வதும் இல்லை. குறிப்பாக நேபாளத்தில் கல்யாணத்தின் பொழுது பெண் குழந்தைகளின் பாதத்தை தகப்பனார் தொடுவார். ஆனால் தகப்பனார் பாதத்தை பெண்கள் தொடுவதில்லை. கணவனைத் தவிர மற்றவர்களுக்கு பாத பூஜை செய்தால் பதிவிரதா தர்மம் தவறி விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அதுபோல்தான் துளசி தேவியும் வந்துள்ளது தன் கணவன் சங்கு சூடன் என்று எண்ணி, பாத பூஜை செய்தாள். அதனால் அவள் பதிவிரதா தர்மம் குறைகிறது.ரேணுகாதேவி கதையில் கூட கந்தர்வன் உருவத்தை தண்ணீரில் மட்டும்தான் பார்த்தாள். எந்த நிலையிலும் கந்தர்வனுடன் அவளுக்கு உடல் ரீதியாக தொடர்பு ஏற்படவில்லை என்றாலும் கூட, பதிவிரதா தர்மம் குறைந்துவிட்டது என்று அங்கு கருதப்பட்டது.
கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பது இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராமாயணத்தில் ராமன் சரித்திரத்தால் ஆணுக்கும் கற்பு உண்டு என்று தெளிவாகிறது. பாரதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பென்பது சமமென்று குறிப்பிடுகிறார். மேலும் சொன்ன சொல் தவறாமையும் கூட கற்பு தான்.
துளசி தேவி பதிவிரதாத்தன்மையை இழந்தவுடன் சங்கு சூடனின் பலம் மறைகிறது. சிவபெருமான் தன் சூலாயுதத்தால் சங்குசூடனை எரிக்கிறார். எரித்த சாம்பலில் இருந்து சங்குகள் தோன்றுகின்றன. சிவபெருமானின் திரிசூலம் பட்டதால் அத்தனை சங்குகளும் புனிதமாகின்றது. சாம்பலில் இருந்து சுதர்மன் பழையபடி எழுந்து வருகிறார். சங்கில் வைக்கப்பட்ட நீர் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. எல்லா பூஜை களிலும் சங்குக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.
நடந்த அனைத்தையும் அறிந்த துளசி தேவி மகாவிஷ்ணுவை நோக்கி ''பகவானே நீ சுவாமியாக இருந்தும் என் கணவன் இறக்க காரணமாக இருந்தாய், உன் மனம் கல்லாய் போனதோ? நீயும் கல்லாய் போக'' என சபித்தாள். அப்போது வந்த ராதை, ``நீ பகவான் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று தவம் செய்து, பின் சங்கு சூடனை மணந்தாய். சங்கு சூடன் தவறான செயலால் இறந்தான். பகவானை நீ சபித்த காரணத்தால் நீயும் எதற்கும் உபயோகம் இல்லாத பழம், காய், இல்லாத செடியாய் போவாய்'' என சபித்தாள்.
பகவான் துளசியை நோக்கி, ``நீ வருந்தாதே, பதி விரதா சாபத்தால் நான் கல்லாய் போவது மாற்ற முடியாது. தாமோதர குண்டில் இருந்து உண்டாகும் கண்டகி என்னும் நதியில் நான் சாளக்கிராம கல்லாய் இருப்பேன். நீ பூலோகத்தில் துளசி என்ற செடியாக தோன்றுவாய். உன்னையும் என்னையும் சேர்த்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள். துளசி நீரை யார் பருகுகிறார்களோ அவர்கள் கங்கை நீரை அருந்திய புண்ணியத்தை அடைவார்கள்.
யார் துளசி மணியை மாலையாக அணிகிறார்களோ அவர்களை அகால மரணம் அண்டாது. எந்த இடத்தில் உன்னை பூஜிக்கிறார்களோ அந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். எல்லாவிதமான புண்ணிய பூஜைகளுக்கும் கர்மாக்களுக்கும் நீ பயன் தருவாய். எவன் இறக்கும் தருவாயில் துளசி நீரை அருந்துகிறானோ அவன் வைகுண்டத்தை அடைவான்'' என்று பலவிதமான வரங்களை அருளினார்.
நெல்லி மரம் நடுவது மிக மிகுந்த புண்ணியத்தை தரும். சிலர் நெல்லி மரத்தின் அருகில் துளசி செடி வைத்து பூஜை செய்வார்கள். சிலர் நெல்லிக்கனியில் மகாவிஷ்ணு ஆவாகனம் செய்து துளசி தேவியை பூஜை செய்வார்கள்.
- திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-13 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை பிற்பகல் 2.51 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 3.21 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-புகழ்
கடகம்-வெற்றி
சிம்மம்-லாபம்
கன்னி-உழைப்பு
துலாம்- உதவி
விருச்சிகம்-நலம்
தனுசு- சுகம்
மகரம்-இன்பம்
கும்பம்-பக்தி
மீனம்-பரிவு
- வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும்
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் தங்கநாக கவசம் அணிந்த நிலையில் காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தை யொட்டிய 3 நாட்கள் மட்டும் மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு தங்க நாக கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பி ராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும் என்பதால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
நேற்றுமுன்தினமும், நேற்றும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி கோவில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருநது மூலவர் ஆதிபுரீஸ்வரரை வழிபட்டனர்.நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை தனது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து வழிபட்டார்.
இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட நடிகர் லாரன்ஸ், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜிகனேசன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 50ஆயிரம் பேர் தரிசித்து உள்ளனர்.
இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் வடிவுடையம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு உள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது.
- செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சமீப காலமாகவே கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது. சினிமா பிரபலங்கள் பலர் கருங்காலி மாலைகளை அணிந்து வலம்வர, பலரும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

கருங்காலி மாலைகள் அணிந்துகொண்டால் கண் திருஷ்டி ஏற்படாது, அதிர்ஷ்டம் கைகூடும், செல்வ வளம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று தற்போது செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்து மத சம்பிரதாயத்தில், அணியும் மாலைகளில் ருத்திராட்ச மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை என பல வகைகள் உள்ளன. இதில் சமீப காலமாக கருங்காலி மாலைகள் குறித்த பதிவுகளும், விற்பனையும் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் சேரும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் ஒரிஜினல் கருங்காலி மாலை என ஆயிரங்களில் மாலைகளை விற்பதும் நடந்து வருகிறது.

இந்த கருங்காலி மாலைக்கான டிமாண்டை கண்டு அடுத்து செங்காலி மாலையும் சந்தைகளில் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கருங்காலி மாலை நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமே தவிர, செல்வ விருத்தி அளிக்காது என்றும் கூறி வருகின்றனர்.
கருங்காலி, செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் ஒரே தன்மை உடையவைதான். ஆன்மிக அடிப்படையில் கருங்காலி மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்றால் செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்கிறார்கள். செங்காலி மாலைகளும், கருங்காலி மாலைகளுக்கு இணையான பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தற்போது செங்காலி மாலைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
கருங்காலி மாலைகளைப் போல் செங்காலி மாலைகள் அணிந்துகொள்வதும் அதிர்ஷ்டம் தருமா... செங்காலி மாலைகளுக்கு ஆன்மிக முக்கியத்தும் உண்டா போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
ஆன்மிக மரபில் இயற்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இறைவழிபாட்டை போலவே இயற்கை வழிபாடும் முக்கியமானது என்று நம் முன்னோர்கள் கருதியதே அதற்கு காரணம்.
அந்த வகையில் கருங்காலி மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மரங்களாகக் கருதப்பட்டன. கருங்காலி என்று சொல்கிறபோதே அதில் செங்காலியும் அடக்கம். இரண்டுக்கும் சிறு வேறுபாடு உண்டு. கருங்காலி மரங்கள் மிகவும் உறுதியானவை. செங்காலி கருங்காலியை விடக் கொஞ்சம் உறுதித் தன்மை குறைந்தது. அதனால்தான் ஆயுதங்கள் செய்யும்போது கருங்காலியை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெரும்பாலும் அந்த கால ஆயுதங்களான ஈட்டி, கோடாரி ஆகியவற்றின் பிடிகளை கருங்காலியிலேயே செய்தார்கள்.
இப்படி பல காரணங்களுக்காகவே கருங்காலி மற்றும் செங்காலிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று இவை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன.
கருங்காலி, செங்காலி ஆகிய இரு மரங்களும் வசியத் தன்மை கொண்டவை என்று நம்பப்படுகின்றன. அந்த காலத்தில் குறிசொல்கிறவர்கள் கைகளில் வைத்திருக்கும் கம்பு கருங்காலி மரமே. கருங்காலி, செங்காலி இரண்டிலுமே அந்த காலத்தில் மாலைகள் செய்து அணிந்துவந்தார்கள். அதற்கு அதன் மருத்துவப் பயன்பாடே முக்கிய காரணம்.
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
28-ந்தேதி (செவ்வாய்)
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கபாமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
29-ந்தேதி (புதன்)
* சித்தயோகம்.
* முகூர்த்தநாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையான் சகசரகலசாபிசேகம்.
* சமநோக்குநாள்.
30-ந்தேதி (வியாழன்)
* சங்கடகர சதுர்த்தி.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கவேல் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
1-ந்தேதி (வெள்ளி)
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
* திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* முகூர்த்த நாள்.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (சனி)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* திருவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருநாகேசுவரம் நாகநாதர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
3-ந்தேதி (ஞாயிறு)
* கரி நாள்.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* திருவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருநாகேசுவரம் நாகநாதர் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
4-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு சிறப்பு அபிசேகம்.
* திருவெண்காடு, திருக்கழுங் குன்றம், திருவாடனை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிசேகம்
- கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா.
- லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. அதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை அலங்கார தீபாராதனைக்கு முன்னதாக கோவில் பிரகார விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்ச தீப விழா நடந்தது. சிறுமிகள், பக்தர்கள், பெண்கள் போட்டி போட்டு விளக்கேற்றினர். லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
- தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று இரவு அய்யங்குளத்தில் நடைபெற்ற சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் வலம் வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் கடந்த 25-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் கட்டுக்குஅடங்காத அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.
நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மாட வீதியில் உலா வந்தனர்.
மேலும் கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.08 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.
மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.
மகா தீபத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமாக மகா தீபம் நிறைவடைந்த பின்னர் வெளியூர் போலீசார் கிளம்பி விடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தின் மறுநாள் பவுர்ணமியும் வந்ததால் 2-வது நாளாக தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் ராஜ கோபுரத்தின் வழியாக மட்டுமே சாமி தரிசனம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போலீசார் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். மேலும் கோவிலை சுற்றியும் பேரிகார்டு போட்டு அடைத்து வைத்து கொண்டதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
- ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம்.
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாதத்தையொட்டி கருடசேவை நடந்தது. கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏலுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
- அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
- அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தரும். 2-வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.
இந்தநிலையில் தீபத்திருவிழா நிறைவ டைந்ததும், உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
இன்று காலை கோவிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது.
அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். இன்று 3-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை பிற்பகல் 2.43 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு. திருவண்ணாமலை அபிதகுசலாம்பாள் சமேத அருணாசலேசுவரர் கைலாசகிரி பிரதட்சணம். பராசக்தி அம்மன் தெப்பம். திருப்பாணாழ்வர் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-செலவு
மிதுனம்-போட்டி
கடகம்-நலம்
சிம்மம்-ஜெயம்
கன்னி-அன்பு
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-நட்பு
தனுசு- நிறைவு
மகரம்-நன்மை
கும்பம்-சுபம்
மீனம்-ஆர்வம்






